ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!
சமீபத்தில்
ஒரு தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, சாப்பிட்டவுடன், அவர்
கலர்கலரான மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருந்தார். 'இத்தனை மாத்திரைகள்
எதற்கு?’ என்றதும், அவர் தந்த பதில் நம்மைத் திடுக்கிட வைத்தது. 'லேசா முடி
நரைச்சிருக்கேனு, 'டை’ யூஸ் பண்ணினேன். நல்ல பிராண்ட் தான். ஆனா,
தொடர்ந்து யூஸ் பண்ணப் பண்ண, தலைக்குள்ள லேசா ஊறல்
எடுத்துச்சு... அப்புறம் தலை முழுக்க பயங்கரமான அரிப்பு. பயந்துபோய், தோல்
டாக்டர்கிட்ட போனப்ப, அவர், உடனே 'ஹேர் டை’ போடறதை நிறுத்தச் சொன்னார்.
'டை’யில் இருக்கிற ரசாயனம் ஏற்படுத்திய பக்க விளைவுதான் காரணமாம்!' என்றார்
பரிதாபமாக.
'நடுத்தர வயதை நெருங்கும் பெரும்பாலானவர்கள் கண்ணாடி
முன் நிற்கும்போதெல்லாம் அனிச்சையாக முடி நரைத்திருக்கிறதா, சருமத்தில்
சுருக்கம் தெரிகிறதா எனப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். நரைத்த முடி,
முதிய தோற்றத்தைத் தருமோ என்று அதனைக் கறுப்பாக்கும் முயற்சியில் ஈடுபடத்
தொடங்கிவிடுவர். அதை, இயற்கை வழியிலேயே செய்துகொள்வதன் மூலம்
பக்கவிளைவுகளையும் பின்விளைவுகளையும் தடுக்கலாம்' என்கின்றனர் சென்னை அரசு
யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் மணவாளன்
மற்றும் உதவி விரிவுரையாளர் டாக்டர் கனிமொழி. செயற்கைச் சாயங்களால்
ஏற்படும் விளைவுகள் மற்றும் இயற்கைச் சாய முறைகள் பற்றி விரிவாக
விளக்குகின்றனர்.
' 'மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை
நிறத்துக்குக் காரணம். 40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை 'டிரையோஸின்’ என்ற
என்ஸைம் கட்டுப்படுத்தித் தடைசெய்கிறது. இதனால் முடி நரைக்கிறது. சிலருக்கு
இளமையிலே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன அழுத்தமும்தான்.
கண்டதைச் சாப்பிடுவது, சுற்றுச்சூழல் மாசுக்களால் தலையில் படியும் தூசி,
தலையில் எண்ணெயே வைக்காததால் ஏற்படும் வறட்சி போன்றவையும் இளநரைக்குக்
காரணம். அதிக வெயிலில் வெளியில் அலைந்தால், புற ஊதாக் கதிர்கள், முடியின்
ஈரத்தன்மையை உறிஞ்சி, முடியை வறண்டுபோகச்செய்யும். இதனாலும் முடி
நரைக்கலாம். மேலும், தலைக்கு உபயோகிக்கும் ஷாம்பூ, கண்டீஷனர் போன்ற
பொருட்களில் கலக்கப்படும் ரசாயனப் பொருட்களும் நரை ஏற்படக் காரணம்.
ஹேர் டையில் உள்ள வேதிப்பொருட்கள் - பக்க விளைவுகள்
செயற்கைச் சாயங்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்
பல வேதிப்பொருட்கள் உள்ளன. முக்கியமாக, அம்மோனியா, சோடியம் பைகார்பனேட்,
லெட் அசிட்டேட், ஹைட்ரஜன் பெராக்ஸைடு இவற்றுடன், 'டைஅமினோட்டோலீன்’ மற்றும்
'டைஅமினோபென்ஸின்’ என்ற இரண்டு ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இதில் இருக்கும்
புற்றுநோயை உண்டாக்கக்கூடிய 'கார்சினோஜென்’ என்ற பொருளால் பாதிப்பு அதிகம்.
தொடர்ந்து ரசாயனம் கலந்த ஹேர்டையைப் பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு
போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். வழுக்கை விழவும்
வாய்ப்புகள் அதிகம். சருமத்தில் நெற்றி, முகம் ஆகியவை சிவந்துபோதல்,
அரிப்பு ஆகியவை ஏற்படும். மேலும் கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல்,
சருமத்தில் புற்றுநோய், ஹைப்பர் சென்சிட்விட்டி போன்ற நோய்கள் வருவதற்கும்
வாய்ப்புகள் அதிகம்.
இயற்கை ஹேர் டை
அவுரித் தூளைக் குழைத்து, சிறு வில்லைகளாகத் தட்டிக் காயவைத்து,
நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை
உபயோகிக்கலாம்.
பீட்ரூட் சாறு, கறிவேப்பிலைச் சாறு... இரண்டையுமே தலையில் தடவினாலும் உணவாக எடுத்துக்கொண்டாலும் நல்ல பலன் தரும்.
வெற்றிலை, பாக்கு, வெட்டிவேர், மருதாணி - இவை நான்கையும் அரைத்துத் தலையில் தடவி, சிறிது நேரம் ஊறவைத்து அலசவேண்டும்.
மருதாணித் தூள், டீ டிகாக்ஷன் இரண்டையும் கலந்து, தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து நீரில் அலசலாம்.
