வீட்டிலேயே செய்யலாம்... விதம்விதமா சுவைக்கலாம்!
'ஒரு
வேளை டிபன், இரண்டு வேளை சாப்பாடு’ என்று சிம்பிளாக இருந்த மக்களின்
உணவுக் கொள்கை படிப்படியாக மாறி... மாநிலத்தின் பல்வேறு பகுதி உணவுகள்,
பல்வேறு

மாநில
உணவுகள், பல்வேறு நாட்டு உணவுகள் என்று தேடித் தேடி சாப்பிடும் போக்கு
அதிகரித்து வருகிறது. இந்த ரசனைக்கு ஈடு கொடுக்கும் வகையில் பல சிறப்பு
உணவகங்கள் பெரிய நகரங்கள், சிறிய நகரங்களில் ஆங்காங்கே முளைத்து, செழித்து
வருகின்றன. இத்தகைய உணவகங்களில் பரிமாறப்படும் டிஷ்களை உங்கள் வீட்டிலேயே
செய்து மகிழ உதவும் வகையில் 30 வகை 'ரெஸ்டாரன்ட் ரெசிபி’களை வழங்குகிறார்,
சென்னையில் இருக்கும் 'மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்
அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி’யில் புரொபசராக பணிபுரியும்
'செஃப்’ சுரேஷ். இவர், சமையல் கலை தொடர்பான பல புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
மலபார் பரோட்டா
தேவையானவை:
மைதா மாவு - அரை கிலோ, முட்டை (விருப்பப்பட்டால்) - ஒன்று, பால் - 100
மில்லி, தயிர் - 50 மில்லி, தூள் உப்பு, சர்க்கரை - தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், தண்ணீர் - தேவைக்கேற்ப.
செய்முறை: ஒரு
பாத்திரத்தில் முட்டை, பால், தயிர், தூள் உப்பு, சர்க்கரை அனைத்தும்
ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர், அதில் தண்ணீர் ஊற்றிக்
கலக்கவும். அதனுடன் மைதா மாவை சேர்த்து நன்றாகப் பிசைந்து, சுமார் ஒன்றரை
மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, சிறிது மாவை எடுத்து உருண்டையாக செய்து,
தட்டி, இரண்டு கைகளிலும் வீசி, மடித்து மீண்டும் தட்டி... தோசைக்கல்லில்
போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும். பிறகு, அதனை
கைகளில் வைத்து அடித்து பரிமாறவும்.
தேங்காய் மஷ்ரூம் சூப்
தேவையானவை:
தேங்காய் விழுது, நறுக்கிய மஷ்ரூம் - தலா ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது -
ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், நறுக்கிய
கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய்ப் பால் - அரை கப், எலுமிச்சம் பழம் -
ஒன்று, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - அரை லிட்டர், உப்பு -
தேவைக்கேற்ப.
செய்முறை: பாத்திரத்தில்
தண்ணீர் ஊற்றி... நறுக்கிய வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தேங்காய்
விழுது, நறுக்கிய மஷ்ரூம், கொத்தமல்லியை சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு,
அதில் தேங்காய்ப் பால், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை
சேர்த்துக் கலக்கி இறக்கவும். கடைசியில் ஒரு கப்பில் ஊற்றி, கொத்தமல்லி
இலையைத் தூவி பரிமாறவும்.
கேரளா அவியல்
தேவையானவை:
விரல் நீளத்துக்கு நறுக்கிய முருங்கைகாய், பீன்ஸ், கேரட், கருணைக்கிழங்கு,
காராமணி, வாழைக்காய், புடலங்காய் - தலா கால் கப், மாங்காய் - ஒன்று
(விரல் நீளத்துக்கு நறுக்கவும்), தயிர் - 2 கப், தேங்காய், பச்சை மிளகாய்,
சீரகம் சேர்த்து அரைத்த விழுது - 2 கப், தேங்காய் எண்ணெய் - 50 மில்லி,
கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: ஒரு
பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகளை ஒன்று சேர்த்து, உப்பு போட்டு,
சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். பிறகு, அதில் அரைத்த தேங்காய்
மசாலாவை சேர்த்துக் கலந்து, மூடி போட்டு மீண்டும் வேக வைக்கவும். கடைசியில்
தயிரை ஊற்றி நன்றாக கலக்கவும். பின்னர், கறிவேப்பிலை சேர்த்து, தேங்காய்
எண்ணெய் ஊற்றிக் கலந்து பரிமாறவும்.
