குட்டை, கிணறு, டிஜிட்டல் பம்ப்செட்... வியக்க வைக்கும் மழைநீர் அறுவடை!
'மழை இல்லை... மழை இல்லை...' என்று
வருத்தப்படாத விவசாயியே இருக்க முடியாது. விவசாயிகள் மட்டுமல்ல... அனைவருமே
மழைக்காக ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், 'உண்மையில் பெய்யும்
மழையையெல்லாம் முறையாகப் பயன்படுத்துகிறோமா?’ என்ற கேள்வி எழும்போது
'இல்லை’ என்ற பதில்தான் நிதர்சனம். ஆனால், பெய்யும் மழையை முறையாகச்
சேமித்துப் பயன்படுத்தும் விவசாயிகள், வறட்சியைக் கண்டு அஞ்சுவதேயில்லை.
இத்தகையோரில் ஒருவர், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள
கட்டியாம்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் ராஜகோபாலன்!
செங்கல்பட்டு-உத்திரமேரூர் பிரதான சாலையில், 22 கிலோ
மீட்டர் தூரத்தில் இருக்கிறது, கட்டியாம்பந்தல் கூட்டுரோடு. இங்கிருந்து
இடதுபுறம் திரும்பி, வேடந்தாங்கல் நோக்கி 4 கிலோ மீட்டர் பயணித்தால்
வருகிறது, கண்ணன் ராஜகோபாலனின் பண்ணை. 'ஐயர் தோட்டம்' என்று கேட்டால்
சுலபமாக வழி சொல்லி விடுகிறார்கள். உள்ளே நுழைந்தால்... தென்னை மரங்களும்,
மாஞ்செடிகளும், வழியின் ஓரத்தில் இருக்கும் அரளிச் செடிகளும் நம்மை
வரவேற்கின்றன.
தோட்டத்தைச் சுற்றிக்காட்டியபடியே பேசிய கண்ணன்
ராஜகோபாலன், ''எங்க தாத்தா, புதுக்கோட்டை சமஸ்தானத்துல திவான் பதவியில்
இருந்தவரு. அங்கேயே நிலமெல்லாம் இருந்துச்சு. ஆனா, அதையெல்லாம் விட்டுட்டு,
சின்ன வயசுலயே வியாபாரத்துக்காக இடம் பெயர்ந்துட்டோம். 40 வருஷமா
வியாபாரம் செஞ்சுட்டிருந்தேன். இயற்கை மேல இருந்த ஆர்வம், என்னை
விவசாயத்துக்கு இழுத்துடிச்சு. 92-ம் வருஷம் இங்க நிலம் வாங்கினேன்.
மொத்தம் 25 ஏக்கர் நிலம். வெளுப்பா களர் நிலமாவும், தண்ணி வசதி
இல்லாமலும்தான் இருந்துச்சு. மா, தென்னை வெச்சேன். தென்னை ஓரளவுக்கு
வளந்துச்சி. மாமரங்கள் நிறைய பட்டுப்போச்சி. மீதி நிலத்துல வேர்க்கடலை,
தர்பூசணி, நெல்னு செஞ்சுட்டிருந்தேன். ஆறு வருஷத்துக்கு முன்னதான், ஆட்கள
வெச்சு நிலத்தை நல்லா வளப்படுத்தி, மேற்கொண்டு விவசாயத்தைத்
தீவிரப்படுத்தியிருக்கேன்'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே இடையில்
புகுந்த இவருடைய மனைவி, சத்யபாமா,
''15 ஏக்கர்ல... 1,000 மாங்கன்னுகள், 15 மாமரங்கள், 350
தென்னை மரங்கள், 150 சப்போட்டா, 40 எலுமிச்சை, 10 கொய்யா, 10 தேக்கு
எல்லாம் இருக்கு. இதுக்குள்ளயே 50 சென்ட் காய்கறித் தோட்டம், 30 சென்ட்
கறிவாழை இருக்கு. தனியா, 5 ஏக்கர்ல சவுக்கு இருக்கு. மீதி 5 ஏக்கரை ஆடிப்
பட்டத்துல நெல் போடுறதுக்காக சும்மா விட்டிருக்கோம். மா, எலுமிச்சை,
சப்போட்டா செடிகள் வெச்சி, ஒரு வருஷத்துக்கு மேலாகுது. செடிகளுக்கு
சொட்டுநீர்ப் பாசனம்தான்'' என்று தகவல்களைத் தந்தார்.
தொடர்ந்த கண்ணன் ராஜகோபாலன், ''இமாம் பசந்த்,
பங்கனப்பள்ளி, நீலம் ரக மாங்கன்னுகள் இருக்கு. 'ஜுங்குலியானா’ சவுக்கு
ரகம்தான் நட்டிருக்கோம். இதைவெச்சு 5 வருஷம் ஆகுது. காய்கறித் தோட்டத்துல
செடிமுருங்கை, கத்திரி, மிளகாய், பரங்கிக்காய், பாகல், செடி அவரை,
மருதாணினு இருக்கு. பண்ணையில 9 மாடுகள் இருக்கு. இதை வெச்சே பஞ்சகவ்யா
தயாரிச்சு, சொட்டு நீர் மூலமா பாசனத்துல கலந்து கொடுக்கிறோம். மாடுகளோட
கழிவுகளை தொழுவுரமாவும் பயன்படுத்துறோம். பெரும்பாலும் மரப்பயிர்களா
இருக்கறதால, வருமானக் கணக்கெல்லாம் இப்போதைக்குப் பார்க்க முடியாது. அடுத்
தடுத்த வருஷங்கள்லதான் அதைப் பார்க்க முடியும்.
