ஷாப்பிங்,
சினிமா, கோயில், குடும்ப விழாக்கள்... என்று மணிக்கணக்கில் நீளும்
நிகழ்வுகளுக்காக செல்லும்போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்களில்
பலருக்கும் வழக்கமாகவே இருக்கிறது. 'பாத்ரூம் சரியில்லை...', 'நேரமே
இல்லை...', 'பாத்ரூமே இல்லை... ரோட்டுலயா போகமுடியும்?' என்பது போன்ற
கேள்விகளைத் தங்கள் தரப்பு நியாயங்களாக எழுப்பி, தங்களை
சமாதானப்படுத்திக்கொள்ளவும் இவர்கள் தவறுவதில்லை. இவர்களில் நீங்களும்
ஒருவரா?

"இத்தகைய
போக்கு, மிகப்பெரிய ஆபத்தை நோக்கி உங்களை இழுத்துச் சென்றுவிடும்'' என்று
உங்களை நோக்கி எச்சரிக்கை மணி அடிக்கிறார்... சென்னை, ராமச்சந்திரா
மருத்துவமனையின் சிறுநீரகத்துறை தலைமை மருத்துவப் பேராசிரியர் டாக்டர்
பி.சௌந்தரராஜன்.
''சிறுநீரக நோய்த் தொற்று என்பது ஆண்களைவிட பெண்களுக்கு
20 சதவிகிதம் வாய்ப்பு அதிகம். இதற்கு முக்கியக் காரணம்,
வெளியிடங்களுக்குச் செல்லும் போது சிறுநீரை வெளியேற்றாமல் அடக்கிக்கொள்ளும்
பழக்கம்தான்!'' என்று சொல்லும் டாக்டர், சிறுநீர் பிரச்னை ஏற்படுவதற்கான
காரணங்கள், முக்கியமாகப் பாதிக்கப்படுபவர்கள், தவிர்ப்பதற்கான வழிகள்,
தினமும் குடிக்க வேண்டிய நீரின் அளவு, சிறுநீரகத் தொற்று நீக்கும் உணவு
வகைகள், இன்னும் பல விழிப்பு உணர்வுத் தகவல்கள் எனத் தொடர்ந்தார்.
ஆரோக்கியத்தின் முதல் படி... சீரான சிறுநீர் வெளியேற்றம்!
''உடல் ஆரோக்கியத்துக்கான முக்கியமான இயக்கங்களில்
ஒன்று, இயல்பாக சிறுநீர் கழிப்பது. உடம்புக்குத் தேவையான நீர்
எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, உடற்கழிவுகளுடன் வெளியேறும் மீதமுள்ள நீர்தான்
சிறுநீர். தினமும் தேவையான அளவு நீர் குடிப்பதும், சிறுநீர் கழிப்பதற்கான
உணர்வு ஏற்பட்டவுடன் தக்கவைக்காமல் வெளியேற்றுவதும் ஆரோக்கியத்தின் முதல்
படி. வெளியேற்றாமல் தேக்கும்போது, சிறுநீர்ப் பையின் கொள்ளளவையும் மீறிய
சுமையை அது தாங்க வேண்டி வரும். இதையே தொடர்ந்து செய்யும்போது, சிறுநீரகத்
தொற்று ஏற்பட்டு, சிறுநீரகச் செயலிழப்பு வரை பிரச்னைகள் வரிசை கட்டும்.
எனவே, சிறுநீர் வந்தால் உடனடியாகக் கழிக்க வேண்டியது அவசியம்.
எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?!
கோடை காலத்தில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீரும், மற்ற
பருவநிலைக் காலங்களில் 2 லிட்டர் தண்ணீரும் போதுமானது. குடிநீரைத் தவிர,
பால், பழச்சாறு, காய்கறி போன்றவற்றில் இருந்தும் உடலுக்குத் தேவையான நீர்
கிடைத்துவிடும். அதேசமயம், தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பதும்
பிரச்னையே! ஏ.சி. அறையில் இருப்பவர்கள், ஏ.சி. வாகனங்களில் தொடர்ந்து
பயணிப்பவர்களுக்கு தாகம் எடுக்காமல் இருக்கலாம். என்றாலும், ஒரு நாளைக்கு
குறைந்தது ஒன்று முதல் 2 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.