நெய் சோறு
தேவையானவை:
பாசுமதி அரிசி - அரை கிலோ, நெய் - 150 மில்லி, சுத்தம் செய்த சின்ன
வெங்காயம் - ஒரு கப், பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 2,
எண்ணெய் - 50 மில்லி, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், தண்ணீர் - 650
மில்லி, பச்சை மிளகாய் (கீறியது) - 3, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசியை சேர்த்து நன்றாகக் கழுவி 20 நிமிடம் ஊற
வைக்கவும். வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் - நெய் ஊற்றி... பட்டை, லவங்கம்,
ஏலக்காய், பிரிஞ்சி இலையை தாளிக்கவும். பிறகு, அதனுடன் சின்ன வெங்காயம்,
இஞ்சி - பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் ஊற்றிக்
கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்தவுடன், அரிசியைப் போட்டு கிளறி, தண்ணீர்
வற்றியவுடன் பாத்திரத்தை இறக்கவும். பிறகு 'தம்’ போடவும் (அடுப்பின் மேலே
தோசைக்கல்லை வைத்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, மூடிய பாத்திரத்தை
தோசைக்கல்லின்மீது வைத்து, 10 (அ) 15 நிமிடங்கள் வேகவிடவும்). பிறகு,
சாதத்தை எடுத்து பரிமாறவும்.
டொமேட்டோ தால் பச்சடி
தேவையானவை: நறுக்கி,
விதை நீக்கிய தக்காளி - ஒரு கப், ஊற வைத்த பாசிப்பருப்பு - கால் கப்,
தயிர் - ஒன்றரை கப், தேங்காய் விழுது - அரை கப், நறுக்கிய கொத்தமல்லி -
சிறிதளவு, நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 5, சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு,
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: ஒரு
பாத்திரத்தில் தக்காளி, பாசிப்பருப்பு, தயிர், தேங்காய் விழுது,
கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, உப்பு போட்டு நன்றாக
கலக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, கடலைப்பருப்பு, சீரகம்,
கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, தக்காளி கலவையுடன் சேர்த்தால்...
டொமேட்டோ - தால் பச்சடி ரெடி!
அடை பிரதமன்
தேவையானவை:
அரிசி பாலடை (டிபார்ட்மென்ட் கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும். 'பாலடா’
என்று கேட்டு வாங்க வும்) - ஒரு கப், வெல்லப் பாகு - ஒன்றரை கப்,
சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், முதல் தேங்காய்ப் பால் -
ஒரு கப், இரண்டாம் தேங்காய்ப் பால் - ஒன்றரை கப், நெய் - 50 மில்லி,
பொடியாக நறுக்கிய கொப்பரைத் தேங்காய் - 5 டேபிள்ஸ்பூன், திராட்சை,
முந்திரிப் பருப்பு - தலா 50 கிராம்.
செய்முறை: பாத்திரத்தில்
பால டையை சேர்த்து, தண்ணீர் ஊற்றி சுமார் 20 நிமிடம் ஊற வைக்கவும்.
பின்னர் வேறொரு பாத்திரத்தில் 2-ம் தேங்காய்ப் பால் ஊற்றி அதில் ஊற வைத்த
பாலடையை சேர்த்து வேகவைக்கவும். பாலடை வெந்த வுடன்... வெல்லப் பாகு,
சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு
முந்திரிப் பருப்பு, நறுக்கிய கொப்பரை தேங்காய், திராட்சையை நெய்யில்
தாளித்து சேர்க்கவும் (நெய்யையும் சேர்க்கவும்). இதனை நன்றாக கலக்கவும்.
கடைசியாக முதல் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கலக்கி சூடாகப் பரிமாறவும்.
ரைஸ் ரோல்ஸ்
தேவையானவை:
சாதம் - ஒரு கப், கடலை மாவு - 2 டீஸ்பூன், கோதுமை மாவு - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய்
தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்துப் பிசைந்து ரோல்களாக
செய்யவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, ரோல்களை போட்டு பொன்னிறமாக
பொரித்தெடுக்கவும்.
