சப்பாத்தி
என்றால் குருமா, பூரி என்றால் உருளைக்கிழங்கு மசாலா என்றே அறிந்திருப்பவர்
களுக்கு, பெரிய ஹோட்டலுக்கு செல்லும்போது, மெனு கார்டில் இருக்கும்
டிஷ்களின்

பெயர்களைப்
பார்த்து, 'இத்தனை அயிட்டங்களில் எதைத் தேர்ந்தெடுப்பது?’, 'இத்தனையும்
எப்படி செய்வார்கள்?’ என்ற மலைப்பும் ஆச்சர்யமும் ஏற்படும். ஆனால்,
''இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. உங்கள் வீட்டிலும் இவற்றை செய்து
பரிமாறலாம். நான் சொல்லித் தருகிறேன் வாருங்கள்'' அன்புடன் என்று
அழைப்புவிடுக்கிறார் சமையல்கலை நிபுணர்
ஜெயஷ்ரி
சுரேஷ். இவர், 'ஜெயஷ்ரிஸ் கிச்சன்’ என்ற பெயரில் ஒரு வலைதளம்
வைத்திருப்பவர். இந்த இணைப்பிதழில் இவர், சப்பாத்தி, நாண், பரோட்டா,
பூரிக்கு தொட்டுக்கொள்ள 30 வகை தால், கிரேவி, சப்ஜி வகைகளை உங்களுக்காக
தயாரித்து வழங்குகிறார்.
''கொஞ்சம் ஆர்வமும், கவனமும் இருந்தால் போதும்... இந்த
டிஷ்களை எல்லாம் சிறப்பாக செய்து பரிமாறி... வீட்டிலும், உறவு, நட்பு
வட்டத்திலும் கிச்சன் குயினாக வலம் வரலாம்'' என்று உற்சாகப்படுத்துகிறார்
ஜெயஷ்ரி.
பட்டாணி க்ரீன் மசாலா
தேவையானவை: பச்சைப்
பட்டாணி - ஒரு கப், வெங்காயம் - 2, தக்காளி - ஒன்று, கொத்தமல்லி - ஒரு
சிறிய கட்டு, பச்சை மிளகாய் - 3, முந்திரிப் பருப்பு - 5, தயிர் - ஒரு
டேபிள்ஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - 2 சிட்டிகை, பூண்டு -
2 பல், பால் - அரை கப், கரம்மசாலாத்தூள் - 2 சிட்டிகை, எண்ணெய் - 2 டேபிள்
ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சைப்
பட்டாணியை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி,
பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை சிறிதளவு எண்ணெய் விட்டு
வதக்கி அரைத்துக்கொள்ளவும். முந்திரிப் பருப்பை 10 நிமிடம் தண்ணீரில்
ஊறவைத்து தயிருடன் சேர்த்து அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் விட்டு,
அரைத்த விழுதுகளை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து, கரம்மசாலாத்தூள் சேர்த்து
வதக்கி, பால் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீரும் சேர்க்கவும். இதில் வெந்த
பட்டாணி, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கஸ¨ரி மேத்தி சேர்த்து,
சூடாகப் பரி மாறவும்.
நவரத்ன குருமா
தேவையானவை: மிக்ஸ்ட்
காய்கறிகள் (நறுக்கிய காலிஃப்ளவர், கேரட், பீன்ஸ் மற்றும் பச்சைப்
பட்டாணி) - ஒன்றரை கப், முந்திரிப் பருப்பு - 15, உலர் திராட்சை - 7,
தக்காளி, வெங்காயம் - தலா 2, குடமிளகாய் - ஒன்று, பூண்டு - 3 பல், பனீர்
க்யூப்ஸ் - 7, தனியாத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், ஃப்ரெஷ்
க்ரீம் - 3 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ - 2 சிட்டிகை, அன்னாசிப்பழத்
துண்டுகள் (விரும்பினால்) - ஒரு டேபிள்ஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த
வெந்தயக்கீரை) - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு -
தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளை
(அன்னாசி பழத் தையும் சேர்க்கலாம்) சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்துக்
கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண் ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம்,
பூண்டு மற்றும் பாதியளவு முந்திரியை வதக்கி, தக்காளியுடன் சேர்த்து
அரைக்கவும். மீதம் உள்ள முந்திரியையும், உலர் திராட்சையையும் எண்ணெயில்
வறுத்து, நறுக்கிய குடமிளகாய் மற்றும் பனீர் சேர்த்து சிறிது நேரம் வதக்க
வும். இதனுடன் வெந்த காய்கறிகளை சேர்த்து வதக்கி, அரைத்து வைத்த மசாலாவை
சேர்க்கவும். பிறகு மிளகாய்த்தூள், தனியாத் தூள், சீரகத்தூள்,
கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். சிறிதளவு தண்ணீரும்
சேர்க்கவும். இதில் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்கு கிளறி, கஸ¨ரி மேத்தி,
குங்குமப்பூ சேர்த்து, 2 நிமிடத்துக்குப் பிறகு அடுப்பை அணைக்கவும். நவரத்ன
குருமா ரெடி!
