பள்ளி,
கல்லூரியிலிருந்து பிள்ளைகள் வீடு திரும்பியவுடன் அம்மாக்கள் பலர்
செய்யும் முதல் வேலை, பிள்ளைகளின் டிபன் பாக்ஸை திறந்து பார்ப்பதுதான். அது
துடைத்துவிட்டாற்போல் காலியாக இருந்தால், அம்மாக்கள் அடையும் மனநிறைவு
வார்த்தையில் அடங்காது. '’இந்த மகிழ்ச்சியைப் பெற ’லஞ்ச் பாக்ஸ் காலியாக
இருக்க வேண்டும்’ என்று வெறுமனே நினைத்தால் மட்டும் போதாது... நாமும்
வித்தியாசமான, விதம்விதமான உணவுகளை செய்துதர முயற்சிக்க வேண்டும்'' என்று
சொல்லும், சமையல்கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா,
இந்த இணைப்பிதழில், வாய்க்கு ருசியாக, வயிற்றுக்கு நிறைவாக இருப்பதுடன்,
உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களையும் வழங்கும் '30 வகை லஞ்ச் பாக்ஸ்
ரெசிப்பி’க்களை வழங்குகிறார்.

அனைத்தையும் செய்யுங்கள்... அப்ளாஸ்களை அள்ளுங்கள்!
வெஜிடபிள் கீரை பிடிகொழுக்கட்டை
தேவையானவை:
அரிசி - 200 கிராம், பொடியாக நறுக்கிய முளைக்கீரை இரண்டு கைப்பிடி அளவு,
பொடியாக நறுக்கிய கேரட் ஒரு சிறிய கப், பீன்ஸ் - 100 கிராம் (பொடியாக
நறுக்கவும்), குடமிளகாய் ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி ஒரு சிறிய
துண்டு, பச்சை மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு,
பெருங்காயத்தூள் சிறிதளவு, எண்ணெய் - 50 மில்லி, உப்பு தேவையான அளவு.
செய்முறை:
அரிசியை ரவை போல மிக்ஸியில் உடைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு
கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... தோல் சீவி, பொடியாக நறுக்கிய இஞ்சி,
நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியவுடன் நறுக்கிய
கீரை, கேரட், குடமிளகாய், பீன்ஸ், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். ஒரு
பங்கு அரிசி ரவைக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு,
பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும்
அரிசி ரவையை சேர்த்துக் கிளறி வேகவிட்டு எடுக்கவும். இந்தக் கலவை நன்கு
ஆறியவுடன் சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில்
வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இதே முறையில் கோதுமை ரவையிலும் பிடிகொழுக்கட்டை செய்யலாம்.
பருப்பு உசிலி இடியாப்பம்
தேவையானவை:
இட்லி அரிசி - 200 கிராம், கடலைப்பருப்பு ஒரு கப், துவரம்பருப்பு அரை
கப், காய்ந்த மிளகாய் - 2, கடுகு ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு தேவையான அளவு.
செய்முறை:
அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து நைஸாக அரைத்து, ஒரு சிட்டிகை உப்பு
சேர்க்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அரைத்த மாவை சேர்த்துக்
கிளறி, கெட்டி யானதும் இறக்கி, சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
அகலமான பாத்திரத்தில் உருண்டைகள் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு நன்றாகக்
கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் உருண்டைகளைப் போட்டு, நன்கு வெந்ததும்
எடுத்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்துகொள்ளவும்.
பருப்புகளை ஊறவைத்து காய்ந்த மிளகாய் சேர்த்து
கெட்டியாக, சிறிது கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு,
கடுகு தாளித்து, அரைத்த பருப்பு சேர்த்து... தேவையான உப்பு, சிறிதளவு
பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கிளறவும் (அடுப்பை மிதமான தீயில்
வைக்கவும்). பருப்பு வெந்து உதிரி உதிரியாக வரும். இதனை பிழிந்த
இடியாப்பத்துடன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
குறிப்பு:
கொதிக்கும் தண்ணீரில் உருண்டைகள் மேலே மிதந்து வரும்போது எடுத்து
இடியாப்பம் பிழிய வேண்டும். அப்பளம், மோர்க்குழம்பு இந்த இடியாப்பத்துக்கு
சிறந்த காம்பினேஷன்.
