திருமணம் - சைவ விருந்து!

திருமணம் - சைவ விருந்து! இது திருமண சீஸன். திருமண விருந்தின்போது வாழை இலையில் என்னனென்ன உணவுகள் பரிமாறப்படும் என்பதைச...

திருமணம் - சைவ விருந்து!
இது திருமண சீஸன். திருமண விருந்தின்போது வாழை இலையில் என்னனென்ன உணவுகள் பரிமாறப்படும் என்பதைச் செய்து காட்டி வாழை இலையில் பரிமாறியிருக்கிறார் சங்கீதா. இங்கு பரிமாறப்பட்டிருக்கும் ரெசிப்பிக்களே, உள்ளே அணிவகுத்திருக்கின்றன. வாழை இலையில் முதலில் உப்பு வைப்பதில் துவங்கி, பாயசம் வைப்பதுவரை எப்படி பரிமாறப்பட வேண்டும் என்பதை முறைப்படி இங்கே புகைப்படமாக எடுத்திருக்கிறோம்.

மாங்காய் ஊறுகாய்
தேவையானவை:

மாங்காய் -100 கிராம் (விருப்பமான சைஸில் நறுக்கவும்)
மஞ்ச‌ள்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு தாளித்து உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் மாங்காய்த் துண்டுகள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்கினால், மாங்காய் நறுக்கென இருக்கும். மிருதுவாக வரவேண்டுமானால் மேலும் ஒரு நிமிடம் கிளறி, இறக்கினால் மாங்காய் ஊறுகாய் ரெடி.

கேரட் பச்சடி
தேவையானவை:
தயிர் - 25 கிராம்
கேரட் - 2 (துருவியது)
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)
தாளிக்க:

எண்ணெய் - அரை டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
இஞ்சி - அரை டீஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)
உளுந்து - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
செய்முறை:

ஒரு கிண்ணத்தில் தயிர், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, முட்டை அடித்துக் கலக்கும் கரண்டியால் க்ரீம் பதத்துக்கு அடித்துக் கலக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, தாளிக்க வேண்டியதைச் சேர்த்துத் தாளித்து கேரட், சீரகம், கொத்தமல்லித்தழை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும். இதை தயிர்க்கலவையில் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.

செளசெள கூட்டு
தேவையானவை:

செளசெள - 200 கிராம் (மீடியமான சைஸில் நறுக்கவும்)
பாசிப்பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பெரியவெங்காயம் - 1 சிறியது (பொடியாக நறுக்கவும்)
மீடியம் சைஸ் தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்)
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
அரைக்க:

தேங்காய்த்துருவல் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை டீஸ்பூன்
தாளிக்க:

எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுந்து - கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
சீரகம் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கடுகு - அரை டீஸ்பூன்
செய்முறை:

கடலைப்பருப்பையும், பாசிப்பருப்பையும் இருபது நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்தவற்றை சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் பேஸ்டாக அரைத்து வைக்கவும். பருப்புகளைத் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து லேசாக வேக வைக்கவும். குழைத்துவிட வேண்டாம். வெந்த பருப்புக் கலவையில் வெங்காயம், தக்காளி, செளசெள சேர்த்துக் கலக்கி அரைத்த விழுதைச் சேர்த்து உப்பு, தேவையான அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் வேக விடவும். செளசெள வெந்ததும் இறக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துத் தாளித்து செளசெளவில் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.


முட்டைகோஸ் பொரியல்
தேவையானவை:

முட்டைகோஸ் - 25 கிராம் (பொடியாக நறுக்கவும்)
மீடியம் சைஸ் பெரியவெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 3 (கீறி விடவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுந்து - அரை டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு, முட்டைகோஸ், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் விட்டு மூடி போட்டு குறைந்த தீயில் முக்கால் மணி நேரம் வேக விடவும்.  முட்டைகோஸ் வெந்ததும் மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை, தேங்காய்த்துருவல் தூவி அடுப்பை அணைத்துப் பரிமாறவும்.

