அசத்தல் வருமானம் தரும் ஆடு வளர்ப்பு...!

அசத்தல் வருமானம் தரும் ஆடு வளர்ப்பு...! அணுவைக் கொண்டு ஆக்கல், அழித்தல் என்ற இரண்டு வேலைகளையும் செய்வது போலத்தான் தகவல் தொடர்புத்துறை...

அசத்தல் வருமானம் தரும் ஆடு வளர்ப்பு...!

அணுவைக் கொண்டு ஆக்கல், அழித்தல் என்ற இரண்டு வேலைகளையும் செய்வது போலத்தான் தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியும். ஆக்கமா... அழிவா... என்பது நாம் பயன்படுத்தும் முறையில் தான் இருக்கிறது. அந்த வகையில், இன்றைக்கு சமூகச் சீர்கேடுகளில் ஒன்றாக 'ஃபேஸ்புக்' எனும் 'முகநூல்' விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த முகநூல் மூலமாகவே நண்பர்களாகி, விவசாயத்திலும் ஆடு வளர்ப்பிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள் நான்கு இளைஞர்கள் என்றால், ஆச்சர்ய சங்கதிதானே!

விருதுநகரைச் சேர்ந்த விஜயகுமார், சிங்கப்பூரில் இருக்கும் ராமசாமி, கோயம் புத்தூரில் இருக்கும் எத்திராஜ், ஓமன் நாட்டில் இருக்கும் நவநீதகிருஷ்ணன் ஆகிய நால்வரும் தங்கள் பணிகளுக்கு இடையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்வதுடன், கொட்டில் முறை ஆடு வளர்ப்புத் தொழிலையும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

நத்தம்-மதுரை சாலையில் 7-வது கிலோ மீட்டரில் வருகிறது சாத்தாம்பாடிவிலக்கு. இங்கிருந்து இடதுபுறம் திரும்பும் தார்சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் வருகிறது சாத்தாம்பாடி. சாலையை ஒட்டியுள்ள மாமரங்களுக்கு இடையில் இருக்கிறது இவர்களுடைய பசுமைப் பண்ணை. நாம் அங்கே ஆஜரானபோது... ஆடுகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்த விஜயகுமார், நம்மை உற்சாகத்துடன் வரவேற்றுப் பேசினார்.
''எனக்குச் சொந்த ஊரு விருதுநகர். அடிப்படையில ஒரு இன்ஜினீயர். நாலு வருஷமா 'பசுமை விகடன்' படிச்சுட்டு வர்றேன். அதை படிக்கப் படிக்க விவசாயத்து மேல ஆர்வம் வந்துடுச்சு. அதேபோலவே நண்பர்கள் மூணு பேரும் 'பசுமை விகடன்' வாசிக்கறவங்கதான். நாங்க, நாலு பேரும் இன்ஜினீயர்ங்கிற அடிப்படையிலதான் நட்பானோம். ஃபேஸ்புக்ல அப்பப்ப கமெண்ட் போட்டுக்குவோம். அதுல பெரும் பாலும் விவசாயம் தொடர்பான விஷயத்தைப் பத்தித்தான் பேசுவோம். பசுமை விகடன்ல படிச்ச செய்தியைப் பத்தி விவாதிச்சுக்கு வோம்.

