மரத்தை தாங்கிப் பிடிக்கிற வேர்களை போன்றவர்கள் நம் முன்னோர். வேர்கள் இல்லன்னா, மரம் இல்ல.....வேர்களை காப்போம்!
வேகமாக சென்று கொண்டிருந்த கார், மெல்ல தன் வேகத்தை குறைத்து, அந்த கட்டடத்தின் வாசலில் நின்றது. காரிலிருந்து இறங்கிய போது, தன் கால்கள் நட...

தன் அப்பாவோடு, 20 ஆண்டுகளுக்கு முன், இதே இடத்திற்கு வந்திருக்கிறார், ரவிராம்.
அவரது நினைவுகள், வேகமாக பின்னோக்கி சென்றன.
எத்தனையோ சிரமங்களுகிடையே, தன் சொற்ப சம்பளத்தில் ரவிராமை, இன்ஜினியரிங் படிக்க வைத்தார், அப்பா சபேசன்; அவனும் நன்றாக படித்து, முதல் வகுப்பில் தேறியதால், முன்னணி நிறுவனத்தில், வேலை கிடைத்தது.
ரவிராம் வேலைக்கு சென்ற ஒரே ஆண்டில், அவனுடைய அம்மா மரணமடைய, அடுத்த ஆண்டிலே ரவிராமிற்கு, திருமணம் செய்து வைத்தார், சபேசன்.
அதுவரை, நதி போல அமைதியாக சென்ற ரவிராமின் வாழ்க்கை, திருமணத்துக்கு பின், காட்டாறு போல மாறியது. எப்போதுமே விட்டு கொடுப்பவராக, கண்ணியமாக நடந்து கொண்டார், அப்பா. இருப்பினும், ரவிராமின் மனைவிக்கு, மாமனாரை பிடிக்கவில்லை. ஆனால், பேரன் ரகுவிற்கு தாத்தா மீது கொள்ளை பிரியம். அதனால், எப்போதும், அவரோடு ஒட்டிக் கொண்டு திரிவான். இதுவும், சபேசன் மீது வெறுப்பு ஏற்பட, ரவிராமின் மனைவிக்கு ஒரு காரணமாகி விட்டது.
இதற்கு மேல், ஒன்றாக இருக்க முடியாது என்ற நிலை ஏற்படவே, ஒருநாள், அப்பாவை தனியே அழைத்து, 'அப்பா... எனக்கு துபாய்ல, 'அசைன்மென்ட்' கொடுத்திருக்காங்க; ரெண்டு வருஷம் அங்கேயே இருந்தாகணும்; குடும்பத்தோடு போகலாம்ன்னு இருக்கேன். அதனாலே...'
'ஏம்பா இழுக்கற... எங்காவது முதியோர் இல்லம் இருந்தா அதுல என்னை, சேர்த்து விட்டுடேன்...' என்றார்.
விஷயம் தெரிந்து, அழத்துவங்கிய ரகு, 'அப்பா... தாத்தா நம்ம கூடவே இருக்கட்டும். அவர எங்கேயும் கொண்டு போய் விட்டுடாதீங்க; அப்படி இருந்தா, என்னையும் அவரோடவே சேர்த்து விட்டுடுங்க; நான், அங்கயிருந்தே ஸ்கூலுக்கு போறேன்...' என்று அடம்பிடித்தான்.
ரவிராமும், அவன் மனைவியும் அவனை சமாதானப்படுத்தினர்.
ஆனால், தன் மகன் தன்னிடம் சொன்னது எல்லாம் பொய் என்பதை, பேரன் மூலமாக அறிந்து, துடித்து போனார். பின், தன்னை தானே சமாதானப்படுத்தி, ரவிராமுடன், முதியோர் இல்லம் வந்து சேர்ந்தார். அதன்பின், தன் அப்பாவை வந்து பார்க்கவோ, வீட்டிற்கு அழைத்துப் போகவே இல்லை ரவிராம்.
இருபது ஆண்டுகள் பறந்தோடின; அப்பா சபேசனை கொண்டு வந்து சேர்த்த அதே முதியோர் இல்லத்திற்கு இப்போது, தன் மகன் ரகுவோடு வந்து இறங்கினார், ரவிராம்.
