தமன்னா...
ஒரு குட்டி பொக்கே போல ஃபிரஷ்ஷான தோற்றம். தன்னுடைய அழகான சருமத்துக்கும்,
இளமையான தோற்றத்திற்கும் தினமும் எடுத்துக்கொள்ளும் ஹெல்த்தி உணவுகளே
காரணம் என்கிறார். தமன்னாவின் ஃபேவரிட் உணவுகளை செய்துகாட்டுகிறார் சென்னை
கிரீன் பார்க் ஹோட்டல் சீனியர் செஃப் தங்கப்பன். டிஷ்களின் பலன்களை
சொல்கிறார் உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.
லீன் அன்ட் லைட் சாலட்
தேவையானவை: கீரை -
150 கிராம், முளைகட்டிய சிறு பயறு - 50 கிராம், தக்காளி - 30 கிராம்,
வினிகர் - 5 மி.லி, ஆலிவ் எண்ணெய் - 15 மி.லி, மிளகுத் தூள் - 10 கிராம்,
வெங்காயம் - 25 கிராம், குடை மிளகாய் - இரண்டு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளி,
குடைமிளகாய், வெங்காயம், கீரை ஆகியவற்றை நறுக்கிவைத்துக்கொள்ளவும்.
அதனோடு, முளைகட்டிய பயறு சேர்த்து, ஆலிவ் எண்ணெய், எலுமிச்சைச் சாறு, உப்பு
சேர்த்துக் கலக்கவும். பின்பு, அதன் மேல் கொத்தமல்லியை நறுக்கித் தூவிப்
பரிமாறலாம்.
பலன்கள்: மற்ற
சாலட் வகைகளோடு ஒப்பிடும் போது, இதில் கலோரிகள் குறைவு. தினமும் அதிக
கலோரிகள் எடுத்துக்கொள்வதாக நினைப்பவர்கள் இதை உண்ணலாம். கொழுப்புச்
சத்தும் மிகவும் குறைவாக உள்ளது. ஆலிவ் ஆயில் இருப்பதால் இதய சம்பந்தமான
நோய்கள் வராமல் பாதுகாக்கும். அதிக எடை கூடவிடாது. கொஞ்சம்
எடுத்துக்கொண்டாலும் வயிறு நிரம்பும். உடல் எடையைக் குறைக்க
விரும்புபவர்கள், இதை எடுத்துக்கொண்டால் உடல் எடையை விரைவில்
குறைத்துவிடலாம்.
பட்டர் சிக்கன் மசாலா:
தேவையானவை:
எலும்பு இல்லாத சிக்கன் - 400 கிராம், கொத்தமல்லித் தூள், கரம் மசாலா -
தலா 50 கிராம், நறுக்கப்பட்ட வெங்காயம், தக்காளி - தலா 150 கிராம், இஞ்சி,
மஞ்சள் பொடி - தலா 40 கிராம், வெந்தயக் கீரை - 50 கிராம், பெருஞ்சீரகம் -
100 கிராம், ஃப்ரெஷ் கிரீம் - 100 மி.லி, வெண்ணெய் - 50 மி.லி, எண்ணெய் -
50 மி.லி, காஷ்மீர் மிளகாய்ப் பொடி - 75 கிராம், இஞ்சி பூண்டு பேஸ்ட் - 75
கிராம், முந்திரி - 100 கிராம், தேன் - 10 மி.லி.
செய்முறை:
தக்காளியை வெந்நீரில் போட்டு, சில நிமிடங்கள் வைத்திருந்த பிறகு, தோலை
உரித்து அரைத்து எடுக்கவும். முந்திரியை வெந்நீரில் மூன்று மணி நேரங்கள்
ஊறவைத்து, அரைத்து பேஸ்ட்டாக்கிக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயைவைத்து, அதில் வெண்ணெயை ஊற்றி,
சிக்கனைச் சேர்க்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய பச்சை மிளகாய்,
சீரகத் தூள், மிளகாய்ப் பொடி, உப்பு ஆகியவற்றை சேர்த்து, கொஞ்சம் தண்ணீரும்
சேர்த்து வதக்கவும். பிறகு, அரைத்துவைத்த தக்காளியை சேர்க்கவும்.
