“அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும்”- மகாத்மா காந்தி நினைவுதினச் சிறப்புப் பகிர்வு
“அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும்”- மகாத்மா காந்தி நினைவுதினச் சிறப்புப் பகிர்வு “அ ன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்...
“அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும்”- மகாத்மா காந்தி நினைவுதினச் சிறப்புப் பகிர்வு
காந்தியின்மீது கஸ்தூரிக்கிருந்த கண்ணியமான காதலால், “ஐயோ... இந்தப் பாழாய்ப்போனவன், என் கணவரைப் படுகுழியில் தள்ளிவிடுவானே? இதை எப்படியாவது அவரிடம் பக்குவமாகச் சொல்ல வேண்டும்” என்று தீய நண்பரிடம் சிக்கிக்கொண்ட காந்திக்காக, கஸ்தூரிபாய் ஏங்கினார். அதற்காக அவர், “இதோ பாருங்கள்... நான் சொல்கிறேன் என்று கோபித்துக்கொள்ளக்கூடாது. அந்த அயோக்கியனுடன் சேராதீர்கள். அவன், பெரிய போக்கிரி. அவன், சகவாசமே வேண்டாம்” என்று வேண்டுகோள்வைத்தார்.
அவருடைய கோரிக்கையைக் காந்தி, அப்போது ஏற்காதபோதும் நாளடைவில் உண்மையிலேயே மாறித்தான் போனார். அந்த மாற்றம், பின்னாளில் அவர்களுக்குள் அன்பை விதைத்தது. அதை உணர்த்தும் நிகழ்வாக அவர்களுடைய வாழ்வில் எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஒருமுறை வழக்கு ஒன்றில் வாதாடுவதற்காகத் தென்னாப்பிரிக்கா வரும்படி காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்குச் செல்வதற்கு முன் காந்தி... தன் மனைவியிடம், “தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும்போது உனக்கு என்ன வேண்டும், சொல்” என்று கேட்டார். அதற்கு அவர், “ஒரு நல்ல புடவையாகக் கிடைத்தால் வாங்கிக்கொண்டு வாருங்கள்” என்றார். “பைத்தியம்... இங்கே இல்லாத புடவையா அங்கே? புது ஃபேஷனா ஒரு ‘கவுன்’ வாங்கிக்கொண்டு வரட்டுமா? உனக்கு ரொம்ப அழகாக இருக்கும்” என்றார். அதைக் கேட்டதும் கஸ்தூரி பாய்க்கு சிரிப்பு வந்துவிட்டது. “எப்படியோ, நீ சிரித்துவிட்டாய்; அதுபோதும்” என்றபடியே அங்கிருந்து நடையைக் கட்டினார் காந்தி.
அவர், தன் மனைவியிடம் மட்டுமல்ல... குழந்தைகளிடம்கூட அன்பு காட்டினார். குறிப்பாக அவர்களிடம், விளையாட்டாகக்கூடப் பொய் சொல்லக்கூடாது என்று மற்றவர்களுக்கு எடுத்துச் சொன்னார். 1926-ம் ஆண்டு ஓர் இளைஞர், சபர்மதி ஆஸ்ரமத்தில் வந்து தங்கியிருந்தார். அவர், குழந்தைகளிடத்தில் நன்கு பிரபலமானார். ஒருநாள் அவர், எட்டு வயதுப் பெண் குழந்தைக்கு எலுமிச்சைப் பழம் ஒன்றைவைத்து வேடிக்கை காண்பித்துக்கொண்டிருந்தார். அதை எடுத்துக்கொள்ள அந்தக் குழந்தை நினைத்தது. ஆனால், அவரிடமிருந்து அந்தப் பழத்தை எடுக்க முடியவில்லை. மிகவும் களைப்படைந்துபோன அந்தக் குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது. ஆஸ்ரமத்தில் உள்ள ஒரு நோயாளிக்காக அந்த எலுமிச்சைப் பழம் இருந்தது. அவருக்கு இப்போது தர்மசங்கடமான நிலை. இதை அந்தக் குழந்தையிடம் கொடுத்துவிட்டால் நோயாளிக்கு என்ன செய்வது என்று எண்ணினார். உடனே, ‘‘பழத்தை நான் நதியில் வீசிவிட்டேன்’’ என்று குழந்தையிடம் பொய் சொன்னார். ஆனால், உண்மையில் அதை தன் சாமர்த்தியத்தினால் சட்டைப்பைக்குள் மறைத்துவைத்துக்கொண்டார்.
பின்னர், இருவரும் சேர்ந்தே நோயாளி தங்கியிருந்த இடத்துக்குச் சென்றனர். வழியில் அவர் கைக்குட்டையை எடுத்தபோது சட்டைப்பையில் இருந்த எலுமிச்சைப் பழமும் சேர்ந்து கீழே விழுந்துவிட்டது. அதைப் பார்த்த குழந்தை அனைத்தையும் காந்திஜியிடம் போய்ச் சொன்னது. விளையாட்டாகச் செய்த காரியம் என காந்தியடிகள் புரிந்துகொண்டாலும்... அந்த இளைஞரிடம், ‘‘நீ இந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குழந்தைகளிடம் கேலியாகக்கூடப் பொய் சொல்லக்கூடாது. சிரிப்பும் குதூகலத்தோடும் ஆரம்பமாகும் இந்தச் சின்ன விஷயம், பின் வழக்கமாகவே ஆகிவிடக்கூடும்’’ என்று அறிவுரை கூறினார்.
குழந்தைகள் குறித்து மற்றவர்களுக்கு அறிவுரை கூறிய காந்தி, பொதுவான விஷயம்குறித்து தன் நண்பர்களுக்கும் செயல்மூலம் அறிவுரை கூறியிருக்கிறார். ஒருசமயம், காந்தியடிகளுடன் நேரு போன்றவர்கள் நடைப்பயணம் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற வழியில் ஒரு சிறு ஓடை குறுக்கிட்டது. அதைப் பார்த்த காந்தியடிகள், அதில் இறங்காமல் நின்றபடி பின்னே வந்தவர்களிடம், ‘‘இதைத் தாண்டிவிட முடியுமா’’ எனக் கேட்டார். அதற்கு நேருவோ, ‘‘ஓ முடியுமே’’ எனக் கூறியவாறு சற்றுப் பின்னோக்கிச் சென்று மறுபடி வேகமாய் ஓடிவந்து அதைத் தாண்டினார். காந்தியடிகள் புன்னகைத்தவாறே, ‘‘பரவாயில்லை. தாண்டிவிட்டீர்கள். ஆனாலும், ஒரு சிறு விஷயம். ஐந்து அடி அகலமுள்ள இந்த ஓடையைத் தாண்டுவதற்கு நீங்கள் 10 அடி தூரம் பின்னால் செல்ல வேண்டியது இருந்தது’’ எனச் சொல்ல... அங்கிருந்தவர்கள் அனைவரும் அதைக் கேட்டுச் சிரித்தனர்.
‘‘தன் சக மனிதனின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுபவனே சிறந்தவனாகக் கருதப்படுகிறான்’’ என்று சொன்ன மகாத்மா காந்தி, அதுபோலவே வாழ்ந்து காட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.
Post a Comment