தினை பால் கொழுக்கட்டை & கேழ்வரகு லட்டு !
தினை பால் கொழுக்கட்டை தேவையானப் பொருட்கள் தினையரிசி - 100 கிராம் நாட்டு வெல்லம் - 50 கிராம் (சிறிது நீரில் கரைத்து வடித்தது) தேங...
தேவையானப் பொருட்கள்
தினையரிசி - 100 கிராம்
நாட்டு வெல்லம் - 50 கிராம்
(சிறிது நீரில் கரைத்து வடித்தது)
தேங்காய்ப் பால் - 100 மி.லி
ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி (நறுக்கியது) - தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு ஏற்ப
தினையரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, உப்பு கலந்து கெட்டியாகவும் மிருதுவாகவும் அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவை சிறு நீள உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து அதோடு உருண்டைகளைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
வெல்ல நீரைச் சேர்த்து நன்கு வேகவிடவும். அதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய்த் தூளைத் தூவி எடுக்கவும். சூடாகவோ, குளிர்ச்சியாகவோ... எப்படிச் சாப்பிட்டாலும் தித்திக்கும் இந்தக் கொழுக்கட்டை!
கேழ்வரகு லட்டு
தேவையானப் பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 200 கிராம்
வெல்லம் (துருவியது) - 200 கிராம்
நெய் - 100 மி.லி
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை
சுக்குத் தூள் - 1 சிட்டிகை
முந்திரி - தேவைக்கு ஏற்ப
திராட்சை - தேவைக்கு எற்ப
சிறு தீயில் கேழ்வரகு மாவை சிறிது நேரம் வறுக்கவும். இதோடு துருவிய வெல்லம் சேர்த்தால், வெல்லம் உருகி மாவு பிசையும் பதத்தில் வரும். இதோடு நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி, ஏலக்காய்த் தூள், சுக்குத் தூள் சேர்த்து உருண்டையாகப் பிடித்தால், ருசியான லட்டு ரெடி!
என்ன பலன்?
தினை பால் கொழுக்கட்டை:
தினையில், நார்ச்சத்து மிக அதிகம். பி.காம்ப்ளெக்ஸ் விட்டமினும் தாது உப்புக்களும் நிறைந்திருக்கின்றன. சிறிதளவு ஃபோலிக் அமிலமும் இருக்கிறது. தேங்காய்ப் பாலில் கொழுப்புச் சத்தும் புரதமும், வெல்லத்தில் இரும்புச்சத்தும் கார்போஹைட்ரேட்டும் இருப்பதால், ஓடி விளையாடும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உடனடி உற்சாகம் கொடுக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வயதானவர்கள் தவிர்த்து, மற்ற அனைவருக்கும் உடனடி உற்சாகம் கொடுக்கும் டயட் உணவு இது.
கேழ்வரகு லட்டு:
இதை 'எனர்ஜி லட்டு’ என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஊட்டச்சத்து நிறைந்தது. கேழ்வரகில் அதிக அளவு கால்சியம் இருப்பதால், எலும்பு வளர்ச்சிக்கு உதவும்; மாவுச்சத்தும் கிடைக்கும். சிறிது அளவு இரும்புச்சத்து, நார்ச்சத்து, தாது உப்புக்களும் இருப்பதால் உடலுக்கு சக்தி அளிக்கும். சுக்கு, நல்ல ஜீரண சக்தியைக் கொடுத்து பசியைத் தூண்டும். ஆனால், அதிக உடல் பருமன் உள்ளவர்கள் தவிர்க்கலாம். எடை குறைந்த குழந்தைகளுக்குக் கொடுத்தால் எடை கூடுவார்கள்!
சர்க்கரை... அக்கறை!
சுத்தமான நாட்டுச் சர்க்கரை என்பது, கரும்புச் சாற்றில் இருந்து எடுப்பது. கரும்புச் சாற்றை அடுப்பில் காய்ச்சி, கொஞ்சம் விளக்கெண்ணெய் சேர்த்து, கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பொங்கிவரும் அழுக்கை நீக்க கொஞ்சமே கொஞ்சம் சுண்ணாம்பு சேர்ப்பார்கள். அவ்வாறு அழுக்கு நீக்கப்பட்ட வெல்லம், களிப் பதத்தில் இருக்கும். அதை ஒரு மரக்கொப்பரையில் பரத்தி, கொஞ்சம் கொஞ்சமாகத் துணியில் கட்டி தலைக்கு மேலே ஒரு சுற்றுச் சுற்றினால் வெல்லம் ஒரு வடிவத்துக்கு வரும். அதுவே களிப் பதத்தில் இருக்கும் வெல்லத்தை, மர அச்சில் ஊற்றினால் அச்சு வெல்லம் தயார். இதுதான் தரமான நாட்டுச் சர்க்கரையின் செய்முறை.
ஆனால், இப்போது வெல்லத்தின் நிறத்தை அதிகரிக்க சோடா உப்பு, சல்ஃபர், பொட்டாசியம், வாஷிங் சோடா... என பல வகை ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. எடையை அதிகரிக்க கோல மாவும் சேர்க்கப்படுகிறது. இந்த வகை வெல்லம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். எனவே, அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும் நாட்டு வெல்லத்தையே வாங்க வேண்டும். நல்ல ஆற்றுப்பாசனத்தில், களிமண்ணில் வளரும் கரும்பில் இருந்து எடுக்கப்படும் வெல்லம், அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
வெல்லத்தை நாக்கில் வைத்தால், நாக்கு எரியக் கூடாது. இவை நல்ல வெல்லத்தைக் கண்டுபிடிப்பதற்கான சில வழிகள்!
Post a Comment