சோற்றுக் கற்றாழை ஜெல், ஹென்னா தூள், டீ டிகாஷன் - இவை மூன்றையும் கலந்து தலையில் தடவி, ஊறவைத்து நீரில் அலசலாம்.
இதோ... இயற்கை டை!
''டை, கலரிங் என்று கெமிக்கல்களுடன் போராடி, உயிருக்கு
உலை வைத்துக் கொள்வதைவிட, இயற்கையாகவே சாயத்தைத் தரும் அவுரிச் செடி
இலைகளைப் பயன்படுத்தினால்... எந்தக் கவலையும் இல்லாமல், கருகரு முடியோடு
கலக்கலாமே!'' என்று சொல்லும் கடலூர் அன்னமேரி பாட்டி, அவுரி சாயம்
தயாரிக்கும் முறையையும் அழகாக எடுத்து வைத்தார். இதோ அவர் சொல்லும் இயற்கை
டெக்னிக்!
அவுரி இலை - 50 கிராம்,
மருதாணி இலை - 50 கிராம்,
வெள்ளை கரிசலாங்கண்ணி - 50 கிராம்,
கறிவேப்பிலை - 50 கிராம்,
பெருநெல்லி
(கொட்டை நீக்கியது) - 10 எண்ணிக்கை...
இவை அனைத்தையும் நன்றாக அரைத்துக்
கொள்ளவும்.
ஒரு மடல் சோற்றுக் கற்றாழையை மிக்ஸியில் அரைத்து (சிறுசிறு
துண்டுகளாகவும் வெட்டி சேர்க்கலாம்).
அரைத்து வைத்திருக்கும் அவுரி
கலவையுடன் சேர்த்து, ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மிதமான தீயில்
காய்ச்ச வேண்டும்.
கொதி நிலைக்கு வரும்போது இறக்கி வடிகட்ட வேண்டும்.
இதை
பத்திரப் படுத்தி வைத்து, தினசரி தலைக்கு எண்ணெய் பூசுவது போல
பயன்படுத்தலாம்.
நாளடைவில் முடியின் நிறம் மாறுவதோடு புதிதாகவும் முடி
வளரும்.
இளநரையைத் தவிர்க்க...
சரிவிகித உணவு உண்ண வேண்டியது அவசியம். எல்லா வகையான
நட்ஸ் வகைகளையும், இரவே ஊறவைத்து, மறுநாள் சாப்பிடவேண்டும். அவற்றில்
வைட்டமின் இ இருப்பதால், சருமத்துக்கும் முடிக்கும் மிகவும் நல்லது.
தண்ணீர் நிறையக் குடிக்கவேண்டும். முளைக்கட்டிய பயறு, பேரீச்சம்பழம் போன்ற
உலர் பழங்கள், காய்கறிகள், பழங்கள் அதிகமாகச் சாப்பிடவேண்டும்.
ஹெட் மசாஜ்
நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை இளஞ்சூடாகக்
காய்ச்சி, இரு கைவிரல்களாலும் எண்ணெயைத் தொட்டு, முடியின் வேர்க்கால்களில்
படுவது போலச் சிறுசிறு வட்டங்களாகத் தேய்க்கவும். விரல்களால் தலையின்
எல்லாப் பகுதிகளையும் லேசாக அழுத்திவிடவும். இதனால், தலையின் எல்லாப்
பகுதிக்கும் ரத்த ஓட்டம் பாய்ந்து புத்துணர்ச்சி கிடைக்கும். முடி நன்றாக
வளர்வதுடன் நரைப்பதும் தள்ளிப் போகும்.
சோற்றுக் கற்றாழை
சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை தனியே எடுத்துக் கழுவி,
சிறு துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை
சேர்த்துச் சாப்பிடவும். அல்லது, கற்றாழை ஜெல்லை தலையில் தடவி, சிறிது
நேரம் ஊறியதும் சீயக்காய்த்தூள் போட்டு அலசவும்.
செய்யவேண்டியவை
'ஹேர்
டை’ உபயோகிக்கும்போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், டை
பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். உடனடியாக, பயன்படுத்திய ஹேர் டை
பாக்கெட்டுடன் டாக்டரைச் சந்திக்கவேண்டியது அவசியம்.
உடனடியாக நிறம் மாற்றும் 'இன்ஸ்டன்ட் டை’ வகைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
'பக்கத்து
வீட்டில் சொன்னாங்க, ஃப்ரெண்ட் யூஸ் பண்ணினாங்க’ என்றெல்லாம் தாமாகப் போய்
ஹேர் டை வாங்கி உபயோகிக்கவே கூடாது. ஒருவருக்கு ஏற்றுக்கொள்ளும் பிராண்டு,
மற்றவருக்கு ஏற்காமல் போகலாம்.
உபயோகிக்காமல்
இருக்கும் 'ஹேர் டை’யை, 'வீணாகப் போகுதே’ என்று எடுத்துத் தலையில்
தடவிக்கொள்வதும் ஆபத்தானது. அதனால் மோசமான பின்விளைவுகள் உண்டாகலாம்.
தலையில் பூஞ்சைத் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
எப்போதுமே தலைக்குச் சாதாரணத் தண்ணீரையே ஊற்றலாம். வெந்நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும்.
முடிந்தவரை ஷாம்பூ வகைகளைத் தவிர்த்து, சீயக்காய், அரப்புத்தூள் போட்டுக் குளிக்கவும்.
Post a Comment