தாகம்
எடுப்பதன் காரணமாக இந்த அளவை விட கூடுதலாகத் தண்ணீர் குடிப்பதில்
தவறில்லை. ஆனால், தண்ணீர் குடிப்பது நல்லது என்று பிறர் சொல்வதற்காக
இஷ்டம்போல குடிப்பது நல்லதல்ல. இப்படிக் குடிப்பது, சிறுநீரகத்துக்கு
கூடுதல் பளு தருவதாகத்தான் அமையும். கூடவே, இதயம் பழுதானவர்கள் மருத்துவர்
பரிந்துரைத்ததற்கும் அதிகமாகக் கண்டிப்பாக தண்ணீர் குடிக்கக் கூடாது. இதன்
காரணமாக இதயமானது ரத்தத்தை சரிவர 'பம்ப்’ செய்ய முடியாமல் போகும். அதேபோல,
சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களும், கல்லீரல் நோயாளிகளும் அதிகமாகத் தண்ணீர்
குடிக்கக் கூடாது. சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் அதிகமாகத் தண்ணீர்
குடிக்கும்போது அது கற்களைக் கரைத்து வெளியேற்றும் என்பதால், அவர்களை
மட்டும் மருத்துவர்கள் அதிக நீர் அருந்தச் சொல்வோம்.
சிறுநீர்த் தொற்று ஏற்பட காரணங்கள்!
தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, சிறுநீரை
அடக்குவது, சுகாதாரமற்ற கழிப்பறையைப் பயன்படுத்துவது, மரபு, சுய
சுத்தமின்மை, தாம்பத்யம்... என்று பல காரணங்களால் சிறுநீர்த் தொற்று
ஏற்படக்கூடும். சாதாரணமாக 'யூரினரி இன்ஃபெக்ஷன்’ என்று இதைச் சொல்லி,
எளிதாகக் கடப்பதுதான் வழக்கமாக இருக்கிறது. இதைக் கவனிக்காமல் விட்டால்
அடுத்தடுத்து வரிசை கட்டும் பிரச்னைகளின் பட்டியல் நீளம். நீர்க்கடுப்பாக
ஆரம்பித்து, அடிக்கடி சிறுநீர் வெளியேற்றும் உணர்வு, சொட்டு சொட்டாக
சிறுநீர் வெளியேறுவது, சிறுநீர் வெளியேறும்போது தாங்க முடியாத வலி மற்றும்
எரிச்சல், முதுகு வலி, சிறுநீரகத்தில் நோய்த் தொற்று ஏற்படுத்தும்
கிருமிகள் உற்பத்தியாவது வரை கலங்கவைக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள், நீரிழிவு நோயாளிகள்,
முதியவர்களுக்கு சிறுநீர்த் தொற்று ஏற்பட்டால் அது சீரியஸ் பிரச்னை என்பதை
உணர வேண்டும். கர்ப்பகாலத்தில் தாய் சிறுநீரகப் பிரச்னையால்
பாதிக்கப்பட்டால், குழந்தைக்கும் அந்த பாதிப்பு ஏற்படலாம்... ஜாக்கிரதை!
சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதால், சிறுநீர்த்
தொற்று ஏற்பட்டாலும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால், 5 - 15
வயது வரை மீண்டும் மீண்டும் சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்பட்டால்,
மருத்துவ ஆலோசனை நிச்சயம் பெற வேண்டும். குறிப்பாக, ஆண் குழந்தைகள்.
நீரிழிவு நோயாளிகள், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு
இந்தப் பிரச்னை தீவிரமாக இருக்கும்.
யூரிக் ஆசிட் உள்ள உணவுப் பொருட்களான இறைச்சி, பீர்,
வொயின் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக்கொள்ளும்போது, சிறுநீர்ப்
பிரச்னைக்கான வாய்ப்பை அது அதிகரிக்கும்.
