அலர்ஜி...
சமீபமாக உடல்நலம் குறித்த உரையாடலில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயம்!
'எனக்குக் கத்திரிக்காய் அலர்ஜி... கருவாடு அலர்ஜி... கடலை அலர்ஜி...’ என
ஆரம்பித்து, மாடிக் காற்று அலர்ஜி, பருவ மழை அலர்ஜி என ஒவ்வாமைக்கான
காரணங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 'குழந்தைக்கு பால் அலர்ஜியாம்.
அதனால் நான் இப்போ தாய்ப்பால் கொடுக்கிறதே இல்லை..’ என்பது இந்தப்
பட்டியலில் பதறவைக்கும் பயங்கரம். உலக அளவில் இந்த அலர்ஜி பிரச்னை
குழந்தைகளை அதிகம் படுத்துவதாக, குறிப்பாக வளர்ந்த நாடுகளான அமெரிக்க,
ஐரோப்பிய தேசங்கள் புலம்புகின்றன.

சாதாரண மூக்கடைப்பு, தும்மல், கண்ணிமைக் கசக்கல் எனத்
தொடங்கி, சில நேரங்களில் தடாலடியாக உதடு, முகம் வீங்குவது, சிறுநீர்
தடைபடுவது, மூச்சிரைப்பு... என நபருடைய நோய் எதிர்ப்பாற்றலைப் பொறுத்தும்,
அவர் சாப்பிட்ட, முகர்ந்த பொருளைப் பொறுத்தும் அவதாரம் எடுக்கும் இந்த
அலர்ஜி, சில நேரங்களில் Anaphylactic shock எனும் தடாலடி மரணத்தைக்கூட
தரும் அபாயம் உடையது. இந்த ஒவ்வாமையால், பின்னாளில் ஆஸ்துமா, சைனசைடிஸ்,
எக்சிமா போன்ற பல நோய்களை வரவழைக்கும் வாய்ப்பும் உண்டு. ஒவ்வாமையால் வரும்
தோல் நோயான ATOPIC DERMATITIS, வெளிநாட்டில் பிறக்கும் இந்தியக்
குழந்தைகளை வாட்டும் மிக முக்கியமான தோல் அலர்ஜி தொந்தரவு. கடந்த 10
ஆண்டுகளில் இந்த நோய்க்கூட்டம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகச்
சொல்கிறார்கள்.
துடைப்பத்தை வைத்துப் பெருக்கி, தூசி தட்டிய காலத்தில்
இந்த அலர்ஜி பிரச்னை அவ்வளவாக இல்லை. 'குனியாமல் நிமிராமல் வீட்டுக்
குப்பையை உறிஞ்சி சுத்தம் செய்யலாம்’ என மோட்டார் துடைப்பத்தை வாங்கிய
பின், 'எங்க மிஸ் சொன்னாங்க’ என, குழந்தைகள் மணிக்கு ஒரு தடவை கைகளை
சானிடைசர் வைத்துக் கழுவ ஆரம்பித்த பின், சாணம் கரைத்து முற்றம் கழுவித்
துடைத்ததை மறந்து, தொலைக்காட்சி சேனல் விளம்பரங்கள் பரிந்துரைத்த கலர் கலர்
ரசாயனக் கலவைகளால் தரையை மெழுகத் தொடங்கிய பின், 'நாங்க உலகத்
தரக்கட்டுப்பாடுகளில் ஒன்றுவிடாமல் பின்பற்றுகிறோமாக்கும்’ என உதார்விட்டு
விற்கப்படும் உணவுப் பண்டங்களால் சந்தையை நிரப்பிய பின்... 'அலர்ஜி’ அதீதப்
பயம் காட்டுகிறது. ஏன்?