பேபி கார்ன் மசாலா
தேவையானவை:
பேபி கார்ன் - 15, வெங்காயம் - 2, குடமிளகாய் - ஒன்று, தக்காளி - 2
(பெரியது), முந்திரிப் பருப்பு - 5, மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா அரை
டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த
வெந்தயக்கீரை) - கால் டீஸ்பூன், தக்காளி சாஸ் - கால் டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு சிட்டிகை, பால் - அரை கப்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பேபி
கார்னை பெரிய துண்டுகளாக நறுக்கி, மஞ்சள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
நறுக்கிய வெங்காயம், தக்காளி, மற்றும் பாதி குடமிளகாயை எண்ணெயில்
வதக்கி... மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத் தூள், கஸ¨ரி மேத்தி, தக்காளி
சாஸ், கரம்மசாலாத்தூள், உப்பு, முந்திரிப் பருப்பு
சேர்த்து அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து,
அரைத்த மசாலாவை சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, பால் சேர்த்து, வெந்த பேபி
கார்னை சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, 2 நிமிடம்
கொதிக்கவிடவும். மீதம் உள்ள பாதி குடமிளகாயை துண்டுகளாக நறுக்கிச்
சேர்த்துக் கிளறவும். சூடாகப் பரிமாறவும்.
பனீர் கோலாபுரி
தேவையானவை:
பனீர் க்யூப்ஸ் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2 (விழுதாக
அரைக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், சீரகம் - கால்
டீஸ்பூன், கொப்பரைத் துண்டுகள் - 4 டீஸ்பூன், மிளகு - 5, சோம்பு - அரை
டீஸ்பூன், வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய் - ஒன்று, கிராம்பு - 2,
முந்திரிப் பருப்பு - 4, மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் (தேவைபட்டால்) - சிறிதளவு, தனியா - அரை டீஸ்பூன், எண்ணெய் -
ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும்
கடாயில் வெள்ளை எள், கொப்பரை, சோம்பு, மிளகு, தனியா, ஏலக்காய், கிராம்பு,
முந்திரிப் பருப்பு சேர்த்து வறுத்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி - பூண்டு விழுது, பொடியாக
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அரைத்து வைத்த மசாலா மற்றும்
அரைத்த தக்காளியை இதில் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும்.
பிறகு, மிளகாய்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து, பனீர் துண்டுகளையும்
சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, (தேவைப்பட்டால்)
கரம்மசாலாத்தூள் சேர்த்து, 5 நிமிடம் கொதித்தவுடன் இறக்கி, கொத்தமல்லி தூவி
பரிமாறவும்.
சோலே மசாலா
தேவையானவை: வெள்ளைக்
கொண்டைக்கடலை - அரை கப், டீ பேக் (tமீணீ தீணீரீ) - ஒன்று, ஏலக்காய் - 2,
வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, சீரகம் - கால் டீஸ்பூன், உலர்ந்த மாதுளை
விதைப் பொடி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - கால் டீஸ்பூன்,
ஏலக்காய் - ஒன்று, தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள்,
மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான
அளவு.
செய்முறை: கொண்டைக்கடலையை
8 மணி நேரம் ஊறவைத்து, டீ பேக் மற்றும் ஏலக்காய் சேர்த்து குக்கரில் 4
விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். டீ பேக் மற்றும் ஏலக்காயை தூக்கி
போட்டுவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய
வெங்காயம் சேர்த்து வதக்கி... உப்பு, தனியாத்தூள், சீரகத்தூள்,
மிளகாய்த்தூள், மற்றும் கரம்மசாலாத்தூள் சேர்க்கவும். தக்காளியை அரைத்து
சேர்த்து, உலர்ந்த மாதுளை பொடியை சேர்க்கவும். பிறகு, வெந்த கொண்டைக்கடலையை
சேர்க்கவும். கொஞ்சமாக தண்ணீர் விட்டு, 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கிப்
பரிமாறவும்.
