பரிசுத்த காற்று... அடர் மரங்கள்... விடுமுறை சொர்க்கம்... பரளிக்காடு! தமிழகத்தின் சுற்றுலா தளங்கள்!

எங்கும் குவிந்து கிடந்த இயற்கை வளங்கள், இப்போதெல்லாம் அரிதாய் கிடந்த பொக்கிஷங்களாக மாறிப்போய் விட்டன. அப்படி ஒரு பொக்கிஷம் தான் பரளிக்கா...


எங்கும் குவிந்து கிடந்த இயற்கை வளங்கள், இப்போதெல்லாம் அரிதாய் கிடந்த பொக்கிஷங்களாக மாறிப்போய் விட்டன. அப்படி ஒரு பொக்கிஷம் தான் பரளிக்காடு. மேற்குத்தொடர்ச்சி மலையில் இன்னும் இயற்கை மாறாமல் இருக்கும் மலை கிராமம்.

கொஞ்சும் இயற்கை எழில், சுத்தமான காற்று, அடர்ந்து வளர்ந்த மரங்கள், வளைந்து நெழிந்து ஓடும் ஆறு, பளிங்கு நீரில் பரவி கிடக்கும் கற்கள், மண் மணம் மாறாத மக்கள் என முற்றிலும் இயற்கை அழகால் நிரம்பி உள்ளது பரளிக்காடு. உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் நீங்கள் ஒரு பயணம் செல்ல விரும்பினால், பரளிக்காடு உங்களுக்கான சரியான சாய்ஸ். இயற்கை எழில் கொஞ்சும் இந்த பகுதியின் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டேன் என்ற வாக்குறுதியுடன் சில கட்டுப்பாடுகளுக்கு செவி சாய்தால் நீங்கள் புறப்படலாம்.

சூழல் சுற்றுலா தளங்கள்
வனத்தையொட்டிய இந்த மலை கிராமம், இயற்கையை தொலைத்து விடாமல் இருக்க முக்கிய காரணம் மலைவாழ் மக்கள். இயற்கையோடு ஒத்த வாழ்க்கையை வாழ்ந்து, இயற்கை மாறாமல் இந்த கிராமத்தை பராமரித்தும் வருகிறார்கள். இந்த கிராமம் சுற்றுலா தளமாக மாறியது 2007 மே மாதத்தில். தற்போது 10 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது. பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்று விட்டார்கள். ஆனாலும் இன்றும் எந்த சூழலியல் பாதிப்பையும் இந்த கிராமம் சந்திக்கவில்லை. முழுக்க முழுக்க சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சுற்றுலாவாகத்தான் இந்த பயணம் இருக்கிறது. எந்த கடையும் இருக்காது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முடியாது.
10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இந்த ஆண்டு முதல் கிராமத்திலேயே ஒரு இரவு தங்கி செல்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பகல் மட்டும் கழிக்க பரளிக்காடு சூழல் சுற்றுலா தளமும், காலை 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை அங்கேயே இருந்து கழிக்க பூச்சிமரத்தூர் சூழல் சுற்றுலா தளங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பரளிக்காடு செல்வது எப்படி?
கோயமுத்தூர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் இன்னும் மாசுபடாமல் இயற்கை மிக தூய்மையாக காட்சியளிக்கும் பரளிக்காடு, தமிழக - கேரளா மாநில எல்லையில் பில்லூர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது. கோயமுத்தூரிலிருந்து 70 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் இயற்கை எழில் மிகுந்த இந்த அழகிய பிக்னிக் ஸ்பாட்டை நீங்கள் அடையலாம்.

சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் தான் அனுமதி. பரளிக்காடு செல்ல ஒரு வாரத்துக்கும் முன்னரே அப்பகுதி வன அலுவலரிடம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். எனவே முழுமையான திட்டமிடலுடன் தான் இங்கு செல்ல முடியும். கோயமுத்தூரில் இருந்து மேட்டுப்பாளையாம் சாலையில் 35 கிலோமீட்டர் பயணித்து காரமடையை அடைந்து, அங்கிருந்து 35 கிலோ மீட்டர் பில்லூர் சாலையில் பயணித்தால் பரளிக்காடு உங்களை வரவேற்கும்.

பரிசல் பயணத்துக்கு காலை 10 மணிக்கு முன்பாக அங்கு இருக்க வேண்டும் என்பதால், காலை 7 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு விடுவது நல்லது. அப்போது தான் செல்லும் வழிகளில் எல்லாம் கொட்டிக்கிடக்கும் இயற்கையின் அழகை ரசித்து செல்ல முடியும்.

