சுக்குவின் குணம்
உடல்
உற்ற வாய்வை எல்லாம் அகற்றிவிடும். வாத ரோகங்கள் யாவும் போகும். பசியைத்
தூண்டும். மன அகங்காரத்தை ஒடுக்கும்; சிர நோய், சீதளம், வாத குன்மம்,
வயிற்றுக்குத்தல், நீர் பீனிசம், நீரேற்றம், சலதோடம், கீல்பிடிப்பு, ஆசன
நோய், தலைவலி, பல்வலி, காதுகுத்தல், சுவாசரோகம் ஆகிய எல்லா வியாதிகளும்
போகும். வாய்வு உஷ்ணம் சீதளம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவாயினும் இந்த
சுப்பிரமணி தீர்த்து வைக்கும்.
உபயோக முறைகளில் சில
பொதுவாக
ஒரு சுக்கு துண்டை மேல்தோல் நீக்கி நறுக்கி ஒரு குவளை நீரில் போட்டுக்
காய்ச்சி சிறிது பால் சர்க்கரை கலந்து தினமிரு வேளை குடித்துவர மேல்கண்ட
நோயெல்லாம் விலகும்.
வாதரோக சம்பந்தப்பட்ட
கீல்வாய்வு, பிடிப்பு, வீக்கல், மூட்டுக்களில் வலி இவை உடம்பின் எந்த
மூட்டுக்களில் வந்த போதிலும் சரி ஒரு துண்டு சுக்கு, ஒரு துண்டு உயர்ந்த
பெருங்காயம் பால் விட்டு அரைத்து சேர்ந்த விழுதியை வலியும் வீக்கமுள்ள
இடங்களில் தடவி வெய்யில் அல்லது நெருப்பனல் காட்ட குணமாகும். பல்வலி தாங்க
முடியாதபோது எகிறுசள் வீங்கி ஊசி குத்துதல் போன்று வலிக்கும்போது, ஒரு
துண்டு சுக்கு எடுத்து நறுக்கி அதை அப்படியே வலிகண்ட இடத்தில் வைக்க
சாந்தப்படும். தலைவலி, மண்டைப்பிடி இவைகளுக்குத் தாய்ப்பாலில் சுக்கை
அரைத்து தலைவலி கண்ட இடத்தில் பற்றுப் போட்டுவர வலிகள் நின்றுபோகும்.
முக்குணத் துணை மருந்து
சுக்கு,
மிளகு, திப்பில் ஆகிய மூன்றையும் உலர்த்தி சுத்தம் செய்து சம எடை எடுத்து
இடித்து துல்லியமாக தூள் செய்து வைத்துக் கொள்வது தான் 'முக்குணத்துணை
மருந்து' என்பது. இதை நோய்த் தடுப்பு மருந்தாக சிறுவர் முதல் பெரியவர் வரை
உபயோகிக்கலாம். மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களுடைய தொழில்
ஆக்கம், காத்தல், அழித்தல் என்பன போன்று இந்த முக்குண துணை மருந்தும்
உடலுக்குத் தேவைகளை ஆக்கி, தேவையற்றவைகளை அழித்து வெளியேற்றி
உடலைக்காக்கும் தன்மையது. இம்மருந்து வைத்திராத சித்த மருத்துவர் கிடையாது
என்று துணிந்து கூறலாம். ரசபாஷாண வகைகளை இதை துணை மருந்தாக சேர்த்துக்
கொடுப்பதில் நோய் சிக்கல் அடையாமல் விரைவில் குணமாவதுடன் ரசபாஷாண நஞ்சு
மருந்துகளால் வாய்வு பிடிப்பு, வேக்காடு ஆகிய கெடுதல் குணம் உண்டாகாது
என்பது சித்தர்களின் வாக்கு.
அளவு:
குழந்தைகளுக்கு இரு மிளகளவு வெந்நீருடன், சிறுவர்களுக்கு இருமடங்கும்,
பெரியோர்களுக்கு வயதுக்குத் தக்கபடி 10 முதல் 15 அரிசி எடை இம்மருந்தை
பொதுவாக தருவார்கள். 'திரிகடுகம்' என்றும் இதனை சொல்வதுண்டு.
ஐந்தீ சுடர் மருந்து
சுக்கு,
மிளகு, திப்பிலி, சீரகம், ஏலம் இவைகளைச் சுத்தம் செய்து சம எடை எடுத்து
வெய்யிலில் உலர்த்தி இடித்து துல்லியமாக தூள் செய்து ஒரு புட்டியில்
வைத்துக் கொள்க. அளவு 10 முதல் 20 அரிசி எடை தேன், நெய், வெந்நீர் ஆகிய
துணைகொண்டு காலை மாலை இருவேளை பித்தநாடி மிகுந்த போது காணும் அதிஉஷ்ணம்,
மார்பு எரிச்சல், பக்க சூலை அனல் வாய்வு, பித்த புளியேப்பம், வயிற்றுப்
புசம், பசியின்மை, வறட்சி ஆகியவைகள் ஐந்தீச்சுடர் பட்ட மாத்திரம் தீயில்
பட்ட பஞ்சுபோல் பறக்கும்! இதைத் துணை மருந்தாக அமைத்து சண்ட மாருத
செந்தூரம், ஆறுமுக செந்தூரம், அயம், காந்தம் முதலானவைகளுக்கு சமயோசிதம்
போல் சித்த மருத்துவர்கள் கையாண்டு நீடித்த பல நோய்களைத் திறமையாக போக்கி
விடுவார்கள். இம்மருந்தை 'பஞ்ச தீபாக்கினி' என்றும் கூறுவார்கள்.