மசாலா சப்பாத்தி
தேவையானவை:கோதுமை
மாவு - அரை கிலோ, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம்
மசலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, உப்பு - ஒரு
டீஸ்பூன், தண்ணீர் - தேவைக்கேற்ப.
செய்முறை: ஒரு
பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, சிறிதளவு எண்ணெய், மஞ்சள்தூள்,
மிளகாய்த் தூள், கரம் மசலாத்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக
பிசைந்து கொள்ளவும். பிறகு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, மெல்லிய
சப்பாத்திகளாக தேய்க்கவும். தோசைக் கல்லில் சப்பாத்தியை போட்டு, சுற்றி
லும் எண்ணெய் விட்டு, வேக வைத்து எடுத்து... சூடாகப் பரிமாறவும்.
ஆலு பாலக் பனீர்
தேவையானவை:
சதுரமாக நறுக்கிய பனீர், சதுரமாக நறுக்கிய உருளைக்கிழங்கு - தலா ஒரு
கப், வேக வைத்து அரைத்த பாலக்கீரை - 2 கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு
டீஸ்பூன், வேக வைத்து அரைத்த வெங்காயம் - ஒரு கப், வேக வைத்து அரைத்த
தக்காளி - அரை கப், பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 2, கரம்
மசலாத்தூள் - அரை டீஸ்பூன், வெண்ணெய் - 50 கிராம், எண்ணெய் - 100 மில்லி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தேவையான
அளவு எண்ணெயை சூடாக்கி, பனீரை பொன் நிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தனியாக வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெயை
ஊற்றி, பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை ஆகியவற்றை தாளிக்கவும்.
அதனுடன் அரைத்த வெங்காய விழுது, தக்காளி விழுது, இஞ்சி - பூண்டு விழுது
சேர்த்துக் கிளறவும். பிறகு, கரம் மசாலாதூள், வெண்ணெய், அரைத்த பாலக் கீரை
விழுதைக் சேர்த்துக் கிளறவும். அதில் உப்பு சேர்த்து, பொரித்த பனீரையும்
சேர்க்கவும். பின்னர், வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்துக் கிளறி
இறக்கவும்.
இதை சூடான சப்பாத்தியுடன் சாப்பிட்டால்... சுவை அமர்க்களம்தான்!
காஷ்மீரி புலாவ்
தேவையானவை:பாசுமதி
அரிசி - அரை கிலோ, நறுக்கிய ஆப்பிள் - ஒரு கப், நறுக்கிய பைனாப்பிள் - அரை
கப், சீட்லெஸ் கறுப்பு திராட்சை, சீட்லெஸ் பச்சை திராட்சை - தலா கால் கப்,
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி
இலை - தலா 2, பொடியாக நறுக்கிய வெங்காயம் - 50 கிராம், எண்ணெய் - 50
மில்லி, நெய் - 100 மில்லி, தண்ணீர் - 600 மில்லி, உப்பு - சிறிதளவு.
செய்முறை:
அரிசியை 2 தடவை கழுவி, 20 நிமிடம் ஊற வைக்கவும். அதன் பிறகு ஒரு
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, சூடாக்கி, பட்டை, லவங்கம், ஏலக்காய்,
பிரிஞ்சி இலையை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது
சேர்த்து வதக்கவும். அதில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு, ஊற
வைத்த அரிசியைப் போட்டு, உப்பு சேர்த்துக் கிளறவும். பின்னர், நெய்
சேர்த்து, தண்ணீர் வற்றியவுடன் பாத்திரத்தை இறக்கவும். பிறகு 'தம்’ போடவும்
(அடுப்பின் மேலே தோசைக்கல்லை வைத்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, மூடிய
பாத்திரத்தை தோசைக்கல்லின்மீது வைத்து, 10 (அ) 15 நிமிடங் கள் வேக
வைக்கவும்).
பிறகு பாத்திரத்தை திறந்து, சாதத்தைக் கிளறி, ஆப்பிள்,
பைனாப்பிள், கறுப்பு திராட்சை, சீட்லெஸ் பச்சை திராட்சை சேர்த்துக் கிளறி
பரிமாறவும்.
