இஃப்தார் நோன்பு ஸ்பெஷல்!
இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் ஓட்ஸ் பிரியாணி கஞ்சி சீரக கஞ்சி ஜாலர் ரோல்ஸ் பெப்பர் - ஃப்ரூட் சாட் வெஜிடபிள் குமூஸ் ராப் ஹால்ட் அண்...
இஃப்தார் நோன்பு ஸ்பெஷல்
ஓட்ஸ் பிரியாணி கஞ்சி
சீரக கஞ்சி
ஜாலர் ரோல்ஸ்
பெப்பர் - ஃப்ரூட் சாட்
வெஜிடபிள் குமூஸ் ராப்
ஹால்ட் அண்ட் ஹாப் புடிங்
பேக்டு பொட்டேட்டோ
ஹலீம்
லுக்மி
நுங்கு - இளநீர் பானம்
இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான ரம்ஜான் மாதத்தில் 30 நாள்கள் நோன்பிருப்பது கடமையாக்கப்பட்டுள்ளது. ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மிக ஈர்ப்பு... இவையே நோன்பு வைப்பதன் முக்கிய நோக்கம். சூரிய உதயத்துக்கு முன்பாகவே (காலை 5 மணி வாக்கில்) நோன்பு தொடங்கிவிடும்.
சூரியன் அஸ்தமனமான பிறகு (மாலை 6 மணி வாக்கில்) நோன்பை முடித்துக்கொள்வது வழக்கம். நோன்பு முடிப்பதற்கு ‘இப்தார்’ என பெயர். இஃப்தாரில் உண்ணுவதற்கான சிறப்பு உணவுகளின் ரெசிப்பிகளை அளிக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஹசீனா செய்யது.
ஓட்ஸ் பிரியாணி கஞ்சி
தேவையானவை:
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 2 (இரண்டாக கீறவும்)
கேரட் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சைப் பட்டாணி - கால் கப்
பீன்ஸ் - 3 (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய முட்டைகோஸ் – அரை கப்
கறி கைமா (அல்லது) கோழி கைமா - கால் கப்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
புதினா இலைகள் - சிறிதளவு
எலுமிச்சைச் சாறு - கால் டேபிள்ஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - அரைக்கால் டேபிள்ஸ்பூன்
தயிர் - ஒரு டீஸ்பூன்
நெய் - 10 கிராம்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - ஒன்று
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரைக்கால் டீஸ்பூன்
கெட்டி தேங்காய்ப்பால் - அரை கப்
இன்ஸ்டன்ட் ஓட்ஸ் - கால் கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
குக்கரில் நெய்யை ஊற்றி சூடாக்கி... பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும். இதனுடன் வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கிளறவும். இதனுடன் கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, கைமா, தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை, தயிர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும். காய்கறிகள் நன்கு வதங்கிய பின் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கிளறி மூடி, ஒரு விசில் விடவும். பிறகு திறந்து எலுமிச்சைச் சாறு, தேங்காய்பால் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும், தண்ணீர் கொதிக்கும்போது ஓட்ஸை சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். நன்கு வெந்த ஓட்ஸை காய்கறி - கைமா கலவையுடன் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு:
கைமாவைத் தவிர்த்து காய்கறிகளை மட்டும் வைத்தும் செய்யலாம்.
சீரக கஞ்சி
தேவையானவை:
சீரக சம்பா அரிசி - ஒரு கப்
பாசிப்பருப்பு - அரை கப்
சின்ன வெங்காயம் - 6 (தோலுரிக்கவும்)
உரித்த பூண்டுப் பல் - 4
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
தேங்காய்த் துருவல் - அரை கப்
சீரகம் - கால் டீஸ்பூன்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி விழுது - கால் டீஸ்பூன்
புதினா இலைகள் - 8
நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
வெறும் வாணலியில் பாசிப்பருப்பைப் போட்டு, வாசனை வரும் வரை (கருகாமல்) நன்கு வறுத்து எடுக்கவும். அரிசியைக் கழுவி களையவும். கழுவிய அரிசி, பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், 5 கப் தண்ணீர் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து மூடி 5 விசில்விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி... தேங்காய்த் துருவல், சீரகம் சேர்த்து சிவக்க வறுக்கவும். ஆறிய பின் சிறிதளவு தண்ணீர்விட்டு கொரகொரவென அரைத்து எடுக்கவும். பாத்திரத்தில் அரைத்த விழுது, உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
வாணலியில் நெய்யைவிட்டுச் சூடாக்கி... பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, வேகவைத்த அரிசி - பருப்பு கஞ்சி, தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கவும். கடைசியாக கொத்தமல்லித்தழை, புதினா இலைகள் தூவி இறக்கவும். பருப்பு வடை, சமோசா, சிக்கன் ரோலுடன் பரிமாறவும்.
