ஆஹா கறுப்பு !
மதி வெங்கட்ராமன்கிளினிகல் நியூட்ரிஷினிஸ்ட்
கறுப்பு, கருநீல நிறம்கொண்ட உணவுகளில் ஃப்ளேவனாய்ட்ஸ்
(Flavonoids), ஆந்தோசியானின் (Anthocyanin) மற்றும் ஐசோஃபேளேவன்ஸ்
(Isoflavones) போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. இவை, நினைவாற்றல்
குறைவு முதல் புற்றுநோய் வரை, பல பாதிப்புகளில் இருந்து நம்மைப்
பாதுகாக்கின்றன.
கறுப்பு உளுந்து
தோல் நீக்கப்படாத உளுந்தில், இரும்புச்சத்து, ஃபோலிக்
அமிலம், கால்சியம் மற்றும் மக்னீசியம் இருப்பதால், பெண்களின் இனப்பெருக்க
மண்டலத்தின் செயல்திறனுக்கு மிகவும் நல்லது. ஊட்டசத்துக்கள் நிறைந்த
பருப்பு என்பதால், இதை அதிகம் சாப்பிட, நோய் எதிர்ப்புச் சக்தி
அதிகரிக்கும். புளிக்கவைக்கப்பட்ட உளுந்தில், உடலுக்குத் தேவையான அமினோ
அமிலங்கள், கால்சியம், தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன.
பீட்ரூட்
பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ,
பி6, சி மற்றும் ஃபோலிக் ஆசிட் உள்ளன. தினமும் பீட்ரூட் சாற்றைக்
குடித்துவர, உயர் ரத்த அழுத்தம் குறையும்.
பீட்டாசியானின் (Betacyanin) எனும் நிறமி
ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படுகிறது. இது கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய
நோய், பக்கவாதம் வராமல் தடுக்கிறது. இரும்புச்சத்து செறிந்து உள்ளதால்
ரத்தசோகையைப் போக்கும்.ஃபோலிக் ஆசிட் நிறைந்துள்ளதால், கர்ப்பிணிகள்
பீட்ரூட் சாப்பிடலாம்.
திராட்சை
ஆந்தோசயனைடு (Athocynaide) மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்
மிகுதியாக இருப்பதால், கல்லீரலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
இதயத்தைப் பாதுகாக்கிறது. சீரான ரத்த ஒட்டத்துக்கு உதவுகிறது. இதைத்
தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சிறுநீர்த் தொற்று வராமல் பாதுகாக்கும்.
மேலும் மாரடைப்பு வருவதையும் தடுக்கிறது.
கருஞ்சீரகம்
செரிமானத்துக்கு உதவுகிறது. வயிறு மற்றும் குடலில் உள்ள
வாயுக்களை வெளியேற்ற உதவுகிறது. பல நூற்றாண்டுகளாக சளி மற்றும்
காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. நுண்கிருமிகளை அழிக்கும்
தன்மைகொண்டது. குடலில் உள்ள புழுக்களை வெளியேற்றுகிறது. டீ தயாரிக்கும்
போது, கருஞ்சீரகத்தைப் பயன்படுத்தலாம். அலர்ஜிகளுக்குக்கூட மருந்தாகும்
இது.
கறுப்பு எள்
முதுமையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளான நரை முடி, பார்வை
மங்குதல், காது கேளாமை, காதில் சப்தம் போன்ற பாதிப்புகளைக் குறைக்கும்.
வைட்டமின் பி மற்றும் இரும்புச் சத்துகள் இருப்பதால், இளநரை, ஞாபக மறதி,
காது கேளாமை ஆகிய பிரச்னைகள் வராது. கால்சியம் மற்றும் துத்தநாகம்
இருப்பதால், எலும்பு வலுவடையும். பொலிவான, அழகான சருமத்தை இதிலுள்ள
வைட்டமின் இ தருகிறது.