சைனீஸ் நூடுல்ஸ்
தேவையானவை:
சைனீஸ் நூடுல்ஸ் ஒரு பாக்கெட், பச்சைப் பட்டாணி (தோல் உரித்தது), கோஸ்
துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய
கொத்தமல்லித்தழை தலா ஒரு சிறிய கப், இஞ்சி பேஸ்ட் ஒரு டீஸ்பூன், பச்சை
மிளகாய் ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.
செய்முறை: நூடுல்ஸ்
மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதிக்கும் தண்ணீரில்
சிறிதளவு எண்ணெய் விட்டு நூடுல்ஸை போட்டு ஐந்து நிமிடத்தில் இறக்கி தண்ணீரை
வடிகட்டவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு சூடாக்கி... பச்சைப்
பட்டாணி, கோஸ் துருவல், உப்பு, வெங்காயத்தாள், கேரட் துருவல், இஞ்சி
பேஸ்ட், பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் விட்டு
வேகவிடவும். காய்கள் வெந்ததும், வடிகட்டி வைத்திருக்கும் நூடுல்ஸை போட்டு
நன்கு கிளறி, நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கவும்.
பார்லி உப்புமா
தேவையானவை:
பார்லி - 100 கிராம், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் தலா ஒன்று, தோல்
சீவி, பொடியாக நறுக்கிய இஞ்சி சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு தலா ஒரு
டீஸ்பூன், பெருங்காயத்தூள் சிறிதளவு, எலுமிச்சைச் சாறு ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: பார்லியை
குழையாமல் வேகவைத்து தண்ணீரை வடிகட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு...
கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை
மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி, வேகவைத்த பார்லி சேர்த்து நன்கு கிளறவும்.
பிறகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து, எலுமிச்சைச் சாறும்
சேர்த்துக் கிளறி இறக்கவும்.
ரங்கோலி பணியாரம்
தேவையானவை:
இட்லி அரிசி - 200 கிராம், வெந்தயம், உளுத்தம்பருப்பு தலா ஒரு
டேபிள்ஸ்பூன், புதினா ஒரு கைப்பிடி அளவு, கேரட், சிறிய பீட்ரூட் தலா
ஒன்று, எண்ணெய் - 100 மில்லி, உப்பு தேவையான அளவு.
செய்முறை:
அரிசி, வெந்தயம், உளுந்து மூன்றையும் ஒன்றாக மூன்று மணி நேரம் ஊறவைத்து,
உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவை நான்கு பாகங்களாக
பிரித்துக்கொள்ளவும். புதினாவை அரைத்து ஒரு பங்கு மாவுடன் கலக்கவும்.
கேரட்டை நறுக்கி மிக்ஸியில் நைஸாக அரைத்து ஒரு பங்கு மாவுடன் கலக்கவும்.
பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி மிக்ஸியில் நைஸாக அரைத்து ஒரு பங்கு
மாவுடன் கலக்கவும். ஒரு பங்கு மாவை அப்படியே தனியாக வைக்கவும்.
பணியாரக்கல்லில் எண்ணெய் விட்டு ஒவ்வொரு மாவையும் தனித்தனியாக கல்லில்
ஊற்றி, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை
இப்படி நான்கு கலர்களில் மிகவும் ருசியாகவும், பார்க்க அழகாகவும் இருக்கும்
ரங்கோலிப் பணியாரம் தயார்.
சீஸ் பர்கர்
தேவையானவை: பன் - 10,
சீஸ் ஒரு பாக்கெட், கேரட், குடமிளகாய் தலா ஒன்று, கோஸ் - 100 கிராம்,
கொத்தமல்லித்தழை சிறிதளவு, வெண்ணெய், நெய் தலா - 2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: குடமிளகாய்,
கேரட், கோஸ் ஆகியவற்றை மெல்லியதாக, நீளவாட்டில் நறுக்கவும். கடாயில்
வெண்ணெய் சேர்த்து, காய்கறி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து
வதக்கிக்கொள்ளவும். சீஸை நீளவாக்கில் ’கட்’ செய்து கொள்ளவும். பன்னை
குறுக்கு வாட்டில் பாதியாக ’கட்’ செய்து, வதக்கிய காய்கறி கலவை, சீஸ்
ஆகியவற்றை உள்ளே வைத்து மூடவும். தவாவில் நெய் விட்டு, மூடிய பன்னை வைத்து
மிதமான தீயில் வாட்டி எடுக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை மேலே
தூவவும்.
