'சுலபமான
எடைக் குறைப்புக்கு வழி என்ன? மனசும் கொஞ்சம் முயற்சியும் இருந்தால்,
எடைக் குறைப்பு மிகவும் எளிதுதான்' என்கிறார், சென்னை அரசு யோகா மற்றும்
இயற்கை மருத்துவக் கல்லூரியின் இணைப் பேராசிரியர் டாக்டர்
எஸ்.டி.வெங்கடேஷ்வரன்.
128 கிலோ எடை இருந்த சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஜெகன்,
இவரது ஆலோசனை பெற்று, ஒரே வருடத்தில் 50 கிலோ வரை எடையைக்
குறைத்திருக்கிறார்.
'எனக்கு ஷிப்பிங் பிசினஸ். ரெண்டு குழந்தைகள். நான்
பள்ளி, காலேஜில் படிக்கிற காலத்துல இருந்து கிட்டத்தட்ட 20 வருஷமா உடல்
பருமனாவேதான் இருந்தேன். எங்க வீட்டு சமையல்ல நான்வெஜ், ஆயில் எல்லாம்
அதிகமாகவே இருக்கும். நல்லா சாப்பிடுவேன். ஆபீஸ்ல போய் ஏ.சி ரூம்ல
உக்கார்ந்தே இருப்பேன். டென்ஷன் வந்தா எதையாவது கொரிப்பேன். இப்படி, உடம்பு
ஏறுறதுக்கு எல்லாமே காரணம் ஆயிடுச்சு.
முதல்ல, என் உடல் பருமனைப் பத்திப் பெரிசா கவலைப்படல.
ஆனா, நாளாக ஆக, என்னால் நடக்கவோ, காரில் ஏறவோ முடியாம, ரொம்ப
சிரமப்பட்டேன். பார்க்கிறவங்க எல்லாம் என் மனசு புண்படற மாதிரி பேசினாங்க.
இதனால, என்னை விட என் மனைவி ரொம்பவே பாதிக்கப்பட்டாங்க. அவங்க ரொம்ப
ஒல்லியா இருப்பாங்க. இதுவே எனக்குள்ள, ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி,
வீட்டுக்குள்ளேயே முடங்கவெச்சிடுச்சு. என்னோட பருமன், ரெண்டு பேருக்குமே
பயங்கர ஸ்ட்ரெஸ் தரும் விஷயமானப்பதான், உடல் பருமனைக் குறைக்க முடிவு
பண்ணேன்.
இடுப்புச் சதையைக் கரைக்கும் ஹீட்டிங் பெல்ட்,
ரெடிமேட் பவுடர்கள், ஜிம் பயிற்சிகள், அதுஇதுன்னு எல்லாத்தையும் முயற்சி
பண்ணியும், எடை குறையலை. அப்பதான் டாக்டர் வெங்கடேஷ்வரனைச் சந்திச்சேன்.
அவருடைய நம்பிக்கை தரும் பேச்சு என்னை ஊக்கப்படுத்தியது. முதல்ல நாடி
பிடிச்சுப் பார்த்து, பின்னர் சில பரிசோதனைகளைச் செய்யச் சொன்னார். அதுல,
எனக்கு கெட்ட கொழுப்பு அளவு அப்நார்மலா இருந்தது. ஸ்ட்ரிக்ட் டயட்,
அக்குபங்க்ச்சர் சிகிச்சை, யோகா, மூச்சுப்பயிற்சி என தொடர்ந்தது. முதல் 10
நாட்கள் வெறும் பழச்சாறுகள், க்ரீன் டீ, சூப் மாதிரி திரவ உணவுகள்
(க்ளென்ஸிங் டயட்)மட்டும்தான். வயிறு பசிச்சாலும், எடை குறையணும்கிற
வெறியில் ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ணேன். அதுக்கப்புறம், பழங்கள், வேகவைச்ச
காய்கறிகள், முழு ஓட்ஸ்(Oat bran), முட்டையின் வெள்ளைப் பகுதின்னு
மாறுச்சு. அப்பப்ப, என் நாடியைப் பார்த்து டயட் மாத்துவார்
டாக்டர். ரெண்டு மாசத்துக்கு சுத்தமா அரிசியே தொடலை. ரொம்ப முக்கியமானது,
ஒரு மணி நேரத்துக்கொரு முறை, ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பேன்.