'சுத்தம்
சோறு போடும்’ என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு 'அதிதீவிர
சுத்தம் சொறி, சிரங்கை உண்டாக்கும்’ என்பதும் உண்மையோ என்று யோசிக்கத்
தொடங்கியிருக்கிறது மேலை நாட்டு அறிவியல். செயல்திறன் முடக்கப்பட்ட
கிருமிகளை தடுப்பூசிகளாக உடலுக்குள் செலுத்தி, அதற்கு எதிரான நோய்
எதிர்ப்பாற்றலை எப்படி உருவாக்குகிறார்களோ, அதேபோல நம்மைச் சுற்றி
இருக்கும் நுண்ணுயிரிகளில் சேட்டைக்காரருக்கு எதிராக மட்டும் வேலி கட்டும்
வேலையை, நம் உடல் தானாகவே செய்துவிடும். ஆனால், அது புரியாமல்
நுண்ணுயிரிகளின் வாசம் படாமல், 'இன்குபேட்டர் கவனிப்பில்’ குழந்தைகளை
வளர்க்கும்போது, அவர்களது நோய் எதிர்ப்பாற்றல், யார் எதிரி எனத் தெரியாமல்
கன்னாபின்னாவென வாள் சுழற்றத் தொடங்குவதே அலர்ஜி பெருக்கத்துக்கான
அடிப்படைக் காரணம். அதனால்தான், அமோனியாவைப் பார்த்தால் மூச்சை இறுக்கி
அதனை உடம்புக்குள் நுழையாது தடுக்கவேண்டிய நோய் எதிர்ப்பாற்றல், ஆற்று
மீனுக்கும், கடலை உருண்டைக்கும், காற்று, தூசிக்கும்கூட மூச்சை இறுக்கத்
தொடங்குகிறது.
'அது சரி... 'அதிசுத்தமாக’ இல்லாதவர்களுக்கும் அலர்ஜி
வருகிறதே’ என்று கேட்கிறீர்களா? சரிவிகித உணவு சரியாகக்
கிடைக்காதவருக்கும், சாப்பிடாதவருக்கும் அலர்ஜி அட்டூழியம் அதிகம். அதற்கு
மிக முக்கியமான காரணம், 'எங்கள் நாட்டுக் குப்பைகள், உங்கள் நாட்டின்
ஏதேனும் ஒரு மூலையில் கொட்டப்படும்’ என வளரும் நாடுகளுடன் வளர்ந்த நாடுகள்
போடும் வணிக ஒப்பந்தங்களும் ஒரு காரணம். சூழல் சிதைவைத் தரும் கண்ணாடி
கம்பெனி, கார் கம்பெனி, கலர் கலரான சாயப்பூச்சைப் பயன்படுத்தும் உள்ளாடை
தயாரிப்பு கம்பெனி, துருப்பிடிக்காமல் இருக்க இயந்திரங்களுக்குப் பூச்சு
போடும் கம்பெனி, அணுவைப் பிளக்கும் கம்பெனி, அணுவை அளக்கும் கம்பெனி... என
அத்தனை கம்பெனிகளையும், 'வேலைவாய்ப்பு வருது; அந்நிய செலாவணி வருது;
அழகழகான கட்டடம் வருது’ என்று சொல்லி இங்கே செயல்பட அனுமதிப்பதும் பிரதான
காரணம். விவசாய நிலங்களைப் பறித்து அவர்களுக்குக் கொடுத்து, 'இங்கே வரி
கட்டாமல் நீங்க ஆட்டம் போடுங்க. காலத்துக்கும் உங்களுக்குக் கூலிக்கு வேலை
பார்க்க அழுக்கு வேட்டிப் பாமரனில் இருந்து, ஆடி கார் அறிவாளி வரை நாங்கள்
தருகிறோம்’ என்று சொல்லி சிவப்புக் கம்பளம் விரிக்கிறோம். அவர்களும் சத்தமே
இல்லாமல் நம் தாய் மண்ணில், காற்றில், நீரில் நச்சுக்களைக் கலக்க, அது
அலர்ஜியை பல வடிவங்களில் பரிசளிக்கிறது.

ரசாயன
உரங்களையும், பூச்சிக்கொல்லியையும் அள்ளித் தெளித்ததில் உணவு, காய்-கனி
கூட்டம் அத்தனையிலும் நச்சுத்துணுக்குகள். போதாக்குறைக்கு வாசம் தர, வேஷம்
கட்ட, வணிகப் போட்டியில் பிற சின்ன வணிகர்களை நசுக்க என, ரசாயனம் கலந்த
நச்சு உணவுகளை வீதிவீதியாக விற்கும் பன்னாட்டுத் துரித உணவகங்கள் வேறு.