குறிப்பு: வறுத்த எள்ளையும் மேலே தூவலாம்.
பழப்புட்டு
தேவையானவை: புட்டு
மாவு - 200 கிராம், நேந்திரன் வாழைப்பழம் ஒன்று, பலாச்சுளை - 10,
தேங்காய்த் துருவல் ஒரு கப், ஏலக்காய்த்தூள் சிறிதளவு, நெய் - 50
மில்லி, உலர் திராட்சை சிறிதளவு.
செய்முறை: வாழைப்பழம்,
பலாச்சுளையை பொடியாக நறுக்கி புட்டு மாவுடன் சேர்க்கவும். இதனுடன் உலர்
திராட்சை, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து,
நெய் சேர்த்துப் பிசிறி, புட்டுக் குழலில் அடைத்து, ஆவியில் வேகவைத்து
எடுக்கவும்.
குறிப்பு: காய்கறிகளைப் பயன்படுத்தியும் இதே முறையில் புட்டு தயாரிக்கலாம்.
கீரை உருளைக்கிழங்கு சப்பாத்தி
தேவையானவை: கோதுமை
மாவு - 200 கிராம், பொடியாக நறுக்கிய முள்ளங்கிக் கீரை ஒரு கைப்பிடி
அளவு, வேகவைத்த உருளைக்கிழங்கு - 4, எண்ணெய், வெண்ணெய் தலா - 2 டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.
செய்முறை: முள்ளங்கிக்
கீரையை எண்ணெயில் வதக்கவும். கோதுமை மாவுடன் வெண்ணெய், உப்பு, மசித்த
உருளைக்கிழங்கு, கீரை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக
பிசையவும். மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். இந்த உருண்டைகளை
சப்பாத்திகளாக திரட்டி, தோசைக் கல்லில் போட்டு, அடுப்பை மிதமான தீயில்
வைத்து வாட்டி எடுக்கவும்.
குறிப்பு: வெந்தயக்
கீரை, முருங்கைக்கீரை சேர்த்தும் தயாரிக்கலாம். உருளைக்கிழங்குக்கு பதிலாக
சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஆல்வல்லி கிழங்கிலும் தயாரிக்கலாம்.
முளைப்பயறு ரைஸ்
தேவையானவை:அரிசி - 250
கிராம், முளைகட்டிய கொண்டைக்கடலை, முளைகட்டிய பச்சைப்பயறு, முளைகட்டிய
கொள்ளு, முளைகட்டிய காராமணி தலா ஒரு சிறிய கப், பொடியாக நறுக்கிய
கொத்தமல்லித்தழை சிறிதளவு, பூண்டுப் பல் - 10, பச்சை மிளகாய் - 2 (பொடியாக
நறுக்கவும்), எண்ணெய், உப்பு தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் களைந்து, ஒரு பங்கு அரிசிக்கு
இரண்டரை பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, இரண்டு
விசில் வந்ததும் இறக்கவும். எல்லா பயறு வகைகளையும் ஒன்றுசேர்த்து, தேவையான
உப்பு சேர்த்து, தண்ணீர்விட்டு குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும்
இறக்கவும். பயறு வகைகளை தண்ணீர் வடித்துவிட்டு, சாதத்துடன் கலக்கவும்.
நறுக்கிய பச்சை மிளகாய், தோல் உரித்த பூண்டுப் பற்களை எண்ணெய் விட்டு
வதக்கி, பயறு சாத கலவையைப் போட்டு நன்கு கலந்து, கொத்தமல்லித்தழை தூவிக்
கிளறி இறக்கவும்.
குறிப்பு: புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது... இந்த ரைஸில்!