வெண்டைக்காய் வறுவல்
தேவையானவை:

வெண்டைக்காய் - 300 கிராம்
மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு  (பொடியாக நறுக்கவும்)
தேங்காய்த்துருவல் -  சிறிதளவு (விருப்பப்பட்டால்)
தாளிக்க:

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, தாளிக்க வேண்டியதைத் தாளித்து கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் வெண்டைக்காய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் மிதமான தீயில் வேக விடவும். பிறகு தீயை முற்றிலும் குறைத்து, வெண்டைக்காயை மூடி போடாமல் வேக விடவும். காய் வெந்த பிறகு மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். இறுதியாக விருப்பப்பட்டால் தேங்காயைச் சேர்த்துக் கிளறி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

உருளைக்கிழங்கு பொடிமாஸ்
தேவையானவை:

உருளைக்கிழங்கு - 4  (வேக வைத்துக் கொள்ளவும்)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)
பூண்டு - 2 பல்  (நசுக்கிக் கொள்ளவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு  எண்ணெய்  - முக்கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை   - சிறிதளவு   (பொடியாக நறுக்கவும்)
தாளிக்க:

 கடுகு - கால் டீஸ்பூன்
 சோம்பு - கால் டீஸ்பூன்
 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
 உடைத்த வெள்ளை உளுந்து - 1 டீஸ்பூன்
செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் நீக்கி, மீடியமான சைஸில் நறுக்கித் துண்டுகளாக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, தாளிக்க வேண்டியவற்றைத் தாளிக்கவும். இதில் வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து, உருளைக்கிழங்கில் மசாலா ஒட்டும் வரை வதக்கி கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

மோர்க்குழம்பு
தேவையானவை:
வெண்பூசணி - 150 கிராம்
தயிர் - 100 மில்லி
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
அரைக்க: 
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
பச்சரிசி - 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 25 கிராம்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிக்க:

தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1  (உடைத்துக் கொள்ளவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:

தயிரை முட்டை கலக்கும் கரண்டியால் தண்ணீர் சேர்க்காமல் க்ரீம் பதத்துக்கு அடித்து வைக்கவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, மற்றும் பச்சரிசியை கால் கப் மிதமான சூடு உள்ள தண்ணீரில், இருபது நிமிடம் ஊற வைக்கவும். ஊறிய பருப்புகள், பச்சரிசி, தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து பேஸ்டாக அரைத்து வைக்கவும். பூசணிக்காயை தோல் நீக்கி, மீடியம் சைஸில் நறுக்கி தண்ணீர் ஊற்றி வேகவைத்து எடுத்து வைக்கவும். அடுப்பில், வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து, பூசணிக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இதில், அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தீயை மிதமாக்கி வேக விடவும். கலவை நுரை கட்டி வரும் போது அடுப்பை அணைத்து தயிர், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கி மூடி, சிறிது நேரம் கழித்துப் பரிமாறவும்.

வத்தக்குழம்பு
தேவையானவை:

சின்னவெங்காயம் - 10 (தோல் உரித்து கொள்ளவும்)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்)
சுண்டைக்காய்/மணத்தக்காளி வத்தல் - 2 டேபிள்ஸ்பூன்
புளிக்கரைசல் - கால் கப்
பூண்டு - 10 பல்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்
வெல்லம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - அரை டேபிள்ஸ்பூன்
தாளிக்க:

நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
வெந்தயம் - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
வறுத்தரைக்க:

மல்லி (தனியா) - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
உரித்த சின்ன வெங்காயம் - 5
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - அரை டீஸ்பூன்
செய்முறை:

வறுத்து அரைக்க வேண்டியவற்றை அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து ஆற விடவும். இதை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும். சுண்டைக்காய்/மணத்தக்காளி வத்தலை அரை டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து தனியாக வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதைச் சேர்த்துப் பொரிய விடவும். இதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பூண்டு சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும். இத்துடன் தக்காளியைச் சேர்த்து கரையும் வரை வதக்கி, அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் வேளையில், வறுத்த சுண்டைக்காய்/மணத்தக்காளி வற்றல், வெல்லம் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்துப் பரிமாறவும்.

கத்திரிக்காய்+முருங்கைக்காய் சாம்பார்
தேவையானவை:

 துவரம் பருப்பு - 200 கிராம்
 கத்திரிக்காய் - 3 (சிறியது)
 முருங்கைக்காய் - 2
 சாம்பார் வெங்காயம் - 10
(தோல் நீக்கி இரண்டாக நறுக்கி வைக்கவும்)
 தக்காளி - 1 (மீடியம் சைஸில் நறுக்கவும்)
 துருவிய தேங்காய் - கால் டீஸ்பூன்
(கால் கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்)
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்
 சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
(பொடியாக நறுக்கவும்)
 விளக்கெண்ணெய் - சிறிதளவு
 புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
(கரைத்து வடிகட்டவும்)
தாளிக்க:

 எண்ணெய்/நெய் - 3 டீஸ்பூன்
 கடுகு - அரை டீஸ்பூன்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 சோம்பு - அரை டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
 கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:

துவரம் பருப்பைக் கழுவி தண்ணீர் ஊற்றி, சில சொட்டுக்கள் விளக்கெண்ணெய் விட்டு, வேக வைத்து, தனியாக வைக்கவும். காய்கறிகளைக் கழுவி விருப்பமான வடிவத்தில் நறுக்கி தனியாக வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, தக்காளியைச் சேர்த்து கரையும் வரை வதக்கவும். இதில் கத்திரிக்காய், முருங்கைக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சாம்பார் பொடி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். வேக வைத்த துவரம் பருப்பை இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர், உப்பு, கொத்தமல்லித்தழை, துருவிய தேங்காய் சேர்த்து மூடி போட்டு, காய்கறிகள் வேகும் வரை மிதமான தீயில் வைக்கவும். காய்கறிகள் வெந்ததும் புளிக்கரைசல் ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து, அடுப்பை அணைத்து விடவும். அடுப்பில் வாணலியை வைத்து மீதம் இருக்கும் எண்ணெயை ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்துத் தாளித்து சாம்பாரில் ஊற்றிக் கலக்கிப் பரிமாறவும்.

பருப்பு ரசம்
தேவையானவை:

துவரம் பருப்பு - 100 கிராம்
மிளகு - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
காய்ந்த மிளகாய் - 4
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை  - சிறிதளவு  (பொடியாக நறுக்கவும்)
மீடியம் சைஸ் தக்காளி - 1
பெருங்காயத்தூள்  - கால் டீஸ்பூன்
ரசப்பொடி - 1 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:

துவரம் பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து மசித்து வைக்கவும். மிளகு, சீரகம், பூண்டு முதலியவற்றை நசுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்து, பூண்டு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். இதில் தக்காளியைச் சேர்த்து கரையும் வரை வதக்கி, வெந்த துவரம் பருப்பு, ரசப்பொடி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். ரசம் நுரை கட்டி வரும் போது அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழை தூவி, ரசத்தை மூடி போட்டு சிறிது நேரம் கழித்துப் பரிமாறவும்.


சேமியா பாயசம்
தேவையானவை:

சேமியா - 50 கிராம்
பால் - ஒரு லிட்டர்
சர்க்கரை - 100 கிராம்
குங்குமப்பூ - 2
முந்திரி - 15
திராட்சை (கிஸ்மிஸ் பழம்) - 8
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துண்டுகள்  - 2 டேபிள்ஸ்பூன்  (பொடியாக நறுக்கவும்)
நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:

அடுப்பில் எண்ணெய்ச் சட்டியை வைத்து, நெய் ஊற்றி முந்திரி, தேங்காய்த்துண்டுகள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும். இதே எண்ணெய்ச் சட்டியில் திராட்சை (கிஸ்மிஸ் பழம்), சேமியா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துத் தனியாக வைக்கவும். கனமான அடிப்பகுதியுள்ள வாணலியை அடுப்பில் வைத்து பாலை ஊற்றிக் கொதிக்க விடவும். பால் கொதிக்க ஆரம்பித்ததும் தீயை மிதமாக்கி, இரண்டு நிமிடம் கழித்து, வறுத்த சேமியா, குங்குமப்பூ சேர்த்து மூன்று நிமிடம் கொதிக்க விடவும். சேமியா அதிகம் வெந்துவிட்டால் பாயசம் கஞ்சி போல கெட்டியாகிவிடும். சேமியா முக்கால் பதம் வெந்தததும், சர்க்கரை சேர்த்து மூன்று நிமிடம் கொதிக்க விடவும். இதில் ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை (கிஸ்மிஸ்), தேங்காய்த்துண்டுகள் சேர்த்துக் கலக்கி அடுப்பை அணைத்து ஆற வைத்துப் பரிமாறவும்.