கடாயின்
ஓரத்தில், கிரேவி ஒட்டிக்கொள்ளாமல் வரும் வரை கொதிக்கவிடவும். அடுப்பை
‘சிம்’மில்வைத்து முந்திரி பேஸ்ட்டைச் சேர்த்து, நன்கு கலக்கவும். தேன்,
கால் கப் தண்ணீர் ஊற்றி கிரேவியையும், சிக்கன் துண்டுகளையும் ஒரு நிமிடம்
கொதிக்கவிடவும். கிரீம், கரம் மசாலா, பெருஞ்சீரகம், வெந்தயக் கீரை
சேர்த்துக் கலக்கி, அடுப்பை அணைத்துவிடவும். இஞ்சித் துண்டுகள், கிரீம்,
உருகிய வெண்ணெய் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.
பலன்கள்: சிக்கனில்
அதிகப் புரதம் இருப்பதால், சுறுசுறுப்பாகவும், நல்ல சத்துடனும் இயங்க
உதவும். இதில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால், பெண்களுக்கு மிகவும்
நல்லது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அதிகப் புரதம் தேவைப்படுவதால், இந்த
உணவை எடுத்துக்கொள்வது நல்லது.
ஆரஞ்சு ஜூஸ்
தேவையானவை: ஆரஞ்சு - இரண்டு, தண்ணீர், சர்க்கரை , ஐஸ் கட்டி - தேவையான அளவு.
செய்முறை:
ஆரஞ்சுப் பழங்களை சாறு எடுத்து, வடிகட்டிக்கொள்ளவும். அதனோடு, ஐஸ்
கட்டிகள், தேவையான அளவு தண்ணீர், சர்க்கரை சேர்த்து, மிக்ஸியில் போட்டுச்
சுற்றினால், ஆரஞ்சு ஜூஸ் ரெடி.
பலன்கள்: ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் (Hesperetin) ஹெஸ்பிரிடின்,
நாரின்ஜின் (Naringin) நாரிஜெனின் (Naringenin) ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள்
குடல் புற்றுநோய் வருவதில் இருந்து காக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை
அதிகரிக்கவும் உதவும். இதில் உள்ள சத்துகள் பார்வைத் திறனை அதிகரிக்கவும்,
சருமத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்ளும்.
தையமின், பைரிடோக்ஸின், ஃபோல்டேட்ஸ் ஆகியவை நம் உடலை
சுறுசுறுப்பாக வைத்திருக்கும், தொற்று வியாதிகள் பரவாமல் பாதுகாக்கும்.
ஆரஞ்சில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் கால்சியம் இதயத் துடிப்பையும்
செம்மையாக வைத்திருப்பதோடு ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும்.
பெக்டின் என்னும் சத்து ஆரஞ்சில் நிறைந்திருப்பதால், மலச்சிக்கல், குடலில்
கட்டிகள் வராது.
ஹைதராபாத் மட்டன் பிரியாணி
தேவையானவை: மட்டன்-
400 கிராம், வெங்காயம் - 300 கிராம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்,
மிளகாய்ப் பொடி, கரம் மசாலா, புதினா, கொத்தமல்லி - தலா 40 கிராம், கிராம்,
தயிர்-100 மி.லி, எலுமிச்சை - 1, ஏலக்காய், கருஞ்சீரகம் - தலா 20 கிராம்,
எண்ணெய் - 40 மி.லி, நெய் - 60 மி.லி, உப்பு, குங்குமப் பூ - தேவைக்கு
ஏற்ப.
செய்முறை: இஞ்சி, பூண்டு இரண்டையும்
தோல்நீக்கி அரைத்துக்கொள்ளவும். கொத்தமல்லி, புதினா இலைகளை
அரைத்துக்கொள்ளவும். கடாயில், எண்ணெய்விட்டு 100 கிராம் வெங்காயத்தைப்
பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும்.