அப்பாவின் கை பிடித்து, மெல்ல நடத்தி, உள்ளே அழைத்துச் சென்றான் ரகு; கூடவே, அவன் மனைவியும் வந்தாள்.
''அப்பா... நீங்க தாத்தாவ இங்கே கொண்டு வந்து சேர்த்ததுக்காக, உங்கள இங்க கூட்டி வரல. எனக்கு, உங்க மீது ரொம்ப பாசம் இருக்கு; ஏன்னா, நீங்க என்னை பாசமா வளர்த்த அப்பா. அம்மா தந்த நெருக்கடியில தான், நீங்க தாத்தாவ இங்க கொண்டு வந்து சேர்த்தீங்கன்னு, எனக்கு நல்லாவே தெரியும். நான் உங்கள எந்த அளவுக்கு நேசிக்கிறேனோ, அதைவிட அதிகமாக, தாத்தாவை நேசிச்சேன். ஏன்னா, மரத்தை தாங்கிப் பிடிக்கிற வேர்களை போன்றவர்கள் நம் முன்னோர். வேர்கள் இல்லன்னா, மரம் இல்ல; அம்மா உயிரோட இருந்திருந்தா, அவங்க, உங்கள பத்திரமா பாத்துப்பாங்க. அவங்க இல்லாத நிலையில், நீங்க தனியா இருந்து கஷ்டப்படக் கூடாதுங்கிறதுக்காகத் தான் இங்க உங்கள விட்டுட்டு, நாங்க அமெரிக்கா போறோம். ஒரு வருஷம் மட்டும் இங்க இருங்க; நாங்க ரெண்டு பேரும், அமெரிக்கா போயிட்டு, உங்களுக்கு மகிழ்ச்சி தர்ற, ஒரு நல்ல செய்தியோடு திரும்பி வருவோம்,'' என்றான்.
''நீங்க ரெண்டு பேரும் நல்லவங்கன்னு எனக்கு தெரியும்; நான் செய்த பாவத்துக்கு, தண்டனைய அனுபவிச்சே ஆகணும்; இந்த ஒரு வருஷத்தை, நான் அப்படி நினைச்சிக்கிறேன். நீங்க, எந்த கவலையும் இல்லாம, நிம்மதியா போயிட்டு வாங்க,'' என்று கூறி அழுதார்.
ஓர் ஆண்டுக்கு பின், இந்தியா திரும்பிய ரகுவும், அவன் மனைவியும், முதியோர் இல்லத்திற்கு வந்தனர்.
''அப்பா இதை பாருங்க...'' என்று சொல்லி, கையில் இருந்த, 'டாக்குமென்ட்'டை அப்பாவிடம் கொடுத்தான், ரகு.
''என்னப்பா இது?''
''அமெரிக்காவுல நாங்க சம்பாதிச்ச பணத்தில, நம்ம கிராமத்தில, ஐந்து ஏக்கர் நிலம் வாங்கியிருக்கோம்; அதுக்கான கிரையப்பத்திரம் தான் இது. ஒரு, 'டிரஸ்ட்' ஏற்படுத்தி, அந்த இடத்தில, அழகான, 'ஹோம்' கட்டப்போறோம்; அதுல, பிள்ளைகளால கைவிடப்பட்ட வயதானவர்களை, எந்த கட்டணமும் வாங்காம சேர்த்து, அவங்கள பாதுகாக்கப் போறோம். நம்ம ஹோம்ல ஏழைகளுக்கு தான் முன்னுரிமை. அந்த இல்லத்துக்கு நீங்க தான் டிரஸ்டி; நீங்க தான்
எல்லாரையும் பத்திரமாக பாத்துக்க போறீங்க; புறப்படுங்கப்பா... நம்ம வீட்டுக்கு போகலாம்; இனிமே, நமக்கு நிறைய வேலைகள் காத்திருக்கு,'' என்றான்.
ரவிராமின் கைகளும், உதடுகளும் நடுங்க, கண்களிலிருந்து கண்ணீர், 'மளமள' வென்று கொட்ட, பேச இயலாமல், அப்படியே, சிலை போல் நின்றிருந்தார்.
Post a Comment