நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்! ---உபயோகமான தகவல்கள்,
நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்! 15 ஆயிரம்தான் சம்பளமா? நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்! எளிய மேஜிக் ஃபார்முலா 'நான் கோடீஸ்வரன் ஆகவே...

நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!
எளிய மேஜிக் ஃபார்முலா
என்ன இது, 30 வயதாகும் ஒருவர் மாத வருமானமாக பெறும் 15,000 சம்பளத்தைத் தொடர்ந்து அறுபது வயது வரை சேமித்தாலே 54 லட்சம் ரூபாய்தான் கிடைக்கும். பிறகு எப்படி ஒருவர் ஒரு கோடி பணத்தைச் சேர்க்க முடியும் என்கிறீர்களா? நிச்சயம் முடியும். 15,000 ரூபாய் வருமானம் சம்பாதிப்பவர் தனது வருமானத்தில் 10 சதவிகித தொகையை 15 சதவிகித வருமானம் எதிர்பார்க்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தாலே தன்னுடைய 60-வது வயதில் அவர் கோடீஸ்வரர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.
1. இளமையிலேயே முதலீட்டைத் தொடங்கிவிடுவது,
2. மாதம் தவறாமல் முதலீடு செய்வது,
3. திட்டமிட்ட காலம் வரை முதலீடு செய்வது.
இந்த மூன்று நிபந்தனைகளுக்கும் நீங்கள் தயார் எனில், நீங்கள் கண்டிப்பாக உங்கள் அறுபதாவது வயதில் கோடீஸ்வரராகிவிடலாம்.
நான் முப்பது வயதைத் தாண்டிவிட்டேன். இனி நான் கோடீஸ்வரர் ஆகமுடியாதா என்று கேட்கிறீர்களா? உங்களாலும் முடியும். முப்பது வயதைத் தாண்டியவர்கள் கோடீஸ்வரர் ஆவது எப்படி என்பதை இனி பார்ப்போம்.
நாம் ஏன் முதலீடு செய்கிறோம்? நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு சிறந்த வட்டி அல்லது வருமானம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில்தானே!? உங்களுக்கு நன்கு தெரிந்த, உங்களில் பலரும் செய்துவரும் முதலீடான மாதச் சீட்டு, தங்கம், அஞ்சல் வழி, வங்கி மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தாலும் நல்ல வருமானம் பார்த்து நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம். ஆனால், இந்த முதலீடுகளுடன் ஒப்பிடும்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நீங்கள் எதிர்பார்க்கும் வருமானம் காலத்தைப் பொறுத்தும், மாத முதலீட்டைப் பொறுத்தும் மாறுபடும். நீண்ட காலம் என்கிறபோது 15 சதவிகித வருமானத்தைவிட அதிகமான வருமானத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், 'நமது பணம் கூட்டு வட்டியில் வளரும்போது சிறிதாக தெரிந்தாலும், காலத்தின் அடிப்படையில் அதனுடைய வளர்ச்சி மிக மிகப் பெரிதாக இருக்கும்’ என்று கண்டுபிடித்தார். அதுவே, இன்று உலக அளவில் நிதி வர்த்தகத்தின் முதலீட்டு மந்திரமாக திகழ்கிறது. இதையே அவர் எட்டாவது அதிசயம் என்றார்.
பொதுவாக, மியூச்சுவல் ஃபண்டில் ரிஸ்க் அதிகம் என்கிற தவறான கண்ணோட்டம் மக்களை அதில் முதலீடு செய்யவிடாமல் தடையாக இருக்கிறது. இதில் ரிஸ்க் இருந்தாலும் பங்குச் சந்தையைவிட குறைவுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நாம் முதலீடு செய்யும் பணம், சில ஆண்டுகளிலேயே பெரிதாக வருமானம் தந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஒரு பிஸினஸைத் தொடங்கி அடுத்த சில மாதங்களிலேயே அது பெரிய நிறுவனமாக உருவாகிவிடுமா? குறைந்தது இரண்டு வருடங்களாவது எல்லா வகையிலும் அனுபவம் பெற்று அதிகபட்சம் பத்து வருடம் வரை அதே தொழிலில் இருந்தால் மட்டுமே, நாம் மிகப் பெரிய தொழிலதிபராகி அந்த நிறுவனத்தையும் நல்ல நிலைமைக்குக் கொண்டு வரமுடியும். உண்மை நிலை இப்படி இருக்க, முதலீட்டு விஷயத்தில் மட்டும் உடனுக்குடனே வளர்ச்சி வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கவே செய்கிறது.
இன்னொரு விஷயத்தையும் முக்கியமாகச் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை பணத்தை முதலீடு செய்யும்போதும் உங்களுக்குள்ளேயே பின்வரும் கேள்விகளை எழுப்புங்கள். 'நான் ஏன் முதலீடு செய்கிறேன்? நான் அடைய வேண்டிய இலக்கு என்ன? என் இலக்கை அடைய இந்த முதலீடு சரியானதுதானா? இதில் உள்ள ரிஸ்க் என்ன?’ என்கிற அடிப்படை கேள்விகளை எழுப்பிவிட்டு, அதன்பிறகு பணத்தை முதலீடு செய்தால், உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். ஒரு ரூபாய் பணம் சம்பாதிக்க நாம் கடுமையாக உழைக்கிறோம். அதே நேரத்தில், நாம் முதலீடு செய்யும் ஒரு ரூபாய் பணம் நமது வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்குமா என்று சிந்தித்து பார்க்கவேண்டும்.
இந்த அணுகுமுறையில் உங்கள் முதலீட்டை அமைத்துக் கொண்டால், நீங்கள் எந்த வயது கொண்டவராக இருந்தாலும் சரி, எந்த சதவிகித வருமானத்தை எதிர்பார்ப்பவராக இருந்தாலும் சரி, நீண்ட கால அடிப்படையில் உங்கள் முதலீட்டுடன் கூடிய வட்டி உங்களுக்கு ஒரு கோடி பணம் சேர்க்க உதவும். கீழே தந்துள்ள அட்டவணையைப் பார்த்து, உங்கள் வயதிற்கேற்ப வருமான வளர்ச்சியை எதிர்பாருங்கள்.
Post a Comment