கேப்ஸிகம் ரைஸ்
தேவையானவை:
பாசுமதி அரிசி - 200 கிராம், குடமிளகாய், பெரிய வெங்காயம், பச்சை
மிளகாய் தலா ஒன்று, பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கிய
கொத்தமல்லித்தழை சிறிதளவு, கடுகு, பொட்டுக்கடலை (வறுகடலை) தலா ஒரு
டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: குடமிளகாய்,
பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பாசுமதி அரிசியுடன்
ஒரு பங்குக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து
இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,
பொடுக்கடலை, இஞ்சி, பச்சை மிளகாய் தாளிக்கவும். இதனுடன் குடமிளகாய்,
வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கி, சாதத்துடன் கலந்து... மேலே
கொத்தமல்லித்தழை தூவவும்.
மாங்காய் சாதம்
தேவையானவை:
அரிசி - 250 கிராம், மாங்காய்த் துருவல் ஒரு கப், பொடியாக நறுக்கிய
இஞ்சி சிறிதளவு, பச்சை மிளகாய் ஒன்று (பொடியாக நறுக்கவும்), கடுகு,
பொட்டுக்கடலை, எண்ணெய் தலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக்
களைந்து ஒரு பங்கு அரிசிக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு,
குக்கரில் வைத்து இரண்டு விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். வாணலியில்
எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... இஞ்சி, பச்சை மிளகாய், பொட்டுக்கடலை
சேர்த்துக் கிளறவும். இதனுடன் மாங்காய்த் துருவல், உப்பு சேர்த்து வதக்கி,
சாதத்துடன் கலக்கவும்.
குறிப்பு: சாதம் குழையாமல் இருக்க வேண்டும். பச்சைப் பட்டாணி, கேரட், தேங்காய்ப்பால் சேர்த்தும் இதைச் செய்யலாம்.
வெரைட்டி தானிய பொடி
தேவையானவை:
துவரம்பருப்பு ஒரு கப், எள் - 4 டீஸ்பூன், மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்,
ஓமம், சீரகம் தலா ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன்,
மிளகு - 10, உப்பு தேவையான அளவு.
செய்முறை: வாணலியில்
எண்ணெய் விடாமல் துவரம்பருப்பு, எள், தனியா, ஓமம், உளுத்தம்பருப்பு,
மிளகு, சீரகம் எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து, தேவையான உப்பு சேர்த்து
மிக்ஸியில் பொடிக்கவும். சாதத்துடன் இந்தப் பொடியைக் கலந்து, நெய் விட்டு
பிசைந்து சாப்பிட... ருசியோ ருசிதான்!
மல்டி தானிய சுண்டல்
தேவையானவை:
முளைகட்டிய கொண்டைக்கடலை, முளைகட்டிய பச்சைப்பயறு, முளைகட்டிய கொள்ளு,
முளைகட்டிய காராமணி தலா ஒரு சிறிய கப், இஞ்சி பேஸ்ட், மிளகுத்தூள் தலா
ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் சிறிதளவு, எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான
அளவு.
செய்முறை: முளைகட்டிய
பயறு வகைகளை ஒன்றுசேர்த்து, தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து, குக்கரில்
வைத்து இரண்டு விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கி, நீரை வடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வேகவைத்த பயறு வகைகளை சேர்த்து, இஞ்சி பேஸ்ட்,
மிளகுத்தூள், தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி
இறக்கவும்.
குறிப்பு: புரோட்டீன் சத்து அடங்கிய இந்த சுண்டல், நீண்ட நேரம் பசி தாங்கும்.
கேழ்வரகு இனிப்பு தோசை
தேவையானவை: கேழ்வரகு மாவு - 100 கிராம், பொடித்த வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் சிறிதளவு, அரிசி மாவு - 4 டீஸ்பூன், நெய் - 50 மில்லி.
செய்முறை:
வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, கேழ்வரகு மாவுடன் சேர்த்து தோசை மாவு
பதத்துக்குக் கரைக்கவும். இதனுடன் அரிசி மாவு, ஏலக்காய்த்தூள் சேர்த்து
கலந்துகொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அடுப்பை மிதமான தீயில்
வைத்து, மாவை தோசைகளாக வார்க்கவும். சிறிதளவு நெய் தடவி,
இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், தேங்காய்த் துருவல் சேர்க்கலாம்.