ஹெல்தி ஃப்ரூட் சாலட்
தேவையானவை:
நறுக்கிய ஆப்பிள், பப்பாளிப் பழம், கொய்யாப் பழம், பைனாப்பிள்,
வாழைப்பழம், கழுவிய சீட்லெஸ் கறுப்பு திராட்சை, கழுவிய சீட்லெஸ் வெள்ளை
திராட்சை, மாதுளை முத்துக்கள் - தலா அரை கப், எலுமிச்சம் பழம் - ஒன்று
(சாறு எடுக்கவும்), சாட் மசாலா - அரை டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,
உப்பு - அரை டீஸ்பூன்.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து, கலக்கி பரிமாறவும்.
டபுள் கா மிட்டாய்
தேவையானவை: பிரெட்
ஸ்லைஸ் - 10, மில்க்மெய்டு - ஒரு டின், குங்குமப்பூ - ஒரு கிராம், பாதாம்,
பிஸ்தா, முந்திரி (சேர்த்து) - 50 கிராம், சர்க்கரை - 200 கிராம், பால் -
ஒன்றரை லிட்டர், சர்க்கரைப்பாகு - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - அரை லிட்டர்.
செய்முறை: ஒரு
பாத்திரத்தில் பாலை ஊற்றி, நன்கு சுண்டும் வரை காய்ச்சவும். அதில்
சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து, மில்க்மெய்டு ஊற்றி நன்கு கலக்கவும்.
குங்குமப்பூவையும் சேர்த்துக் கலக்கவும். பிறகு, பிரெட் ஸ்லைஸ்களை முக்கோண
வடிவில் வெட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பாதாம், பிஸ்தா, முந்திரியை
பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பாத்திரத்தில் பொரித்த பிரெட் ஸ்லைஸ்களை
அடுக்கி அதன் மேல் முதலில் சர்க்கரைப்பாகை ஊற்றவும். பிறகு, பால் கலவையை
ஊற்றவும். அதனை ஃப்ரிட்ஜில் வைத்து, செட் ஆனதும் மேலே பொடியாக நறுக்கிய
முந்திரி, பாதம், பிஸ்தாவை தூவி, துண்டுகளாக்கி பரிமாறவும்.
ஸ்பெஷல் தக்காளி சூப்
தேவையானவை: தக்காளிப்பழ
விழுது - 2 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 50 கிராம், இஞ்சி - பூண்டு
விழுது - 2 டீஸ்பூன், சிவப்பு ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, காய்கறி வேக
வைத்த தண்ணீர் - ஒரு லிட்டர், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம் -
2, மைதா கரைசல் - 100 கிராம், கொத்தமல்லி இலை - சிறிதளவு, வெண்ணெய் - 30
கிராம், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: ஒரு
பாத்திரத்தில் முதலில் காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து, அதனுடன்
தக்காளி விழுதைக் கலந்து, பின்னர் மற்ற அனைத்துப் பொருட்களையும்
(கொத்தமல்லி, வெண்ணெய் தவிர) சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி,
வெண்ணெய் சேர்த்துக் கலக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சிரிக்கந்த் பூரி
தேவையானவை: கோதுமை மாவு - ஒன்றரை கப், மைதா மாவு - அரை கப், எண்ணெய் - அரை லிட்டர், உப்பு - ஒரு சிட்டிகை, தண்ணீர் - தேவைக்கேற்ப.
சிரிக்கந்த் தயாரிக்க: புளிப்பு இல்லாத தயிர் - 2 கப், சர்க்கரைத்தூள் - ஒரு கப், ரோஸ் வாட்டர் - 10 மில்லி, குங்குமப்பூ - ஒரு கிராம்.
செய்முறை: பாத்திரத்தில்
மைதா, கோதுமை, உப்பு சேர்த்துக் கலந்து, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து
கொள்ளவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, வட்டமாக தேய்த்து, எண்ணெயில்
பூரிகளாக பொரித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி... அதனுடன்
சர்க்கரைத்தூள், ரோஸ்வாட்டர், குங்குமப்பூ சேர்த்து நன்கு கலக்கவும். இதை
ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும். இந்த சிரிக்கந்தில் பூரியை தொட்டுச்
சாப்பிடவும்.
