ஈஸி டிப்ஸ்..! ஹைஜீன் கிச்சன்!
ஹைஜீன் கிச்சன்! ஈஸி டிப்ஸ் வீ ட்டில் உள்ள சமையலறை என்பது ஒரு கோயிலின் கருவறை போன்றது. வீட்டில் உ...
க்ளீன் கிச்சன்
கிச்சனில் காணப்படும் கிருமிகள், இ-கோலை, சால்மொனெல்லா, காம்பைலோபாக்டர் (E-Coli, Salmonella, Campylobacter) போன்றவை. கைகள், துணிகள், உணவுப்பொருட்கள் ஒன்றோடு ஒன்று புழங்குவதால் உருவாகும் தொற்றுக்கள் மற்றும் கிச்சனுள்ளே வரும் வளர்ப்புப் பிராணிகள் மூலமாகத்தான் பெரும்பாலும் கிருமிகள் பரவுகின்றன. எனவே, வாரம் ஒருமுறை கிச்சனை முழுமையாகச் சுத்தம்செய்ய வேண்டும். கிச்சனில் உள்ள பொருட்களில் குளிர்சாதனப்பெட்டியும், பாத்திரம் கழுவும் சின்க்கும்தான் பெரும்பாலான கிருமிகளுக்கு உறைவிடமாக உள்ளன. அதிகம் கவனம் எடுத்துப் பார்த்துக்கொள்ள வேண்டியவை இந்த இடங்களைத்தான்.
கிச்சன் தரையைத் துடைக்க, ஒரே துணியைப் பயன்படுத்தக் கூடாது. சுத்தம்செய்யப் பயன்படுத்தப்படும் ஸ்பான்ச்சையும் உடனுக்குடன் மாற்ற வேண்டும். கீழே சிந்தும் உணவுப்பொருட்களை உடனடியாகச் சுத்தம்செய்ய வேண்டும். அடுப்புமேடையையும் ஒவ்வொரு வேளைக்கு உணவு சமைத்த பிறகும் சுத்தம் செய்ய வேண்டும். குப்பைத்தொட்டியை கிச்சனுக்கு வெளியே வைத்திருக்க வேண்டும். குப்பைத்தொட்டியின் அடியில் ஒரு கவர் போட்டுவைக்க வேண்டும்.
கிச்சனில் உள்ள காபி மேக்கர், ஓவன், ஹீட்டர் போன்றவற்றின் வொயர்கள் சரியாக உள்ளதா என அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளவும். ஈரக் கைகளோடு எலெக்ட்ரிக் பொருட்களைக் கையாள்வதைத் தவிர்க்கவும். பழுதான சாதனங்களையும் பயன்படுத்தாதீர்கள்.
பாத்திரங்களைக் கையாளும் முறைசமைத்து முடித்த பிறகு, எண்ணெய் மற்றும் பால் பிசுபிசுப்பு உள்ள பாத்திரங்களை மிதமான வெந்நீரில் கழுவிக் காயவைப்பது சிறந்தது. கழுவிய உடனேயே, மறு பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளாமல், கழுவிக் காயவைத்த பிறகே பயன்படுத்த வேண்டும். சோப் அல்லது டிஷ்வாஷ் பவுடர் வைத்திருக்கும் டப்பாக்களில் தண்ணீர் தேங்குவதால், அதிக அளவில் கிருமிகள் அங்கு வளர ஏதுவாகிறது. அதனால், சிறிய சோப்கள் அல்லது தேவையான அளவு பவுடரைக் கொட்டிவைத்துப் பயன்படுத்தலாம்.சமைக்கப்பட்ட உணவு பல நாட்கள் மூடப்பட்டு இருந்தால், அதனுள் பூஞ்சை பூத்திருக்க வாய்ப்பு உண்டு. அவற்றை கிச்சனுக்கு உள்ளே திறந்தால், மற்ற பொருட்களிலும் கிருமிகள் பரவும். அதனால், வெளியே சென்று பாத்திரத்தைத் திறந்து அப்புறப்படுத்த வேண்டும். இயன்றால், பூஞ்சைபிடித்தப் பாத்திரங்களை மறுபடியும் பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது.
சமைக்கும்போது ஏப்ரன் அணிந்துகொண்டு, தலைமுடியைக் கட்டிக்கொண்டு சமைக்க வேண்டும். ஆபரணங்கள் நிறைய அணிந்துகொண்டு சமைப்பதையும் தவிர்ப்பது நலம். சமைப்பவர் கை நகங்கள் வெட்டப்பட்டு, சுத்தமாக இருப்பது மிக மிக அவசியம். கைகளில் வெட்டுக் காயங்கள் இருந்தால், சமைப்பதைத் தவிர்ப்பது நல்லது. இதனால், காயங்களில் இருந்து பாக்டீரியா உணவில் பரவுவதைத் தவிர்க்கலாம்.ஒவ்வோர் உணவு வகையையும் செய்துமுடித்த பின்னரும், கையைச் சுத்தம்செய்வது மிகமிக அவசியம். சோப் அல்லது ஹேண்ட்வாஷ்கொண்டு கையைக் கழுவி, சுத்தமான துணியால் கைகளைத் துடைக்கலாம்.
பாத்திரம் அடுப்பில் இருக்கும் நேரம் முழுக்க, உங்கள் கவனம் அதன் மேலே இருக்கட்டும். துடைக்கும் துணிகள், பிளாஸ்டிக் கவர் போன்றவற்றை அடுப்பிலிருந்து தள்ளிவைக்கவும். மிகமிக முக்கியமான ஒரு விஷயம்... சமைக்கும்போது போன் பேசிக்கொண்டே சமைப்பதையும் தவிர்க்கவும்.
பழங்கள், காய்கறிகள்
காய்கறிகளையும் இறைச்சிகளையும் சேர்த்துவைக்கக் கூடாது. காய்கறிகள் கழுவும் சின்க்கில் இறைச்சியைக் கழுவ வேண்டாம். இறைச்சியை கிச்சனுக்கு வெளியே கழுவலாம். பழங்களை, குளிர்ந்த ஓடும் நீரில் கழுவ வேண்டும். இறைச்சி மற்றும் காய்கறிகளை நறுக்கத் தனித்தனி கத்திகள் மற்றும் கட்டிங் போர்டு பயன்படுத்துவது நலம். வெளியே வைக்கப்படும் பழங்கள் அல்லது சில ஆர்கானிக் பொருட்கள் மேல் `ஃப்ரூட் ஃப்ளை’ எனப்படும் ஈக்கள் உட்காரும். எனவே, பழங்களைக் கழுவிய பிறகு, ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவது நல்லது. சமைத்த பொருட்களை இரண்டு மணி நேரங்களுக்கு மேல் வெளியில் வைக்காதீர்கள். ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரூட்டி, பிறகு பயன்படுத்தும்போது, சரியான தட்பவெப்பத்தில் உணவைச் சூடேற்றிப் பயன்படுத்த வேண்டும். சமைக்கப்படாத உணவைச் சமைத்த உணவோடு சேர்த்துவைப்பதையும் தவிர்க்க வேண்டும்.
Post a Comment