மினி இட்லி ஃப்ரை
தேவையானவை: இட்லி
அரிசி - 250 கிராம், உளுத்தம்பருப்பு - 100 கிராம், இட்லி மிளகாய்ப்பொடி
ஒரு சிறிய கப், எண்ணெய் - 100 மில்லி, உப்பு தேவையான அளவு
செய்முறை:அரிசி,
உளுந்தை தனித்தனியாக மூன்று மணி நேரம் ஊறவைத்து, தனித்தனியாக மாவு
அரைத்து, உப்பு சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். ஒரு ஸ்பூனால் மாவை எடுத்து,
மினி இட்லித் தட்டில் ஊற்றி இட்லி குக்கரில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்.
இட்லி மிளகாய்ப்பொடியை எண்ணெய் விட்டு குழைத்து, இட்லியின் இருபுறமும்
தடவவும். தவாவில் எண்ணெய் விட்டு, நான்கு ஐந்து இட்லிகளாக போட்டு பொரித்து
எடுக்கவும்.
குறிப்பு: இட்லியின் மேலே துருவிய கேரட் தூவி அலங்கரித்து கொடுக்கலாம்.
ஓமம் புதினா சப்பாத்தி
தேவையானவை:
கோதுமை மாவு - 200 கிராம், பொடியாக நறுக்கிய புதினா ஒரு கைப்பிடி அளவு,
ஓமம் ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் ஒரு டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
புதினாவை எண்ணெய் விட்டு வதக்கவும். கோதுமை மாவுடன் வெண்ணெய், ஓமம்,
புதினா, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும்.
மாவை சப்பாத்திகளாக திரட்டி, தோசைக் கல்லில் போட்டு வாட்டி எடுக்கவும்.
புதினா வாசனையும் ஓமத்தின் சுவையும் சேர்ந்து புதுவித ருசியுடன் இருக்கும்
இந்த சப்பாத்தி.
கோதுமை ரவை கிச்சடி
தேவையானவை:
கோதுமை ரவை - 250 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பீன்ஸ், கேரட்,
குடமிளகாய் தலா ஒரு சிறிய கப், பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), பொடியாக
நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு, எலுமிச்சம் பழம் பாதி மூடி, கடுகு,
உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடுகு,
உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து... பச்சை மிளகாய், குடமிளகாய்,
வெங்காயம், கேரட், பீன்ஸ் போட்டு வதக்கி, தேவையான உப்பு சேர்த்து, ஒரு
பங்கு கோதுமை ரவைக்கு மூன்று பங்கு என்ற அளவில் தண்ணீர் சேர்த்து நன்றாகக்
கொதிக்கவிடவும். கொதித்ததும் கோதுமை ரவை தூவிக் கிளறி, வெந்தவுடன்
எலுமிச்சம் பழம் பிழிந்து, கொத்த மல்லித்தழை சேர்த்துக் கலந்து இறக்கவும்.
குறிப்பு: பச்சைப் பட்டாணி, கோஸ் சேர்த்தும் செய்யலாம்.
வெஜிடபிள் ரோல்
தேவையானவை:
மைதா மாவு - 100 கிராம், கேரட் துருவல், கோஸ் துருவல் தலா ஒரு சிறிய
கப், உருளைக்கிழங்கு ஒன்று (வேகவைக்கவும்), இஞ்சி பேஸ்ட் ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் ஒன்று (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய புதினா
சிறிதளவு, வெண்ணெய் ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு தேவையான
அளவு.
செய்முறை: மைதா
மாவுடன் வெண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு
கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கேரட்
துருவல், இஞ்சி பேஸ்ட், கோஸ் துருவல், நறுக்கிய புதினா, பச்சை மிளகாய்,
உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்றாகப்
பிசைந்து, உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
பிசைந்த மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சிறு
அப்பளம் போல இட்டு உள்ளே காய்கறி உருண்டைகளை வைத்து சுருட்டிக் கொண்டு இரு
முனைகளையும் மாவைக் கொண்டு மூடவும். இந்த ரோல்களை சூடான எண்ணெயில்
பொரித்தெடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).
மேல்பகுதி கரகரப்பாகவும், உள்ளே மசாலா ருசியுடனும் சூப்பர் சுவையில் இருக்கும் இந்த ரோல்.