முதல் 6 மாசத்துக்கு மட்டும், உடலில் இருக்கிற
நச்சுக்கள் வெளியேறதுக்காக, வாரத்துல மூணு நாள் ஸ்டீம் பாத், ஆயில் மசாஜ்னு
தொடர்ந்ததில், 6 மாசத்தில் 28 கிலோ குறைஞ்சு, 100 கிலோவுக்கு
வந்துட்டேன். இப்ப என் எடை 78 கிலோ. 52 இன்ச் இருந்த இடுப்பு சைஸ்,
34க்கு வந்துருச்சு. இப்ப என் கொலஸ்ட்ரால் லெவலும், ரத்த அழுத்தமும்
நார்மல் ஆயிடுச்சு. இப்பவும், ஆபீஸ்ல ஸ்ட்ரெஸ் இருக்கு. ஆனால், மைண்ட்ல
டயட் கான்ஷியஸ் இருக்கிறதால, அந்த சமயத்தில் கிரீன் டீ, பிளாக் டீ, பிளாக்
காபி, கொய்யா, பப்பாளி, சுண்டல்னு ஹெல்தியான ஸ்நாக்ஸ்தான் எடுத்துக்கிறேன்.
எடையைக் குறைக்க முதலில் தேவை தன்னம்பிக்கை,
வைராக்கியம். முதல் 10 நாள் கஷ்டமா தான் இருக்கும். அப்புறம் பழகிடும்.
ரொம்பப் பாதுகாப்பானது, பக்க விளைவு இல்லாதது இயற்கை வைத்திய முறைதான்''
என்று நம்பிக்கையூட்டுகிறார் ஜெகன்.
எடை குறைப்பு சாத்தியம்?
டாக்டர் எஸ்.டி.வெங்கடேஷ்வரன் தரும் டிப்ஸ்:
'கணிசமான அளவு எடையைக் குறைத்துவிடலாம்’ என்ற
நம்பிக்கையை மனதில் ஆழமாக விதைக்கவேண்டும். 'என்னால் முடியுமா?’ என்ற
கேள்வியோடு வருபவர்களுக்கு, முடியும் என்ற நம்பிக்கையை வரவழைப்பதுதான்
மிகவும் முக்கியம். தினமும் என்ன சாப்பிடுகிறோமோ, அதை சாப்பிட்டுக்கொண்டே
எடையைக் குறைக்கலாம். அதுதான் சாத்தியம்கூட. எடையைக் குறைக்க காலை உணவு
அவசியம். ஆனால், இரவு உணவு எளிமையாக இருக்க வேண்டும். பெரிய நெல்லிக்காய்,
சுக்கு, தனியா, குடமிளகாய், புரோகோலி, பாலக், கோஸ், வெங்காயம், பூண்டு,
செலரி போன்றவை, கொழுப்பைக் குறைக்க உதவும். அடர் நிறங்கள் கொண்ட, வெவ்வேறு
நிறக் காய்கள், பழங்களை உணவில் சேர்க்க வேண்டும். வெள்ளை சர்க்கரை (ஜீனி),
மைதா, சாஃப்ட் டிரிங்க்ஸ், பேக்கரி தயாரிப்புகள், பதப்படுத்தப்பட்ட
உணவுகளைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும். அல்லது அறவே ஒதுக்க வேண்டும்.
நான் தந்துள்ள 'ஐடியல் டயட் சார்ட்’ முறையில்
சாப்பிடுங்கள் (இது பொதுவானது. அவரவர் விருப்பம் மற்றும் உடல்நிலைக்கேற்ப
இது மாறும்). மாதத்துக்கு 4 கிலோ எடையை கண்டிப்பாகக் குறைக்கலாம். கூடவே,
வெந்தயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் சர்க்கரை அளவு குறையும்.
கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டுக்கு வரும். நல்ல கொழுப்பின் (HDL) அளவு கூடி,
கெட்ட கொழுப்பின் (HDL) அளவு குறையும்.
சரியான விகிதத்தில், சரியான உணவு முறை, முறையான
உடற்பயிற்சி. எல்லாவற்றையும்விட மேலாக, ஸ்ட்ரெஸ்’ இல்லாத வாழ்க்கைமுறை
இருந்தால் போதும். எளிதில் குறைக்கலாம் எடை!
ஐடியல் டயட் சார்ட்!
காலை
எழுந்ததும், காபி, டீ அருந்துவதற்கு பதிலாக, ஒரு கிளாஸ் வாழைத்தண்டு சாறு.
அடுத்ததாக சிறிது கிரீன் டீ. தேவைப்பட்டால் சர்க்கரை சேர்க்காத காபி / டீ.
காலை
உணவுக்கு 3 இட்லி அல்லது எண்ணெய் இல்லாத சப்பாத்தி அல்லது கீரை / காய்
ஸ்டஃப் செய்த தோசை. தொட்டுக்கொள்ள வெங்காயச் சட்னி, கொத்தமல்லி சட்னி
(தாளிக்காமல்) அல்லது சாம்பார். அசைவம் சாப்பிடுபவர்கள் என்றால், வேக வைத்த
முட்டையின் வெள்ளைக் கரு. (குறிப்பு: கோதுமை மாவு அரைக்கும்போது, ஒரு கிலோ
கோதுமைக்கு 100 கிராம் சோயா சேர்த்து அரைப்பது நல்லது.)
முற்பகலில், வெண்ணெய் எடுத்த மோர் ஒரு கிளாஸ் அல்லது சர்க்கரை சேர்க்காத தக்காளி ஜூஸ் அல்லது இளநீர் அல்லது காய்கறி சூப் ஒரு பவுல்.
மதிய
உணவுக்கு, அவரவர் கை அளவுக்கு நான்கு கைப்பிடி அளவு சாதம். பூசணி,
பீர்க்கை, புடலை, சுரைக்காய், காலிஃப்ளவர் ஏதாவது காய்கறி கூட்டு. ஏதேனும்
ஒரு கீரை.
பிற்பகலில்
லோ
கிளைசமிக் இண்டெக்ஸ்’ கொண்ட சோயா, ராஜ்மா, சிறிய கறுப்பு
கொண்டைக்கடலை இவற்றில் ஏதாவது ஒரு சுண்டல் 2 கைப்பிடி அல்லது வறுத்த
சோயாபீன்ஸ் 2 கைப்பிடி.
இரவு
உணவை சீக்கிரமே சாப்பிட்டுவிட வேண்டும். இரவு உணவுக்கு முன், காளான்,
காய்கறி அல்லது தக்காளி சூப் 2 பவுல். ஒரு மணி நேரம் கழித்து, பப்பாளி,
ஆப்பிள் அல்லது ஏதேனும் ஒரு பழம். அதனுடன், காய்கறிகள் சேர்த்த சாலட் ஒரு
பவுல்.
உடற்பயிற்சி:
தினமும்
25 நிமிடம் யோகப்பயிற்சி, கூடவே மூச்சுப்பயிற்சியும் முக்கியம்.
அதுமட்டுமின்றி, பொதுவாக எப்போதுமே நிற்கும்போதும், நடக்கும்போதும்
பேசும்போதும் வயிற்றை உள்ளிழுத்தபடியே இருந்து பழகவேண்டும். அதுவே ஒரு
வகையான உடற்பயிற்சிதான். இதனால் வயிற்றுத் தசைகள்
டோன்’ ஆகி, தொப்பை குறையும்.
2 comments
How to increase the weight
தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தாங்கள் கோரிய விபரம் விரைவில் தொகுத்தளிக்கின்றேன். பெட்டகம் A.S.முஹம்மது அலி.
Post a Comment