பாதை காட்டிய பசுமை விகடன்!
2012 டிசம்பர்ல இருந்து ரொம்ப நெருக்கமான நண்பர்களாயிட்டோம். 2013 ஜனவரியில நாலு பேரும் நேர்ல சந்திக்கத் திட்டமிட்டோம். ராமசாமியின் சொந்த ஊரான சிவகாசி அருகே உள்ள வடமலா புரத்தில் நாலுபேரும் குடும்பத்தோட ஆஜராகி, ஒருத்தருக்கு ஒருத்தர் மனசுவிட்டு பேசிக்கிட்டோம். அதுவரைக்கும் 'ஃபேஸ்புக்' நண்பர்களா இருந்த நாங்க, அதிலிருந்து குடும்ப நண்பர்களா கிட்டோம். ஒரு கட்டத்துல, 'எல்லாரும் சேர்ந்து ஏன் விவசாயம் செய்யக் கூடாது?'னு முடிவு செஞ்சோம். நண்பர்கள் மூணு பேரும் வெளியூர்ல இருக்கறதால, நான் மட்டுமே பண்ணையைப் பாத்துக் கறதுனு முடிவாச்சு. உடனே ராமசாமியோட மாமியார் தோட்டத்தை, குத்தகைக்கு எடுத் தோம்.
இந்த 40 ஏக்கர் தோட்டத்துல... 20 ஏக்கர் மா, 17 ஏக்கர் தென்னை இதெல்லாம் இருக்கு. இங்க இருக்கற மூணு கிணத்துலயும் தாராளமான தண்ணியும் கிடைக்குது. அதனால, ஒருங்கிணைந்தப் பண்ணையா இதை மாத்த நினைச்சோம். கிணத்துல விரால் மீன் வாங்கி விட்டோம். பிறகு, நாட்டுக்கோழி வளர்க்கலாம்னு 50 கோழிகளையும் வாங்கினோம். அந்த நேரத்துல 'பசுமை விகடன்' தண்டோரா பகுதியில வந்த விளம்பரத்தைப் பாத்துட்டு, திண்டுக்கல், கால்நடை அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்துல நடந்த ஆடு வளர்ப்புப் பயிற்சியில கலந்துக்கிட்டேன். அதுக்குப் பிறகு, ஆட்டுப்பண்ணை வெக்குற ஆர்வம் வந்துச்சு. பசுமை விகடன் மூலம் அறிமுகமான ஆட்டுப் பண்ணைகள நேர்ல போய் பாத்தோம். பல பண்ணைகளைப் பாத்ததுல... 'தலைச்சேரி ஆடுகளை வாங்கி, போயர்ல கிராஸ் பண்ணி குட்டி எடுத்து வித்தா நல்ல லாபம் வரும்!'னு தெரிஞ்சுக் கிட்டோம்'' என்று சொன்ன விஜயகுமார், அடுத்தக் கட்டமாக நண்பர்களுடன் ஆலோசித்து, களத்திலும் இறங்கியிருக் கிறார்.

பரண்ல ஆடு... பள்ளத்துல கோழி!
''அம்மன் ஆட்டுப்பண்ணை உரிமை யாளர் சதாசிவத்துகிட்ட ஆலோசனை செஞ்சோம். அவரு சொன்னபடி தென்னைக்கு இடையில, கோ-4, அகத்தி, வேலிமசால், கோ.எஃப்.எஸ்-29 மாதிரி யான பசுந்தீவனங்களை விதைச்சோம். எடுத்தவுடனே பெருசா பண்ணாம சின்ன அளவுல ஆரம்பிச்சு, நெளிவு, சுளிவுகளைத் தெரிஞ்சுக்கிட்டு பிறகு, பெருசா பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். தீவனப் பயிரெல்லாம் வளர்ந்த பிறகு, ஆட்டுபண்ணைக்கான கொட்டில் அமைச்சோம். கொட்டகையை நானே டிசைன் பண்ணி அமைச்சேன். 60 அடி நீளம், 30 அடி அகலத்துல 5 அடி உயரத் துல கொட்டில் அமைச்சுருக்கோம். உள்ளே குட்டிகளுக்கு தனி அறை, சினை ஆடுகளுக்கு தனி அறை, இனப் பெருக்கத்துக்கு தனி அறைனு பிரிச்சுருக்கோம். ஜி.எல் ஸீட் கூரைதான் போட்டிருக்கோம். இதனால, வெப்பம் அதிகமா உள்ள வராது. ஆஸ்பெஸ்டாஸ் மாதிரி சீக்கிரமா உடையாமலும் இருக்கும். இந்த அளவுல குடில் அமைக்க, 6 லட்ச ரூபாய் செலவாச்சு.

கொட்டகை உயரமா இருக்கறதால, பரண்ல ஆடு... பள்ளத்துல நாட்டுக்கோழினு விட்டுட்டோம். சுத்தியும் ஆடுகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள நைலான் வலையை வெச்சு அடைச்சுருக்கோம். கீழ விழுற ஆட்டுப் புழுக்கையில உற்பத்தியாகுற புழு, பூச்சிகளைக் கோழிக தின்னுக்கும்.