கைகொடுக்கும் குட்டைப் பாசனம்!
இது மணல்சாரி பூமி. இதனால, ஈரம் ரொம்ப நாளைக்கு
தங்காது. அப்பப்ப ஈரப்படுத்திட்டே இருந்தாதான், செடிகள் வளரும். நான்
வாங்குறப்போ ஒரு கிணறு மட்டும்தான் இருந்துச்சு. கூடுதலா ஒரு கிணறு
வெட்டினதோட, 1 குட்டையையும் வெட்டியிருக்கேன். சவுக்கு, நெல் போடுற
வயல்களுக்கு இடையில, 200 அடி நீளம்,
40 அடி அகலம், 4 அடி ஆழத்துக்கு ஒரு பெரியக் குட்டை
எடுத்திருக்கேன். இது, 20 லட்சம் லிட்டர் தண்ணி பிடிக்கும். மழைக்காலத்துல
குட்டை நிரம்பினா, 4 மாசத்துக்கு தண்ணி பிரச்னை இருக்காது. 30 அடி
ஆழத்துக்கு கிணறு தோண்டியிருக்கேன். குட்டை, கிணறுகள்ல இருக்கற தண்ணிய,
பம்ப்செட் மூலமா மொத்த நிலத்துக்கும் பாய்ச்சுறேன். குட்டை எடுக்கறதுக்கு 1
லட்ச ரூபாய் செலவு. கிணத்துக்கு ஏழரை லட்ச ரூபாய் செலவு. ஒரு முறை இந்த
செலவை செய்துட்டா, ஆயுசுக்கும் கவலையில்லை. அதோட டிஜிட்டல் பம்ப்செட் மூலம்
பாசனம் செய்றதால, தண்ணீர் சிக்கனம்கிறது முழுமையா நடக்குது'' என்று சொல்லி
ஆச்சர்யம் கூட்டியவர், ''இதைப்பத்தி எங்க மேனேஜர் கோட்டீஸ்வரன் சொல்வார்''
என்று அவரை அறிமுகப்படுத்தினார்.
டிஜிட்டல் பம்ப்செட்!
''இந்தக் கருவி மூலமா தேவையான அளவு தண்ணியை மட்டும்
பாசனம் செய்யலாம். இந்த பம்ப்செட்ல ஒரு நாளைக்கு அதிகபட்சமா 2 லட்சம்
லிட்டர் அளவுக்கு தண்ணி பாய்ச்சலாம். நாங்க 50 ஆயிரம் லிட்டர்
அளவுக்குத்தான் தண்ணி பாய்ச்சிறோம். எந்த நேரத்துல எவ்ளோ தண்ணி
பாய்ச்சணும்னு செட் பண்ணி வெச்சுக்குற வசதியும் இதுல உண்டு. 14 ஏக்கருக்கு
இந்த முறையில தண்ணி பாய்ச்சுறோம். சொட்டுநீர்க் குழாய் வழியா, 1 செடிக்கு
16 லிட்டர் தண்ணி விட்டா போதும். இந்தத் தண்ணி, 2 மணி நேரத்துல பாயுற
மாதிரி செட் பண்ணிடுவோம். தென்னை மரங்களுக்கு 40 லிட்டர் தண்ணி பாயுற
மாதிரி செட் பண்ணிடுவோம். நிலத்தோட ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வால்வு
இருக்கும். ஒவ்வொரு வால்வுக்கும் ஒரு எண் கொடுத்திருப்பாங்க. எந்த வால்வு
உள்ள பகுதிக்கு தண்ணி பாய்ச்சணுமோ... அந்த வால்வோட எண்ணை டிஜிட்டல் திரையில
டைப் பண்ணணிட்டு, மோட்டாரை இயக்கினா... அந்தப் பகுதிக்கு மட்டும் தேவையான
தண்ணி பாயும். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்னு கரைசல்களையும் ஃபில்டர்ல கலந்து
விடலாம். தண்ணியில் இருக்குற பாசி, பஞ்சகவ்யாவுல இருக்குற குப்பைகளை
வடிகட்டுற வசதியும் இருக்கு'' என்று கோட்டீஸ்வரன் விவரங்கள் சொல்ல....
''ஆன்லைன் வழியாகவும் இந்த மோட்டாரை இயக்கலாம்.
சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள்-குழாய்கள், டிஜிட்டல் மோட்டார் இதையெல்லாம்
பொருத்துறதுக்கு மொத்தம் 10 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் செலவாச்சு.
ஏக்கருக்கு கணக்குப் போட்டா... 75 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு செடிக்கும்,
மரத்துக்கும் அளந்து அளந்து தண்ணி கொடுக்கறதால... தண்ணி விரயம்கிற பேச்சே
இல்ல. தண்ணீர் தட்டுப்பாடுங்கற பிரச்னை இல்லவே இல்லை'' என்று குஷிபொங்கச்
சொன்னார் கண்ணன் ராஜகோபாலன்.
தொடர்புக்கு,
Post a Comment