பப்பட் சப்ஜி
தேவையானவை: மிளகு
அப்பளம் - 2, தயிர் - அரை கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள்,
தனியாத்தூள் - தலா கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் -
சிறிதளவு, கரம்மசாலாத்தூள் - 2 சிட்டிகை, மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு
பாத்திரத்தில் தயிரைச் சேர்த்து... மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,
தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக
கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, தயிர் கலவையை
சேர்க்கவும். அடுப்பை மெல்லிய தீயில் வைத்து 5 நிமிடம் கிளறவும். நான்காக
நறுக்கிய மிளகு அப்பளத்தை சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது
தண்ணீர் சேர்த்து, 3 நிமிடம் மெல்லிய தீயில் வைத்து அடுப்பை அணைக்
கவும். கொத்தமல்லி தூவி பரிமாற வும்.
வெள்ளரிக்காய் மசாலா
தேவையானவை: வெள்ளரிக்காய்
- ஒன்று, சின்ன வெங்காயம் - 5, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், தனியா - அரை
டீஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - ஒன்று, பூண்டு - 3
பல், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, கடுகு, கறிவேப்பிலை -
சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெள்ளரிக்காயைத்
தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு
எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம்,
பூண்டு மற்றும் பட்டை சேர்த்து நன்கு வதக்கி, விழுதாக அரைக்கவும். மீதமுள்ள
எண்ணெயைக் கடாயில் விட்டு... கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய
வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்து வைத்த விழுதை சேர்த்து
மேலும் வதக்கி, நறுக்கிய வெள்ளரிக்காயைச் சேர்த்து, தேவையான தண்ணீர்
ஊற்றி, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.
முட்டைகோஸ் கோஃப்தா கிரேவி
தேவையானவை:
முட்டைகோஸ் (பொடியாக நறுக்கியது) - 2 கப், பனீர் துருவல் - ஒரு கப், கடலை
மாவு - 3 டேபிள்ஸ்பூன், தக்காளி - 2 (விழுதாக அரைக்கவும்), மிளகாய்த்தூள் -
அரை டீஸ்பூன் (கோஃப்தாவுக்கு), கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், வெங்கா
யம் - 2, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் (கிரேவிக்கு), தக்காளி கெச்சப் -
ஒரு டீஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - 2 சிட்டிகை, பூண்டு -
3 பல், பால் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: முட்டைகோஸை
நறுக்கி, உப்பு சேர்த்து 10 நிமிடம் வைத்திருந்து, நன்கு பிழிந்து தண்ணீரை
எடுக்கவும். பனீர், மிளகாய்த்தூள், கடலை மாவு மற்றும் அரை டீஸ்பூன்
கரம்மசாலாத்தூள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, முட்டைகோஸ்உடன் கலந்து சிறு
உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதுதான் கோஃப்தா.
கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து... நறுக்கிய
வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளி கெச்சப், மிளகாய்த்தூள், கஸ¨ரி
மேத்தி சேர்த்து நன்கு அரைக்கவும். கடாயில் தக்காளி விழுது, அரைத்து
வைத்த வெங்காயம் - பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பால்
சேர்க்கவும். அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடம்
கொதிக்கவிட்டு இறக்கிவிடவும். இதுதான் கிரேவி. பொரித்த கோஃப்தா நன்கு
ஆறியதும், கிரேவியில் சேர்த்து பரிமாறவும்.
சன்னா பாலக்
தேவையானவை:
வெள்ளை கொண்டைக்கடலை - அரை கப், பாலக்கீரை - ஒரு சிறிய கட்டு, வெங்காயம் -
2, தக்காளி - ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய்
- ஒன்று, மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா
கால் டீஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - ஒரு சிட்டிகை,
சர்க்கரை, சீரகம் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் -
ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கொண்டைக்
கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, குக்கரில் 5 விசில் வரும் வரை
வேகவைத்துக் கொள்ளவும். பாலக்கீரையை நன்கு சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீர்
மற்றும் சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டு
எடுக்கவும். பச்சை மிளகாயுடன் கீரையைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி - பூண்டு விழுது, பொடியாக
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். தக்காளியை விழுதாக அரைத்து
சேர்த்து... உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் மற்றும்
கரம்மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, அரைத்த
கீரை விழுதை சேர்க்கவும். இதனுடன் வெந்த கொண்டைக்கடலையை சேர்க்கவும்
(தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம்). இதனை 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கஸ¨ரி
மேத்தி சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.
