தாய்ப்பால் தரும் சக்தி! தாய்ப்பாலே தடுப்பூசிதான்!!ஹெல்த் ஸ்பெஷல்!!!
தாய்ப்பாலே தடுப்பூசிதான்! பெ ற்ற குழந்தைக்கு உற்ற மருந்தென்று தாய்ப்பால் மிஞ்சிடத் தரணியில் ஏதும் உண்டோ? தாய்க்கும் சிசுவுக்குமான தன்ன...
குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான புரதம், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், உயிர்சத்துக்கள் அனைத்தும் சமநிலையில் அடங்கியிருப்பதோடு, நோயை எதிர்க்கும் சக்தி கொண்ட புரதங்களும் (Immunoglobulins) தாய்ப்பாலில் உள்ளன. இவை சளி, இருமல், வயிற்றுப்போக்கு, அலர்ஜியினால் (Allergy) ஏற்படும் ஆஸ்துமா, படை (Eczema) போன்ற வியாதிகள் குழந்தையின் உடலைத் தாக்காமல் பாதுகாக்கும் சக்தி வாய்ந்தவை.
தாய்ப்பால் பருகுவதன் மூலம் இதமான அரவணைப்பும், பாதுகாப்பும் கிடைப்பதைக் குழந்தை உணர்கின்றது. தாய்க்கும் சேய்க்கும் அதிகப் பிணைப்பு உண்டாகின்றது. தாயும் சேயும் எவ்வளவுக்கெவ்வளவு நெருங்கி இருக்கின்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாய் அவர்களிடையே பிணைப்பு ஏற்படுகின்றது.
குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்கு அதன் சப்பும் உணர்ச்சி தீவிரமாய் இருக்கும். அதன் பின்னர் குழந்தை தூங்க ஆரம்பித்துவிடும். எனவே, குழந்தை பிறந்தவுடன் எவ்வளவு சீக்கிரமாக தாய்ப்பால் புகட்ட இயலுமோ அவ்வளவு சீக்கிரம் புகட்டத்துவங்குவது நல்லது.
குறிப்பிட்ட காலத்திற்கு முன்னால் பிறந்த குழந்தைக்கு (Premature Baby) போதிய சப்பக்கூடிய திறன் இருக்குமாயின் உடனே பால் கொடுக்கத் துவங்கலாம்.
அறுவைச் சிகிச்சையினால் (Ceasarean) பிறந்த குழந்தைகளுக்கு உடனே பால் கொடுக்கக் கூடாது. அறுவை சிகிச்சைக்காக தாய்க்குக் கொடுக்கப்பட்ட மயக்க மருந்து உணவுகள் தாயின் உடலில் இருந்து முற்றிலும் மறைந்த பின்னரே பால் கொடுக்கவேண்டும்.
சீம்பால் : குழந்தை பிறந்த பின் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு குறைந்த அளவில், மஞ்சள் நிறத்துடன், தடிப்பாக சுரக்கும் பால் சீம்பால். இது அதிக சத்துக்கள் கொண்டது. நோயை எதிர்க்கும் சக்தி வாய்ந்த பொருட்கள் (Anti-infective Agents) நிறைந்ததும் ஆகும். சீம்பால் குழந்தைக்கு மிகவும் இன்றியமையாதது; அதிகப் பயனுள்ளது. குறைந்த அளவிலே சுரக்கப்பட்டாலும் முதல் மூன்று நாட்களுக்குக் குழந்தையின் எல்லாத் தேவைகளுக்கும் போதுமானது.
