முக்கியமானது; திணிக்கப்படுகிற முடிவை விட, ஏற்கப்படுகிற முடிவில், உரியவர்களுக்கு முழுமையான ஈடுபாடு வரும்-இந்த நாள் இனிய நாள்!
'நான் கரடியா கத்திக்கிட்டிருக்கேன்; நீ பாட்டுக்கு போறயே... என்ன நினைச்சுகிட்டிருக்கே மனசுல...' இப்படி கத்துபவர், குடும்பத் தலைவர...

இப்படி கத்துபவர், குடும்பத் தலைவர் என்பதை ஊகித்திருப்பீர்.
'நான் சொல்றதை செய்யாம, உன் இஷ்டத்துக்கு நடந்துக்கிறியே... நீ முதலாளியா, நான் முதலாளியா?'
'நான், இந்த கல்லுாரியோட முதல்வர்; நான் வச்சது தான் இங்க சட்டம். எவனை வேணும்ன்னாலும் போய் பாரு; உன்னால என்ன முடியுமோ பாத்துக்க...'
'எங்க காம்பவுண்டுக்குள் வந்துட்டா, நாங்க சொல்றபடி தான் நடக்கணும்; இஷ்டமில்லேன்னா வெளியில போங்க...'
— இப்படியெல்லாம் கண்ட படி பேசி குதிப்பவர்கள், தங்கள் நோக்கத்தில், எப்போதாவது வெற்றி பெற்றிருக்கின்றனரா?
மாறாக, 'இங்க வந்து உட்காரு; இதை பத்தி, உன்கிட்ட விரிவாக பேசணும்; முதல்ல, நான் சொல்றதை கேளு; அப்புறம் நீ சொல்றதை கேட்கிறேன். ரெண்டு பேரும் பேசி, நல்ல முடிவா எடுப்போம்...' என்று கூறினால், பேசுபவரின் கருத்து, எடுபடுவதற்கான வாய்ப்பு, அதிகமாகி விடும்.
'நான் அப்படி சொல்றதுக்கு காரணம் இருக்கு; என் வழியில் போய், நான் சொல்றதை செஞ்சியானா, அதன் விளைவுகளை சந்திக்க நான் தயார்...'
'நான், ஒரு முதலாளிங்கிறதையே மறந்துடு; வயசுல மூத்தவன்னும், அனுபவஸ்தன்னும் மட்டும் எடுத்துக்க...' என்று ஆரம்பித்து, நிதானமாக பேசினால், 'சரி முதலாளி...' என்கிற பதில் வருவது நிச்சயம்.
அக்கல்லுாரி முதல்வர் யாரிடம் வேண்டுமானாலும், அப்படி பேசியிருக்கட்டும்; ஆனால், 'எவனை' என்கிற வார்த்தை, கல்லூரி செயலர், தாளாளரை கூட குறிக்கும் என்பதால், இது, வத்தி வைத்தால், உடனே பத்தி கொள்ளும். முதல்வருக்கு எதிராக, எல்லாவற்றையும் திருப்புவதற்கு, இவர், 'ஓவரா' பேசின வார்த்தைகளே போதும்!
தனக்கும், பிறிதொருவருக்குமான பிரச்னையில், உயர் பதவியில் இருப்பதனாலேயே தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற எண்ணத்தில், அனாவசியமாக வீசப்படும் பேச்சு, எதிரிக்கு மிக பெரிய ஆயுதத்தை, இவரே எடுத்து கொடுத்து, 'இந்தா... என்னை தாக்கு...' என்று சொல்வது போன்றதாகும்!
தலைமை பதவியில் இருப்போர், தங்களுக்கு கீழ் பணிபுரிவோரிடம் நீக்கு, போக்காக நடந்து கொள்ளவும், பேசவும் வேண்டுமே தவிர, தான் தோன்றித்தனமாக அல்ல.
'எனக்கு இப்படி தோணுது; சரின்னும் படுது. உங்க ஒத்துழைப்பு இல்லாம, நான் ஒண்ணும் செய்ய முடியாது. நான் சொல்றதுல, உடன்பாடு இல்லன்னா சொல்லுங்க; தாளாளர்கிட்டே வேணும்ன்னாலும், உங்க விஷயமா பேசி பார்க்கிறேன்...' என்று, இந்த முதல்வர் சொல்லியிருந்தால், பிடி, இன்னமும் இவர் கையை விட்டு போகவில்லை என்று பொருள்.
'சார்... எங்க காம்பவுண்டுக்குள்ளே, சில சட்ட, திட்டங்கள் இருக்கு; இதை எல்லாரும் பின்பற்றணும்ங்கிற எதிர்பார்ப்பு, எங்ககிட்டே இருக்கு. இதில, பிழை நடந்தா, நான் தான் பாதிக்கப்படுவேன். உங்க செயல்பாட்டுக்கு, நான் தண்டிக்கப்படணுமா... நீங்களே சொல்லுங்க...' என்றால், எதிராளி இறங்கி வருவார்.
அதிகாரமும், உரிமையும் உள்ளவர்கள், தங்கள் இருக்கையை, ஆயுதமாக பயன்படுத்துகிற போது, அதில் கெடுதல்கள் விளையவே, வாய்ப்பு அதிகம்.
மாறாக, தங்கள் இருக்கையை, கேடயமாக பயன்படுத்தி, தகுதியிலிருந்து ஒருபடி இறங்கி வந்து, முரட்டு வாசகங்களை நீக்கி, அதிகார தொனியை களைந்து, தேனில் தோய்க்கப்பட்ட வார்த்தைகளாக வழங்கினால், இரு வித நன்மைகள் நிகழும்.
முதலாவதாக, 'அவர் இருக்கும் நிலையில், இவ்வளவு இறங்கி வந்து பேசணும்ங்கிற அவசியம் என்ன...' என்கிற சிந்தனை, எதிராளிக்கு வருகிற போது, இதயம் திறந்து, விஷயம் நன்கு பதிந்து விட வாய்ப்பு அதிகம்.
இரண்டாவது நன்மையும் முக்கியமானது; திணிக்கப்படுகிற முடிவை விட, ஏற்கப்படுகிற முடிவில், உரியவர்களுக்கு முழுமையான ஈடுபாடு வரும்; இது, நமக்கு அணி சேர்க்கிற பெரும் பலம் தானே!
Post a Comment