குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பெண்களுக்குத் தரும் அனுகூலங்கள்! - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி
சட்டம் பெண் கையில்! எழுத்து வடிவம்: யாழ் ஸ்ரீதேவி , ஓவியம் : கோ . ராமமூர்த்த ி தி ருமண உறவில் , பெண்ணின் மீது வார்த்தைகளாகவும...
குடும்ப அமைப்பில் எவையெல்லாம் வன்முறை?
ஒரு குடும்பத்துக்கு மருமகளாக வந்த பெண்ணை பையனின் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், இன்னபிற குடும்ப உறவுகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்துவது வன்முறை. மனரீதியாக என்று சொல்லும்போது, சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றி புறம்பேசுவது, உள்நோக்கத்துடன் அவர் மனதைக் காயப்படுத்தும்படி பேசுவது, வார்த்தைகளால் மன உளைச்சல் தருவது... இவையெல்லாமே வன்முறைதான். உடல்ரீதியாக என்று சொல்லும்போது, முடியைப் பிடித்து இழுப்பது, அடிப்பது, சூடு வைப்பது எனச் சம்பந்தப்பட்ட பெண்ணைத் துன்புறுத்தும் அனைத்துச் செயல்களும் தண்டனைக்குரிய வன்முறையே.
இதுபோன்ற விதவிதமான குடும்ப வன்முறைகளைப் பெண்கள் பலர் சகித்துக் கொண்டு வாழ்கின்றனர். ஆண்கள், தங்கள் இயலாமையை மனைவியிடம் கோபமாக, ரணப்படுத்தும் சொற்களாக, வன்முறையுடன் வெளிப்படுத்தி அவர்களை மனம்நோகச் செய்கின்றனர். மதுப் பழக்கத்துக்கு ஆளான ஆண்கள் மனைவியை அடிப்பதற்கும் உதைப்பதற்கும் காரணமே தேவைப்படுவதில்லை. அவர்களின் அந்த நேர ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள ஒரு ஜீவன் தேவைப்படுகிறது... அவ்வளவுதான்.
இந்தியாவில் குடும்ப உறவுகளால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதால், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகக் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2005 செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்டு, 2006 அக்டோபர் 26 அன்று நடைமுறைக்கு வந்தது. குடும்ப வன்முறை வழக்குகளை விசாரிப்பதற்காகவே தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் சமூகநலத் துறை அலுவலகத்தில் இந்தப் பாதுகாப்பு அலுவலர்கள் (Protection Officers) உள்ளனர். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அலுவலகத்தைத் தொடர்புகொண்டு புகார் கொடுக்கலாம். புகாரின் அடிப்படையில் ஆலோசனை வழங்குவார்கள். பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவ உதவி அளிப்பார்கள். அரசு பாதுகாப்பு அலுவலகத்தில் தங்கிக்கொள்ள உதவுவார்கள். பாதுகாப்பு அலுவலர்கள் பெண்களாக இருப்பதால் பாதிக்கப்பட்ட பெண் அவரின் அந்தரங்க விஷயங்களையும் தயக்கம் இல்லாமல் பகிர்ந்துகொள்ளலாம். தேவை ஏற்படும்போது வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் இவர்களால் முடியும். தவிர, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணும், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம்.
தயக்கம் வேண்டாம்... அச்சமும் வேண்டாம்...
குடும்ப வன்முறை என்பது எந்த நேரத்திலும் நடக்கலாம். இரவு நேரம் கணவன் அடித்துத் துன்புறுத்தினால், ‘இந்நேரத்தில் எங்கு போய் புகார் கொடுப்பது? தற்காப்புக்காகப் பாதுகாப்பு அலுவலரைத் தொடர்புகொள்ளலாமா? அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு இந்த நேரத்தில் போகலாமா?’ என்பதுபோன்ற தயக்கமும் குழப்பமும் தங்களுக்கான அரணை அடைவதிலிருந்து பெண்களைப் பின்னிழுக்கிறது. விளைவு, அந்நேர மன நெருக்கடியின் காரணமாகச் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குத் தள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற பாதுகாப்பற்ற சூழலில் பெண்களுக்கு முதலில் உதவக்கூடியது, அவர்களின் தைரியமே. அதன் துணையோடு, உடனடியாக அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்தை அணுகலாம். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கச் செயல்படும் 1091 என்கிற இலவச எண்ணில் தொடர்புகொண்டும் புகார் அளிக்கலாம்.