ஐம்புனல் நீர் மருந்து
ஏலம்
10 கிராம், திப்பிலி 20 கிராம், சுக்கு 50 கிராம், பழுப்பு சர்க்கரை
(பூராசர்க்கரை) 250 கிராம் சர்க்கரையை நீக்கி மற்றவைகளை நன்கு சுத்தம்
செய்து உலர்த்தி இடித்துத் தூள் செய்தபின் சர்க்கரையை சேர்த்து கலந்து
வைத்துக் கொள்ளுங்கள். அளவு 15 முதல் 20 அரிசி எடை வெந்நீர், சூடான பால்,
தேன் ஆகியவைகளுடன் உட்கொள்ள பித்தத்தால் தூண்டப்பெற்ற ஐயநாடி கிளர்ந்த
போதும், வாந்தி, குமட்டல், செரியாமை, பெருஏப்பம், வயிற்றில் நீரும்
வாய்வும் திரண்டு அதனால் உண்டாகும் தொல்லைகள், வாய் நீரூரல், சதா உமிழ்நீர்
சுரந்து துப்பிக் கொண்டிருத்தல், தூக்கத்திலும் வாயில் நீர் சுரந்து நீர்
வடிதல் போன்றவைகளுக்கும் நற்பயன் தரக்கூடிய மருந்து. இதற்கு 'பஞ்சதாரைச்
சூரணம்' என்று பெயர்.
மாந்தைக் குடிநீர்
சுக்கு
ஒரு நெல்லிக்காய் அளவு, மிளகு 6 மட்டும், சீரகம் 35 கிராம், தோல் நீக்கிய
பூண்டு 3, ஓமம் 10 கிராம், சோற்றுப்பு நாலு கல் இவைகளை மெல்லிய மண் ஓட்டில்
போட்டு சிறுக வறுத்து எடுத்து கொண்டு அதை அம்மியில் வைத்து அதோடு
வேப்பிலைக் கொழுந்து அவுன்சு வெந்நீர் விட்டுக் கலக்கி மெல்லிய துணியில்
வடிகட்டிய குடிநீரை சாறு வைத்துக் கொண்டு, குழந்தைகளுக்கு அரை சங்களவு
தாய்ப்பால் கலந்து தினம் இரண்டு முதல் நான்கு வேளை நோய்க்குத் தக்கபடி
சிறுவர்களுக்கு முழு சங்களவு கொடுத்துவர சகல மாந்தம், கணை மற்றும்
வயிற்றுக் கோளாறுகள் யாவும் விலகும்.
சுகபேதிக் குடிநீர்
சுக்கு,
பிஞ்சு கடுக்காய், சீமை நிலாவிரை ரூபாய் எடை வீதம் எடுத்து இடித்து இரண்டு
குவளை நீர் விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக்கி வடிகட்டி அத்துடன் 1 ரூபாய்
எடை பேதி உப்பு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவிட்டால்
இரண்டொரு மணி நேரத்திற்குள் களைப்பு ஆயாசமின்றி நன்றாக பேதி ஆகி வயிற்றில்
உள்ள மலச்சாக்கடை சுத்தமாகி உடல் ஆராக்கியம் பெறும், பேதியை நிறுத்த மோர்
சாதம் அல்லது எலுமிச்சம் பழ சர்பத் குடிக்க பேதி நின்று போகும்.
இம்முறையில் கண்ட மருந்து நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்.
பல் ரோகப்பொடி
சுக்கு,
காசிக்கட்டி, கடுக்காய்த் தோல், இந்துப்பு இவைகளைச் சமமாக எடுத்துலர்த்தி
இடித்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு சதா பல்லில் எகிறுகளில் இருந்து
இரத்தம் கசிந்து கொண்டு இருக்கும் அன்பர்கள், சிரித்தால் அழுதால் பல்லில்
இரத்தம் வருபவர்கள், தினம் இரண்டும் முறையும் பல்துலக்கி வர இவையாவும்
ஒழிந்துபோகும்.