ஜாலர் ரோல்ஸ்
தேவையானவை:
முட்டை - 2
தண்ணீர் - 650 மில்லி
கெட்டி தேங்காய்ப்பால் - 100 மில்லி
மைதா மாவு - 350 கிராம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் - 100 மில்லி
பூரணம் செய்ய:
எலும்பில்லாத கோழி இறைச்சி - கால் கிலோ (குச்சி போல நீளவாக்கில் நறுக்கவும்)
வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்)
கேரட் – ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)
பீன்ஸ் - 5 (நீளவாக்கில் நறுக்கவும்)
நீளவாக்கில் நறுக்கிய முட்டைகோஸ் - கால் கப்
குடமிளகாய் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் – கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - கால் டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
பாத்திரத்தில் முட்டை உடைத்து ஊற்றி அதில், தண்ணீர், தேங்காய்ப்பால், மைதா மாவு, உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் நீர்க்க கரைக்கவும். இந்த மாவை `பைப்பிங் பேக்’கில் ஊற்றவும். தோசைக்கல்லை சூடாக்கி மாவை வலை போன்று கல்லில் சுற்றி ஊற்றவும். எண்ணெய் சிறிதளவு ஊற்றி தோசை போல் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும். இதுவே ஜாலர் ரோல்ஸ் தோசை.
குக்கரில் கோழியுடன் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, சிறிதளவு தண்ணீர்விட்டு மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி காய்கறிகள் சேர்த்து, முக்கால் வேக்காடு பதத்துக்கு வேகும் வரை வதக்கவும். இதனுடன் வெந்த சிக்கன் சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி நன்கு வேகவிடவும். இதுவே பூரணம். ஒரு ஜாலர் தோசையின் மேல் ஓரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் பூரணத்தை வைத்து தோசையின் இரண்டு ஓரங்களையும் உட்புறமாக மடிக்கவும். பிறகு, பூரணம் உள்ள பக்கத்தை அதன் எதிர்புறமாக பாய் போல சுருட்டி இறுக்கமான ரோல் போன்று செய்யவும். சாஸுடன் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
பெப்பர் - ஃப்ரூட் சாட்
தேவையானவை:
புளிக்காத கெட்டித் தயிர் - 3 கப்
வாழைப்பழம் - ஒன்று (தோல் உரித்து, பொடியாக நறுக்கவும்)
ஆப்பிள் - ஒன்று (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)
மாம்பழம் - ஒன்று (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)
சர்க்கரை - தேவைக்கேற்ப
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டேபிள்ஸ்பூன்
பால் - ஒரு கப் (காய்ச்சாதது)
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன் (ஒன்றிரண்டாக பொடிக்கவும்)
நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன்
புதினா இலைகள் - 10 (பொடியாக நறுக்கவும்)
எலுமிச்சைச் சாறு - அரைக்கால் டீஸ்பூன்
கறுப்பு உப்பு (காலா நமக்) - கால் டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
செர்ரி - சிறிதளவு
செய்முறை:
தயிரைத் துணியில் போட்டு மூட்டை போல கட்டி மூன்று மணி நேரம் தொங்கவிடவும். பிறகு, தண்ணீர் வற்றிய தயிரை நன்றாக அடிக்கவும். சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைக்கவும், பாலைப் பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிடவும். பால் நன்கு கொதிக்கும்போது சோள மாவு கரைசலைப் பாலில் சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும். நன்கு கெட்டியான பின் இறக்கி ஆறவிடவும். இதனுடன் உப்பு, மிளகு, சீரகத்தூள், சாட் மசாலாத்தூள் சேர்த்துக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் பழத்துண்டுகள், கறுப்பு உப்பு, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். இந்தப் பழக்கலவையுடன் பால் கலவை, தயிர் சேர்த்துக் கலக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து. கொத்தமல்லித்தழை, புதினா இலைகள், செர்ரி சேர்த்து அலங்கரித்து, ஜில்லென்று பரிமாறவும்.