கறுப்பு அரிசி
கருங்குருவை எனப்படும் கறுப்பு அரிசியில் ஆந்தோசியானின்
(Anthocyanin) நிறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து சாப்பிட, இதய நோய்,
புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவு குறையும். சர்க்கரை நோய், மறதி
நோய்க்கு ஏற்ற உணவு. வெள்ளை, பிரவுன், சிவப்பு அரிசிகளைவிட, கறுப்பு
அரிசியில் அதிக அளவு புரதமும், இரண்டு மடங்கு அதிகமாக நார்ச்சத்துக்களும்
உள்ளன. அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று.
கத்தரிக்காய்
வைட்டமின் ஏ, பி1, சி, டி, புரதம், கால்சியம் ஆகியவை
நிறைந்துள்ளன. சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. ஆரம்ப
நிலையில் உள்ள கல்லைக் கரைத்து வெளியேற்றுகிறது. மூளையில் உள்ள செல்
சவ்வுகளைப் பாதுகாத்து, நினைவாற்றல் சீராக இருக்கவைக்கிறது. உயர் ரத்த
அழுத்தம், சர்க்கரை நோய், சில வகை புற்றுநோய்களுக்கு நல்ல மருந்தாகிறது.
ரத்தக் கட்டுக்
களைக் குறைக்கிறது. கொழுப்பைக் குறைத்து இதய நோய் வராமல் பாதுகாக்கிறது.
மிளகு
வயிற்றில் அமிலங்களைச் சுரக்கச்செய்து, செரிமான
சக்திக்கு உதவுகிறது. வாய் துர்நாற்றம், ஆஸ்துமா, இருமல், சளி, செரிமானப்
பிரச்னை, ரத்த சோகை ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. வியர்வை மற்றும் சிறுநீர்
வழியாக உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. உடலில் வாயு உருவாகாமல்
தடுக்கிறது. சைனஸ் மற்றும் மூக்கு தொடர்பான பிரச்னைகளைக் குறைக்கிறது. சளி,
கபத்தை உடலிருந்து வெளியேற்றுகிறது.
பிளாக் டீ
பாலிபீனால்கள் நிறைந்துள்ளன. செல்களைப் பாதுகாக்கும்
ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. சினைப்பை புற்றுநோய் வராமல்
பாதுகாக்கிறது. மாரடைப்பின் வாய்ப்புகளைக் குறைக்கிறது. ஸ்ட்ரெஸ் ஹார்மோன்
ஆன கார்டிசால் (Cortisol) அளவைக் குறைத்து, மன அழுத்தத்தைப் போக்குகிறது.
சக்தி, கவனம், விழிப்புத் திறன் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.
நாவல் பழம்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. குறைவான க்ளைசெமிக்
(Glycemic) உள்ளது. இதய நோய், சில வகை புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.
மக்னீசியம் அதிகமாக உள்ளதால், வலிப்பு, ஆஸ்துமா போன்ற நோய்களைத்
தடுக்கிறது. ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட், நார்ச்சத்துக்கள் இருப்பதால் கெட்ட
கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. வைட்டமின் பி1, பி6,
கால்சியம், இரும்பு, துத்தநாகம், ஃபோலிக் அமிலம் நிறைவாக உள்ளன.
கறுப்பு உப்பு
சாதாரண உப்பைவிட இதில் சோடியம் குறைந்த அளவே உள்ளது.
இரும்பு உள்ளிட்ட தாதுஉப்புக்கள் மிகுதியாக இருப்பதால், `பிங்கிஷ் க்ரே’
நிறத்தில் காணப்படுகிறது. சாலட்டிலும், சாட் உணவுகளிலும் அதிகம்
பயன்படுத்தப்படுகிறது. வாயு மற்றும் நெஞ்செரிச்சலைப் போக்கும். சிறுநீரக
மற்றும் உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு நல்லது.
பேரீச்சை
இரும்புச் சத்துக்கள் நிறைந்தது என்பதால், ரத்த சோகை
பிரச்னை உள்ளவர்களுக்குச் சிறந்த உணவு. கர்ப்பப்பையின் தசைகளை
வலுவடையவைக்கும். உடல் எடையைக் கூட்ட நினைப்போருக்கு, சிறந்த உணவு. இது
மலமிளக்கியும்கூட.
Post a Comment