ஆர்கானிக் அழகு!
அஞ்சலி ரவி, அழகுக்கலை நிபுணர்
உணவில் மட்டும் இயற்கை முறைக்கு மாறினால் போதுமா?
ஆர்கானிக் சாமையும், ஆர்கானிக் மாதுளையும் சாப்பிட்டுவிட்டு சருமத்திற்கு
கெமிக்கல்களைப் பயன்படுத்தலாமா? ஆர்கானிக் முறையில் ஆரோக்கியம் மட்டுமல்ல,
அழகும் சாத்தியமே!
கூந்தலை அலசும் பொடி
சிகைக்காய் அரை கிலோ பச்சைப் பயறு, வெந்தயம் தலா 100
கிராம், செம்பருத்தி இலை, வேப்பிலை தலா 20 ஆகியவற்றை அரைத்து
வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை கஞ்சித் தண்ணீரில் கலந்து, கூந்தலை
அலசலாம்.
ஒரு கப் தண்ணீரில் அரை எலுமிச்சைப் பழத்தின் சாறைக் கலந்து, கடைசியில் அலசவும். இதுவே, கூந்தலுக்கு இயற்கையான கண்டிஷனர்.
பலன்கள்: முடியின் வேர்க்கால்கள் வலுவடையும். முடி
உதிர்வது நிற்கும். இயற்கையில் சுரக்கும் எண்ணெயை எந்தவிதத்திலும்
பாதிக்காது. முடி வளர்ச்சியைத் தூண்டும். கூந்தல் மென்மையாகவும்
பளபளப்பாகவும் இருக்கும்
குளியல் பொடி
பச்சைப் பயறு அரை கிலோ, ரோஜா இதழ் 10 கிராம், வெட்டி
வேர் 50 கிராம் இவற்றை அரைத்து, குளியல் பொடியாகப் பயன்படுத்தலாம். சருமப்
பிரச்னை இருப்பவர்கள், துளசி இலை, வேப்பிலைகளை சேர்த்துக்கொள்ளலாம். உடல்
வறட்சி இருப்பவர்கள், நல்லெண்ணெயை உடல் முழுவதும் தேய்த்த பிறகு, கடலை மாவு
போட்டுக் குளிக்கலாம். எண்ணெய் பசை பிரச்னை உள்ளவர்கள், முட்டையின்
வெள்ளைப் பகுதியை ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறோடு கலந்து முகத்தில் பூசி,
அரை மணி நேரம் கழித்து பச்சைப் பயறு கொண்டு குளிக்கலாம்.
பலன்கள்: சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருமைத்
திட்டுக்களைப் போக்கும். சருமத் தளர்ச்சியை சரியாக்கும். அதிகப்படியான
எண்ணெய் பசையை நீக்கும். நிறம் பொலிவு பெறும். சரும எரிச்சலைக்
குணப்படுத்தும்.
உதட்டுச் சாயம்
பசு வெண்ணெய் அல்லது பால் ஆடையை உதட்டில் தடவலாம்.
நிறம் தேவை எனில், பீட்ரூட் சாறை வெண்ணெயுடன் கலந்து பூசலாம். கொத்தமல்லிச்
சாறை உதட்டில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
பலன்கள்: உதடு வறட்சி, வெடிப்புகள் நீங்கி, மென்மையாகும். கருமை நிறம் நீங்கி, இளஞ்சிவப்பு நிறத்தைப் பெறலாம்.
எண்ணெய் குளியல்
பாதாம் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய்,
மாலாத்யாதி எண்ணெய் என, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எண்ணெயை உடலில் தடவி, அரை
மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். கூந்தலில், 5 மி.லி நல்லெண்ணெயை
இளஞ்சூடாக தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்து அலசலாம்.
பலன்கள்: எண்ணெய் கீழிருந்து மேல் தடவுவதால், ரத்த
ஓட்டம் அதிகரிக்கும். சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாது. உடல்
புத்துணர்ச்சி அடையும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். சருமத்தில்
நிறம் அதிகரிக்கும்.
கண் மை
வெள்ளி விளக்கில் பசுநெய் ஊற்றி, நெய்யில் நனைத்தப்
பஞ்சுத் திரியைக் கொண்டு விளக்கேற்றவும். அருகில் இரண்டு பாத்திரங்களை
(பிரிட்ஜ் போல) வைக்கவும். கீழே விளக்கு எரிய பாத்திரங்களின் துணையோடு
அடிப்பகுதியில் நெய் தடவப்பட்ட வெள்ளித் தட்டை மேலே வைக்கவும். 20
நிமிடங்கள் வரை எரியவிடுங்கள். தட்டில் படியும் மையை வழித்து, குங்குமச்
சிமிழில் சேமித்து, 2 3 துளிகள் நெய் சேர்த்துக்
குழைத்துவைத்துக்கொள்ளவும். இரண்டு வாரங்கள் வரை இந்த மையைப்
பயன்படுத்தலாம். வெள்ளி விளக்குக்குப் பதிலாக, பித்தளை, செம்பு விளக்கு,
தட்டுகளையும் பயன்படுத்தலாம்.
பாதாம் கண் மை
மேலே சொன்ன முறையிலே பாதாம் பருப்புகளை குண்டூசியில்
குத்தி, நெருப்புக்கு மேலும், தட்டுக்கு கீழுமாக வைத்து 10 20 நிமிடங்கள்
வரை சுடலாம். ஊசி முனையைத் துணி வைத்துப் பிடித்துக்
கொள்ளுங்கள். இயற்கையாகவே பாதாமில் எண்ணெய் இருப்பதால்,
அவை எரியத் தொடங்கும். அந்தச் சாம்பலை எடுத்து, நெய் கலந்து
சேமித்துவைக்கலாம். இந்த மையை இரண்டு வாரம் வரை பயன்படுத்தலாம்.
பலன்கள்: கண்களில் உள்ள அழுக்கை வெளியேற்றும்.
கண்களில் உள்ள வர்மப் புள்ளியைத் தூண்டிவிடுவதால், இதனை 'அஞ்சனமிடுதல்’
என்பர். பார்வைத் திறன் அதிகரித்து, தெளிவாகத் தெரியும். கண்களுக்குக்
குளிர்ச்சி உண்டாகும். சோர்வு நீங்கும்.
Post a Comment