நேரம் நல்ல நேரம்!
பணியிடத்தில்
இந்த நேரத்துக்குள் இந்த வேலைகளை முடிக்க வேண்டும் என்பது போல், நம்
உடலுக்கும் நேரம் இருக்கிறது. இரவு 2 மணிக்குத் தூங்கி, காலை 10 மணிக்கு
எழுந்திருப்பது நமக்குப் பிடித்திருக்கலாம். உடல் அதை விரும்பாது. இரவு 12
மணிக்கு பரோட்டா, சூரியன் உச்சிக்கு வந்த பிறகு பெட் காஃபி என்பதெல்லாம்
உடலை உருக்குலைக்கும் விஷயங்கள்.
“அக்குபஞ்சர் பல நூற்றாண்டு மருத்துவமுறை. மனிதனின்
ஆரோக்கிய வாழ்வுக்குத் துணைபுரியும் முக்கிய உறுப்புக்கள் என நுரையீரல்,
பெருங்குடல், வயிறு அல்லது இரைப்பை, மண்ணீரல், இதயம், சிறுகுடல்,
சிறுநீர்ப்பை, சிறுநீரகம், இதய உறை, வெப்பமண்டலம், பித்தப்பை, கல்லீரல் என
12 உறுப்புகளை வரிசைப்படுத்தி உள்ளது. ஒரு நாளில் இந்த ஒவ்வோர் உறுப்பும்
இரண்டு மணி நேரம் உச்ச நிலையில் செயல்படும். அந்தக் குறிப்பிட்ட நேரத்தில்
அதற்கு சாதகமாக நாம் செயல்பட்டால், நோய்கள் நெருங்காமல் வாழலாம்.
அதிகாலை 3-5 நுரையீரலுக்கான நேரம்
மூச்சின் அளவு ஆழமாகவும் நீளமாகவும் இருக்கும்.
ஆஸ்துமா, தோல் வியாதி உள்ளவர்களுக்கு, இந்த நேரத்தில்தான் தாக்கம் அதிகம்
இருக்கும். இந்த நேரத்தில் மூச்சுப் பயிற்சி, தியானம் செய்யும்போது தேவையான
ஆக்சிஜன் கிடைத்து, கழிவுகள் வெளியேறுகின்றன. ஆக்சிஜன் அளவு
அதிகரிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி கூடும். மூச்சு மற்றும் அதன் சக்தி
ஓட்டம் சீராகும். உடற்பயிற்சி செய்யும்போது நோய்கள் நம்மை நெருங்காது.
5-7 மணி பெருங்குடலுக்கான நேரம்
செரிமான மண்டலத்தைத் தூய்மைப்படுத்தும் நேரம். மலம்
வெளியேற காற்றின் உந்துதல் அவசியம். நுரையீரல் வேலை செய்யும் நேரத்தில்
காற்று உடலுக்குள் நன்கு செல்கிறது. இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் காலைக்
கடனை முடித்து, குளித்தால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்வோடு
இருக்கும். குளித்து முடித்ததும் சாப்பிடுவது தவறு.
7-9 வயிறு மற்றும் இரைப்பைக்கான நேரம்
வயிற்றில் அமிலங்கள் சுரக்கும் நேரம். எனவே, தவறாமல்
8.50-க்குள் காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதனால் அன்றைய
தினத்துக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். மேலும், என்ன உணவு எடுத்துக்
கொண்டாலும் அது எளிதில் செரிமானம் ஆகிவிடும். இந்த நேரத்தில் உணவு
எடுத்துக் கொள்ளாதபோதுதான் வயிற்றில் புண், செரிமானக் குறைபாடு எனப்
பிரச்னைகள் தோன்றும்.
9-11 மண்ணீரலுக்கான நேரம் 
நாம் சாப்பிட்ட உணவைச் செரித்து அதில் உள்ள
ஊட்டச்சத்துக்கள் கிரகிக்கப்படுவது இந்த நேரத்தில்தான். இதற்கு மண்ணீரல்
துணைபுரிகிறது. உணவை குளுக்கோஸாக மாற்றுதல், ஊட்டச்சத்துக்களைக் கிரகிக்க
உதவுதல், கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரக்கச் செய்தல் என்று பல்வேறு
பணிகளை இந்த நேரத்தில் மண்ணீரல் செய்கிறது. இந்த பணி முழுமையாக நடக்க,
இரண்டு மணி நேரத்துக்கு முழுமையான விரதம் இருக்க வேண்டும். அதாவது தண்ணீர்
கூட அருந்தக் கூடாது.
11- 1 இதயத்துக்கான நேரம்

மண்ணீரல்
கிரகித்து ரத்தத்தில் கலந்த ஊட்டச்சத்துக்களை உடல் முழுக்க கொண்டுசெல்ல
இதயம் தீவிரமாக செயல்படும் நேரம் இது. இதை மனிதன் இயங்கும் நேரம் என்றும்
சொல்லலாம். இதயத்தின் இயக்கத்தால்தான் மற்ற உறுப்புக்கள் இயங்குகின்றன.