விளைவு..? அத்தனை காய்-கனிகளிலும் அலர்ஜி அளிக்கும் சாத்தான்கள்.
சூழல் அழுத்தத்தில் கடைசிக் குரங்கில் இருந்து முதல்
மனிதன் வருவதற்கு, 1.2 மில்லியன் ஆண்டுகள் ஆனதாம். இத்தனைக்கும்
இரண்டுக்கும் வித்தியாசம் 1 சதவிகிதத்துக்கும் குறைவான மரபணுக்களே. ஆனால்,
இன்று தவளையின் மரபணுவை தக்காளியிலும், விஷம் கக்கும் நுண்ணுயிரியின்
மரபணுவை கத்திரியின் மரபணுவிலும் சில ஆண்டு ஆய்விலேயே ஒட்டி வெட்டி, 'புது
ஜந்து’ படைக்கிறார்கள் கலியுக பிரம்மாக்கள். 'லேசாத்தான்யா அரிக்கும்...
வேற ஒண்ணும் செய்யாது’ என எதிர்ப்பு எச்சரிக்கைகளையும் மீறி, 'ஓர் உலகம்...
ஒரு கம்பெனி... ஒரே விதை’ என்ற கனவுடன் உழைக்கிறார்கள். வருங்காலத்தில்
மரபணு பயிர்கள் என்னவிதமான அலர்ஜியைத் தரும் என்பதைப் பொறுத்திருந்து
(இருந்தால்..?) கவனிக்க வேண்டும்.
இப்போதைக்கு அலர்ஜியின் பிடிகளில் இருந்து விலகி இருக்க
ஒரே வழி, கொடூரத் தொழில்நுட்பத்தின் பிடியில் இருந்து கொஞ்சம் விலகி,
இயற்கை விவசாயத்தில் விளையும் பயிர்களால் முடிந்த வரை பசியாற்றிக்
கொள்வதுதான். எந்தக் காரணம்கொண்டும், லேபிளில் ஒட்டியிருக்கும் பெயர்
தெரியாத ரசாயனப் பெயர்களைப் படித்துவிட்டு, 'டி.வி-யில இதைக் குடினு
சொல்றவுக வெள்ளையா இருக்காங்க. சூட், கோட்லாம் போட்டிருக்காங்க. அவுக
சொன்னா, சரியாத்தான் இருக்கும்’ என, பழக்கம் இல்லாத புதிய கலவை உணவை உள்ளே
அனுப்பாதீர்கள். ரசாயனம் செறிந்த துரித உணவுகளும், கெமிக்கல் பூச்சுத்
தெளிக்கப்பட்ட காய்-கனிகளும் குடலுக்குள் 'லைன் வீடு’ அமைத்து சந்தோஷமாகக்
குடியிருக்கும் நுண்ணுயிர் கூட்டத்துக்குக் குண்டு வைக்கும். அதுவரை
உடம்பின் பாதுகாவலனாக இருந்த அவை, குழம்பித் தெறித்து ஓடுவதில், ரத்தத்தின்
வெள்ளை அணுக்களில் சில திடீரெனப் பல்கிப் பெருகும். அவை முகத்தின்
எலும்புப் பதிவுகளில் கேம்ப் அடிக்கும்போது சைனசைடிஸ்; மூச்சுக்குழல்
பாதையில் மணல் குன்றமைத்து குத்தவைக்கும்போது ஆஸ்துமா, தோலுக்கு அடியில்
'கொடி நடை’ நடத்தும்போது எக்சிமாவோ, அடோபிக் டெர்மடைடிஸோ?