கேரட் கீர்
தேவையானவை:
துருவிய கேரட் - 50 கிராம், கேரட் விழுது - ஒரு கப், பால் - 2 கப்,
சர்க்கரை - ஒரு கப், ரோஸ்வாட்டர் - 10 மில்லி, ஏலக்காய்த்தூள் - ஒரு
டீஸ்பூன், முந்திரிப் பருப்பு, திராட்சை - தலா 25 கிராம், நெய் - 50
மில்லி.
செய்முறை: பாத்திரத்தில்
பாலை ஊற்றி அதில் கேரட் விழுது, துருவிய கேரட் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
பிறகு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். நெய்யில்
வறுத்த முந்திரிப் பருப்பு, திராட்சையை சேர்க்கவும் (நெய்யையும்
சேர்க்கவும்). கடைசியில் ரோஸ் வாட்டர் சேர்த்துக் கலந்து, குளிர வைத்து
பரிமாறவும்.
அனார்கலி சாலட்
தேவையானவை: சிறிய
சதுரங்களாக நறுக்கிய உருளைக்கிழங்கு, மாதுளம் முத்துக்கள் - தலா ஒரு கப்,
சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - ஒன்று, வெள்ளை
மிளகுத்தூள், சர்க்கரை - தலா அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
இலை - சிறிதளவு, சாலட் ஆயில் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 2
டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
உருளைக்கிழங்கு வேக வைத்து, நீரை வடித்து, ஆற வைக்கவும்.
கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து, அவற்றுடன்
வேக வைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்கு கலக்கி பரிமாறவும்.
ரவா கீர்
தேவையானவை:
ரவை - 150 கிராம், பால் - ஒரு லிட்டர், மில்க் மெய்டு, சர்க்கரை - தலா ஒரு
கப், ஏலக் காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ரோஸ்வாட்டர் - 15 மில்லி, நெய் - 50
மில்லி, முந்திரி, திராட்சை - 50 கிராம்.
செய்முறை: ஒரு
பாத்திரத்தில் ரவையை சேர்த்து அதில் 300 மில்லி தண்ணீர் விட்டு வேக
வைக்கவும். பாலை நன்றாக கொதிக்க வைத்து... சர்க்கரை, வேக வைத்த ரவை
ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். பிறகு, ஒரு கடாயில் நெய் விட்டு, முந்திரி,
திராட்சையை தாளித்து, ரவை கலவையில் சேர்க்கவும். பின்னர், மில்க்மெய்டு,
ஏலக்காய்த்தூள், ரோஸ்வாட்டர் சேர்த்துக் கலக்கவும். ஃப்ரிட்ஜில் குளிர
வைத்து பரிமாறவும்.
மினி இட்லி ஃப்ரை
தேவையானவை:
மினி இட்லி - 10, தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, நெய் - 4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எண் ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இட்லிகளை
எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும் வெங்காயம், தக்காளியை பொடியாக
நறுக்கவும். வாணலியில் நெய் விட்டு... இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம்,
தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகாய்த் தூள்,
பொரித்த மினி இட்லி சேர்த்து நன்கு வறுத்து இறக்கி... மேலே கொத்த மல்லித்
தழை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
தர்காரி பிரியாணி
தேவையானவை: பாசுமதி
அரிசி - ஒரு கிலோ, நறுக்கிய வெங்காயம் - 200 கிராம், நறுக்கிய தக்காளி -
250 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - 3 டேபிள்ஸ்பூன், பட்டை, லவங்கம்,
ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை, ஜாதிபத்திரி - தலா 2, சாம்பார் பொடி - 3
டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கேரட், பீன்ஸ்,
பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவர், டபுள்பீன்ஸ், உருளைக்கிழங்கு (எல்லாம்
சேர்த்து) - 2 கப், நறுக்கிய கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, மஞ்சள்தூள்,
மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், நெய் - 100 மில்லி, எண்ணெய் - 200
மில்லி, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
பாசுமதி அரிசியை நன்கு கழுவி சுமார் 20 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு
வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் - நெய் ஊற்றி, சோம்பு, பட்டை, லவங்கம்,
பிரிஞ்சி இலை, ஏலக்காய், ஜாதிபத்திரி தாளிக்கவும். பிறகு, நறுக்கிய
வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது,
நறுக்கிய காய்கறிகள், நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம்
மசாலாத்தூள், சாம்பார் பொடி, உப்பு, நறுக்கிய கொத்துமல்லி, புதினா
சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கி கொதிக்கவிடவும். தண்ணீர்
நன்கு கொதித்தவுடன் அரிசியைப் போட்டு, தண்ணீர் வற்றியவுடன் பாத்திரத்தை
இறக்கவும். பிறகு 'தம்’ போடவும் (அடுப்பின் மேலே தோசைக்கல்லை வைத்து,
அடுப்பை சிறு தீயில் வைத்து, மூடிய பாத்திரத்தை தோசைக்கல்லின்மீது வைத்து,
10 (அ) 15 நிமிடங்கள் வேக வைக்கவும்). பின்னர் இறக்கி சூடாகப் பரிமாறவும்.