ரெண்டு வருஷத்துல மொத்த முதலீட்டையும் எடுத்துடுவோம்!
2013-ம் வருஷம் ஆகஸ்ட் கடைசியில... 30 பெட்டை ஆடு, ஒரு கிடானு வாங்கிட்டு வந்து கொட்டகையில விட்டோம். முப்பது ஆடுகளையும் ஒரே வயசுல வாங்காம, குட்டி, சினையாடு, இனப்பெருக்கத்துக்குத் தயாரா இருக்கற ஆடுனு பல ரகமா வாங்கிட்டு வந்தோம். 6 மாசம் முடிஞ்சுருக்கு. இப்ப கையில 16 குட்டிகள் இருக்கு.

காலையில ஏழு மணிக்கு பசுந்தீவனத்தை வெட்டிட்டு வந்து அரை மணி நேரம் ஆறப்போட்டு, பிறகு மெஷின்ல சின்னச்சின்னதா வெட்டுவோம். 9 மணிக்கு மேல பசுந்தீவனத்தைக் கொடுப்போம். அரைமணி நேரம் கழிச்சு தண்ணி வெப்போம். 11 மணி வாக்குல கொட்டகையைவிட்டு கீழ இறக்கி, கொட்டகையைச் சுத்தி இருக்கற காலி இடத்துல காலாற நடக்க விடுவோம். திரும்பவும் ஒரு மணிக்கு கொட்டகையில ஏத்தி, தீவனமும், தண்ணியும் வெப்போம்.

மருத்துவர்கள் ஆலோசனைப்படி மாசம் ஒரு தடவை குடற்புழு நீக்கம் செஞ்சுடுவோம். மருத்துவர்களோட ஆலோசனைப்படி செய்றதால, எந்தத் தொந்தரவும் இல்லாம போயிட்டு இருக்கு.

ஆறே மாசத்துல 16 குட்டிக கிடைச்சது... எங்களுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. இன்னும் ரெண்டு வருஷத்துல மொத்த முதலீட்டையும் எடுத்திடுவோம். ஆட்டுப்புழுக்கை மட்டும் மாசம் ஒரு டன் பக்கமா வருது. அதை பசுந்தீவனங்களுக்கும் தென்னைக்கும் உரமா பயன்படுத்திக்குறோம்'' என்ற விஜயகுமார்,

''இப்போதைக்கு எல்லாமே சோதனை முயற்சியாதான் பண்ணிட்டிருக்கோம். இதையே பெரிய அளவுல செய்யுறப்ப... அதிக லாபம் கிடைக்கும்னு நம்புறோம். நாங்க நாலு பேரும் ஆசைப்பட்டபடி இந்தத் தோட்டத்தை சிறந்த 'ஒருங்கிணைந்தப் பண்ணை'யா மாத்துவோம்ங்கிற நம்பிக்கை இப்ப நல்லாவே வந்திருக்கு'' என்றார், பளீரிடும் முகத்துடன்!

எதையும் பிளான் பண்ணி பண்ணனும்!
இவர்களுக்குத் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கிவரும் சதாசிவத்திடம் பேசியபோது, ''இன்னிக்கு இருக்கற சூழல்ல விவசாயத்தோட கால்நடை வளர்ப்பையும் செஞ்சாதான் வருமானம் பார்க்க முடியும். பொதுவா ஆடுக இருந்தா வெள்ளாமையைக் கடிச்சுப் போடும்னு ஒரு பயம் இருக்கும். இப்ப அந்த பயமே தேவையில்ல. கொட்டில் முறையில ஆடுகளை வளர்த்தா... ஒரே ஆளு, 100 ஆடுகள் வரை பராமரிக்கலாம். பொதுவா ஆட்டுப்பண்ணைத் தொழில்ல இறங்குற ரொம்ப பேரு தோத்துப் போறதுக்கு காரணம்... முறையான திட்டம் இல்லாதது தான்.

முதல்ல பசுந்தீவனங்களை உற்பத்தி செய்யணும். தீவனம் இல்லாம பண்ணை அமைக்கறதுக்கு இறங்கக் கூடாது. அதேபோல கொட்டகைக்கு அதிக முதலீடு போட்டுட்டு, ஆடு வாங்க காசில்லாம கஷ்டப்படக் கூடாது. முடிஞ்சவரை கொட்டகைச் செலவை குறைச்சா நல்லது. பலரும் எடுத்த எடுப்பிலேயே நூறு ஆடு, இருநூறு ஆடுகனு இறக்கிடுவாங்க. அது ரொம்ப தப்பு. ஆரம்பத்துல இருபது, முப்பது ஆடுகளை வெச்சு, பண்ணையை ஆரம்பிச்சு, நல்ல அனுபவம் வந்த பிறகு அதிகப்படுத்திக்கலாம். தீவனத்தையும், மருந்தையும் சரியா கொடுத்து பராமரிச்சா... ஆட்டுப்பண்ணை மாதிரி லாபமான தொழில் எதுவும் இல்லை.