வெஜிடபிள் கட்லெட்
தேவையானவை:
உருளைக் கிழங்கு நான்கு, ரஸ்க் - 10 (மிக்ஸியில் பொடிக்கவும்), கேரட்
துருவல், பொடியாக நறுக்கிய பீன்ஸ், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பொடியாக
நறுக்கிய வெங்காயம் தலா ஒரு சிறிய கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - 2
டீஸ்பூன், பச்சை மிளகாய் ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் - 250
மில்லி, உப்பு தேவையான அளவு.
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, நன்றாக மசித்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கேரட், பீன்ஸ், குடமிளகாய், வெங்காயம், இஞ்சி,
பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி... இதனை மசித்த உருளைக்கிழங்குடன்
சேர்த்து, ரஸ்க் தூளும் சேர்த்துப் பிசைந்து, கட்லெட் வடிவத்தில் தட்டவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கட்லெட்களை
போட்டு பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: சாஸ், கொத்தமல்லித்தழை சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன்.
வெஜிடபிள் மிளகு அவல் உப்புமா
தேவையானவை:
கெட்டி அவல் - 200 கிராம், பொடியாக நறுக்கிய கேரட், குடமிளகாய்,
வெங்காயம் சிறிதளவு, மிளகு, சீரகம் தலா - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு
சிட்டிகை, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சிறிதளவு, பொட்டுக்கடலை இரண்டு
டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் 4 டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.
செய்முறை: மிளகு,
சீரகத்தைப் பொடிக்கவும். அவலை நீரில் களைந்து எடுத்து... உப்பு,
மஞ்சள்தூள் சேர்த்துப் பிசிறி, 10 நிமிடம் அப்படியே வைக்கவும். வாணலியில்
எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பொடித்த மிளகு சீரகம்,
பெருங்காயத்தூள், பொட்டுக்கடலை, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி,
பிசிறி வைத்த அவலையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். கேரட், குடமிளகாயை
வதக்கி இதனுடன் சேர்த்துக் கலக்கவும்.
சுரைக்காய் பருப்பு வடை
தேவையானவை: கடலைப்
பருப்பு - 100 கிராம், துவரம்பருப்பு - 50 கிராம், உளுத்தம்பருப்பு ஒரு
டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, சுரைக்காய் துருவல் ஒரு சிறிய கப்,
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிதளவு, பெருங்காயத்தூள்,
மஞ்சள்தூள் சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு தேவையான அளவு.
செய்முறை:கடலைப்பருப்பு,
துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒன்றாக ஊற வைத்து, காய்ந்த
மிளகாய், உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைக்க வும். இதனுடன் மஞ்சள்தூள்,
கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், சுரைக்காய் துருவல் சேர்த்துப் பிசையவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக
தட்டிப் போட்டு, இருபுறமும் திருப்பி, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: சட்னி, சாஸ் இதற்கு சிறந்த காம்பினேஷன்
பனீர் சாண்ட்விச்
தேவையானவை: பிரெட் ஒரு
பாக்கெட், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய குடமிளகாய் தலா ஒரு சிறிய
கப், பனீர் துருவல் - 2 சிறிய கப், பொடியாக நறுக்கிய
கொத்தமல்லித்தழை சிறிதளவு, வெண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு,
எண்ணெய் ஒரு டீஸ்பூன்.
செய்முறை:செய்முறை:வாணலியில்
எண்ணெய் விட்டு கேரட் துருவல், நறுக்கிய குடமிளகாய், உப்பு சேர்த்து
வதக்கவும். பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை 'கட்’ செய்துவிட்டு, அதில் வெண்ணெய்
தடவவும். வதக்கிய காய்கறி கலவையுடன் பனீர் துருவல், கொத்தமல்லித்தழையை
சேர்த்துக் கலக்கவும். அதில் கொஞ்சம் எடுத்து பிரெட் ஸ்லைஸின் மேலே பரவலாக
போட்டு, மேலே ஒரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடி, டோஸ்டரில் வைத்து எடுக்கவும்.
குறிப்பு: டோஸ்டர் இல்லாதவர்கள் தவாவிலும் செய்யலாம். இதற்கு, சாஸ் சிறந்த காம்பினேஷன்.