குறிப்பு:
திராட்சை, கொய்யா, பேரிக்காய் சேர்த்தும் செய்யலாம்.
வெஜிடபிள் குமூஸ் ராப்
தேவையானவை:
சப்பாத்தி - 6
முட்டையின் வெள்ளைக் கரு - 2
எண்ணெய் - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
பூரணம் செய்ய:
கேரட் - 2 (பொடியாக நறுக்கவும்)
பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய முட்டைகோஸ் – ஒரு கப்
நறுக்கிய குடமிளகாய் - ஒரு கப்
உரித்த பச்சைப் பட்டாணி – அரை கப்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பூண்டுப் பல் - 2 (தட்டவும்)
ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
குமூஸ் செய்ய:
செய்த பூரணம் - முக்கால் கப்
பூண்டு - 3 பல்
சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்
வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன்
கெட்டித் தயிர் - அரை கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, பூண்டு, வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும், இதனுடன் காய்கறிகள், உப்பு, ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதுவே பூரணம். தயிரைத் துணியில் போட்டு மூட்டை போல கட்டி மூன்று மணி நேரம் தொங்கவிடவும். பிறகு வற்றிய தயிர் மற்றும் குமூஸ் செய்யக் கொடுத்துள்ள மற்ற பொருள்களை மிக்ஸியில் ஒன்றாக சேர்த்து தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்து எடுக்கவும். குமூஸ் தயார்.
பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக் கரு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக அடித்து எடுக்கவும். தோசைக்கல்லை காயவிட்டுச் சப்பாத்தியைப் போட்டுச் சூடாக்கி மேலே சிறிதளவு முட்டை கலவையைப் பரப்பி, எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிடவும். வெள்ளைக் கரு வெந்த பின் எடுத்து சப்பாத்தியின் மேல் 2 டேபிள்ஸ்பூன், குமூஸைத் தடவவும். பிறகு, அதன் மேல் வதக்கிய காய்கறி பூரணத்தை வைத்து இறுக்கமாக சுருட்டவும். சப்பாத்தி ரோலைப் பாதியாக நறுக்கிப் பரிமாறவும்.
குறிப்பு:
பூரணத்துடன் கோழி இறைச்சி சேர்த்தும் செய்யலாம்.
ஹால்ட் அண்ட் ஹாப் புடிங்
தேவையானவை:
ராஸ் பெர்ரி ஜெல்லி - ஒரு பாக்கெட்
விரும்பிய பழக்கலவை (ஆப்பிள், வாழைப்பழம், பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி - நறுக்கியது) – ஒரு கப்
பால் - அரை லிட்டர் (காய்ச்சாதது)
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
கடல் பாசி - 15 கிராம்
வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
ஜெல்லி பாக்கெட்டின் பின்புறம் உள்ள செய்முறையைப் படித்து அதன்படி நன்றாகக் கலக்கி எடுக்கவும். ஒரு கண்ணாடி டம்ளரில், சிறிதளவு ஜெல்லிக் கலவையை ஊற்றி, டம்ளர் சாய்ந்த நிலையில் இருக்கும்படி ஃப்ரீசரில் வைத்து செட் செய்யவும். பிறகு வெளியே எடுத்து அதன் மேல் சிறிதளவு பழக்கலவை சேர்த்து, மீண்டும் அதன் மீது ஜெல்லி கலவையை ஊற்றி, மீண்டும் டம்ளர் சாய்ந்த நிலையில் இருக்கும்படி ஃப்ரீசரில் வைத்து செட் செய்யவும். கடல் பாசியுடன் தண்ணீர்விட்டு 15 நிமிடங்கள் ஊறவிடவும். பாலைக் காய்ச்சவும். பால் கொதிக்கும்போது ஊறிய கடல் பாசியைச் சேர்த்து நன்றாகக் கரைக்கவும். இதனுடன் சர்க்கரை, வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும். இதை இறக்கி ஆறவிடவும். ஃப்ரீசரில் இருந்து டம்ளரை வெளியே எடுத்து செட் ஆன கலவை மேல் பால் கரைசலை ஊற்றவும். ஃப்ரிட்ஜில் வைத்து செட்டானதும் எடுத்துப் பரிமாறவும்.
