இதயம் காக்க இப்படி செய்யலாம்!உடற்பயிற்சி!!
இதயம் காக்க இப்படி செய்யலாம்! உடலை உறுதிப்படுத்த ஜிம் பயிற்சிகள் இருக்கின்றன. இதயத்தை வலுப்படுத்த...? எப்போதும் உட்கார்ந்த நிலையி...

https://pettagum.blogspot.com/2014/08/blog-post_93.html
இதயம் காக்க இப்படி செய்யலாம்!
உடலை உறுதிப்படுத்த ஜிம் பயிற்சிகள் இருக்கின்றன. இதயத்தை வலுப்படுத்த...? எப்போதும்
உட்கார்ந்த நிலையிலேயே வேலைபார்த்து, ஊட்டச்சத்து இல்லாத உணவை உட்கொண்டு,
நேரம் கெட்ட நேரத்தில் தூங்கி எழுந்து, முறையான உடற்பயிற்சி செய்யாதது
போன்ற காரணத்தால் இளம் வயதிலேயே இதய நோய்கள் எட்டிப்பார்க்க
ஆரம்பிக்கின்றன. 'வீட்டிலேயே தினசரி எளிமையான உடற்பயிற்சிகளை செய்வதன்
மூலம், நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்'' என்கிறார் சென்னை ஃபிட்னெஸ் ஹப்
சென்டர் உரிமையாளரும் பயிற்சியாளருமான சாரதி.
ஏரோபிக் ஸ்டெப்பர் (Aerobic stepper)
மனைக்கட்டை போன்று சற்று உயரமான பலகையை உங்கள் முன்
வைத்துக்கொள்ளுங்கள். கையில் ஏதேனும் ஒரு எடை கூடிய (டம்பிள் இருந்தால்
நல்லது. இல்லையெனில் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில்கூட பயன்படுத்தலாம்)
பொருளை வைத்துக்கொள்ளுங்கள். முதலில் வலது காலைப் பலகையின் மேல் வைக்க
வேண்டும். பிறகு நிலையாக நிற்க உதவும் வகையில், இடது காலையும் பலகையின்
மேல் வைக்க வேண்டும். பிறகு, முதலில் இடது காலை பின்னால் கொண்டு செல்ல
வேண்டும். தொடர்ந்து வலது காலையும் பழைய நிலைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
இப்படி இரண்டு கால்களையும் முறையே, 15 முதல் 20 தடவை செய்ய வேண்டும்.
பலன்கள்: இதயத் துடிப்பு அதிகரிக்கும். உடலில் கொழுப்பு கரையும். உடல் முழுவதும் ரத்தம் பாயும்.
சைடு பேண்டு வித் பிளேட் (Side band with plate)
கால்களைச் சற்று அகட்டி வைத்துக்கொண்டு கைகளில் ஏதேனும்
ஒரு கனமான பொருளை எடுத்துக்கொள்ளவும். முதலில் வலது காலைத் தொடும்
அளவுக்குக் குனிய வேண்டும். பிறகு வலது பாதத்தைச் சிறிதளவு உயர்த்தி, இடது
பக்கமாகத் திரும்பி கைகளை மேலே உயர்த்த வேண்டும். இப்போது இடது காலைத்
தொடும் அளவுக்குக் குனிய வேண்டும். பிறகு இடது பாதத்தைச் சற்று உயர்த்தி
வலது பக்கமாகத் திரும்பி, கைகளை மேலே உயர்த்த வேண்டும். இப்படி இரண்டு
பக்கமும் 10 முதல் 15 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: கை
மற்றும் பின்புறத் தசைகள் வலுவாகும். குனிந்து நிமிர்வதால், இதயத்துக்கு
வேகமாக ரத்தம் பாயும். இதய நோய்க்கு மிகச் சிறந்த பயிற்சி இது.
ஃப்ரன்ட் பேண்டு வித் பிளேட் ((Front-band with plate)
கால்களைச் சற்று அகட்டி நின்றபடி, தட்டு போன்ற கனமான
பொருளைப் பிடித்துக்கொள்ளவும். முதலில் இடது காலை முன்பாக வைக்கவும். பிறகு
கைகள் இடது காலைத் தொடும் அளவுக்குக் குனிய வேண்டும். பிறகு இதே போல் வலது
காலை முன்பாக வைத்து, கைகள் வலது காலைத் தொடும் அளவுக்குக் குனிய
வேண்டும். இதேபோல், இரண்டு பக்கமும் 10 முதல் 15 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: கை மற்றும் பின்புறத் தசைகள் வலுவடையும். இதயத்தில் ரத்தம் வேகமாகப் பாயும். இதயத்துடிப்பு அதிகரிக்கும்.
லெக் கிக் வித் ஸ்டிக் ((Leg kick with stick)
கால்களைச் சற்று அகட்டி வைத்துக்கொண்டு, தோள்களுக்கு
மேல் ஒரு கம்பை நீட்டிப் பிடித்தபடி நேராக நிற்க வேண்டும். கைகளை நேராக
வைத்தபடியே இடது காலை மட்டும் உயர்த்தி வலது பக்கமாகத் திரும்ப வேண்டும்.
அதே போல, வலது காலை உயர்த்தி இடது பக்கமாகத் திரும்ப வேண்டும். இப்படி
இரண்டு பக்கமும் முறையே 10 முதல் 15 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: இந்தப்
பயிற்சியின் மூலம் அடி வயிற்றில் உள்ள கொழுப்பு குறையும். கை மற்றும் கால்
தசைகள் வலுப்பெறும். இதயத் துடிப்பு சீராகும். இதனால், இதய நோய்கள்
வருவதற்கான ஆபத்து குறையும்.
Post a Comment