ஆனியன் ஊத்தப்பம்
தேவையானவை:
இட்லி அரிசி - 200 கிராம், உளுத்தம்பருப்பு - 50 கிராம், பச்சை
மிளகாய் ஒன்று (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய இஞ்சி சிறிதளவு,
பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப், எண்ணெய் - 100 மில்லி,
உப்பு தேவையான அளவு.
செய்முறை: அரிசி,
உளுந்து இரண்டையும் தனித்தனியாக மூன்று மணி நேரம் ஊறவைத்து, தனித்தனியாக
மிக்ஸியில் அரைத்து, தேவையான உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும். வாணலியில்
எண்ணெய் விட்டு இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தை வதக்கி, மாவுடன்
கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து,
மாவை கரண்டியில் எடுத்து சற்றே மெலிதான ஊத்தப்பமாக வார்க்கவும். இருபுறமும்
சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
ரவா உப்புமா
தேவையானவை:
ரவை - 200 கிராம், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), பொடியாக
நறுக்கிய இஞ்சி ஒரு டீஸ்பூன், பச்சைப் பட்டாணி சிறிதளவு, கடுகு,
பொட்டுக்கடலை தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு, எண்ணெய், உப்பு தேவையான அளவு.
செய்முறை:வாணலியில்
எண்ணெய் விட்டு கடுகு, பொட்டுக் கடலை தாளித்து, பச்சைப் பட்டாணி, நறுக்கிய
பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் அதில்
ரவையை சேர்த்து வறுக்கவும். வாணலியில் ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு என்ற
அளவில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, ரவை கலவையை சேர்த்துக் கிளறி
இறக்கவும். கொஞ்சம் ஆறியவுடன் எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லித்தழை
சேர்த்துக் கிளறி பரிமாறவும்.
குறிப்பு: சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன். வறுத்த முந்திரியும் சேர்க்கலாம்.
தேங்காய்ப்பால் ரைஸ்
தேவையானவை: அரிசி - 250
கிராம், தேங்காய்ப்பால் - 100 மில்லி, கேரட் துருவல், பச்சைப் பட்டாணி
(தோல் உரித்தது) ஒரு சிறிய கப், பச்சை மிளகாய் ஒன்று, வறுத்த
முந்திரிப்பருப்பு - 10, சீரகம் ஒரு டீஸ்பூன், நெய் - 50 மில்லி,
உப்பு தேவையான அளவு
செய்முறை:ஒரு
பங்கு அரிசிக்கு, தேங்காய்ப்பால் தண்ணீர் சேர்த்து இரு பங்கு என்ற
அளவில் எடுத்து... அரிசியுடன் சேர்த்து, குக்கரில் வைத்து இரண்டு விசில்
வந்தவுடன் இறக்கவும். வாணலியில் நெய்விட்டு கேரட் துருவல், பச்சைப்
பட்டாணி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, சீரகம் சேர்த்து வதக்கி,
சாதத்துடன் சேர்த்து... வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்துக் கலக்கவும்.
அடை பீட்ஸா
தேவையானவை:
இட்லி அரிசி - 200 கிராம், கடலைப்பருப்பு ஒரு கப், துவரம்பருப்பு அரை
கப், உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், சீஸ் ஆறு ஸ்லைஸ், குடமிளகாய்,
கேரட் தலா ஒன்று, காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் - 100 மில்லி,
உப்பு தேவையான அளவு.

செய்முறை:அரிசியைத்
தனியாக 3 மணி நேரம் ஊறவைக்கவும் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு,
உளுத்தம்பருப்பை ஒன்றாகச் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசியைத்
தனியாக அரைக்கவும். பருப்புகளுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப் பாக
அரைக்கவும். மாவுகளை ஒன்றுசேர்த்து, தேவையான உப்பு சேர்த்துக்
கலந்துகொள்ளவும். கேரட், குடமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். சீஸை ரிப்பன்
போல 'கட்’ பண்ணிக் கொள்ளவும்.தோசைக்கல்லில் மாவை அடைகள் போல் ஊற்றி,
அடுப்பை மிதமான தீயில் வைத்து, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிட்டு
எடுக்கவும். கேரட், குடமிளகாயை சிறிது எண்ணெய்விட்டு வதக்கி அடையின்
மேல்புறம் வரிசையாக வைத்து, ரிப்பன் போல 'கட்’ செய்த சீஸையும் வைத்து
அழுத்திவிடவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், வெங்காயத்தாளை வதக்கி மேலே பரவலாகத் தூவலாம்.