பகாரா பைங்கன்
தேவையானவை:
சின்ன கத்திரிக்காய் - அரை கிலோ, நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், கடுகு,
வெந்தயம், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், புளித் தண்ணீர் - ஒன்றரை கப்,
பொடித்த வெல்லம் - அரை கப், துருவிய தேங்காய், வறுத்த வேர்க்கடலை - தலா ஒரு
கப், கறுப்பு எள் - 25 கிராம், நல்லெண்ணெய் - 150 மில்லி, கறிவேப்பிலை -
சிறிதளவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கத்திரிக்காயை
பாதியாக வெட்டி தண்ணீரில் போடவும். வேர்க்கடலை, தேங்காய், எள் மூன்றையும்
சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில்
நல்லெண்ணெய் ஊற்றி... கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பி¬லை, தாளித்து,
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் கத்திரிக்காயையும்
சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள்
சேர்த்துக் கிளறவும். அதில் உப்பு, புளித் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.
பிறகு, வெல்லம் சேர்க்கவும். கடைசியில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்துக்
கிளறி, கெட்டியானதும் மேலே கொத்தமல்லி தூவி, சிறிது நல்லெண்ணெய் ஊற்றவும்.
இந்த கிரேவி... பிரியாணி, புலாவ் மற்றும் சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட சிறந்தது.
நவரத்தின புலாவ்
தேவையானவை:
பாசுமதி அரிசி - அரை கிலோ, நறுக்கிய கேரட் - கால் கப், நறுக்கிய பீன்ஸ்,
வெங்காயம் - தலா 50 கிராம், நறுக்கிய காலிஃப்ளவர், குடமிளகாய், புருக்கோலி,
மஷ்ரூம், பச்சைப் பட்டாணி - தலா 100 கிராம், நறுக்கிய கொத்தமல்லி, புதினா -
சிறிதளவு, முந்திரிப் பருப்பு, திராட்சை - (சேர்த்து) 50 கிராம், இஞ்சி -
பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 3, பட்டை,
லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 2, காய்ச்சிய பால் - அரை கப்,
தண்ணீர் - 500 மில்லி, எண்ணெய், நெய் - தலா 50 மில்லி, உப்பு - தேவையான
அளவு.

செய்முறை: பாசுமதி
அரிசியை சுமார் 20 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் -
நெய் ஊற்றி, பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்கவும். அதனுடன்
வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், மற்ற அனைத்து காய்கறிகள், உப்பு, இஞ்சி -
பூண்டு விழுது சேர்த்து வதக்கி... தண்ணீர், காய்ச்சிய பால் ஊற்றி
கொதிக்கவிடவும். பிறகு, அதில் ஊற வைத்த அரிசியை சேர்த்து, தண்ணீர்
வற்றியவுடன் பாத்திரத்தை இறக்கவும். பிறகு 'தம்’ போடவும் (அடுப்பின் மேலே
தோசைக்கல்லை வைத்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, மூடிய பாத்திரத்தை
தோசைக்கல்
லின் மீது வைத்து, 10 (அ) 15 நிமிடங்கள் வேக
வைக்கவும்). கடைசியில் மூடியைத் திறந்து புலாவ் உடன் முந் திரிப் பருப்பு,
திராட்சை, கொத்தமல்லி, புதினா சேர்த்துப் பரிமாறவும்.