சிறப்பம்சங்கள்
* மணமாகாமல் லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையில் ஓர் ஆணுடன் வசிக்கும் பெண்ணுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.
* அடிப்பது, உதைப்பது, கிள்ளுவது, தலையைச் சுவரில் மோதுவது, ஆபாச வார்த்தைகளில் திட்டுவது, மன உளைச்சலை உண்டாக்கும் விதமாகப் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுப்பது, வற்புறுத்துவது, நடத்தையைச் சந்தேகித்து இழிவுப்படுத்துவது, வரதட்சணை வாங்கிவரக் கட்டாயப்படுத்துவது, பொருள்களை எறிந்து காயப்படுத்துவது, குழந்தைகளை அடிப்பது... இவையெல்லாம் வன்முறையே.
* பதிவு செய்யப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் புகார்களைப் பெற்றுப் பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்கலாம்.
* வசதி இல்லாதவர்களுக்கு இலவச சட்ட உதவி செய்து தரப்படும்.
* குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் கணவர்மீது (அல்லது அப்பா, சகோதரர் என்று வன்முறைக்கு ஆளாக்கியவர் எவர் மீதும்) புகார் கொடுக்கும் பெண், அவர் வீட்டிலேயே தங்கிக்கொள்ளும் உரிமையைச் சட்டம் பெண்ணுக்குக் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
* பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, தனக்குப் பாதிப்பு ஏற்படுத்தியவரிடமிருந்து மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைப்பட்டாலோ, மாதாமாதம் பராமரிப்புச் செலவுக்கோ உண்டான தொகையைக் கொடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிடலாம்.
* திருமணமாகி ஏழு வருடங்களுக்குள் மட்டுமே வரதட்சணைப் புகார் கொடுக்க முடியும். குடும்ப வன்முறை புகார்களுக்கு இதுபோன்ற காலவரம்புகள் இல்லை.
* குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் சிறை தண்டனை அல்லது ரூபாய் இருபதாயிரம் அபராதம் அல்லது இவை இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். இது தவிர, குற்றத்தின் தன்மையைப் பொறுத்து இந்திய தண்டனைச் சட்டம் 1860, பிரிவு 498A மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961-ன் கீழும், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அதற்கேற்பவும் தண்டனைகள் தீவிரமாகும்.
* துணையை மிரட்டுவதற்காக இந்தச் சட்டத்தின் கீழ் புகார் கொடுப்பது தவறு.
ஆகவே பெண்களே... குடும்ப வன்முறை என்பது பொறுத்துக்கொள்ளவோ, சகித்துக் கொள்ளவோ வேண்டியதல்ல; தடுக்கப்பட வேண்டியது, தண்டனைக்குரியது.
* குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் ‘பெண்’ என்று குறிப்பிடப்படுவது, மனைவி மட்டுமல்லாது, எல்லா உறவுமுறை பெண்களுக்கும் பொருந்தும். மகன் அம்மாவை அடித்தாலும் அதுவும் வன்முறையே.
* குடும்ப வன்முறையால் ஆண் பாதிக்கப்படும்போதும், வன்முறை ஏற்படுத்திய பெண்மீது இந்தச் சட்டம் பாயும்.
* கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆண் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியபோது, குடும்ப வன்முறைச் சட்டத்தின் பிரிவு 2(Q)-ல் 18 வயதுக்கு மேலான ஆண்களுக்கு இச்சட்டம் பொருந்தாது என்கிற பகுதியை நீக்கியது.
கணவனிடமிருந்து குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் பராமரிப்புத் தொகை கேட்டு, ஒடிசா மாநிலக் கீழமை நீதிமன்றத்தில் மமிதா ராணி சுதார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதை ஏற்க மறுத்து அவரின் கணவர் கிரிதரிநாத், ஒடிசா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘என் மனைவி குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்தது செல்லாது. ஏனென்றால், அவர் புகார் அளித்தபோது நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் வசிக்கவில்லை; பிரிந்துவிட்டோம்’ என்பது அவரது வாதம். நீதிமன்றமோ, குடும்ப வன்முறை சட்டப்பிரிவு 2(F)-ன்படி புகார் கொடுக்கும்போது ஒரே வீட்டில் வசிக்காவிட்டாலும் அதற்கு முன்பு வசித்திருந்தால் இந்தச் சட்டம் பொருந்தும் என்று தீர்ப்பளித்தது.
Post a Comment