உருளைக்கிழங்கு போண்டா
தேவையானவை:
உருளைக்கிழங்கு - 3, கடலை மாவு ஒரு கப், அரிசி மாவு அரை கப், பொடியாக
நறுக்கிய இஞ்சி ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் ஒன்று (பொடியாக நறுக்கவும்),
பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சம்பழம் ஒரு மூடி, எண்ணெய் - 250 மில்லி, உப்பு தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை
வேகவைத்து தோல் உரித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு இஞ்சி,
வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி... தேவையான உப்பு, மிளகாய்த்தூள்
சேர்த்துக் கிளறி, வேகவைத்த உருளைக்கிழங்குடன் சேர்த்து, இதில் எலுமிச்சம்
பழத்தைப் பிழிந்து, நன்றாக பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி
வைத்துக்கொள்ளவும்.
அரிசி மாவு, கடலை மாவுடன் சிறிதளவு தண்ணீர், உப்பு
சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு
சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து. உருட்டி வைத்த உருண்டைகளை மாவில்
தோய்த்துப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். சட்னியுடன்
பரிமாறவும்.
சாபுதானா உப்புமா
தேவையானவை:
ஜவ்வரிசி - 200 கிராம், பொடியாக நறுக்கிய கேரட் ஒரு சிறிய கப், பொடியாக
நறுக்கிய குடமிளகாய், ஸ்பிரிங் ஆனியன் சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை - 50
கிராம் (பொடித்துக்கொள்ளவும்), கடுகு, பொட்டுக்கடலை, பொடியாக நறுக்கிய
பச்சை மிளகாய், இஞ்சி தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய
கொத்தமல்லித்தழை சிறிதளவு, எலுமிச்சம் பழம் ஒரு மூடி, எண்ணெய்,
உப்பு தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை
தண்ணீர் தெளித்து, உப்பு சேர்த்துப் பிசிறி வைக்கவும். வாணலியில் சிறிதளவு
எண்ணெய் விட்டு கேரட், ஸ்பிரிங் ஆனியன், குடமிளகாயை வதக்கி
வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து,
பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கிளறி, வதக்கிய காய்களை சேர்த்து,
ஜவ்வரிசியையும் சேர்த்து கிளறவும். இதனுடன் பொடித்த வேர்க்கடலை சேர்த்து,
எலுமிச்சம் பழம் பிழிந்து, நறுக்கிய கொத்துமல்லித்தழை தூவிக் கிளறி...
ஜவ்வரிசி வெந்தவுடன் இறக்கவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், வறுத்த முந்திரி, பிஸ்தா சேர்க்கலாம்.
சேமியா பக்கோடா
தேவையானவை:
சேமியா - 100 கிராம், பெரிய வெங்காயம் ஒன்று (பொடியாக நறுக்கவும்),
பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் ஒன்று (பொடியாக
நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு, வறுத்த
வேர்க்கடலை - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 200 மில்லி, உப்பு தேவையான அளவு.
செய்முறை:
சேமியாவுடன் மற்ற அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) சேர்த்து,
சிறிதளவு தண்ணீர் விட்டு, சிறிது நேரம் ஊறவிட்டு பிசையவும். கடாயில் எண்
ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சேமியா கலவையை பக்கோடாக்களாக
கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
கேரட் தோசை
தேவையானவை: இட்லி அரிசி - 200 கிராம், உளுத்தம்பருப்பு - 50 கிராம், கேரட் - 2, எண்ணெய் - 100 மில்லி, உப்பு தேவையான அளவு.
செய்முறை:
அரிசி, உளுந்தை தனித்தனியாக 3 மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் நைஸாக
அரைத்து, தேவையான உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். கேரட்டை மிக்ஸியில்
அரைத்து மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அடுப்பை மிதமான
தீயில் வைத்து, மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு
சுட்டெடுக்கவும்.
குறிப்பு: சட்னி, சாம்பார் இதற்கு சிறந்த காம்பினேஷன்.
Post a Comment