நீங்கள் கேட்டவை: இடுபொருள் கடை வைக்க பட்டயப்படிப்பு படிக்க வேண்டுமா?
‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விப் படிப்பில் வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கான பட்டயப் படிப்பு உள்ளதா? வேறு...

எம்.புண்ணியமூர்த்தி, பட்டுக்கோட்டை.
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநர் முனைவர் பெ.சாந்தி பதில் சொல்கிறார்.
‘‘நாட்டின் வேளாண்மைப் பல்கலைக் கழகங்களிலேயே முதல் முறையாகத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்தான் தொலைதூரக் கல்வியை அறிமுகப்படுத்தியது. 2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்வித் திட்டம், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் மூலம் செயல்படுகிறது.
இவ்வியக்ககத்தில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களை அடிப்படையாகக் கொண்டு நவீனக் கரும்புச் சாகுபடித் தொழில்நுட்பங்கள், காய்கறி விதை உற்பத்தி, தோட்டக்கலைப் பயிர்களுக்கான நாற்றங்கால் தொழில்நுட்பங்கள், பயிர்ப் பெருக்க முறைகள், காளான் வளர்ப்பு, பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பதப்படுத்துதல், தரிசுநில மேம்பாடு, தேனீ வளர்ப்பு, பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பதப்படுத்துதல், திடக்கழிவுகளில் மண்புழு உரம் தயாரித்தல், பண்ணைக் கருவிகளில் பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல், தென்னைச் சாகுபடித் தொழில்நுட்பங்கள், பருத்திச் சாகுபடித் தொழில்நுட்பங்கள், அலங்காரத் தோட்டம் அமைத்தல், நவீனப் பாசனமுறை மேலாண்மை, மூலிகைப் பயிர்கள், ரொட்டி மற்றும் சாக்லேட் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள், மலர்ச் சாகுபடித் தொழில்நுட்பங்கள், பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், அங்கக வேளாண்மை, சிறுதானியச் சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டல் ஆகிய சான்றிதழ் பாடங்கள் வழங்கப்படுகின்றன. இவையனைத்தும் தொழில் தொடங்குவதற்கான தொழில்நுட்பங்களையும் வேளாண்மையில் அதிக லாபம் ஈட்டுவதற்கான உயரிய தொழில்நுட்பங்களையும் வழிமுறைகளையும் உள்ளடக்கியதாகும். தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவர்கள், ஆறாம் வகுப்பு பயின்றவர்கள் இதில் சேர்ந்து பயன்பெறலாம்.
விவசாயிகள் தாங்கள் ஈடுபடும் விவசாயத் தொழிலில் அனைத்து வேளாண் தொழில்நுட்பங்களையும் தெரிந்துகொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்படும் வண்ணம், தாமும் ஒரு பட்டதாரி என்ற சமூக அங்கீகாரத்தைப் பெற்றிடும் வகையில் பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. இதில் இளநிலைப் பண்ணைத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (B.F.Tech), 2010-ம் ஆண்டில் உலகளவில் முதல் முறையாக இங்கு தொடங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு வரை படித்த, 27 வயது நிரம்பிய விவசாயப் பெருமக்களுக்கு இந்தப் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.
இளநிலைப் பண்ணைத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (M.F.Tech), 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது. வரும் கல்வியாண்டு முதல் இளநிலைப் பண்ணைத் தொழில்நுட்பப் பட்டப் படிப்பானது (B.F.Tech), இளநிலைப் பண்ணை அறிவியல் (B.Farm Science) என்ற பெயரில் வழங்கப்படவுள்ளது.
இளநிலைப் பட்டப்படிப்பு முடித்து பணியில் உள்ளவர்களும், முதுநிலைப் பட்டப்படிப்பைத் தொடர முடியாதவர்களும் படிப்பதற்கு ஏற்ற வகையில் முதுநிலைப் பட்டப்படிப்புகளான வணிக மேலாண்மை, சுற்றுச்சூழல் மேலாண்மை, கரும்பு உற்பத்திக்கான தொழில்நுட்பங்கள், முதுநிலைப் பட்டயப்படிப்புக்கான எரிசக்தி மேலாண்மை, தாவரத் தொற்று நோய்த் தடுப்பு முறைகள், வேளாண்மையில் மல்ட்டி மீடியா, உணவு உயிர்த் தொழில்நுட்பம், உணவு அறிவியல் மற்றும் பதப்படுத்துதல், உயிர்த் தகவலியல், மூலிகைப் பயிர்கள் மற்றும் தரக் கட்டுப்பாடு ஆகிய பாடங்கள் நடத்தப்படுகின்றன. மத்திய அரசின் வேளாண் இடுபொருள்களுக்கான 2015-ம் ஆண்டின் சட்டத்திருத்தத்தின்படி, வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் வேளாண் பட்டயப்படிப்பினை அடிப்படைத் தகுதியாகப் பெற்றிருக்க வேண்டும். இதைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் மூலம் வேளாண் பட்டயப்படிப்பினை 2016-ம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது.
தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் நடத்தப்படும் பாடங்கள் அனைத்தும் விவசாயிகளின் நலனை முன்னிட்டு வார விடுமுறை நாள்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதுமுள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் மையங்களைத் தொடர்புகொண்டும் இப்பாடத்திட்டங்கள் குறித்து அறிந்துகொள்ளலாம்.’’
தொடர்புக்கு: இயக்குநர், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் - 641003.
தொலைபேசி: 0422 6611229.
Post a Comment