காரத்துக்கு
மிளகு இருந்த வரை, இனிப்புக்குப் பனை வெல்லமும் தேனும் இருந்த வரை,
புளிப்புக்கு என நம் பாரம்பரியப் பழம்புளியான குடம் புளி இருந்த வரை அலர்ஜி
இருந்ததாக மருத்துவ இலக்கியச் சான்றுகள் இல்லை. 'பத்து மிளகு இருந்தால்,
பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என மிளகைப் பாடியது அதன் நச்சு அகற்றும்
உச்சவீரியத்தால்தான். எந்த அலர்ஜியாக இருந்தாலும் நம் முதல் தேடல்
மிளகாகத்தான் இருக்க வேண்டும். அலர்ஜியை தடாலடியாக ஒருசில நிமிடங்களில்
நசுக்கும் ஸ்டீராய்டுகள்போல் இல்லாமல், மிளகு மெள்ள மெள்ள நோய்
எதிர்ப்பாற்றலைச் சீராக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
சீந்தில் கொடி,
வரப்பு ஓரத்திலும் வேலியிலும் மிகச் சாதாரணமாக வளரும் கொடி. ஆனால், அசாதாரண
அளவில் நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கி அலர்ஜி சைனசைடிஸை அறுத்தெரிகிறது
என்று கண்டுபிடித்திருக்கிறது நவீன அறிவியல். அருகம்புல், நச்சு நீக்கி
அலர்ஜியைப் போக்கும் எளிய புல். இது, கரப்பான் எனும் எக்சிமா நோய்க்கான
சித்த மருத்துவத்தின் முதல் தேர்வு. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில்
இந்தப் புல்லின் சாற்றையும் சில மூலிகைகளையும் சேர்த்துக் காய்ச்சி
எடுக்கப்படும் 'அருகன் தைலம்’ இந்திய மருத்துவ மருந்துகளில் மிகப் பிரபலமான
மருந்து. ATOPIC DERMATITIS எனும் அலர்ஜியில் சருமத்தின் நிறம் மிகக்
கறுத்து அதீத அரிப்பைத் தரும் தோல் நோய்க்கு அருகன் தைலம் இதம் அளிக்கும்
இனிய மருந்து.
அலர்ஜி, அரிப்பு, தோல் நோய் உள்ளவர்கள் புளிப்பான
உணவைக் குறைக்க வேண்டும். வத்தக்குழம்போ, வஞ்சிர மீன் குழம்போ ஆகாது.
நார்ச்சத்தைக் நடுவில் குவித்து, விதவிதமான நிறமிச் சத்தை தோலில்
சேகரித்து, சதைப்பற்றின் ஊடே சாமர்த்தியமாக பல உயிர்ச்சத்தை
ஒளித்துவைத்திருக்கும் பழங்கள் அலர்ஜியில் கறுத்தத் தோலை மீட்கும்
மீட்பர்கள். அதே சமயம்

புளிப்பான
ஆரஞ்சு, திராட்சையை தும்மல் உள்ளோர், கரப்பான் உள்ளோர் தவிர்க்கவும். நம்
ஆயா அறிந்திராத சோயா, நம் பாட்டன் பார்த்திராத காளான் சில குழந்தைகளுக்கு
அலர்ஜி தரக்கூடியன. அலர்ஜி உள்ளோர் இவற்றில் எச்சரிக்கையாக இருப்பது நலம்.
'மிஸ் வேர்ல்டு’கள் மாறும்போதெல்லாம் குளிக்கும் சோப்பை மாற்றுவது உங்கள்
சருமத்தின் இயல்பையும் மாற்றிவிடும்.
இன்றைக்கு சோயா, நிலக்கடலை, மீன், பால்கூட அலர்ஜியாகப்
பார்க்கப்படுவதுபோல, நாளை நாம் அருந்தும் தண்ணீரும், சுவாசிக்கும்
காற்றும்கூட அலர்ஜியாகக்கூடும். அப்போது தண்ணீர் தொட்டியை கையில்
வைத்துக்கொண்டும், ஆக்சிஜன் புட்டியை முதுகில் கட்டிக்கொண்டும் திரியவேண்டி
இருக்கும். அந்தத் தருணங்களில் கணக்குப் பார்த்து மூச்சுவிட முடியாது;
காதல் களிப்பும் செய்ய முடியாது. 'இந்த உலகம் எனக்கானது மட்டுமல்ல. அனைத்து
உயிர்களுக்குமானது. அவை அனைத்தையும் போற்றி மகிழவே மனிதனுக்கு ஆறாம் அறிவை
இயற்கை வழங்கி இருக்கிறது’ என்ற சிந்தனையே ஒவ்வாமையை ஓரங்கட்டுவதற்கான
முதல் செயல்!