தாய்ப்பால் கொடுக்க வேண்டிய நேரங்கள் :
குழந்தைக்குத் தேவையான பொழுதெல்லாம் பால் புகட்ட வேண்டும். அதோடு எவ்வளவு நேரம் குழந்தை குடிக்கின்றதோ அவ்வளவு நேரம் கொடுக்க வேண்டும். மார்பகம் பால் நிறைந்து இருக்குமாயின் குழந்தை பால் குடிக்கும் இடைவேளை 3 மணிக்கு அதிகமாகக் கூடாது. பால் பருக வேண்டிய நேரத்தில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தால் எழுப்பிப் பால் கொடுக்கவேண்டும். பால் கொடுக்கும்பொழுது குழந்தையின் பால் சப்பும் வேகம் குறையும் பொழுதோ அல்லது பால் குறைந்து மார்பகம் மிருதுவாகும் பொழுதோதான் தாய் தனது அடுத்த மார்பகத்திலிருந்து பால் புகட்ட வேண்டும் பால் குடிக்கத் துவங்கிய முதல் சில நாட்களில் குழந்தை பாலை 2 அல்லது 3 நிமிடங்கள் பருகியவுடன் தூங்கிவிடும். பின்னர் நன்கு பால் குடிக்கப் பருகியவுடன், அநேகமாக 10 நிமிடங்களில் ஒரு மார்பகத்திலிருக்கும் பாலை குடித்துவிடும்.
தாய்ப்பாலை தவிர்க்கவேண்டிய சமயங்கள் :
ஏதாவது மருந்து சாப்பிட வேண்டியிருந்தால் மருத்தவரைக் கலந்தாலோசித்து அவர் பால் கொடுக்கலாம் என்று சொன்னால் மாத்திரமே குழந்தைக்குப் பால் கொடுக்கவேண்டும்.
பால் கொடுக்கும் தாய்மார்களுக்கான உணவு :
ஏற்கனவே சரிவிகித உணவை உட்கொள்ளும் தாய்மார்கள் பருப்பு வகைகளையும், கீரை வகைகளையும், பீன்ஸ், அவரை வகைகளையும் சேர்த்து உட்கொள்ளவேண்டும். பழங்களையும், பால், தயிர் முதலியவற்றையும் சேர்த்துச் சாப்பிடுவது அவசியம். அசைவ உணவு உட்கொள்பவர்கள், மாமிசமும் முட்டையும் சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த பதார்த்தங்கள் அதிகமான மசால் பொடி சேர்க்கப்பட்ட உணவு வகைகள் அளவுக்கதிகமான நெய் இவற்றைத் தவிர்க்கவேண்டும்.
குழந்தைக்குப் பால் கொடுப்பதை இந்த மாதத்தில்தான் நிறுத்தவேண்டும் என்று கணக்கில்லை. எவ்வளவு காலம் தொடர்ந்து கொடுக்க இயலுமோ அவ்வளவு காலம் கொடுப்பது நல்லது. ஆனால், நிறைய பெண்களுக்குக் குழந்தை பிறந்த 3 அல்லது 4 மாதங்களுக்குப் பிறகு பாலின் அளவு குறைந்துவிடும். வளரும் குழந்தைகளுக்குத் தேவையான அளவு சத்து தாய் பாலிலிருந்து மட்டும் கிட்டாது. எனவே தாய்ப்பால் கொடுப்பதுடன் வேறு இணை உணவுகளும் சேர்த்துக் கொடுக்கவேண்டும்.
தாய்ப்பால் குறையும்பொழுது ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி ராகிக்கூழ், அரிசிக்கஞ்சி, மசிக்கப்பட்ட வாழைப்பழம் போன்றவற்றைக் கொடுக்கலாம். இதைத் தினம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வந்து 3 அல்லது 4 வாரம் கழித்து அரை டம்ளர் கூழ் அல்லது வாழைப்பழம் கொடுக்கலாம். வேக வைத்த முட்டை, கீரை மசியல் என்று பல வகையான உணவுகளைக் கொடுக்கலாம். கடையில் குழந்தைகளுக்கென்று விற்கப்படும் உணவுகளைக் காட்டிலும் இந்த உணவுகள் நல்லது.
Post a Comment