காலிஃப்ளவர் மகானி
தேவையானவை: காலிஃப்ளவர்
- ஒரு சிறிய பூ, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, முந்திரிப் பருப்பு - 5,
மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா அரை
டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காலிஃப்ளவரை
வெந்நீரில் 2 நிமிடம் போட்டு தண்ணீரை வடித்துக்கொள்ளவும். வெங்காயம்,
தக்காளி மற்றும் முந்திரிப் பருப்பை பச்சையாக அரைத்துக்கொள்ளவும். கடாயில்
எண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். மிளகாய்த்தூள்,
தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை
சேர்க்கவும். பிறகு, வெந்த காலிஃப்ளவரை சேர்க்கவும். தேவையான தண்ணீர்
சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.
முள்ளங்கி மசாலா
தேவையானவை: முள்ளங்கி
- 2 (சிறியது), வெங்காயம் - ஒன்று, தேங்காய்த் துருவல் - ஒரு
டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று,
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன், கடுகு,
சீரகம் - சிறிதளவு, பட்டை - ஒரு சிறிய துண்டு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு
- தேவைக்கேற்ப.
செய்முறை: கடாயில்
எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பட்டை தாளித்து, நறுக்கிய வெங்கா யத்தை
சேர்த்து வதக்கவும். நறுக்கிய முள்ளங்கியையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கி,
கொஞ்சம் தண் ணீர் விட்டு வேகவைக்கவும். தேங் காய்த் துருவல், இஞ்சி, கொத்த
மல்லி, பொட்டுக்கடலை மற்றும் பச்சை மிளகாயை அரைத்து, இந்த விழுதை
முள்ளங்கியுடன் சேர்த்து வதக்கவும் (தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும்).
பிறகு, உப்பு சேர்த்து, 2 நிமிடம் கொதித்த வுடன் அடுப்பை அணைக்கவும்.
முள்ளங்கி மசாலா தயார்!
ஷாஹி பொட்டேட்டோ குருமா
தேவையானவை: உருளைக்கிழங்கு
- 2, காய்ந்த மிளகாய் - ஒன்று, முந்திரிப் பருப்பு - 5, ஏலக்காய் -
ஒன்று, பட்டை - ஒரு சிறிய துண்டு, சோம்பு - கால் டீஸ்பூன், கல்பாசி (பெரிய
மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - 3, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 2
பல், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, கெட்டித் தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில்
எண்ணெய் விட்டு, நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கவும்.
தேங்காய், சோம்பு, பட்டை, இஞ்சி, பூண்டு, ஏலக்காய், கல்பாசி, காய்ந்த
மிளகாய், முந்திரிப்பருப்பு சேர்த்து நன்கு அரைத்து குக்கரில் சேர்த்து,
உப்பு சேர்த்து வதக்கி... தயிர் சேர்க்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி,
பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். தேவையான தண்ணீர் விட்டு, குக்கரை
மூடி, 3 விசில் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
கேரட் - காளான் சப்ஜி
தேவையானவை: நறுக்கிய
கேரட், குடமிளகாய், காளான், பேபி கார்ன் மற்றும் பச்சைப் பட்டாணி,
(எல்லாம் சேர்த்து) - ஒரு கப், தனியா - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் -
ஒன்று, ஏலக்காய் - 2, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, தக்காளி ப்யூரி
(ஜிஷீணீனீணீtஷீ ஜீuக்ஷீமீமீ - டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) -
கால் கப், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத் தூள், கரம்மசாலாத்தூள் - தலா
கால் டீஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - கால் டீஸ்பூன்,
ஃப்ரெஷ் க்ரீம் - கால் கப், இஞ்சி - பூண்டு விழுது - அரை
டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளை
அரை வேக்காடு பதத்தில் வேக வைத்துக் கொள்ளவும். தனியா, மிளகாய் மற்றும்
ஏலக்காயை வெறும் கடாயில் வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். கடாயில் எண்ணெய்
விட்டு, இஞ்சி - பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும்
தக்காளியைச் சேர்த்து வதக்கி... தக்காளி ப்யூரியை சேர்க்கவும். இதனுடன்
அரைத்து வைத்த பொடி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, சீரகத்தூள், கரம்
மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு,
காய்கறிகளைச் சேர்த்துக் கிளறி, சிறிதளவு தண்ணீர் விட்டு, ஃப்ரெஷ் க்ரீம்
சேர்த்து, ஒரு கொதி விட்டு, கஸ¨ரி மேத்தி சேர்த்து இறக்கவும்.