சிறுநீர்த் தொற்றைத் தவிர்க்க!
சிறுநீர் வெளியேற்றுவதற்கான உணர்வு ஏற்பட்ட பின்னும் சிறுநீரை அடக்கக் கூடாது.
நன்றாகக் கை கழுவுவது மிகமிக முக்கியம். குழந்தைகளுக்கு
நகம் வெட்டக் கற்றுக்கொடுக்க வேண்டும். மாதவிடாய் காலங்களில் நாளொன்றுக்கு
இரண்டு எனும் வகையில் நாப்கினை சுகாதாரமாக பயன்படுத்த வேண்டும்.
தாம்பத்யத்துக்குப் பிறகு, பிறப்புறுப்பை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
சிறுநீர் கழிப்பதில் பிரச்னை எனில், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
தேவையான சிகிச்சையுடன் சிறுநீர் பெருக்கி உணவு வகைகளான
சுரைக்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு, வெள்ளரி, தர்பூசணி இவற்றை எல்லாம்
உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, கிரேன்பெரி ஜூஸ் (cranberry
juice) நல்ல பலன் தரும். உலகம் முழுக்கவே 150 வருடங்களுக்கு முன்
சிறுநீரகப் பிரச்னைகளுக்கு இதுவே மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது''என்று
விளக்கங்களைத் தந்த டாக்டர், ''சிறுநீரகங்கள்தான் நம் உடலின் துப்புரவுத்
தொழிற்சாலை. நம் கழிவறையில் பிரச்னை என்றாலோ, பழுதானாலோ, வீடே என்ன கதிக்கு
ஆளாகிறது? நம் உடலின் கழிவறையில் பிரச்னை என்றால், உடல் என்னவாகும்
யோசித்துப் பாருங்கள்!'' என்று கேட்டார்.
'இதெல்லாம் ஒரு பிரச்னையா?’ என்று நினைக்காமல், இனி 'நம்பர் ஒன்’ பிரச்னைக்கு கொடுங்கள் நம்பர் ஒன் முக்கியத்துவம்!
தினமும் எவ்வளவு தண்ணீர்?
கோடை காலத்தில் 3 லிட்டர்.
மற்ற பருவ காலங்களில் 2 லிட்டர்.
ஏ.சி. அறை, ஏ.சி. வாகனங்களில் இருப்பவர்கள் 1 2 லிட்டர்
(தாகம் எடுக்காவிட்டாலும்)
எவ்வளவு சிறுநீர்?
ஆரோக்கியமான மனிதன் 4 6 மணி நேரத்துக்கு ஒருமுறை
சிறுநீர் கழிக்க வேண்டும். ஒன்றிரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கழித்தால்,
அது ஃப்ரீக்வன்ஸி என்கிற வகையில் வரும். (அதேசமயம் அதிக குளிர்,
மழைக்காலங்கள் மற்றும் ஏ.சி. அறை, ஏ.சி. வாகனங்கள் பயன்படுத்தும்போது
ஒன்றிரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை வருவதில் தவறில்லை). சிறுநீரக டி.பி,
குடி, சிகரெட், முதுமை, சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த
ஃப்ரீக்வன்ஸி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
சிலர் ஏழெட்டு மணிநேரம் கூடத் தண்ணீரே குடிக்காமல்
இருப்பார்கள். இதனால், வெளியேற வேண்டிய கழிவு தேங்கி யூரினரி இன்ஃபெக்ஷன்,
எரிச்சல் ஏற்படும். அதேபோல, ஒரு நாளில் ஒன்றரை முதல் இரண்டு லிட்டர்
சிறுநீர் வெளியேறுவதுதான் இயற்கை. மூன்று லிட்டருக்கும் மேல் சிறுநீர்
வெளியேறினால், அது பாலியூரியா (polyuria). அதாவது, அளவுக்கு அதிகமாக
சிறுநீர் வெளியேறும் நோய். பிறந்த குழந்தைக்கு ஒரு நாளில் இருநூறு மில்லி
சிறுநீர் வெளியேறினாலே போதுமானது.
Post a Comment