முதலீடு ரெண்டு மடங்கு அதிகமாகும்!
கொட்டில் முறையில வளர்க்கறதுக்கு தலைச்சேரிபோயர் கிராஸ் ஆடுகள்தான் சிறந்தது. சீக்கிரம் எடை வரும். இன்னிக்கு நிலமையில வளர்ப்பு ஆடு, உயிர் எடையா கிலோ 350 ரூபாய்க்கும், கறி ஆடு உயிர் எடை 250 ரூபாய்க்கும் போகுது. 30 ஆடுக வாங்க கிட்டத்தட்ட ஒண்ணரை லட்ச ரூபாயும், கொட்டில் அமைக்க நாலு லட்ச ரூபாய், பசுந்தீவனம் மத்த விஷயங்களுக்காக ஒரு 50 ஆயிரம்னு மொத்தம் ஆறு லட்ச ரூபாய் தேவைப்படும். இதுக்கு வங்கிகள்ல கடனுதவியும் கிடைக்குது. பண்ணை ஆரம்பிக்க நினைக்கறவங்க, பல பண்ணை களை நேர்ல போய் பாக்கணும். தரமான ஆடுகளா வாங்கிட்டு வந்து, பண்ணையை ஆரம்பிக்கலாம். ஒரே வயசுள்ள ஆடுகளா வாங்கக் கூடாது. சின்னது பெருசுனு பல வயசுள்ள, தெம்பான, நோய் தாக்குதல் இல்லாத ஆடுகளா பாத்து வாங்கணும்'' என்ற சதாசிவம்,

''ஒரு ஆடு, ஒன்பது மாசத்துல பருவத்துக்கு வரும். அதிலிருந்து 8-வது மாசம் குட்டிப் போடும். ஒரு ஆடு ரெண்டு வருஷத்துல மூணு முறை குட்டிப் போடும். தலைச்சேரி ஆடுக ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிப் போடும். அப்ப ரெண்டு வருஷத்துல ஆறு குட்டி கிடைக்கும். தோராயமா ஆறாயிரம் ரூபாய்க்கு வாங்குற ஆடு மூலமா... ரெண்டு வருஷத்துல 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்டிக கிடைச்சுடும். இப்படி முதலீடு ரெண்டு மடங்கா வேறெந்த தொழில்ல பெருகும்?'' என்று கேட்டார் சிரித்தபடியே!

ஓமனிலிருந்து ஒரு ஆட்டுப்பண்ணை!
தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களிடமும் விவசாய ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது பசுமை விகடன். அந்த வகையில், ஓமன் நாட்டிலிருந்தபடி, தன் மனைவி மூலமாக ஆட்டுப் பண்ணைத் தொழிலை மேற்கொண்டிருக்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த மணி.

மாஸ்திகவுண்டன்பதி கிராமத்தில்தான் இருக்கிறது, இவருடைய கொட்டில் முறை ஆட்டுப்பண்ணை. 4 போயர் உட்பட 60 தலைச்சேரி ஆடுகளை இதில் வளர்த்து வரும் மணியின் மனைவி தமிழ்ச்செல்வி, ஆடு வளர்ப்புக்கு தாங்கள் மாறிய கதையை கலகலவென சொன்னார்.