- நலம் பரவும்...
சிறுதானியங்கள் அலர்ஜியை உண்டாக்குமா?
சிறுதானியங்களைச் சாப்பிட்டால் அலர்ஜி வருமா.. அரிப்பு வருமா.. தோல் நோய் தருமா? எனக் கேள்விகள் அதிகரிக்கின்றன.
சருமத்தில் உண்டாகும் ஒவ்வாமை நோயில் ஒரு வகையை
'கரப்பான்’ என்பார்கள். கரப்பான் இருந்தால் சோளம், கம்பு, திணை ஆகியவற்றை
நோய் நீங்கும் வரை தவிர்க்கலாம். சித்த மருத்துவ நூல்கள்... சோளம், கம்பு,
வரகு ஆகிய தானியங்களை, கரப்பான் நோய் உடையோரும், அரிப்பைத் தரும் பிற தோல்
நோயினரும் தவிர்ப்பது நலம் என்கின்றன. நவீன உணவு அறிவியல், இதை இன்னும்
உறுதிப்படுத்தவில்லை. நில உடைமைக்காரர்கள், 'புஞ்சை நில தானியம் உசத்தி
கிடையாது’ என்று விதைத்த நெடுநாள் பொய்யை எடுத்துக்கொண்ட, இடைக்காலச்
செய்தியாகவும்கூட இது இருக்கலாம். குளூட்டன் சத்து உள்ள கோதுமையையும்
கோதுமை சேர்ந்த பேக்கரி உணவுகளையும் தோல் நோயினர் முடிந்தவரை குறைத்துக்
கொள்ள வேண்டும்.
அலர்ஜி பிரச்னை உள்ளோர் பொதுவாக புளிப்பு சுவை உள்ள
உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. முட்டை, மீன், கருவாடு, நண்டு,
இறால் கூடாது. இறால், தடாலடி அலர்ஜியை சிலருக்கு வரவைக்கும். குடும்பத்தில்
யாருக்கேனும் அப்படி ஓர் அலர்ஜி போக்கு இருந்தால், மேற்படி வகையறாக்களை
அடுத்த தலைமுறை, கூடுதல் கவனத்துடன் நிறைய மிளகு தூவி பயன்படுத்திப்
பழகலாம்.
அலர்ஜியைப் போக்க சில கைப்பக்குவங்கள்
மேலுக்கு சோப்பு தேய்த்துக் குளிக்காமல், 'நலுங்கு மாவு’ தேய்த்துக் குளிப்பது சருமத்தை அலர்ஜியில் இருந்து காக்க உதவும்.
வேப்பங்கொழுந்து (1 ஸ்பூன்), ஓமம் (1/4 ஸ்பூன்), மஞ்சள்தூள் (1/2 ஸ்பூன்),
கருஞ்சீரகம் (1/2 ஸ்பூன்) சேர்த்து நீர்விட்டு அரைத்து உருட்டி,
சுண்டைக்காய் அளவுக்கு, மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு,
வாரத்துக்கு ஓரு நாள் என மூன்று முறை கொடுக்க, வயிற்றுப் பூச்சி நீங்கி
அரிப்பு குறையும்.
அருகம்புல்லை
(1 கைப்பிடி) ஒன்றிரண்டாக வெட்டி, 10 மிளகைப் பொடித்து, நான்கு
வெற்றிலையைக் காம்பு நீக்கிக் கிழித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த
மூன்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு குவளை நீர்விட்டுக்
கொதிக்கவைத்து, அரை டம்ளராக வற்றவைத்து, பின் வடிகட்டி அந்தக் கஷாயத்தை
இளஞ்சூட்டில் காலை, மாலை என 15 தினங்கள் பருகினால், 'அர்ட்டிகேரியா’ எனும்
உடல் முழுக்க வரும் அரிப்பு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
Post a Comment