பேக்டு பொட்டேட்டோ
தேவையானவை:
உருளைக்கிழங்கு - 4
குடமிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கேரட் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
எலும்பில்லாத கோழிக்கறி - ஒரு கப் (வேகவைக்கவும்)
சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 3 டேபிள்ஸ்பூன்
மயோனைஸ் - 3 டேபிள்ஸ்பூன்
புளிப்பில்லாத கெட்டித் தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
சீஸ், ஸ்பிரட் - தலா 3 டேபிள்ஸ்பூன்
வினிகர் - கால் டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயத்தாள் - அரை கப்
மொசரல்லா சீஸ் - ஒரு கப்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
`அவனை’ 200 டிகிரி சென்டிகிரேடுக்கு பத்து நிமிடங்கள் ப்ரீஹீட் செய்யவும். உருளைக்கிழங்கைக் கழுவி, அதன் மீது எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் தடவவும். முள்கரண்டியால் உருளைக்கிழங்கைச் சுற்றிலும் குத்தி ஓட்டை போடவும். இதை `அவனில்’ வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பிறகு உருளைக்கிழங்கை நீளவாக்கில் துண்டுகளாக்கி , உள்ளே உள்ள சதையை எடுத்துவிட்டு, ஒடு போல் ஆக்கிக்கொள்ளவும். உருளைக்கிழங்கு சதையுடன் மயோனஸ், தயிர், தக்காளி சாஸ், சீஸ், ஸ்பிரட், வினிகர், உப்பு, மிளகுத்தூள், சில்லி ஃப்ளேக்ஸ், குடமிளகாய், கேரட், வெங்காயத்தாள், கோழிக்கறி சேர்த்துக் கலக்கவும். உருளைக்கிழங்கு ஓட்டின் உள்ளே இந்த கலவையை வைத்து அடைக்கவும். இதன் மேல் மொசரல்லா சீஸ்ஸை தூவி, 180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனில் 12 நிமிடங்கள் வைத்து (சீஸ் உருகும் வரை) வெளியே எடுக்கவும். இறுதியாக இதன் மீது கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
குறிப்பு:
கோழிக்கறிக்குப் பதிலாக பனீர் வைத்தும் செய்யலாம்.
ஹலீம்
தேவையானவை:
வெங்காயம் - 3 (நீளவாக்கில் நறுக்கவும்)
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கப்
ஆய்ந்த புதினா இலைகள் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 6 (துண்டுகளாகக் கீறவும்)
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
அடித்த கெட்டித் தயிர் - ஒரு கப்
வெங்காயம் - 8 (நறுக்கி சூடான எண்ணெயில் பொரிக்கவும்)
நெய் - 6 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைப் பழம் – ஒன்று (சிறிய துண்டுகளாக நறுக்கவும்)
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
முதலில் வேகவைக்க:
எலும்பு நீக்கிய ஆட்டு இறைச்சி - ஒரு கிலோ
பச்சை மிளகாய் - 15
இஞ்சி விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
பட்டை - ஒரு இஞ்ச் துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
சீரகம் - அரை டீஸ்பூன்
மிளகு - 6
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - ஒரு கப்
இரண்டாவதாக வேகவைக்க :
உடைத்த கோதுமை - 150 கிராம்
உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் வேகவைக்க கொடுத்துள்ள பொருள்களை குக்கரில் சேர்த்து நன்றாக வேகவைத்து இறக்கவும். ஆறவிட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். பிறகு, இரண்டாவதாக வேகவைக்க கொடுத்துள்ள பொருள்களை மற்றொரு குக்கரில் சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும். ஆறிய பிறகு தனியாக விழுதாக அரைத்து எடுக்கவும்.