காரமடையில் இருந்து ஓரிரு கிலோ மீட்டர்களை கடந்து விட்டாலே நகரங்களின் அடையாளங்கள் மறைந்து அழகிய கிராமிய அடையாளங்கள் நம்மை வசீகரிக்க துவங்குகின்றன. சில கிலோமீட்டர்களை கடந்தால் வருகிறது வெள்ளியங்காடு. இது தான் மலையடிவாரத்தில் உள்ள கடைசி கிராமம்.

வெள்ளியங்காட்டை கடந்து விட்டால் காட்டுக்கு நடுவே பயணிக்கிறது சாலை. சுற்றிலும் மலைகள், வளைந்து நெழிந்து செல்லும் மலைப்பாதை, பறவைகளின் வினோத சத்தங்கள், அழகிய நீரோடைகள் என கொட்டிக்கிடக்கும் எழில் நம் பயணத்தை ரம்மியமாக்குகிறது. கொண்டை ஊசி வளைவுகளிடையே வாகனத்தை நிறுத்தி மலைகளையும், பறவைகள், விலங்குகளின் சத்தத்தையும் நீங்கள் ரசிக்கலாம். மலைப்பாதை என்பதால் பொறுமையாகவும், கவனத்துடனும் பயணிப்பது நல்லது.

செல்லும் வழிகளில் அங்கங்கே சில சிறிய மலை கிராமங்கள் உள்ளன. மலை கிராமங்களை கடந்து சென்றால் அடர்ந்த காடுகளுக்கு நுழைகிறது சாலை. அங்கிருந்து சில கிலோமீட்டர் கடந்து சென்றால் பரளிக்காடு. வழியில் நீங்கள் வனத்துறையின் இரண்டு செக்போஸ்ட்களை கடந்து வர வேண்டும். அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.

தமிழகத்தின் டாப் அருவிகள்

பரளிக்காடு சூழலியல் பயணம்
முதலில் பரளிக்காடு சூழல் சுற்றுலா பற்றி பார்க்கலாம். பில்லூர் அணைக்கு பின்பகுதியில் உள்ள பரளிக்காடு கிராமத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிக்கு அருகில் ஆலமரத்தடியில் இருக்கைகள் போடப்பட்டிருக்க, சுக்கு காபியுடன் வரவேற்கின்றனர் அங்குள்ள பழங்குடியின மக்களும், வனத்துறையினரும். சுக்கு காபி குடித்து விட்டு பயணத்தின் களைப்பு தீர சிறிது நேரம் அமர்ந்து இருந்தால், பரிசல் பயணம் துவங்குகிறது.

20 பரிசல்கள் உள்ளன. 20க்கும் அதிகமான ஓட்டுனர்கள் உள்ளனர். ஒரு பரிசலில் 4 பேர் வரை மட்டும் தான் செல்ல முடியும். பரிசல்கள் மூங்கில்களால் தயாரிக்கபடாமல், பாதுகாப்பு காரணங்களுக்காக பைபர் கிளாசால் செய்யப்பட்ட பரிசல்கள் தான் பயணத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. பயணிகள் அனைவருக்கும் லைப் ஜாக்கெட் அணிவிக்கப்பட்டு பரிசல் பயணம் துவங்குகிறது.

ரம்மியமான பரிசல் பயணம்
பரிசலை இயக்குபவர்கள் அந்த பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள். பரிசலை இயக்கிக்கொண்டே, ஏரி, காடு, மலைவாழ் கிராமங்கள் பற்றி எல்லாம் பேசுகிறார்கள். நம் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் சளிக்காமல் விடை தருகிறார்கள். ’இந்த ஏரி எவ்ளோ ஆழமிருக்கும்?’ என மிதமான பயத்துடன் நம்மிடம் இருந்து வந்த கேள்விக்கு, அதுவா 50 அடியில இருந்து 60 அடி இருக்கும்’ என சாதரணமாக பதிலளித்தனர். என்னது 60 அடியா? ஒண்ணும் பயம் இல்லையே? என்ற கேள்விக்கு பின்னால் இருந்த அச்சத்தை உணர்ந்தவர்கள். “அதெல்லாம் ஒண்ணும் பயப்படாதீங்க. இங்க 2007ம் வருஷத்துல இருந்து பரிசல் சவாரி நடக்குது. ஒரு சின்ன அசம்பாவிதம் கூட நடந்ததில்ல. நாங்க சின்ன வயசுல இருந்து இங்க தான் இருக்கோம். இந்த ஏரி, காடு எல்லாம் எங்களுக்கு நல்லா பரிச்சயம். வெறும் மரக்கட்டையிலேயே ஏரியில இந்த பக்கத்துல இருந்து அந்த பக்கத்துக்கு போவோம். அதனால பயம் எல்லாம் அவசியமே இல்லை. நீங்க சந்தோஷமா இருங்க,” என தைரியம் கொடுத்தனர்.

