கர்ப்பிணிகளின் மலச்சிக்கலுக்கு விளக்கெண்ணெய் நல்லது!
"கர்ப்பிணிகளுக்கும் மலச்சிக்கல் பிரச்னை அதிகமாக இருக்கும். இதற்காக, மாத்திரை எடுத்துக்கொள்கிற கர்ப்பிணிப் பெண்கள் பலரையும் பார...

"கர்ப்பிணிகளுக்கும் மலச்சிக்கல் பிரச்னை அதிகமாக இருக்கும். இதற்காக, மாத்திரை எடுத்துக்கொள்கிற கர்ப்பிணிப் பெண்கள் பலரையும் பார்த்திருக்கிறேன். இதை இயற்கை வழியில் விளக்கெண்ணெய் மூலமாகவே சரி செய்துவிடலாம்."
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், நம் பாட்டி கால சமையல்களில்கூட, சமைத்த உணவுகளின் மீது கடைசியாக சிறிதளவு விளக்கெண்ணெய் டிரெஸ்ஸிங் போல பயன்படுத்தப்பட்டது நினைவுக்கு வரும். இன்றைக்கும் சில வீடுகளில், விளக்கெண்ணெய் சாப்பிட்டு வயிற்றைச் சுத்தம் செய்கிற வழக்கம் இருக்கிறது. 'விளக்கெண்ணெய் குடிச்சா மாதிரி ஏன் முகத்தை வைச்சுக்கிறே' என்கிற கேலிகூட இதன் அடிப்படையில் வந்ததுதான். விளக்கெண்ணெய்யை நாமெல்லாரும் கட்டாயம் சாப்பிட வேண்டுமா, அதன் பலன்கள் என்ன என்பது பற்றி சித்த மருத்துவர் விக்ரம்குமாரிடம் கேட்டோம்.
''எந்தக் காலத்திலும் விளக்கெண்ணெய் சாப்பிடக்கூடிய உணவுப்பொருள்தான். ஆனால், யாருக்கு எந்த அளவு கொடுக்க வேண்டும், எவ்வளவு நாள் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து பயன்படுத்த வேண்டும்.
விளக்கெண்ணெய் நல்ல மலமிளக்கி. அதனால், வாரத்துக்கு மூன்று நாள் உணவில் கால் டீஸ்பூன் அளவுக்குச் சேர்த்துக்கொண்டால், மலச்சிக்கல் இல்லாமல் நிம்மதியாக வாழலாம். மலச்சிக்கல்தான் பல ஆரோக்கிய சிக்கல்களுக்கு ஆரம்பம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
விளக்கெண்ணெய்க்கு பித்தத்தைத் தணிக்கிற இயல்பு இருப்பதால், பித்த உடம்புக்காரர்கள் இதை நான் மேலே சொன்ன அளவில் சாப்பிடுவது நல்லதுதான்.
எண்ணெய்களில் இது மிகக் குளிர்ச்சியானது. அதனால், இந்த வெயில் காலத்தில் சளிப் பிடிக்கும் என்ற பயமில்லாமல் விளக்கெண்ணெய்யை உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
சிலருக்கு, வெயில் காலங்களில் நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் எரிச்சல் இருக்கும். குழந்தைகள் உள்பட எல்லோருக்கும் ஜீரணமாவதில் சிக்கல் ஏற்படும். அவர்கள் இரவுகளில் மிதமான சூடுள்ள நீரில் விளக்கெண்ணெய் சேர்த்துக் குடித்தால், அந்தப் பிரச்னைகள் சரியாகும். அளவைப் பொறுத்தவரை பெரியவர்கள் என்றால், கால் டீஸ்பூனும் 3-ல் இருந்து 5 வயது வரையான குழந்தைகள் என்றால் நாலைந்து சொட்டு அளவும் விளக்கெண்ணெய் எடுத்துக்கொள்ளலாம். பத்து வயதுக்கு மேல் கால் டீஸ்பூன் கொடுக்கலாம். நாள் கணக்கைப் பொறுத்தவரை பெரியவர்களுக்கு வாரத்துக்கு இரண்டு நாள், குழந்தைகளுக்கு வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் இப்படிக் கொடுத்தால் போதுமானது.
கர்ப்பிணிகளுக்கும் மலச்சிக்கல் பிரச்னை அதிகமாக இருக்கும். இதற்காக, மாத்திரை எடுத்துக்கொள்கிற கர்ப்பிணிப் பெண்கள் பலரையும் பார்த்திருக்கிறேன். இதை இயற்கை வழியில் விளக்கெண்ணெய் மூலமாகவே சரி செய்துவிடலாம். வாரத்துக்கு இரண்டு நாள் மட்டும் கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய்யை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
பலருக்கும் விளக்கெண்ணெய்யின் குளிர்ச்சித் தன்மை குறித்த பயம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள், தொப்புளில் உச்சந்தலையில், இரவுகளில் உள்ளங்கால்களில் தடவிக் கொள்ளலாம். நல்லெண்ணெய் போலவே விளக்கெண்ணெய் குளியலும் எடுக்கலாம். உடல்சூட்டை நன்கு தணிக்கும்.
விளக்கெண்ணெய்யின் நம்பகத்தன்மைக் குறித்துச் சந்தேகப்படுபவர்கள், ஆமணக்கு விதையை வாங்கி, செக்கில் கொடுத்து ஆட்டிப் பயன்படுத்தலாம்.''
Post a Comment