தந்தை பெரியாரும்... 'அம்மா' ஜெயலலிதாவும்!
த ங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர்களை உறவுமுறை சொல்லி அழைப்பது இந்திய அரசியல் வரலாற்றில் மரபான ஒன்றுதான். தேசத்தந்தை, காந்தி தாத்தா, ...

இருக்கட்டும், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 'அம்மாவுக்கு அநீதி இழைக்கப்பட்டது' என்ற கூக்குரல்கள் சுற்றிலும் கேட்கின்றன. 'அம்மா' பற்றி நினைக்கும்போது, தந்தை பெரியார் குறித்த இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. பெரியார் காங்கிரஸுக்கு வருவதற்கு முந்தைய காலகட்டம். ஈரோட்டில் தன் அப்பாவுடன் மண்டி வியாபாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது சில வியாபார விஷயங்களில் அப்பாவுக்கு பதிலாக அவருடைய கையெழுத்தை பெரியாரே போட்டிருந்தார். இது அப்போதிருந்த வணிகச் சூழலில் சகஜமான ஒன்றாகத்தானிருந்தது.
ஆனால் பெரியாரைப் பிடிக்காத சிலர் அவர்மீது ஃபோர்ஜரி என்று புகார் கொடுக்க, வழக்குப் பதியப்பட்டது. தன் மகனுக்குச் சிறை கிடைக்குமோ என்று கலங்கிப்போன பெரியாரின் அப்பா வெங்கடப்பர், வழக்கை எதிர்கொள்வதற்காக ஈரோட்டில் பிரபலமான வழக்கறிஞரை ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், பெரியாரோ நீதிமன்றத்தில் பொய் சொல்ல மாட்டேன் என்று உறுதியாக மறுத்துவிட்டார். பணக்காரக் குடும்பத்தில் பிறந்த அவர், கட்டிலில் படுப்பதைத் தவிர்த்துவிட்டு, தரையில் படுத்து உறங்கத் தொடங்கினார். சிறைக்குச் சென்றால் தரையில்தான் படுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிப் படுத்துப் பழகிக்கொண்டார். நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது "அப்பாவின் கையெழுத்தை நான்தான் போட்டேன்" என்றே வாக்குமூலம் அளித்தார். அவருடைய நேர்மையைப் பாராட்டிய நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
பிறகு பெரியார் காங்கிரஸில் இணைந்து காந்தியின் சீடராக இருந்த காலகட்டம். அப்போது ஒருவருக்குப் பெரியார் கடனாக அளித்திருந்த 50,000 ரூபாய் வசூலாகவில்லை. அதற்காக ஏற்கெனவே புரோநோட் எழுதி வாங்கியிருந்தார் பெரியார். கடன் வசூலாகாத சூழலில் நீதிமன்றத்துக்குச் சென்றுதான் பணத்தை வசூலிக்க வேண்டும் என்கிற நிலை. அன்றைய காலகட்டத்தில் 50,000 ரூபாய் எவ்வளவு விலை மதிப்புடையது என்பதைச் சொல்லத்தேவையில்லை. ஆனால் நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணிப்பது என்று காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதை ஏற்றுக்கொண்ட பெரியார், 50,000 ரூபாய் பணத்தை விட்டுக்கொடுக்கத் தயாரானார். அப்போது அதே காங்கிரஸில் இருந்த சேலம் விஜயராகவாச்சாரியார் என்ற பிரபல வழக்கறிஞர் "நீங்கள்தானே வசூலிக்கக் கூடாது? பணம் வசூலிக்கும் உரிமையை எனக்கு வேண்டுமானால் மாற்றித்தாருங்கள்" என்று கேட்டார். ஆனால் பெரியாரோ "நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணிப்பது என்று முடிவெடுத்தபிறகு, அதை யார் வழியாக மேற்கொண்டாலும் தவறுதான்" என்று உறுதியாக மறுத்துவிட்டார்.
இது தந்தை பெரியார் என்ற மகத்தான மனிதரின் கதை. இனி 'அம்மா' கதைக்கு வருவோம். 'அம்மாவுக்கு எதிராகச் சதி', 'அம்மாவைப் பொய்வழக்கில் உள்ளே தள்ளிவிட்டார்கள்' என்ற கூக்குரல்களைச் சுற்றிலும் கேட்கும்போது, நடப்பது பிரிட்டிஷ் ஆட்சியோ, உப்புச் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு ஜெயலலிதா உள்ளே போய்விட்டாரோ என்ற பிரமை ஏற்படுகிறது. கொஞ்சம் அழுத்தமாக நம்மை நாமே கிள்ளிப் பார்த்தால்தான், ஜெயலலிதா உள்ளே போனதற்குக் காரணம் உப்புச் சத்தியாகிரகம் அல்ல. ஊழல் வழக்கு என்ற உண்மை உறைக்கிறது.
17 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடித்து, தீர்ப்புக்கு முதல்நாள் வரைகூட மனு போட்டு வழக்கை இழுத்தடிக்க முயன்ற ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதற்கு இத்தனை கூக்குரல்களா? இத்தனை நாள் இழுத்தடித்ததுகூட சரி, தீர்ப்பை எதிர்கொள்வதற்கு முதல்நாள்கூட ஜெயலலிதா தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போயிருக்கலாம். ஒருவேளை அவர் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பு வந்திருந்தால் கம்பீரத்தோடு பதவி ஏற்ற பெருமையும் அவருக்குக் கிடைத்திருக்கும். ஆனால் ஜெயலலிதாவோ அரசு மரியாதைகளுடன் போய் குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டது, அவர் தனக்குத்தானே தேடிக்கொண்ட அவமானம்.
தமிழக அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் பெரியார், அண்ணா, காமராஜர், ராஜாஜி, கருணாநிதி, ராமதாஸ், வைகோ, திருமாவளவன், சீமான், நெடுமாறன், நல்லகண்ணு, தா.பாண்டியன், ஜி,ராமகிருஷ்ணன், சங்கரய்யா, வீரமணி, கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் என போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற வரலாறு நிறையவே உண்டு. ஆனால் ஜெயலலிதாவுக்கோ போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற அரசியல் அனுபவமே கிடையாது. இதோடு சேர்த்து இரண்டு முறைகளும் அவர் ஊழல் குற்றச்சாட்டில்தான் உள்ளே போயிருக்கிறார். ஆனால் அவரை ஏதோ சமூகப்போராளி போலச் சித்தரிக்கிற அவலம் நிகழ்கிறது.
இன்றைய சூழ்நிலையில் சட்டத்தின் வார்த்தைகளில் சொல்வது என்றால், ஜெயலலிதா நிரூபிக்கப்பட்ட ஊழல் குற்றவாளி, தண்டிக்கப்பட்ட ஊழல் அரசியல்வாதி. ஆனால் அவரைச் சமூகப் போராளியாகச் சித்தரிப்பது சட்டப்படி மட்டுமல்ல, தார்மீக ரீதியாகவும் தவறு.
இப்படியாக, தந்தை பெரியார் காலத்திலிருந்து 'அம்மா' காலத்துக்கு நாம் வழுக்கி விழுந்து வந்து சேர்ந்திருப்பதற்குப் பெயர்தான் மதிப்பீடுகளின் வீழ்ச்சி.
- சுகுணா திவாகர் Thanks to vikatan web com
Post a Comment