தக்காளி ப்யூரிக்குப் பதில், ஒரு பெரிய தக்காளியை விழுதாக அரைத்துச் சேர்த்தும் தயாரிக்கலாம்.
மசூர் - கேரட் தால்
தேவையானவை:
மசூர் தால் - கால் கப், கேரட், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பூண்டு - 2
பல், கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, பச்சை
மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் அல்லது நெய் - அரை
டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மசூர்
தாலுடன் நறுக்கிய வெங்காயம், கேரட் தக்காளி, மற்றும் பூண்டு சேர்த்து...
உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு குக்கரில் வைத்து 3
அல்லது 4 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கி, பிறகு நன்கு
மசித்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் (அ) நெய் சேர்த்து கடுகு,
கறிவேப்பில்லை, நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து, வெந்த பருப்பை சேர்த்து,
கொதி வந்தவுடன் கொத்தமல்லி சேர்த்து இறக்கிவிடவும். பரிமாறும் முன்
எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்ளலாம்.
பேபி கார்ன் - மேத்தி கிரேவி
தேவையானவை: பேபி
கார்ன் - 10, வெந்தயக்கீரை - கால் கப், முந்திரிப் பருப்பு - 5,
வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, சர்க்கரை அல்லது தேன் - ஒரு டீஸ்பூன்,
ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், ஏலக்காய் - ஒன்று, எண்ணெய் - ஒரு
டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பேபி
கார்னை பெரிய துண்டுகளாக நறுக்கி குக்கரில் 3 விசில் வரும் வரை
வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி மற்றும் முந்திரிப் பருப்பை
சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, ஆறியவுடன் அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு ஏலக்காய் சேர்த்து, அரைத்த விழுதைப் போட்டு நன்கு
வதக்கிக்கொள்ளவும். இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, கரம்மசாலாத்தூள்
சேர்க்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெந்தயகீரை சேர்த்து வதக்கவும்.
இதில் வெந்த பேபி கார்ன், சர்க்கரை (அ) தேன் சேர்க்கவும். பின்னர் தேவையான
தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்கு
கிளறிவிட்டு இறக்கவும்.
புதினா - பனீர் கிரேவி
தேவையானவை: பனீர்
- அரை கப், புதினா இலை - ஒரு கைப்பிடியளவு, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை -
சிறிதளவு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று, சர்க்கரை - அரை
டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பனீரை
சிறிதளவு எண்ணெயில் பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். புதினா, கொத்தமல்லி,
கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் தக்காளியுடன் சர்க்கரை
சேர்த்து நன்கு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் விட்டு, அரைத்த மசாலா
மற்றும் உப்பு போட்டு வதக்கி, பின்னர் பனீர் சேர்த்து, தேவைப்பட்டால்
சிறிதளவு தண்ணீர் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
தக்காளி - உருளைக்கிழங்கு கிரேவி
தேவையானவை:
உருளைக்கிழங்கு - 2, தக்காளி - 2, சீரகம் - கால் டீஸ்பூன், சீரகத்தூள்,
மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில்
எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி
சேர்த்து வதக்கவும். அதனுடன் சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள்,
கரம்மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் மற்றும் உப்பு
சேர்த்து, குக்கரை மூடி, 3 அல்லது 4 விசில் வந்ததும் இறக்கவும்.
கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
சோயா சங்க்ஸ் வின்டலோ
தேவையானவை: சோயா
சங்க்ஸ் - அரை கப், வெங்காயம் - ஒன்று, தக்காளி ப்யூரி (Toamato
puree- டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 2 டேபிள்ஸ்பூன், தனியா -
கால் டீஸ்பூன், மிளகு - 5, காய்ந்த மிள காய் - ஒன்று, பட்டை - ஒரு சிறிய
துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று, பூண்டு - 2 பல், சீரகம் - கால்
டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - சிறிதளவு, பால் - ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - சிறி தளவு.