சுக்கு இல்லாவிடில்
மருத்துவத்துறையில் சிறப்பான முறைகளைச் செய்வது அரிது! பல மருந்துகளில்
சுக்கு தலைவனாக சேரும்போது திறமை மிகுந்த தளபதியைப் போல் நோய்களை
விரட்டும், சுக்குக்கு மேல் தோலிலும், அருகம்புல்லுக்கு கணுக்களில் நஞ்சும்
இருப்பதாக மருத்துவ ஏடுகள் கூறுகின்றன. ஆகவே இவைகளைப் பயன்படுத்தும் போது
நஞ்சு பாகத்தை நீக்கி பயன்படுத்தல் வேண்டும்.
மத்தள வாய்வு வலி
கனமான
மாவு சுக்காக தேர்ந்து எடுத்து தேவையான அளவு சுத்தம் செய்துகொள்ள
வேண்டும். அந்த சுக்கு அளவுக்கு சோற்றுக்குப் போடும் உப்பு எடுத்து சிறிது
நீர் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு ஒவ்வொரு சுக்கின் மேலும் கவனமாக
கவசமிட்டு உலரவைத்த பின் அடுப்பில் நெருப்பு ஆறி நீறுபூத்த அனலாக இருக்கும்
சமயம் அதனுள் இந்த சுக்குகளை சொருகி வைத்து சிறிது நேரம் கழித்த பின்பு
எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். (அனலில் வைத்த சுக்கு கருகி
விடாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.)
அளவு 15
முதல் 30 அரிசி எடை வெந்நீர் அல்லது மோர் ஆகியவைகளில் குடிக்கலாம்.
வயிற்றில் உண்டாகும் சகல வாய்வு ரோகமும் வயிறு பெருத்து பலூன் போலாகி
வாய்வு திரண்டு அடிக்கடி சூடாக ஆசனவாய் வழியே புதிய காடா துணி கிழிப்பது
போன்ற சப்பதத்துடன் காற்று வெளியாவதும், வாய் வழி பெருஏப்பம் விடல் மந்தமான
வாய்வு பொருமல் யாவும் குணமாகிவிடும்.
சுக்கு
தனித்து தொடர்ந்து சில நாள் சாப்பிட மனதில் நன்கு வேலை செய்து அகங்காரம்,
கோபம், எரிச்சல் ஆகியவைகளையும் தணிக்க வல்லது. இதனை உடனடியாக சோதிக்க
விரும்புவோர் ஒன்று செய்யுங்கள்! சுக்கை வெந்நீர் விட்டு அரைத்த விழுதியை
கண் இமையின் உள்ளே தடவிப் பாருங்கள்! கண்கள் எரிய அகங்காரமெல்லாம் போய்
கோபம் தணிந்து மன அமைதி பெறும். அது மட்டுமா? கண்களிலிருந்து அழுக்குகள்
கெட்ட நீர் எல்லாம் வெளியாகி கண்கள் பிறகு சில்லென குளிர்ச்சியாக கண்கள்
ஒளி பெறும். இதனை நம் முன்னோர்கள் சிறு வயதில் அடங்காது அட்டகாசம் செய்யும்
முரட்டுப் பிள்ளைகளை ஒரே சுக்குத் துண்டால் சாதுவாகச் செய்து விடுவார்கள்!
சுக்கு
ஒரு பழங்கா பெனிசிலின் என்று சொன்னால் மிகையல்ல. காலையில் இஞ்சி,
கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் தின்றால் கோலை ஊன்றி
நடந்தோர் கோலை விட்டு குலாவி நடப்பாரே! என்பது பண்டைய தமிழ்மொழி.
சுக்கு - சித்தர்கள் கண்டுபிடித்த பென்சிலின் என்றால் மிகையல்ல!
சுக்கு
தீவிர நோய்களை குணப்படுத்துவது போல நாட்பட்ட நோயால் மரணப்படுக்கையில்
இருப்பவர்களுக்கும் கொடுக்கலாம் என்பதனை 'திரிபலா சுக்கு டோக்க தெரித்து
உயிர் போமுன்' என்ற திருப்புகழ் பாடலால் அறியலாம்.
குடிநீர் பானம்
சுமார்
15 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்காங்கே குடிநீர் நிலையங்கள் இருந்தன. இதில் இரு
விதம் உண்டு. ஒன்று தண் ர் பந்தல் மற்றொன்று அரசினர் அனுமதி பெற்ற
கள்ளுக்கடை இரண்டிலும் இட்லி, தோசை, வடை ஆகிய சிற்றுண்டிகளும் கிடைக்கும்.
இந்த இரண்டு குடிநீர் பானங்களும் ஏறத்தாழ நல்ல ஆரோக்கியம் உள்ளவைகளே
என்றால் இதை யாரும் மறுக்க முடியாது. இந்த தண் ர் பந்தல் சுக்கு குடிநீரை
விட்டு, நாகரீகத்தை தழுவி காப்பி குடியே கபே ஓட்டல்களாக மாறின! இதுபோல்
கள்ளுக்கடைகளும் மறைந்து, கள்ளச்சாராயம் காய்ச்சும் கருப்புச் சந்தையாகி
மக்களின் உயிரைக் குடித்து வருகிறது என்றால் இதையும் மறுக்க முடியாதல்லவா?
Post a Comment