பேபி பொட்டேடோ மசாலா
தேவையானவை:
சின்ன உருளைக்கிழங்கு - அரை கிலோ, தக்காளி விழுது, நறுக்கிய வெங்காயம் -
தலா ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், கஸ்தூரி மேத்தி - ஒரு
டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா
ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், வெந்தயக் கீரை - ஒரு
கட்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2, சீரகப் பொடி - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - 100 கிராம், வெண்ணெய் - 50 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் சீவி, வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்
ஊற்றி... பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, வெங்காயம் சேர்த்து
வதக்கவும். பிறகு, இஞ்சி -
பூண்டு விழுது, தக்காளி விழுது, மஞ்சள் தூள்,
மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து
நன்கு கிளறவும். பிறகு, கஸ்தூரி மேத்தி, வெண்ணெய், வெந்தயக் கீரையைச்
சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும். கடைசியில் சீரகப் பொடியைச் சேர்த்துக்
கலக்கி பரிமாறவும்.
கொத்தமல்லி லெமன் சூப்
தேவையானவை:
நறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிதளவு, கொத்தமல்லி இலை விழுது - கால் கப்,
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
எலுமிச்சம்பழம் - 2, ஷ்வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பட்டை,
லவங்கம் - தலா 2, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - முக்கால்
லிட்டர், மைதா - கால் கப் (கரைத்துக்கொள்ளவும்), உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
ஒரு பாத்திரத் தில் தண்ணீர் ஊற்றி... இஞ்சி - பூண்டு விழுது, பட்டை,
லவங்கம், கொத்தமல்லி விழுது, வெங்காயம், உப்பு, மிளகுத்தூள், சேர்த்து
நன்கு கொதிக்கவிடவும். பிறகு, அதில் மஞ்சள்தூள், மைதா கரைசல் சேர்த்து
மேலும் கொதிக்கவிடவும். உப்பு, எலு மிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி,
கொத்தமல்லி இலையை தூவி, சூடாகப் பரிமாறவும்.
வாழைக்காய் சாப்ஸ்
தேவையானவை:
வாழைக்காய் - ஒன்று, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு
சிட்டிகை, கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, எண்ணெய், உப்பு -
தேவைக்கேற்ப.
செய்முறை:
வாழைக்காயை தோல் சீவி சற்று பெரிய துண்டுகளாக வெட்டி... உப்பு, மஞ்சள்தூள்
சேர்த்து மூழ்கும் வரை நீர் விட்டு, அடுப்பில் வைத்து கொதிக்கும்போது
இறக்கி, நீரை வடியவிடவும். மிளகு - சீரகத்தைப் பொடிக்கவும். வாணலியில்
எண்ணெயை காய வைத்து வாழைத் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். வேறொரு
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து...
பொரித்த வாழை துண்டு கள், மிளகு - சீரகப்பொடி சேர்த்து புரட்டி இறக்க...
சாப்ஸ் ரெடி!
மிக்ஸ்டு தால் பாயசம்
தேவையானவை: பச்சைப்
பயறு, பாசிப் பருப்பு, மசூர் தால் - தலா அரை கப், வெல்லப் பாகு - ஒரு கப்,
சுக்குப் பொடி - ஒரு டீஸ்பூன், மில்க்மெய்டு - ஒரு கப், ஏலக்காய்த்தூள் -
ஒரு சிட்டிகை, முந்திரிப் பருப்பு, திராட்சை, கொப்பரை தேங்காய் (சேர்த்து) -
50 கிராம், நெய் - 100 மில்லி.
செய்முறை:
பச்சைப் பயறு, பாசிப் பருப்பு, மைசூர்பருப்பு மூன்றையும் நன்கு கழுவி,
தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். வெந்த
பருப்புகளை வேறொரு பாத்திரத் தில் சேர்த்து, அதனுடன் வெல்லப் பாகு,
மில்க்மெய்டு, சுக்குப் பொடி, ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
நெய்யில் முந்திரிப் பருப்பு, திராட்சை, பொடியாக நறுக்கிய கொப்பரைத்
தேங்காய் சேர்த்து வதக்கி, பாயசத்தில் சேர்த்து (நெய்யையும் சேர்க்கவும்),
கலந்து, இறக்கி சூடாகப் பரிமாறவும்.
