இந்தியாவும் பாகிஸ்தானும் விடுதலை பெற்று 66 ஆண்டுகள் கடந்த பின்பும், இரண்டு நாடுகளுக்கிடையேயான பகைமை நீடிக்கவே செய்கிறது. இரு நாடுகளும் இப்போது அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளன. தேவைப்பட்டால் இவற்றைப் பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்துகின்றன. இதனால் உலகின் மிகவும் அபாயகரமான பகுதியாக இது உருவாகியுள்ளது. தங்கள் நாட்டுக்குள் பயங்கரவாதம் தூண்டி விடப்படுவதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றன.
காஷ்மீரில் கொரில்லா இயக்கப் பின்னணியில் பாகிஸ்தான் கைவரிசை இருப்பதாக இந்தியா கூறுகிறது. கராச்சியிலும் பஞ்சாபின் சில பகுதிகளில் ஏற்படும் வன்முறைக்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.
1947 இல் இந்தியாவில் 30 கோடி இந்துக்களும் 10 கோடி இசுலாமியர்களும் இருந்தனர். பாரம்பரிய பழக்கங்கள் எதிரும் புதிருமான மத உணர்வுகள், பொருளாதார, ஏற்றத்தாழ்வகள் காலம்காலமாய் இருந்துவரும் முரண்பாடுகள் இசுலாமியர்களைத் தனிநாடு கோர வைத்தது
.
மதம், மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் முரண்பாடுகள் கொண்ட இரு தேசிய இன மக்கள் ஒன்றாக வாழ்வது என்பது நியாயமாக இருக்காது என்பதை உணர்ந்து பெரும்பான்மை இந்தியர்கள் சிறுபான்மையினரான இசுலாமியர்கள் பிரிந்து தனித்து வாழ வகை செய்திருக்கலாம். அதற்கு மாறாக இந்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் உறுதியுடன் எதிர்த்துப் பகைமையை வளர்த்தனர். அதோடு “துணைக்கண்டத்தில் பிரிவினை என்பது மிகவும் புனிதமான வரலாற்றுச்சிறப்பு மிக்க தங்களின் தாயகத்தைச் சீர்குலைத்துவிடும்.'' என்றனர்.
இசுலாமியர் 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டனர் என்பதை இவர்கள் தங்களுக்குச் சாதகமாக மறந்துவிட்டனர். இந்தியாவில் இசுலாமியர்களின் ஆட்சி 13 ஆம் நூற்றாண்டில் (1206) தொடங்கி, ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் காலூன்றும் வரை அதாவது 18 ஆம் நுற்றாண்டுவரை (1850) தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இசுலாமியர்களின் முதல் வழிபாட்டுத் தலமான சேரமன் ஜிம்மா மஜீத் 6 ஆம் நூற்றாண்டில் (629) மலபார் கடற்கரை ஓரத்தில் (கேரளம்) கட்டப்பட்டது.
350 ஆண்டுகள் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் ஒற்றுமையுடன் வாழ்ந்த இந்த இரண்டு மதத்தைச் சார்ந்த மக்கள் தனித்தனியாகப் பிரிந்து போக மனதளவில் விரும்பவில்லை. ஆனால் அவர்கள் வலுக்கட்டாயமாகப் பிரிய நேரிட்டது. இசுலாமியர்கள் இந்தியாவை நேசித்தனர்.
நாடு பிரிவினையின் போது தில்லியிலும், பஞ்சாப்பிலும் கல்கத்தாவிலும் வன்முறை தலைவிரித்தாடியது. இந்துக்கள் இசுலாமியர்களைக் கொன்றனர். இசுலாமியர்கள் இந்துக்களைக் கொன்றனர். இனவாதம் பட்டப்பகலில் நடைபெற்றது. நேருவின் அரசாங்கம் ஸ்தம்பித்து நின்றது. பிரதமர் நேரு மவுண்ட் பேட்டனை மீண்டும் அரசுத் தலைமைப் பொறுப்பேற்று நிலைமையைச் சமாளிக்கக் கோரினார்.
மக்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேறி பாதுகாப்பான அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். ஒரு அகதி முகாமில் ஒரே நேரத்தில் ஒரு கோடியே ஐந்து லட்சம் மக்கள் இருந்தனர் என்பதிலிருந்து வன்முறை எந்த அளவுக்கு இருந்து இருக்கும் என்பதை நாம் ஊகிக்க முடியும். எவ்வளவு பேர் உயிரிழந்தனர் என்பதை எப்போதும் எவராலும் கணக்கிட முடியாது. இருப்பினும் இந்தப் படுகொலையை ஆய்வு செய்த இந்திய நீதிபதி சி.ஏ. கோஸ்லா இறந்தவர்களின் எண்ணிக்கை 5லட்சம் இருக்கும் என்றார்.