செய்முறை:
தண்ணீரில் பால், சோயா சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு,
தண்ணீரைப் பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விடாமல்
பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், பூண்டு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு
சேர்த்து வறுத்து தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்
விட்டு பொடியாக நறுக்கிய வெங்கா யத்தை வதக்கி, அரைத்த விழுதை சேர்த்து
மேலும் வதக்கி, உப்பு மற்றும் தக்காளி ப்யூரி சேர்க்கவும். இத னுடன் சோயா
சங்க்ஸ் சேர்க்கவும். சிறிது தண்ணீர் விட்டு கரம்மசாலா, கொத்தமல்லி
சேர்த்துக் கிளறி இறக் கவும்.
குறிப்பு: தக்காளி ப்யூரிக்குப் பதில் ஒரு தக்காளியை விழுதாக அரைத்துச் சேர்த்தும் தயாரிக்கலாம்.
தால் பஞ்சரத்தன்
தேவையானவை:
துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு மற்றும் மசூர் தால் - தலா 3
டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - கால் கப், இஞ்சி - பூண்டு விழுது - அரை
டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று,
மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள் -
தலா கால் டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், கஸ¨ரி மேத்தி
(உலர்ந்த வெந்தயக்கீரை) - அரை டீஸ்பூன், நெய், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: எல்லா
பருப்புகளையும் ஒன்றாக சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு, மஞ்சள்தூள்
சேர்த்து, குக்கரில் வைத்து, 4 விசில் வரும் வரை வேகவைக்கவும். கடாயில்
நெய் மற்றும் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, இஞ்சி - பூண்டு விழுது
சேர்த்து வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி
சேர்த்து நன்கு வதக்கி... தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, சீரகத்தூள்,
கரம்மசாலாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, வெந்த பருப்பை
சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து... இதனுடன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து,
கொதி வந்தவுடன் கஸ¨ரி மேத்தி சேர்த்து, ஒரு நிமிடத்துக்குப் பிறகு
கொத்தமல்லி தூவி இறக்கவும். தால் பஞ்சரத்தன் ரெடி!
பஞ்சாபி தால் ஃப்ரை
தேவையானவை:
பாசிப்பருப்பு - அரை கப், சீரகம் - கால் டீஸ்பூன், வெங்காயம், தக்காளி -
தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள்,
மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - அரை
டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான
அளவு.
செய்முறை: குக்கரில்
எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி,
பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து மேலும் வதக்கி...
சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். இதனுடன்
பாசிப்பருப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி, 4 விசில்
வந்ததும் இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
பிண்டி மிர்ச் மசாலா
தேவையானவை:
வெண்டைக்காய் - 15, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, தேங்காய்த் துருவல் -
ஒரு டேபிள்ஸ்பூன் (விழுதாக அரைக்கவும்), குடமிளகாய் - பாதி அளவு,
தனியாத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள்,
கரம்மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு, கொத்தமல்லி -
தேவையான அளவு.
செய்முறை: வெண்டைக்காயை
பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். நான்-ஸ்டிக் கடாயில் எண்ணெய்
விட்டு, வெண்டைக்காயை உப்பு சேர்த்து வதக்கி வைக்கவும். கடாயில் எண்ணெயை
சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு
வதக்கவும். இதனுடன் தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள்,
மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி... அரைத்த தேங்காய்
விழுதை சேர்க்கவும். பிறகு, நறுக்கிய குடமிளகாய் மற்றும் வதக்கி வைத்த
வெண்டைக்காய் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, ஒரு கொதி வந்தவுடன்
கொத்தமல்லி தூவி இறக்கவும்.
காளான் - பட்டாணி குருமா
தேவையானவை: வெங்காயம்,
தக்காளி - தலா ஒன்று, காளான் - 8, பச்சைப் பட்டாணி - கால் கப், ஏலக்காய் -
2, மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் -
ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, கொத்தமல்லி -
தேவையான அளவு,
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை
நன்கு வதக்கவும். நன்கு ஆறியவுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு ஏலக்காய் தாளித்து, காளான் மற்றும் பச்சைப்
பட்டாணியை சேர்த்து... உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து நன்கு
வதக்கவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்). பிறகு,
விழுதை சேர்த்து நன்கு கிளறிவிடவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர்
சேர்க்கவும். 2 கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். கொத்தமல்லி தூவி
பரிமாறவும்.