சுமார் 30 நிமிட பரிசல் பயணத்துக்கு பின்னர் வனத்தையொட்டி நிற்கிறது. சும்மா காட்டுக்குள்ள ஒரு ரவுண்ட் போய்ட்டு வாங்க.னு பரிசல் ஓட்டிகள் கூற, இறங்கி நடந்தோம். கொம்புடன் இருந்த காட்டெருமையின் மண் ஓடு முதலில் பயமுறுத்தினாலும், பின்னர் அனைவரும் அதை எடுத்து விளையாட துவங்கி விட்டனர். தொடர்ந்து காட்டுக்குள் ஒரு சின்ன ரவுண்ட் அடிக்கலாம். வன விலங்குகள் உலவும் காடு என்பதால் சிறிது நேரம் தான் அனுமதி. அரிய பறவைகள், உடும்பு, வாய்ப்பிருந்தால் மான் உள்ளிட்ட வனவிலங்குகளை பார்க்கலாம். மீண்டும் அங்கிருந்து பரிசல் பயணம். 10.30 மணிக்கு துவங்கிய பயணம், 12.30 மணிக்கு துவங்கிய இடத்திலேயே நிறைவுறுகிறது பரிசல் பயணம்.

சுவையான மதிய உணவு
மீண்டும் மர அடிவாரம். நாற்காலிகளில் அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறினால் மதிய உணவு ரெடி. அந்த பகுதி மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினரால் மதிய உணவு வழங்கப்படுகிறது. கேசரி, சப்பாத்தி, குருமா, ராகி களி உருண்டை, சிக்கன், கீரை, வெஜிடபிள் பிரியாணி, வெங்காயசட்னி, உருளைக் கிழங்கு சிப்ஸ், தயிர் சாதம், ஊறுகாய், வாழைப்பழம் ஆகிய உணவுகள் பரிமாறப்படுகிறது. தேவையான அளவு சாப்பிடலாம். சுவையாக பரிமாறப்படும் உணவை சாப்பிட்டு விட்டு மீண்டும் சிறிது நேரம் இளைப்பாறினால், 2 மணிக்கு வன காவலர் ட்ரெக்கிங் செல்லலாம் என வனத்துறையினர் அழைக்கின்றனர்.

பரளிக்காடில் இருந்து சென்ற வழியிலேயே திரும்பி 10 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் அத்திகடவு பாலம் வருகிறது. அங்கு தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு அத்திக்கடவு ஆற்றையொட்டி ட்ரெக்கிங் செல்லலாம். உடன் பழங்குடியினத்தவர் ஒருவரும், வனத்துறையைச் சேர்ந்த ஒருவரும் உடன்வருகின்றனர். ஓரிரு கிலோ மீட்டர் ஆற்றையொட்டி நடந்து சென்றால், ஆளை மயக்கும் ரம்மியமான இடத்தில் குளிக்க அனுமதிக்கின்றனர். வெயில் நேரத்திலும் கூட மிகவும் குளிர்ந்தே இருக்கிறது ஆற்று நீர்.
ஆறு குறித்து உடன் வந்த பழங்குடியின மக்களிடம் கேட்டபோது. “இது அத்திக்கடவு ஆறு. மலையில் இருந்து வருகிறது. இது மூலிகை நீர். குளித்தால் மிகவும் புத்துணர்வு கிடைக்கும்,” என்றார். எல்லோரும் ஆனந்தமாக குளியல் போட்டுக்கொண்டிருக்க, “மணி 5 ஆகப்போகுது. குளிச்சது போதும் எல்லோரும் கிளம்புங்க,” என அழைக்க யாரும் அழைப்பை மதிப்பதாய் தெரியவில்லை. ”சீக்கிரம் கிளம்புங்க. யானைங்க எல்லாம் தண்ணி குடிக்க இங்க தான் வரும்” என சொன்னவுடன் ஆற்றில் இருந்தவர்கள் எல்லாம் கரைக்கு வந்து விட்டனர். மீண்டும் மலை பயணம். பறவைகளின் ஒலி, விலங்குகளின் வினோத சத்தம் என உங்களின் இந்த பயணம் கட்டாயம் சிறந்த அனுபவமாக இருக்கும்.

இந்த ஆண்டு முதல் பூச்சிமரத்தூர் சூழல் சுற்றுலா தளம் துவங்கப்பட்டுள்ளது. பரளிக்காடு பயணத்தில் திளைத்த பயணிகள் பலர், இங்கு ஒரு இரவு தங்க ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என விருப்பம் தெரிவிக்க, பரளிக்காடு அருகில் பூச்சமரத்தூரில் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக 3 தங்கும் விடுதிகள் உள்ளன. ஒரு அறையில் 8 பேர் வரை தங்கலாம். ஒரு நாளில் 24 பேர் வரை தங்கலாம். இங்கும் சனி, ஞாயிறு மட்டுமே அனுமதி. முன் பதிவு அவசியம். ஒரு நபருக்கு 1500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