இந்த நேரத்தில் தூக்கம் கூடாது. இதயம் ஆரோக்கியமாக உள்ளவர்கள் இந்த
நேரத்தில் சுறுசுறுப்பாகவும் முழு சக்தியுடனும் இருப்பார்கள். இதய பாதிப்பு
உள்ளவர்களுக்கு இந்த நேரத்தில் அதீத சோர்வு, வலி போன்ற உணர்வுகள்
தோன்றும். எனவே, இதயபாதிப்பு உள்ளவர்கள் இந்த நேரத்தில் அதிகமாகப் பேசுவது,
சப்தமாகப் பேசுவது, கடினமான வேலைகளைச் செய்வது கூடாது.
மதியம் 1-3 சிறுகுடலுக்கான நேரம்
மதிய உணவுக்கு ஏற்ற நேரம். நமக்குத் தேவையானதை
தீர்மானிப்பது வயிறுதான். உடலுக்குச் சரியில்லாததை வாந்தியாகவும் வயிற்றுப்
போக்காகவும் வெளியேற்றிவிடும். வந்த உணவுக் கூழை, சத்தாகவும் கழிவாகவும்
பிரித்துவிடும். செரிமானத்தை சீராக்கும். இந்த நேரத்தில் அதிக வேலை செய்யக்
கூடாது. ஆண்கள் வலது பக்கமாகவும் பெண்கள் இடது பக்கமாகவும் ஒருக்களித்துப்
படுத்து அரை மணி நேரம் ஓய்வு எடுக்கவேண்டும். தூங்கக் கூடாது.
3-5 சிறுநீர்ப்பைக்கான நேரம்
உடலில் உள்ள பஞ்சபூத உறுப்புக்களை திறம்பட வேலை
செய்யவைப்பதில் சிறுநீர்ப்பைக்கு முக்கியப் பங்கு உள்ளது. உடல் தனக்குத்
தேவையான நீரை எடுத்துக்கொள்ளும் நேரம். இந்த நேரத்தில் ஓய்வாக இருக்க
வேண்டியது அவசியம். வெதுவெதுப்பான நீர், கிரீன் டீ போன்றவற்றை அருந்துவது
மேலும் நச்சுக்கள் வெளியேற உதவும். சிறுநீரை அடக்கிவைத்தல் கூடாது.
மாலை 5-7 சிறுநீரகத்துக்கான நேரம்
இந்த நேரத்தில் சிறுநீரகம் தன்னைப் பராமரித்துப்
புதுப்பித்துக்கொள்ளும். மனம் அமைதியை நாடும் இந்த நேரத்தில்,
பொழுதுபோக்கு, இறை வணக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். காலையில்
உடற்பயிற்சி செய்ய முடியாத
வர்கள், இந்த நேரத்தில் செய்யலாம். குழந்தை இல்லாதவர்கள் பெருங்குடல்
உச்சத்தில் இருக்கும் நேரத்திலும், சிறுநீரகம் உச்சத்தில் இருக்கும்
நேரத்திலும் உறவுகொள்ளும்போது குழந்தை தரிக்க வாய்ப்பு உள்ளது.
இரவு 7-9 இதயத்தின் மேல் உறைக்கான நேரம்
பெரிகார்டியம் என்னும் இதயத்தின் மேல் உறை செயல்படும்
நேரம். இதயத்துக்கும் பெரிகார்டியத்துக்கும் இடையே இருக்கும் திரவம், இதயம்
வெப்பம் அடையாமல் பாதுகாக்கிறது. இந்த நேரத்தில் இதய நோய் மற்றும் மனநலப்
பிரச்னை உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது நல்ல பலன் கிடைக்கும். இரவு
உணவை இந்த நேரத்தில் முடித்துவிட வேண்டும். அளவோடு சாப்பிட வேண்டும்.
9-11 மூவெப்ப மண்டலம்
உடலின் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும்
பகுதி. இது தனி உறுப்பு கிடையாது. பல்வேறு உறுப்புக்களின் தொகுப்பு.
குறிப்பாக செரிமான உறுப்புக்கள் தூண்டப்பட்டு, இந்த நேரத்தில்
பழுதுபார்க்கப்படும். உடலின் உள்சுத்தத்தைப் பராமரிக்கும். தூங்கச் சரியான
நேரம். இந்த நேரத்தில் தூங்கச் சென்றால், ஆழ்ந்த தூக்கம் வரும்.

11-1 பித்தப்பைக்கான நேரம்
பித்த நீர் சுரக்கும் நேரம். அதை பித்தப்பை சேகரித்து
செரிமானத்துக்கு தேவையானபோது வெளியேற்றுகிறது. மூளையின் செயல்திறனை
அதிகரிக்க உதவுகிறது. இந்த நேரத்தில் தூக்கம் வரவில்லை என்றாலும் தூங்க
முயற்சிக்க வேண்டும்.
நள்ளிரவு 1-3 கல்லீரலுக்கான நேரம்
கல்லீரல், உடலின் ரசாயனத் தொழிற்சாலை என்பார்கள். அது
மேலாளர் போல. அனைத்து உறுப்புக்களையும் கண்காணிக்கும் உறுப்பு. அனைத்தும்
சரியாக இருக்கிறதா என்பதைப் பரிசோதித்துவிட்டு, தன்னுடைய கழிவுகளை
வெளியேற்றிப் புதுப்பித்துக்கொள்ளும். நள்ளிரவில் அனைத்து உறுப்புக்களும்
ஓய்வு எடுக்கும். இந்த ஆற்றலை கல்லீரல் பயன்படுத்திக்கொள்ளும். இந்த
நேரத்தில் கட்டாயம் தூங்க வேண்டும்.
Post a Comment