“பரந்தமனப்பான்மையும், சகிப்புத்தன்மையும்,
பாரபட்சம்இல்லாமலும்நடந்தபிரிட்டிஷ்
ஆட்சியின்கீழ்பலதலைமுறைகளுக்கு
அமைதியாகவாழ்ந்தமக்கள்இப்போது
தன்இனத்தைத்தானேசிறைப்பிடிக்கும்
அரக்கர்களைப்போல்இரக்கமின்றிஒருவர்மீது
ஒருவர்பாய்ந்துஅழித்துக்கொள்கிறார்கள்.'' என்றார்வின்சன்ட்சர்ச்சில்.
பஞ்சாப்பில் ஒரு அகதி முகாமில் பட்டினியால் அவதிப்பட்ட அகதிகளில் ஒரு குழுவினர், பிரிட்டிஷ் அதிகாரிகளைப் பார்த்து ஆவேசத்துடன் “வேண்டாம் சுதந்திரம், வேண்டாம் சுதந்திரம், மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சியைக் கொண்டு வாருங்கள்'' என்று அலறினர்.
1947 சூலைத் திங்கள் துவக்கத்தில் இராணுவத்தில் இருந்த அதிகாரிகளுக்கு ஒரு படிவம் வழங்கப்பட்டது. அதில் தான் பணியாற்ற விரும்புவது இந்திய இராணுவத்திலா? அல்லது பாகிஸ்தான் இராணுவத்திலா என்பதைத் தெரிவிக்குமாறு கேட்கப்பட்டது. பிரிட்டிஷ் இராணுவத்தில் இருந்த இந்து மற்றும் சீக்கிய அதிகாரிகளுக்குத் தேர்வு செய்வதில் பிரச்சனை இருக்கவில்லை.
ஆனால் இசுலாம் மதத்தைப் சார்ந்தவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இசுலாம் என்ற ஒரே காரணத்திற்காகத் தங்களின் நிலங்களை விட்டும், பூர்வீகமான வீடுகளிலிருந்தும் பிரிந்து செல்ல வேண்டுமா? அல்லது முஸ்லிம் விரோத உணர்வுகளுடன் இருப்பவர்களோடு இணைந்து சேவை செய்வதா? என்று கண் கலங்கி நின்றனர்.
வைஸ்ராய் மவுண்ட் பேட்டனின் மெய்க்காவலர் படையில் இருந்த இளம் முஸ்லிம் அதிகாரியான மேஜர் யாகூப்கான், இது பற்றி முடிவெடுப்பதற்குத் தன் குடும்பம் வசித்த மன்னராட்சிப் பகுதியான இராம்பூருக்குச் சென்றார். இவரது மாமாவான மன்னர் நவாப்பின் அரசில் இவரது தந்தை பிரதம அமைச்சராக இருந்தார். மாமாவின் அரண்மனையை அவர் சுற்றி வந்தார். அங்கே இருந்த வெதுவெதுப்பான நீச்சல் குளத்தையும், விக்டோரியா மகாராணி, ஐந்தாம் ஜார்ஜ் ஆகியோரின் எண்ணெய்ப் பூச்சு ஓவியங்களைக் கொண்ட மிகப்பெரிய விருந்தினர் அறையையும் அவர் கண்டார். அரண்மனைக்குப் பக்கத்தில் இருந்த அவரது குடும்பத்தினரின் வீட்டினை உணர்ச்சிப் பெருக்கோடும் பதற்றத்தோடும் பார்த்தார். கிறித்துமஸ் பண்டிகையின் போது அவரது குடும்பத்தின் தங்கத் தட்டுகளில் உணவு கொண்ட நூறு விருந்தினர்கள், அவர்களின் துப்பாக்கியின் சத்தங்கள் அவருடைய நினைவுக்கு வந்தன.
பிரிவினையால் உருவாக இருக்கும் சோஷலிச இந்தியாவில் இவையெல்லாம் மறைந்து வேறுவித வாழ்க்கையாக அமையும் என்று அவர் எண்ணினார். முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த இவரைப் போன்ற வாரிசுகளுக்கு அந்த இந்தியாவில் எப்படிப்பட்ட இடம் இருக்கும்? எல்லாவற்றையும் விட்டுவிட்டு பாகிஸ்தானுக்குப் போய்விடுவதென்று முடிவெடுத்து அன்று மாலை தனது தாயிடம்
“நீங்கள் வாழ்ந்து முடித்துவிட்டீர்கள்.
எனக்கு மேலும் வாழ்க்கை இருக்கிறது.
பிரிவினைக்குப்பிறகு, இந்தியாவில்
முஸ்லிம்களுக்கு எதிர்காலம் இருக்கும்
என்று நான் நினைக்கவில்லை.''
என்று கூறினார். அதற்கு அவரின் தாய்
“இதெல்லாம் எனக்கு விளங்கவில்லை.
நாம் இங்கே இருநூறு ஆண்டுகளாக
வாழ்கிறோம். காற்றின் சிறகுகளின்வந்து
இந்தியச் சமவெளியில் இறங்கியவர்கள் நாம்
என்ற பொருள்பட “ஹம் ஹவா கி
லங்கசோன்தராரா ஆயே'' என்று உருது
மொழியில் கூறிவிட்டுத் தொடர்ந்தார்.
