பாரம்பரிய பொங்கல்
பொங்கல்... உழவுக்கு உறுதுணையாய் இருந்த சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் திருநாள்.
வெள்ளைப் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காய்கறிக்
கூட்டு, பரங்கிக்காய் கறி, மெதுவடை எனப் பொங்கல் சிறப்பு சமையலைச் செய்து
வழங்குகிறார் திருச்சி, 'ஆப்பிள் மில்லத்’ உணவகத்தின் செஃப் கணேசன். இந்த
உணவுகளின் பலன்களைச் சொல்கிறார் டயட்டீஷியன் அபிநயா...
காய்கறிக் கூட்டு
தேவையானவை: பூசணிக்காய் ஒரு துண்டு, அவரைக்காய் 100
கிராம், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு தலா 2, வாழைக்காய் 1, மொச்சை கால்
கிலோ, பச்சைமிளகாய் தேவைக்கு ஏற்ப, துவரம் பருப்பு கால் கிலோ,
தேங்காய் அரை மூடி. தாளிக்க: கடுகு, சீரகம், உளுந்து, காய்ந்த மிளகாய்,
கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் தேவையான அளவு
செய்முறை: காய்கறிகளை சிறு துண்டுகளாக
நறுக்கிக்கொள்ளவும். துவரம் பருப்பையும் நறுக்கிய காய்கறிகளையும் உப்பு
சேர்த்து, தனித்தனியாக வேகவைத்தபின், கலந்துகொள்ளவும். தேங்காய், பச்சை
மிளகாயை அரைத்து ஊற்றவும். நன்றாகக் கொதித்து, கெட்டியாக வந்ததும்,
தாளிக்கும் பொருட்களை தாளித்து, சேர்த்து இறக்கவும்.
பலன்கள்: வெள்ளைப்பூசணி தலைவலிக்கு மருந்தாவதுடன், சிறுநீரகம் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் நோய்களையும் கட்டுப்
படுத்தும். மேலும், அவரை, கத்திரிக்காய், மொச்சை போன்ற
காய்கறிகளில் இருக்கும், அனைத்து அத்யாவசிய அமினோ அமிலங்களும் உடலுக்குக்
கிடைக்கும். புரதச்சத்து நிறைந்த கூட்டு இது.
பால் வெண் பொங்கல்
தேவையானவை: பச்சரிசி ஒரு கப், பாசிப் பருப்பு 2 டேபிள்ஸ்பூன், பசும்பால் 100 மி.லி, உப்பு தேவையான அளவு.
செய்முறை: இரண்டு கப் தண்ணீரில், பாசிப்பருப்பை அரைப்
பதமாக வேகவைக்கவும். பின்பு, அரிசியை நன்றாக வேகவைத்து, அதில் பால் ஊற்றிக்
கிளறி இறக்கவும்.
பொதுவாக, அரிசி, பாலில் மட்டுமே பொங்கல்
செய்வார்கள். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடவும், ருசிக்காகவும்
பாசிப்பருப்பு சேர்க்கப்பட்டுள்ளது.
பலன்கள்: பாலில் கால்சியம், பாசிப்பருப்பில் புரதம்
இருப்பதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது. ரத்த அழுத்தத்தை சீராக்கும்.
கொழுப்பின் அளவைக் குறைக்கும்.
சர்க்கரைப் பொங்கல்
தேவையானவை:
பச்சரிசி ஒரு கப், பாசிப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன், பால் 100 மி.லி,
வெல்லம் 150 கிராம், முந்திரி, திராட்சை தலா 10 கிராம், நெய் 2
டீஸ்பூன், ஏலக்காய் தூள் சிறிதளவு.
செய்முறை: இரண்டு
கப் தண்ணீர், பால் இரண்டையும் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். பாசிப்பருப்பு
அரை வேக்காடாகவும், பச்சரிசியை முக்கால் பதத்திலும் வேகவைக்கவும்.
வெல்லத்தை நன்றாகப் பொடித்து, வேகவைத்த பொங்கலில் சேர்த்துக் கிளறிவிடவும்.
நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து, பொங்கலுடன் சேர்த்துக் கிண்டி,
ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.
பலன்கள்:
சர்க்கரைப் பொங்கலில் வெல்லம் சேர்க்கப்படுவதால், இரும்புச் சத்து
கிடைக்கும். வெல்லத்துக்குப் பதிலாக, கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம்.
சுவை கூடுவதுடன், உடலுக்குக் குளிர்ச்சி, எலும்பு தேய்மானம், மூட்டுவலி
போன்ற பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
பரங்கிக்காய் கறி
தேவையானவை:
பரங்கிக்காய் பெரிய துண்டு 1, தேங்காய்த்துருவல் சிறிதளவு, கடுகு அரை
டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, எண்ணெய் 3
டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை:
பரங்கிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவும். கடாயில் எண்ணெய்
விட்டு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், தேங்காய்த்துருவல் சேர்த்துத்
தாளித்து, வேகவைத்த பரங்கிகாயைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
பலன்கள்: பி
காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பரங்கிக்காயில் அதிகம் இருப்பதால், சரும
நோய்களுக்கு நல்லது. உடல் சூட்டைத் தணித்து, பித்தத்தைப் போக்கி, பசியைத்
தூண்டிவிடும். நார்சத்து அதிகமிருப்பதால் உணவு செரிமாணத்தையும்
எளிதாக்கும்.
மொறுமொறு மெது வடை
தேவையானவை:
உளுந்து 500 கிராம், பச்சரிசி மாவு 100 கிராம், பச்சைமிளகாய் 2, பெரிய
வெங்காயம் 2, கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு, மிளகு 10 கிராம், உப்பு,
எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: உளுந்தை
ஒரு மணிநேரம் ஊறவைத்து, கெட்டியாக அரைக்கவும். இதில் பச்சரிசி மாவு,
பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் , கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை,
மிளகு, உப்பு சேர்த்துப் பிசைந்து, வட்டமாகத் தட்டி, காயும் எண்ணெயில்
பொரித்து எடுக்கவும்.
பலன்கள்: உளுந்து
பசியைப் போக்குவதுடன், உடலுக்கு அதிகக் குளிர்ச்சியை ஏற்படுத்தும். எலும்பு
மற்றும் தசைகளை வலுவடையச் செய்யும். இளம் பெண்களின் இடுப்பு வலிக்கு,
இயற்கை அளித்த வரப்பிரசாதம்.
Post a Comment