காலா சன்னா மசாலா
தேவையானவை:
கறுப்பு கொண்டைக்கடலை - அரை கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, இஞ்சி -
ஒரு சிறிய துண்டு, பூண்டு - 2 பல், மிளகாய்த்தூள், தனியாத்தூள்,
சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்,
(விருப்பப்பட்டால்) எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொண்டைக்கடலையை
8 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி, எண்ணெய் விட்டு நன்கு வதக்கி
இஞ்சி, பூண்டு சேர்த்து அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, அரைத்த
விழுதை சேர்த்து வதக்கி... மிளகாய்த் தூள், தனியாத்தூள், சீரகத்தூள்,
கரம்மசாலாத் தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, வெந்த
கொண்டைக்கடலையை சேர்த்து, கொஞ்சம் தண் ணீர் சேர்த்து, குக்கரை மூடி, ஒரு
விசில் வந்ததும் இறக்கவும். தேவைப்பட்டால், பரிமாறும்போது எலுமிச்சைச் சாறு
சேர்க்கலாம்.
பிண்டி - பாதாம் - டொமேட்டோ கிரேவி
தேவையானவை: வெண்டைக்
காய் - 15, பாதாம் - 8, வெங்காயம் - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், சோம்புத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா கால்
டீஸ்பூன், தக்காளி - 2, கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - அரை
டீஸ்பூன், ஏலக்காய் - ஒன்று, ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெண்டைக்காயை
பெரிய துண்டுகளாக நறுக்கவும். பாதாமை சுடுநீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு வெண்டக்காயை நன்கு வதக்கி வைக்கவும். ஏலக்காய்,
தோல் உரித்த பாதாம், வெங்காயம், சோம்புத்தூள் மற்றும் கஸ¨ரி மேத்தியை
சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். தக்காளியை தனியாக அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த பாதாம் மசாலா சேர்த்து நன்கு வதக்கி,
தக்காளி விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக்
கிளறவும். பிறகு, வதக்கி வைத்த வெண்டைக்காயை சேர்க்கவும். தேவைப்பட்டால்
சிறிது தண் ணீர் சேர்த்து, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்
கவும்.
லக்னாவி கேப்சிகம் மசாலா
தேவையானவை: வெங்காயம்,
தக்காளி - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், நறுக்கிய குடமிளகாய்
(பச்சை, சிவப்பு, மஞ்சள் - 3 நிறங்களிலும்) - சிறிதளவு, எண்ணெய், உப்பு -
தேவையான அளவு.
வறுத்து அரைக்க: சீரகம் - கால் டீஸ்பூன், தனியா - அரை
டீஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, ஏலக்காய் - ஒன்று, முந்திரிப் பருப்பு
- 8.
செய்முறை: கடாயில்
எண்ணெய் விட்டு வெங்காயத்தை நன்கு வதக்கிக் கொள்ளவும். வறுத்து அரைக்க
வேண்டிய பொருட்களை வறுத்து... வதக்கிய வெங்கா யம், தக்காளி மற்றும் இஞ்சி -
பூண்டு விழுதுசேர்த்து நன் றாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெயைச்
சூடாக்கி, அரைத்த மசாலாவை போட்டு வதக்கி, மிளகாய்த் தூள், கரம்மசாலாத்தூள்,
உப்பு சேர்த்து, நறுக்கிய குடமிளகாய் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, 5
நிமிடத்துக்குப் பிறகு அடுப்பை அணைத்துவிடவும்.
வெஜிடபிள் ஜால்ஃப்ரசி
தேவையானவை: கேரட்,
குடமிளகாய், காளான், பச்சைப் பட்டாணி, பேபி கார்ன் (எல்லாம் சேர்த்து) -
ஒரு கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, முந்திரிப் பருப்பு - 6, ஃப்ரெஷ்
க்ரீம் அல்லது திக்கான பால் - கால் கப், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள் -
தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குடமிளகாயை
நீளவாக்கில் நறுக்கி தனியே வைக்கவும். காளான் உள்ளிட்ட காய்கறிகளை
நீளவாக்கில் நறுக்கி, சிறிதளவு தண்ணீர் விட்டு அரை வேக்காடு பதத்தில்
வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம்,
தக்காளியை நன்கு வதக்கி அரைத்துக்கொள்ளவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில்
விட்டு, அரைத்த விழுதை சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், கரம்மசாலாத் தூள்
சேர்க்கவும்.
முந்திரி பருப்பை நன்கு அரைத்து இதில் சேர்த்து
கலக்கி... வெந்த காய்கறிகளை சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்த்து, நறுக்கிய
குடமிளகாயை சேர்த்துக் கிளறி... சிறிதளவு தண் ணீர் சேர்க்கவும் கடைசியாக,
ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, ஒரு கொதி வந்த வுடன் இறக்கி, சப்பாத்தியுடன்
பரிமாற வும்.