பனீர் மட்டர் மசாலா
தேவையானவை:
சதுரமாக நறுக்கிய பனீர் - 300 கிராம், பச்சைப் பட்டாணி - ஒரு கப், பட்டை,
லவங்கம், ஏலக்காய் - தலா 2, தக்காளி விழுது, நறுக்கிய வெங்காயம் - தலா ஒரு
கப், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், கஸ்தூரி மேத்தி - ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாத் தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள், தனியாத் தூள் - தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - 50 கிராம்,
எண்ணெய் - 100 மில்லி, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: பனீரை
எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பிறகு, ஒரு கடாயில் மீதமுள்ள
எண் ணெயை ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக் காய் தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய
வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பிறகு, இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி
விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசலாத்தூள், உப்பு,
கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்கு வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்
கலக்கவும். இதில் வெண்ணெய், பச்சைப் பட்டாணி, வறுத்த பனீர் சேர்த்து
வேகவிடவும். கடைசியில் கொத்த மல்லியைத் தூவி இறக்கி... சூடாக பரிமாறவும்.
சப்பாத்தி, பரோட்டா, தந்தூரி நாண் ஆகியவற்றுக்கு இது சூப்பர் சைட் டிஷ்.
கடலை மாவு போண்டா
தேவையானவை:
கடலை மாவு, அரிசி மாவு - தலா 4 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - ஒன்று, இஞ்சித்
துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை
- சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். அகலமான பாத்திரத்தில் மாவு
வகைகளுடன் இஞ்சித் துருவல், உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக
அரிந்த கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பிசிறவும். இதனுடன்
தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். எண்ணெயை காய வைத்து,
மாவை சிறுசிறு போண்டாக்களாக உருட்டிப் போட்டு, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
தேங்காய் அடை
தேவையானவை:
புழுங்கல் அரிசி - ஒரு கப், பச்சரிசி - அரை கப், உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு - தலா கால் கப், பாசிப்பருப்பு - 2 டீஸ்பூன், தேங்காய்
துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 5, இஞ்சித் துருவல், சீரகம் - தலா ஒரு
டீஸ்பூன், பெருங்காயத்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை ஊற வைத்து...
சீரகம், இஞ்சி, தேங்காய், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்த்து சற்று
கொரகொரவென அரைக்கவும். பாசிப்பருப்பை ஊற வைத்து மாவுடன் கலந்து,
தோசைக்கல்லை காய வைத்து, மாவை அடைகளாகத் தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு,
வெந்ததும் எடுக்கவும்.
காலிஃப்ளவர் பெப்பர் கிரேவி
தேவையானவை:
காலிஃப்ள வர் துண்டுகள் - ஒரு கப், வெங் காயம் - ஒன்று, தக்காளி - 2,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு -
தேவையான அளவு.
செய்முறை:
காலிஃப்ளவரை சுத்தம் செய்யவும். வெங்காயம், தக் காளியை பொடியாக
நறுக்கவும். மிளகு, சோம்பு, கறிவேப்பிலையை வெறும் வாணலியில் வறுத்துப்
பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு... இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து
வதக்கி, வெங்காயம், தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் உப்பு,
மிளகாய்த்தூள், காலிஃப்ளவர் சேர்த்து, தண்ணீர் தெளித்து வேகவிட்டு,
இறக்கும்போது வறுத்து வைத்திருக்கும் பொடியை மேலே தூவி இறக்கவும்.
ஸ்வீட் அண்ட் சோர் சூப்
தேவையானவை:
உருளைக்கிழங்கு, வெங்காயம், கேரட், பீன்ஸ் - தலா ஒன்று, வெண்ணெய் - ஒரு
டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் - கால் கப், கிராம்பு - 2, பிரிஞ்சி இலை
- ஒன்று, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை:
உருளைக்கிழங்கு, வெங்காயம், கேரட், பீன்ஸ் ஆகியவற்றை நறுக்கவும்.
குக்கரில் வெண்ணெயை உருக்கி... கிராம்பு, பிரிஞ்சி இலையை வதக்கி, நறுக்கிய
காய்களை சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கவும். பின்பு கிராம்பு, பிரிஞ்சி
இலையை நீக்கிவிட்டு மிக்ஸியில் அரைத்து... உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள்,
பால் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
Post a Comment