நாட்டு மருந்துக் கடை - 15
நாட்டு மருந்துக் கடை - 15 க ளைச் செடி, வேலிப் பயிர் என அலட்சியமாகப் பார்க்கப்படும் பல தாவரங்...

களைச் செடி, வேலிப் பயிர் என அலட்சியமாகப் பார்க்கப்படும் பல தாவரங்கள் அசாத்தியமான மருத்துவத் தாவரங்கள் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அப்படிப்பட்ட ஒன்று, ‘ஆடாதொடை’.
“ஆடாதொடையினாலே பாடாத நாவும் பாடும்; நாடாது வியாதி தானும்” எனச் சித்தர்கள் சிலாகித்துப் பாடிய இந்த மூலிகை, நம் வாழ்வில் சந்திக்கும் பல வியாதிகளுக்கான எளிய மருந்து.
அதீதக் கசப்புடன் கொஞ்சம் நுணா, மா, நெட்டிலிங்க இலை போல இருக்கும் இந்த மூலிகையை ஆடு தின்னாது என்பதால், இதற்கு இந்தப் பெயர் வந்திருக்கக்கூடும். வறண்ட நிலத்தில் தரையோடு ஒட்டி வளர்ந்திருக்கும் ‘ஆடு தின்னாப்பாளை’ வேறு; ‘ஆடாதொடை’ வேறு. ஆடாதொடை 5-10 அடிகள் வரை வளரக்கூடிய ஒரு குறுமரம். கனகாம்பரப் பூ போல வெண்ணிறத்தில் அடுக்கடுக்கான பூக்கும் இந்த மூலிகை.
ஒரு மண்பாத்திரத்தில் இரண்டு மூன்று ஆடாதொடை இலைகளைப் போட்டு, கொஞ்சம் தேன் விட்டு சூடாக்க, நல்ல மணம் வரும். அப்போது, அதிமதுரம் இரண்டு கிராம், திப்பிலி ஒரு கிராம், தாளிசபத்திரி ஒரு கிராம் போட்டு, ஒரு கப் தண்ணீர் விட்டு, அது அரை கப்பாக ஆகும் வரை காய்ச்சி, வடிகட்டி அந்த கஷாயத்தைக் கொடுக்க, வீசிங்குடன் வரும் இருமல், சளி அத்தோடு உள்ள காய்ச்சல் உடனடியாகக் கட்டுப்படும். ஓரிரு நாட்களில் இருமல், சளியில் இருந்து முழுமையாக விடுபட இயலும்.
வயிற்றில் உப்புசத்துடன் கூடிய இரைப்பு நோய், அத்தோடு சளியும் சுரமும் இருந்தால், ஆடாதொடை இலையுடன், மூன்று மிளகும் சேர்த்து ஒரு குவளை நீரில் ஊறவைத்துக் கஷாயமாக்கிக் கொடுக்க, உப்புசமும் இரைப்பும் உடனடியாகக் குறையும்.
சளி கட்டி, குரல் கம்மலாக கரகரப்புடன் இருக்கும்போது, ஆடாதொடை, அதிமதுரத் துண்டு, நான்கு மிளகு சேர்த்து கஷாயமாக்கிக் கொடுக்க கரகரப்பு நீங்கி, இயல்பான குரல் கிடைக்கும். தொண்டையின் உட்பகுதியில் ஒட்டியிருக்கும் சளி வெளியேறும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள், பலருக்கும் இப்படித் தொண்டையின் உட்பகுதியில் சளி ஒட்டி, அதை வெளியேற்ற அடிக்கடி செருமும் பழக்கம் இருக்கும். அப்படி ஒட்டியுள்ள சளியை வெளியேற்ற இந்தக் கஷாயம் மிக அற்புதமான மருந்து. இதன் சளி வெளியேற்றும் தன்மையை அறிந்து, ஆடாதொடை இலையைச் சுருட்டாகச் சுருட்டி புகைத்தும் உள்ளனர். (இப்போது அப்படிச் செய்ய வேண்டாம். மூலிகையைச் சுருட்டிப் புகைத்தாலும் அது நுரையீரலுக்கு நல்லதல்ல நண்பர்களே!)
இதன் சாறு, ரத்தமும் சீதமும் கலந்து போகும் ரத்தக்கழிச்சலுக்கும் நேரடியான மருந்து. தற்போதைய சித்த மருத்துவ ஆய்வாளர்கள், இந்தச் சாறும், இதன் இலையை சட்னி போல அரைத்துச் செய்யும் உருண்டையும், மாதவிடாய் சமயம் பெண்களைப் பெரிதும் வாட்டும் அதிக ரத்தப்போக்கை உடனடியாகக் கட்டுப்படுத்துவதைக் கண்டறிந்துள்ளனர்.
ஆடாதொடை இலையைப் போன்றே அதன் வேரும் மிகச் சிறந்த மருந்து. நாகர்கோவில் பகுதி வர்ம ஆசான்கள், சித்த வைத்தியர்கள் மத்தியில் மிகப் பிரபலமான சித்த மருந்து ‘வாசாதி லேகியம்’. இந்த லேகியத்தின் பிரதான மூலிகை, ஆடாதொடை இலைச்சாறும் அதன் வேர்க் கசாயமும்தான். இரைப்பு நோய் (Bronchial asthma) கட்டுக்குள் வர வாசாதி லேகியம் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மிகச் சிறந்த மருந்து. இந்த லேகியத்தை அரை தேக்கரண்டி நன்கு மென்று சாப்பிட்டு வெந்நீர் பருக, நெஞ்சில் கோழை கட்டி வதைக்கும் இரைப்பு நோய், மெள்ள மெள்ள விலகிவிடும். ஆடாதொடை வேர், காய்ந்த திராட்சை, கடுக்காய் (கொட்டை நீக்கியது) இவற்றை கஷாயமாக்கிக் கொடுக்க மலத்தை இளக்கி, இரைப்பு நோய் முழுமையாகக் கட்டுக்குள் வர உதவும்.
மூலிகை என்றாலே அது ‘ஐந்து மலை, ஆறு கடல் தாண்டி எடுக்கவேண்டிய குலேபகாவலி’ எனும் கதைகள் நினைவுக்கு வரும். ஆனால், நம் அருகில் எதேச்சையா்க வளரும் ஆடாதொடை போன்ற மூலிகைகள் செய்யும் அற்புதங்கள் அந்தக் குலேபகாவலிகளைவிட பெரிதினும் பெரிது.
Post a Comment