பாசிப்பருப்பு தடுக்கா
தேவையானவை: பாசிப்பாருப்பு
- அரை கப், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று, பூண்டு - 8
பல், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை,
கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், இஞ்சி - சிறிய
துண்டு, நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பாசிப்பருப்புடன் நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து, குக்கரில்
போட்டு 4 விசில் வரும் வரை வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் மற்றும் நெய்
விட்டு... கடுகு, சீரகம் கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து...
பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். இதனுடன்
மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும். பிறகு, வெந்த பருப்பைச் சேர்த்து,
தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 2 கொதி விட்டு இறக்கவும்.
கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
செட்டிநாடு தக்காளி குருமா
தேவையானவை: வெங்காயம்
- ஒன்று, தக்காளி - 3, பிரிஞ்சி இலை - ஒன்று, கல்பாசி (பெரிய மளிகைக்
கடைகளில் கிடைக்கும்) - சிறிதளவு, சீரகம் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை -
சிறிதளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
அரைக்க: தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை - அரை டேபிள்ஸ்பூன், சோம்பு - கால் டீஸ்பூன்.
செய்முறை: அரைக்கக்
கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய்
விட்டு, சூடானவுடன் சீரகம், பிரிஞ்சி இலை, கல்பாசி, கறிவேப்பிலை
ஆகியவற்றைத் தாளிக்கவும். பொடி யாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து
வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து மேலும் வதக்கி, மிளகாய்த்துள், உப்பு
சேர்க்கவும். பிறகு, அரைத்த மசாலாவை சேர்த்து 2 கொதி வந்தவுடன் அடுப்பை
அணைக்கவும். சுவையான செட்டிநாடு தக்காளி குருமா தயார்.
டோஃபு தவா மசாலா
தேவையானவை: டோஃபு க்யூப்ஸ்
(சோயா பனீர்) - ஒரு கப், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - ஒரு
டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட் டிகை,
சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், ஓமம், சீரகம் - தலா கால் டீஸ்பூன்,
வெங்காயம் - 2, பூண்டு - 2 பல், தனியாத்தூள் - அரை டீஸ்பூன், தக்காளி
ஃப்யூரி (Toamato puree - டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - அரை
கப், ஃப்ரெஷ் க்ரீம் - 3 டேபிள் ஸ்பூன், கரம்மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி - சிறித ளவு, உப்பு - தேவையான
அளவு.

செய்முறை: டோஃபுவுடன் மஞ்சள்தூள்,
கஸ¨ரி மேத்தி மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து,
நன்கு கலந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். நான்-ஸ்டிக் கடாயில் சிறிது
எண்ணெய் விட்டு டோஃபு கலவையை பொன்னிறமாக வதக்கி தனியாக வைக்கவும். கடாயில்
எண்ணெய் விட்டு ஓமம், சீரகம் தாளித்து, பூண்டை தட்டிப் போட்டு, பொடியாக
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி... தனியாத்தூள், தக்காளி ப்யூரி
சேர்க்கவும். பின்னர் வதக்கிய டோஃபு கலவையை போட்டு, கரம் மசாலாத்தூள்,
சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். கடைசியாக ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, ஒரு கொதி
விட்டு இறக்கி வைக்கவும். டோஃபு தவா மசாலா தயார்.
தக்காளி ஃப்யூரிக்கு பதில் 2 தக்காளியை விழுதாக அரைத்துச் சேர்த்தும் தயாரிக்கலாம்.
ஸ்வீட் கார்ன் மக்கானா
தேவையானவை: ஸ்வீட்
கார்ன் - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், வெங்காயம்,
தக்காளி - தலா ஒன்று, மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் -
அரை டீஸ்பூன், தயிர் - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் -
ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
ஸ்வீட் கார்னை குக்கரில் வேகவைக்கவும். வெங்காயம், தக்காளியை
அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, இஞ்சி - பூண்டு விழுது,
அரைத்த வெங்காயம் - தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் உப்பு,
மிளகாய்த்தூள், தயிர், கரம்மசாலாத்தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
பிறகு, வெந்த ஸ்வீட் கார்ன் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர்
சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். கொத்தமல்லி தூவி இறக்கவும்.
Post a Comment