அடிகனமான, வாய் அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதனுடன் பாதியளவு புதினா இலைகள், இஞ்சி - பூண்டு விழுது, தயிர், மஞ்சள்தூள், மிளகுத்தூள், முதலில் வேகவைத்து அரைத்த கறி, இரண்டாவதாக வேகவைத்து அரைத்த பருப்பு சேர்த்து அடி பிடிக்காமல் நன்றாகக் கலக்கவும். மேலே நெய்யை ஊற்றி 15 நிமிடங்கள் கிளறி அடிபிடிக்காமல் மிதமான தீயில் வேகவிடவும். பொரித்த வெங்காயத்தில் பாதி அளவு எடுத்து இதனுடன் சேர்க்கவும்.
பரிமாறும் முறை:
கிண்ணத்தில் ஹலீமை ஊற்றி அதன் மேல் கொத்தமல்லித்தழை, கீறிய பச்சை மிளகாய் துண்டுகள், புதினா இலை, பொரித்த வெங்காயத்தைத் தூவி எலுமிச்சைத் துண்டுகளை வைத்து அலங்கரித்துக் கொடுக்கவும்.
சாப்பிடும் முன் இதன் மேல் எலுமிச்சைச் சாற்றை பிழிந்து சூடாகச் சுவைக்கலாம்.
குறிப்பு:
கோழி இறைச்சியைப் பயன்படுத்தியும் செய்யலாம்.
லுக்மி
தேவையானவை:
பூரணம் செய்ய:
கறி கைமா - கால் கிலோ
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி - பூண்டு விழுது – அரை டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
லுக்மி செய்ய:
மைதா மாவு - ஒரு கப்
கோதுமை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
ரவை - 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
கறியுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துப் பிசிறி அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடாக்கி... வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் ஊறவைத்த கறி சேர்த்துக் கிளறி பத்து நிமிடங்கள் வேகவிடவும். இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். ஆறிய பின் கறி கலவையுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.
பாத்திரத்தில் மைதா மாவுடன், கோதுமை மாவு, உப்பு, ரவை, எண்ணெய் சேர்த்துக் கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மிருதுவாகப் பிசையவும். மாவை மூடி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, மீண்டும் 5 நிமிடங்கள் இந்த மாவை நன்றாகப் பிசையவும். பிசைந்த மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி மைதா மாவு தூவி, சப்பாத்திகளாகத் தேய்க்கவும், இதை நீளவாக்கில் மூன்று துண்டுகளாக்கவும்.
ஒவ்வொரு சப்பாத்தி துண்டின் மீதும் ஒரு டேபிள்ஸ்பூன் கைமாவை வைத்து இரு ஓரங்களையும் ஒன்றின் மேல் ஒன்றாக முக்கோண வடிவத்துக்கு மூடவும். பூரணம் வெளியே வராதபடி ஒரங்களை நன்றாக அழுத்திவிடவும். இதுவே லுக்மி. வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி லுக்மிகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். தயிர், தக்காளி, சாஸ், புதினா சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்
நுங்கு - இளநீர் பானம்
தேவையானவை:
இளம் நுங்கு - 6 (தோல் உரித்துப் பிசையவும்)
இளநீர் - ஒன்று (வழுக்கையுடன்)
பனங்கற்கண்டு - தேவையான அளவு
செய்முறை:
இளநீருடன் பனங்கற்கண்டு சேர்த்துக் கரைத்து வடிகட்டவும். இதனுடன் பிசைந்த நுங்கு, இளநீர் வழுக்கைச் சேர்த்துக் கலக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துப் பரிமாறவும்.
Post a Comment