''சொந்த ஊரு கோயம்புத்தூருதான். என்னோட கணவர், ஒரு இன்ஜினீயர். அவர், வளைகுடா நாடுகள்ல வேலை பார்க்கறதால... 29 வருஷமா அங்கதான் இருந்தோம். ஓய்வுநேரத்துல 'ஃபேஸ்புக்' பார்க்கற வழக்கம் அவருக்கு உண்டு. அதுலயும் விகடன் குழும இதழ்களோட 'ஃபேஸ்புக்' எல்லாத்தையும் விடாமல் பார்ப்பார். அப்படி பசுமை விகடன் 'ஃபேஸ்புக்' பார்க்க ஆரம்பிச்சதுல, விவசாயம், கால்நடை வளர்ப்பு மேல அவருக்கு ஆர்வம் வந்துடுச்சு.
ஏற்கெனவே இந்த கிராமத்துல தண்ணீர் வசதியோட ஒண்ணரை ஏக்கர் நிலம் எங்களுக்கு இருந்துச்சு. சில வருஷத்துல ஊர் திரும்பி, அதுல வீடுகட்டி குடியிருக்கலாம்னு யோசனை எங்களுக்கு இருந்துச்சு. ஆனா, ஆட்டுப்பண்ணை அமைக்க லாம்கிற ஆர்வம் காரணமா என்னை மட்டும் ஊருக்கு அனுப்பினார். உடனடியா ஆட்டுபண்ணையை உருவாக்கிட்டேன். தினமும் போன் மூலம் தகுந்த ஆலோசனைகளை அங்கிருந்தபடியே சொல்லிட்டு வர்றார் கணவர்'' எனும் தமிழ்செல்விக்கு, ஆட்டுப் பண்ணை அமைக்க, மொத்தம் ஆன செலவு 14 லட்சம் ரூபாய்.

''60 க்கு 40 அடி நீளத்தில் 7 அடி உயரமுள்ள பால்கனி மீது 7 அடி உயரம் கொண்ட செட் அமைச்சு இருக்கோம். தீவனப்புல் 1 ஏக்கர்ல போட்டிருக்கோம். அடர்தீவனமும் கொடுக்கிறோம். பண்ணை அமைச்சு 3 மாசம்தான் ஆச்சு. இப்ப 7 குட்டிகள் புது வரவா வந்திருக்கு. இன்னும் 10 மாசம் கழிச்சுத்தான் வருமான கணக்கு சொல்லமுடியும்.

ஆடுவளர்க்கற அனுபவ விவசாயிகள்கிட்டயும், தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி மையம் நடத்தின ஆடுவளர்ப்புப் பயிற்சியிலும் கலந்துக்கிட்டு நிறைய தொழில்நுட்பங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். இப்ப பக்காவான ஆடுவளர்ப்பு விவசாயியா மாறிட்டேன். இது மொத்தத்துக்கும் காரணமே பசுமை விகடன்தான்'' என்று ஆட்டுக்குட்டிகளைச் செல்லமாக அணைத்தபடி சொன்னார் தமிழ்ச்செல்வி.

மணியிடம் தொலைபேசி மூலமாக பேசியபோது, ''எனக்கு ரெண்டு பொண்ணுங்க. மூத்தப் பொண்ணுக்கு கல்யாணமாகிடுச்சு. மாப்பிள்ளையும் ஓமன்லதான் வேலை பாக்கறாரு. ரெண்டாவது பொண்ணு, சொந்த ஊர்லயே காலேஜ் படிக்கறா. பசுமை விகடன் படிச்ச பிறகு, 'வெளிநாட்டுல வேலை பாத்தது போதும். சொந்த ஊருக்குப் போய் விவசாயம் பாக்கலாம்’னு முடிவு பண்ணியிருந்தேன். ஆள் பற்றாக்குறை இருக்கறதால, பராமரிப்பு குறைவான, சந்தை வாய்ப்புள்ள ஆடு வளர்ப்புத் தொழிலைத் தேர்ந்தெடுத்திருக்கேன். தீவனம் வெட்டிப் போடுறதுக்கு ஒரு ஆளை மட்டும் வேலைக்கு வெச்சுருக்கோம். பராமரிப்புச் செலவை எந்தளவுக்குக் குறைக்கிறோமோ அந்தளவுக்கு லாபம் அதிகரிக்கும். ஆரம்பத்துல ஒரு ஆட்டுக்கான பராமரிப்புச் செலவு, ஒரு மாசத்துக்கு 14 ரூபாயா இருந்துச்சு. இப்ப 10 ரூபாயா குறைச்சுருக்கோம் (தீவனம் தவிர்த்து). சீக்கிரமே நானும் இந்தியாவுக்குத் திரும்பி, ஆடு வளர்ப்புல முழு கவனம் செலுத்தப் போறேன்'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார், மணி.
மணியுடன் தொடர்புகொள்ள : mrtmani@yahoo.co.in
தொடர்புக்கு,
விஜயகுமார்,
செல்போன்: 93444-16089

Related

விவசாயக்குறிப்புக்கள் 2991358399048589082

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Apr 2, 2025 12:14:51 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,136,535

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item