நலம் சேர்க்கும் வாழை ரெசிப்பிகள்!
நலம் சேர்க்கும் வாழை ரெசிப்பிகள் முக்கனிகளில் ஒன்றான வாழை எல்லாக் காலங்களிலும் கிடைக்கக்கூடியது. வாழைப்பூ, காய், பழ...

தேவையானவை: வாழைப்பூ - 1, கேரட்- 2, பீன்ஸ், வெங்காயம் - தலா 50 கிராம், மஞ்சள் தூள், கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - 4, தேங்காய் - கால் மூடி, மோர் - ஒரு கிளாஸ், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து, பொடியாக நறுக்கி, மோரில் போட்டு பிழிந்து, மஞ்சள் தூள், சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும். கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவிக்கொள்ள வேண்டும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கடலைப் பருப்பு சேர்த்துத் தாளித்து, நறுக்கிய காய்கறிகளைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றிக் கிளறவும். பாதி அளவு வெந்ததும், வேகவைத்த வாழைப்பூவைப் போட்டுக் கிளறி, துருவிய தேங்காய், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
பலன்கள்: வாழைப்பூ, துவர்ப்புச் சுவை கொண்டது. நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் ஆகியவை நிறைவாக உள்ளன. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வலி ஏற்படும்போது, ஒரு கப் சமைத்த வாழைப்பூவைச் சாப்பிட்டு வந்தால், பிரச்னை சரியாகும். வாழைப்பூவை நன்றாகச் சமைத்து, தயிர் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், ப்ரோஜெஸ்டிரான் அதிகம் சுரந்து, ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும். இரும்புச்சத்து, புரதச்சத்து இருப்பதால், வளர் இளம்பருவத்தினர் வாரம் ஒருமுறையேனும், வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூலநோய் மற்றும் வயிற்றுப் புண்ணை நீக்கும்.
தேவையானவை: வரகு அரிசி - கால் கிலோ, வாழைத்தண்டு - 1 துண்டு, பச்சை மிளகாய் - 5, பெரிய வெங்காயம் - 2, தயிர் - 50 மி.லி, முந்திரி, பட்டை, கிராம்பு, ஏலக்காய்த் தூள், அன்னாசிபூ, பிரிஞ்சி இலை - சிறிதளவு, உப்பு, நெய், தயிர் - தேவையான அளவு.
செய்முறை: வாழைத்தண்டு, பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் சிறிதளவு நெய் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, அன்னாசிபூ, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்க வேண்டும். இதில், முந்திரி, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்துத் தாளிக்க வேண்டும். நறுக்கிய வாழைத்தண்டைப் போட்டு நன்றாக வதக்கி, தயிரை ஊற்றி, அரை லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். ஊறவைத்த வரகு அரிசியை அதில் கொட்டி, தண்ணீர் சுண்டும் அளவுக்குக் கிளற வேண்டும். பிறகு, ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, சிறிதளவு நெய் ஊற்றிச் சாப்பிடலாம்.
பலன்கள்: வாழைத்தண்டு குளிர்ச்சித்தன்மை கொண்டது. நார்ச்சத்து மிக அதிகமாக இருப்பதால், வயிற்றில் உள்ள நச்சுக்களை நீக்கும். உடல் எடையைக் குறைக்கும். இதயத் தசைகள் சீராக இயங்கத் தேவையான பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 சத்தும் இதில் இருக்கின்றன. சிறுநீரகத்தில் கல் உருவாவதைத் தடுக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும், வாழைத்தண்டு மிகவும் அவசியம்.
தேவையானவை: வாழைக்காய் - 6, பெரிய வெங்காயம் - 3, பச்சை மிளகாய் - 5, தக்காளி - 1, இஞ்சி, பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு, தேங்காய் விழுது – கால் கப், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், தனியா தூள் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக்கொள்ள வேண்டும். வாழைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்த்து வேகவைத்து, ஆறியதும் எண்ணெயில் பொரித்து, தனியே வைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துத் தாளிக்கவும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, நன்றாக வதக்க வேண்டும். இதில், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து, நன்றாகக் கிளறி, அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து, நன்கு கொதிக்கும் வரை கிளறி இறக்கும்போது, வாழைக்காயைச் சேர்க்கவும்.
பலன்கள்: வாழைக்காயில் மாவுச்சத்தும் நார்ச்சத்தும் அதிகம். மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும். வைட்டமின் ஏ, சி மற்றும் ஃபோலேட் சத்தும் இருப்பதால், கர்ப்பிணிகளுக்கு நல்லது. வைட்டமின் கே சிறிதளவு இருக்கிறது. அதிக உடல் எடை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். சீரான இடைவெளியில் இந்த ரெசிப்பியை செய்து சாப்பிடலாம். உடலில் வலு கூடும். உடல் சூட்டைத் தணிக்கும். வாழைக்காயைவிடவும் வாழைப் பிஞ்சில் நிறைய ஊட்டச் சத்துக்கள் உள்ளன. வாழைக்காயைக் காயவைத்து மாவாக்கி, குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். உடலுக்கு அதிக சக்தி தரும்.
தேவையானவை: காடைகன்னி (தானியம்) - கால் கிலோ, வாழைப்பழம் - 5, கருப்பட்டி, வெல்லம் - தலா 150 கிராம், பால் - 100 மி.லி, முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள் - சிறிதளவு, நெய் - தேவையான அளவு.
செய்முறை: காடைகன்னியை வறுத்து, இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக ஆகும் வகையில் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக்கொள்ள வேண்டும். கருப்பட்டி, வெல்லத்தைச் சேர்த்து, பாகு காய்ச்சிக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் நீர் ஊற்றி, நன்றாகக் கொதிக்கவைத்து, அதில் உடைத்த அரிசியைக் கொட்டி வேகவைக்க வேண்டும். இதில், வாழைப்பழத்தை மசித்துச் சேர்த்து, வெல்லப்பாகை சேர்த்து, நன்றாகக் கிளற வேண்டும். நெய்யில் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து, பாயசத்துடன் கலக்கவும். ஏலக்காய்த் தூள் சேர்த்து சாப்பிட, சுவை அபாரமாக இருக்கும்.
பலன்கள்: பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்பு மற்றும் வைட்டமின் பி6 போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வாழைப்பழம் சாப்பிடுவதால், ரத்த அழுத்தம் குறையும். குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிறைந்தது. மன அழுத்தத்தைக் குறைக்கும். பித்தம், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளைப் போக்கும். தினமும் ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவந்தால், மலச்சிக்கல் பிரச்னை இருக்காது.
Post a Comment