தமிழகத்தின் டாப் அருவிகள்

காலை 10 மணிக்கு பூச்சமரத்தூர் வந்தடைபவர்களுக்கு வெல்கம் டிரிங் கொடுக்கப்படுகிறது. சற்று இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தால் மதிய உணவு தயாராகிவிடும். மலைவாழ் மக்களால் தயார் செய்து வழங்கப்படும் மதிய உணவை உட்கொண்டு சிறிது ஓய்வெடுத்த பின்னர் மாலை 4 மணிக்கு பரிசல் பயணம் துவங்குகிறது. பரிசல் பயணம் முடிந்து மாலை 6 மணிக்கு நீங்கள் அறையை வந்தடையலாம். வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும் என்பதால் அதன் பின்னர் வெளியே அனுமதிப்பதில்லை. இரவு நேரங்களில் பறவைகள், விலங்குகள் சத்தத்தை நீங்கள் கேட்க முடியும். மறக்க முடியாத இரவாக அது நிச்சயம் இருக்கும். இந்த தங்குமிடம் சூழலை பாதிக்காத வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மறுநாள் அதிகாலை எழுந்த உடன் வனத்தையொட்டிய பகுதியில் நீங்கள் வாக்கிங் செல்லலாம். உங்களோடு வனத்துறையினரும், பழங்குடியின மக்களும் வனத்தைப்பற்றியும், விலங்குகள், பறவைகள் மற்றும் சூழலியல் குறித்து விரிவாக பேசுவார்கள். காலை உணவை முடித்துக்கொண்டு 10 மணிக்கு அங்கிருந்து புறப்படலாம்.

பழங்குடியின மக்கள் நலனுக்காக
இந்த சுற்றுலா மூலம் கிடைக்கும் தொகை முழுவதும் பழங்குடியின மக்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. பரிசல் ஓட்டுபவர்கள், மதிய உணவு தயாரிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் போக மீதமுள்ள தொகை பழங்குடியின மக்களுக்கு நிரந்தர வருவாய் ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.

”இது வர்த்தக ரீதியில் லாப நோக்கத்தில் துவங்கப்படவில்லை. இந்த பயணத்துக்கு நீங்கள் வழங்கும் முழுத்தொகையும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேர் இங்கு வந்து சென்றுள்ளனர். இதன் மூலம் பழங்குடியின மக்களுக்கு பல மேம்பாட்டு பணிகள் நடந்துள்ளன. இது போக 12 லட்ச ரூபாய் வங்கியில் இருப்பில் உள்ளது,” என்கிறார்கள் வனத்துறையினர்.

சூழல் சுற்றுலா தளமாக இந்த இடம் பராமரிக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மது அருந்தவும், புகை பிடிக்கவும் தடை உள்ளது. அரசு நிறுவனமான ஆவின் உட்பட பல நிறுவனங்கள் கடை அமைக்க அனுமதி கோரியும் அனுமதிக்கப்படவில்லை.

நகர வாழ்க்கையில் இருந்து விலகி, பரபரப்பு இல்லாம இப்படி அமைதியா இயற்கையோட ஒரு நாளை நீங்கள் கழிக்க விரும்பினால் அதற்கு சரியான இடம் பரளிக்காடு. சுற்றிலும் மலைகள் சூழ, குளுமையான வானிலையில் சுத்தமான காற்றை சுவாசித்து, சுவையான, சத்தான உணவை உண்டு, இதமாய் இயற்கையை ரசிப்பதில் இருக்கும் சுகம் எதிலும் இருப்பதில்லை தான். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

பரளிக்காடு பயணத்துக்கு முன் கவனிக்க...
* பரிசல் பயணம், மதிய உணவு, ட்ரெக்கிங், மூலிகை குளியல் என அனைத்துக்கும் சேர்த்து பெரியவர்களுக்கு 500 ரூபாயும், 12 வயதுக்கு குறைவானவர்களுக்கு 400 ரூபாயும் கட்டணம் பெறப்படுகிறது.

* ஒரு நாள் தங்கியிருக்க வேண்டுமானால் ஒரு நபருக்கு ரூ.1500 கட்டணம் பெறப்படுகிறது.

* இந்த சூழல் சுற்றுலாவுக்கு சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் மட்டுமே அனுமதி. வார நாட்களில் குறைந்தது 40 பேர் கொண்ட குழுவாக செல்ல விரும்பினால் அனுமதி வழங்கப்படும்.

* பயணத்துக்கு ஒரு வாரம் முன்னரே வன அலுவலரிடம் முன் பதிவு செய்ய வேண்டும்.

* கண்டிப்பாக மது அருந்த, புகைபிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை.

* பாலீத்தீன் கவர்கள், பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்தக்கூடாது.

Related

தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் 7743874710811600552

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item