டில்லியின் அழிவை நாம் கண்டிக்கிறோம்.
சிப்பாய்க் கலகத்தின் போது நாம் வாழ்ந்திருக்கிறோம்.
இந்த மண்ணுக்காக உனது மூதாதையர்கள்
பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடியுள்ளனர்.
உனது கொள்ளுத் தாத்தா சிப்பாய்க் கலகத்தில்
தூக்கிலிடப்பட்டார். நாம் போராடிவருகிறோம்.
போராடி வருகிறோம். போராடியிருக்கிறோம்.
இப்போது நாம் ஒரு தாயகத்தைப் பெற்றிருக்கிறோம்.
நமது கல்லறைகள் இங்குதான்'' என்று அந்தத்தாய்
ஆழ்ந்த வருத்தத்துடன் கூறி உடன்வர மறுத்தார்.
அடுத்த நாள் காலை மேஜர் யாகூப் கான் தனது வீட்டை விட்டுப் புறப்பட்டார். அப்போது அவரது தாயார் வெள்ளைப் புடவை உடுத்தியிருந்தார். முஸ்லிம்கள் இதனைத் துயரத்துக்கான வண்ணமாகக் கருதுகின்றனர். அவரது மகன் பிரிந்து போகும் போது குரான் நூலுக்குக் கீழே குனிந்து செல்லும் வகையில் அதனைத் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்தார். பின்னர் அந்தப் புனித நூலை முத்தமிட்டார். பிரிந்து செல்லும் போது கூறப்படும் ஒரு தூய பிரார்த்தனை மந்திரங்களை அந்த நூலிலிருந்து இருவரும் சேர்ந்தே ஒலித்தார்கள். பின்னர் மெதுவாக மகனை நோக்கி மூச்சுக்காற்றை வாய்வழியே வெளியேவிட்டார். தனது பிரார்த்தனை அவரைத் தொடர்ந்து செல்லும் என்பது தாயின் நம்பிக்கை.
தலைப்பாகை அணிந்த பல பணியாட்கள் மேஜருக்குக் கடைசியாகச் "சலாம்' செய்தனர்.
ஒரு சில மாதங்களில் காஷ்மீர் பனிமலையின் முகட்டில் பாகிஸ்தான் இராணுவத்தின் ஒரு பிரிவுக்குத் தலைமை தாங்கி மேஜர் யாகூப்கான் தனது சகோதர அதிகாரியாக இருந்த இந்திய இராணுவ அதிகாரிகள் மீது அவர் தாக்குதல் நடத்த வேண்டியதாயிற்று.
இவரது படைப்பிரிவை முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்தியது இந்திய இராணுவத்தினர் கார்வால் பிரிவுதான். இந்தப் பிரிவுக்குத் தலைவரும் யாகூப்கானைப் போலவே ஒரு முஸ்லிம்தான். இவரும் இராம்பூரைச் சேர்ந்தவர். இவரது பெயரும் கான்தான். ஆம் யூனுஸ்கான். இவர் யாகூப்கானின் இளைய சகோதரர்.
இந்தியாவை நேசிக்கும் ஒரு இசுலாமிய இராணுவ வீரனும் பாகிஸ்தானை நேசிக்கும் ஒரு இசுலாமிய இராணுவ வீரனும் தங்கள் நாடுகளுக்காக மோதிக் கொண்டனர். ஆம். இரண்டு சகோதரர்களும் தத்தம் நாடுகளுக்காக துப்பாக்கி முனையில் சந்தித்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் சுட்டு வீழ்த்த தயாராயினர். இப்போது சொல்லுங்கள் இசுலாமியர் இந்திய நாட்டிற்கு எதிரானவர்களா?
1947 ஆம் ஆண்டிலிருந்து 2013 வரை 66 ஆண்டுகள் இந்திய இராணுவமும் பாகிஸ்தான் இராணுவமும் தொடர்ந்து மோதிக் கொள்வதற்கு ஒரே காரணம் “காஷ்மீர் பள்ளத்தாக்கே''. இதன் தாக்கம் இந்திய நாட்டில் வாழும் இந்து முஸ்லிம்களுக்கு இடையே பகைமை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. தீவிரவாதம் ஏதும் அறியா மக்களின் உயிர்களைப் பறிக்கிறது.
காஷ்மீரில் வாழும் மக்களில் 67 விழுக்காடு மக்கள் இசுலாமியர்கள், 29 விழுக்காடு மக்கள் இந்துக்கள், 2 விழுக்காடு மக்கள் சீக்கியர்கள், 2 விழுக்காடு மக்கள் பவுத்தம் மற்றும் பிற மதங்களைச் சார்ந்தவர்கள்.
எனவே இந்தியாவும் பாகிஸ்தானும் "காஷ்மீரை'த் தனி நாடாக அங்கீகரித்து அங்குள்ள மக்கள் சகோதரர்களாக வாழ வழிவகை செய்ய வேண்டும்.
Thanks:-
பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2014
Post a Comment