மசாலா பருப்பு வடை
தேவையானவை:

பட்டாணிப் பருப்பு - 1 கப்
கடலைப்பருப்பு - அரை கப்
சோம்பு - அரை டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கவும்)
மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 1(பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)
கொத்தமல்லித்தழை  - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:

பட்டாணி மற்றும் கடலைப்பருப்பை தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின் தண்ணீர் வடித்து, பச்சை மிளகாய், அரை டீஸ்பூன் சோம்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். அரைத்தவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்து எண்ணெய் நீங்கலாக மீதம் இருக்கும் பொருட்களை எல்லாம் சேர்த்து மொத்தமாக உருட்டி வைக்கவும். கனமான அடிப்பகுதியுள்ள வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் வைக்கவும். எண்ணெய் சூடானதும், வாழை இலையில் எண்ணெய் தடவி வடைகளாகத் தட்டி எண்ணெயில் இட்டு, பொரித்து எடுக்கவும். சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

உளுந்த வடை
தேவையானவை:

உளுந்து - 150 கிராம்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)
கொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி - ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும்)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:

உளுந்தை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து, மிளகு சேர்த்து நைஸாக அரைத்து வைக்கவும். மாவு தண்ணீரில் மிதக்கும் பதமே சரியான வடை பதம். இதில் அரிசி மாவு, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் சூடுபடுத்தவும். உள்ளங்கையில் தண்ணீர் தடவி, எலுமிச்சை அளவு உருண்டையை உள்ளங்கையில் வைத்து வடையாகத் தட்டி, எண்ணெயில் இட்டு வேக விடவும். இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

சுய்யம்
தேவையானவை:

மைதா - 5 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 150 கிராம்
வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய் - 5 (தூளாக்கிக் கொள்ளவும்)
முந்திரி, பாதாம் பருப்பு - சிறிதளவு (பொடியாக நறுக்கி கொள்ளவும்)
உப்பு - கால் டீஸ்பூன்
பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க‌த்தேவையான அளவு
செய்முறை:

கடலைப்பருப்பை குக்கரில் சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து ஆற வைக்கவும். வெல்லத்தை பொடித்து வைக்கவும். இதில் வேக வைத்த கடலைப்பருப்பைச் சேர்த்து கொரகொரப்பாக ஓட்டி எடுக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். இதை ஒரு கிண்ணத்தில் மாற்றி முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு சேர்த்துக் கிளறி, சிறிய எலுமிச்சை வடிவ உருண்டைகளாக உருட்டி வைக்கவும். வாய் அகன்ற பாத்திரத்தில் மைதா, மஞ்சள்தூள், பேக்கிங் சோடா, உப்பு, ஏலக்காய்த்தூள் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து போண்டா மாவு பதத்துக்குக் கரைத்து வைக்கவும். அடுப்பில் கனமான அடிப்பகுதியுள்ள வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டிய பருப்பு உருண்டையை எடுத்து மைதாவில் முக்கி எண்ணெயில் மெதுவாக இட்டு வேக விடவும். சுய்யம் பிரவுன் நிறம் ஆனதும், ஜல்லிக்கரண்டியால் எடுத்து பேப்பர் டவலில் வைத்து ஆற விட்டுப் பரிமாறவும். இப்படி மீதம் இருக்கும் அனைத்து உருண்டைகளையும் வேகவிட்டு எடுக்கவும்.

இனிப்பு உளுந்து வடை
தேவையானவை:

முழு உளுந்து - 150 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய் - 3
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய்   - பொரிக்க‌த் தேவையான அளவு
செய்முறை:

உளுந்தைக் கழுவி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பின் தண்ணீர் வடித்து மிக்ஸியில் சர்க்கரை, ஏலக்காயோடு சேர்த்து தண்ணீர் இல்லாமல் பேஸ்டாக அரைக்கவும். தேவைப்பட்டால், தண்ணீரை லேசாகத் தெளித்துக் கொள்ளலாம். மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி உப்பு சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், தீயை மிதமாக்கவும். இனி, உள்ளங்கையில் தண்ணீர் தொட்டு மாவை எடுத்து, உள்ளங்கையில் வைத்து வடை வடிவத்துக்கு தட்டி எண்ணெயில் விட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக விட்டு எடுத்து கிச்சன் டவலில் வைக்கவும். அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சப்பட்ட பிறகு இதை வாழைப்பழத்துடன் பரிமாறவும். வடை செய்த பிறகு இரண்டு மணி நேரம் கழித்து பரிமாறினால் சுவை அதிகமாகும்.

Related

சமையல் குறிப்புகள்-சைவம்! 3853400832798947300

Post a Comment

1 comment

'பரிவை' சே.குமார் said...

நல்ல தொகுப்பு...
தங்கள் தளத்தில் படித்து கருத்திடும் போது விளம்பர பக்கங்கள் தோன்றுகிறதே...

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item