பாத்திரத்தில் மட்டனை எடுத்து அதோடு மிளகாய்ப் பொடி,
மஞ்சள் பொடி, கரம் மசாலா, குங்குமப்பூ, எலுமிச்சைச் சாறு, வேகவைத்த
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு, கொத்தமல்லி, புதினா பேஸ்ட்,
எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து, இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். தேவைக்கேற்ப
உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
பெரிய கடாயில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். அதில்
இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், ஒரு லவங்கப்பட்டை, இரண்டு பிரிஞ்ஜி இலை,
எண்ணெய் சிறிதளவு, கருஞ்சீரகம், நான்கு மிளகு சேர்க்கவும். இந்தத்
தண்ணீரில், தேவைக்கேற்ப கழுவிய பாஸ்மதி அரிசியைப் போட்டு இரண்டு நிமிடங்கள்
மட்டும் வேகவிடவும். பின்னர் அதிலிருந்து தண்ணீரை வடிகட்டி, அரைப்பங்கு
அரிசியைப் பிரித்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
வடிகட்டிய தண்ணீரை அரைப்பங்கு அரிசியில் போட்டு, நன்கு
கொதிக்கவிடவும். மட்டன் கலவையை எடுத்து, பிரியாணி செய்யவிருக்கும்
பாத்திரத்தில் வைத்து, அரிசியை வேகவைத்த நீரில் சேர்க்கவும். தண்ணீர்
ஊற்றுவதால் மட்டன் மிருதுவாகும். பின்பு, இரண்டு நிமிடங்கள் மட்டும்
வேகவைத்த அரிசியை, மட்டனுடன் சேர்த்து, 10 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும்.
கொஞ்சம் பொன்னிற வெங்காயத்தையும், சில சொட்டு குங்குமப்பூ கலந்த பாலையும்,
இரண்டு ஸ்பூன் நெய்யையும், கரம் மசாலாவையும் சேர்த்து, 25 நிமிடங்கள்
மட்டனும் அரிசியும் மிருதுவாகும் வரை வேக வைக்கவும். அடுத்து மிச்சம்
இருக்கும் அரிசியைச் சேர்த்து, மீண்டும் பொன்னிற வெங்காயம், சில துளி
குங்குமப்பூ பால், கொத்தமல்லி, புதினா, நெய் சேர்த்தால் பிரியாணி ரெடி.
பரிமாறும் முன்பு பிரியாணியை நன்கு கிண்ட வேண்டும். அப்போதுதான் மசாலா
நன்கு கலக்கும்.
பலன்கள்: மட்டனில் வைட்டமின் பி12 அதிகம் இருக்கின்றன.
பொதுவாக, வைட்டமின் பி12 அசைவ உணவுகளில் மட்டுமே
இருக்கும். நம் நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு பி12 பற்றாக்குறை
இருக்கிறது. வைட்டமின் பி12 அதிக சிவப்பு அனுக்களை உற்பத்தி செய்யும்,
எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதயப் பிரச்னை உள்ளவர்கள் எலும்பை ஒட்டி
இருக்கும் கரியை எடுத்துக்கொண்டால், இதயத்துக்கு மிகவும் நல்லது. ஒமேகா
3, ஒமேகா 6 அதிகம் இருப்பதால், நல்ல கொழுப்பு அதிகமாக இருக்கும். கெட்ட
கொழுப்புகள் இருக்காது. புரதச்சத்து மூளையைச் சுறுசுறுப்பாக இயங்கவைக்கும்,
உடம்பில் சதை வளர உறுதுணையாக இருக்கும். வளரும் குழந்தைகளுக்கு மிகவும்
நல்லது. வாரத்துக்கு ஒரு முறை மட்டும் என, இந்த உணவை எடுத்துக்கொள்வது
உடலுக்கு நல்லது.
- குரு அஸ்வின் படங்கள்: எம்.உசேன்
Post a Comment