மூட்டுவலியை விரட்டும் முடக்கத்தான்..!
மனிதனுக்கு
ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள் இயற்கையின்
ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்ற வகையில் தானாகவே
விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு,
தங்களுக்கு ஏற்படும் நோய்களை தீர்த்துக் கொள்ளும் வித்தையை ஒவ்வொரு
உயிரினத்துக்கும் இயற்கை கடத்தியே வைத்திருக்கிறது. ஆனால், வியாபார
நோக்கோடு இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்து விட்டனர் கடந்த இருபது,
முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும், அவை
பற்றிய புரிதலை உண்டாக்கவுமே 'மூலிகை வனம்’ எனும் இப்பகுதி இங்கே
விரிகிறது.
இன்றைக்கு நீரழிவுக்கு நிகராக மனித இனத்தை வாட்டிக்
கொண்டிருக்கும் மற் றொரு நோய், 'ருமாட்டாயிட் ஆர்த்ரைடீஸ்’ (rheumatoid
arthritis) எனப்படும் மூட்டு நோய். இதற்கு, அறுவை சிகிச்சை வரை ஆலோசனை
வழங்குகிறது நவீன மருத்துவம். ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மூலிகை
மூலமான தீர்வை அறிமுகப்படுத்தியிருக்கின்றனர் முன்னோர்கள்.
'முடக்கத்தான்’
என அழைக்கப்படும் அதி அற்புதமான மூலிகை தான் அது. 'முடக்கு வலியை அற்றான்’
என்கிற அர்த்தத்தில் இந்த பெயர் ஏற்பட்டுள்ளது. மனிதர்களின் வேதனைகளைப்
போக்க, வேலியெங்கும் இந்தக் கொடியைப் படரவிட்டுள்ளது இயற்கை. தற்போதும்
நகரம், கிராமம் வித்தியாசமில்லாமல் கிடைத்த இடங்களிலெல்லாம் விளைந்து
கிடக்கிறது முடக்கத்தான். சிறிய கொடியாக இருந்தாலும் இதன் தண்டுகள்
கம்பிகளைப் போல வலிமையானவை. நீண்ட இலைக் காம்புகளைக் கொண்டிருக்கும் இது,
ஒன்பது கூட்டிலைகளைக் கொண்டிருக்கும். வெள்ளைப் பூக்கள், முப்பட்டை வடிவ
பலூன் போன்ற காய்களை உடையது. காயினுள் மூன்று அறைகளும், அவற்றில் தலா ஒரு
விதையும் இருக்கும். விதை முற்றியதும் பலூன் வெடித்து, விதைகள் பரவுவது
மூலமாக இனப்பெருக்கம் நடக்கிறது. இதன் தண்டு, இலை அனைத்தும் மருந்துகளாகப்
பயன்படுகின்றன.
இத்தனை சிறிய செடி, மூட்டுவலியைத் தீர்க்கும் என்பதை
எப்படி ஏற்றுக்கொள்வது... அறிவியல் ஆதாரம் இருக்கிறதா? எனக்
கேட்பவர்களுக்கு, தனது ஆராய்ச்சிகள் மூலமாக பதில் சொல்லியுள்ளது ஆஸ்திரேலி
யாவில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகம்.
யூரிக் ஆசிட்டைக் கரைக்கிறது!
'இந்தக் காலத்தில் சிறுநீர் வரும்பொழுது அதற்கு தோதான
இடம் கிடைக்காமல், பெரும்பாலும் அடக்கிக் கொள்கிறோம். அந்த நேரங்களில்
உடலில் உள்ள ரத்தம் பலபாகங்களுக்கும் அப்படியே செல்கிறது. இதனால்
ரத்தத்தில் உள்ள 'யூரிக் ஆசிட்' சிறுசிறு கல்துகள்களாக மூட்டுகளில்...
குறிப்பாக, மூட்டுகளை அசைக்க உதவும் தசையான 'சினோரியஸ் மெம்கிரேம’ என்ற
இடத்தில் படிந்து விடுகிறது. இந்த நிகழ்வு ஆண்டுக் கணக்கில் தொடரும்போது,
35 வயதுக்கு மேல் மூட்டுவலி எட்டிப் பார்க்கிறது.
இந்தியாவில் 65 சதவிகிதம்
பேருக்கு இந்த நோய் இருக்கிறது. இதில் 85 சதவிகிதம் பேர் பெண்கள். இந்த
'யூரிக் ஆசிட்’டைக் கரைக்கும் ஆற்றல் முடக்கத்தான் கீரையிலுள்ள 'தாலைட்ஸ்’
என்ற பொருளில் இருக்கிறது. இது மூட்டுகளில் படிந்திருக்கும் யூரிக்
ஆசிட்டைக் கரைத்து, சிறுநீரகங்களுக்குக் கொண்டு செல்கிறது. அங்கு சிறுநீராக
வெளியேறும்போது, சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை நமது உடலில்
விட்டுச் செல்வதால்... உடல் சோர்வு நீங்குவதுடன், மூட்டுகளில் வலி
குறைந்து, வலிமை பெறுகிறது. மூட்டுகளில் படிந்து கிடக்கும் புரதம்,
சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கொழுப்புத்திரட்சியையும் நீக்குகிறது’ என்கிறது அந்த
ஆராய்ச்சி முடிவு.
முடக்கத்தான் ரெசிப்பிக்கள்!
''முதுகு தண்டுவடத் தேய்மானம், மாதவிடாய் நின்ற
பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம் உள்ளிட்ட அனைத்து விதமான
மூட்டுப் பிரச்னைகளில் இருந்தும் தப்பிக்க முடக்கத்தான் உதவுகிறது.
முடக்கத்தான் கீரை துவர்ப்புச் சுவையுடையது. அப்படியே கீரையை மாவில் போட்டு
அரைத்து அடையோ, தோசையோ செய்து சாப்பிட்டால் கொஞ்சம் மருந்து வாசனை
அடிக்கும்.
அதைப் போக்க, கீரையை மிக்ஸியில் அடித்து, மாவில் கலந்து
தோசையோ... அடையோ செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். கீரையை ஆய்ந்து,
எண்ணெயில் வதக்கி, உப்பும், காய்ந்த மிளகாயும் சேர்த்து அரைத்து துவையலாகப்
பயன்படுத்தலாம்.
பொடியாக நறுக்கி, மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம்
வைக்கலாம். கீரையைப் பொடியாக நறுக்கி வேகவைத்து, பொடியாக நறுக்கிய சின்ன
வெங்காயத்துடன் சேர்த்து, சிறிது எண்ணெய் ஊற்றி பொரியல் செய்து
சாப்பிடலாம். பருப்புகளுடன் சேர்த்துக் கூட்டு செய்யலாம். இப்படி பலவிதமாக
சமைத்துப் பயன்படுத்தலாம்.
இந்தக் கீரையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி
சாப்பிட்டால்... கைகால் வலி, மூட்டுவலி, முதுகுவலி, உடல்வலி அனைத்தும்
பறந்து போகும். கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கிச்
சாப்பிட்டால்... கண் தொடர்பான நோய்கள் குணமடையும். கட்டிகளின் மீது
அரைத்துப் பூசினால், அவை உடைந்து புண் ஆறும். மூலம், மலச்சிக்கல்,
கரப்பான், பாதவாதம், நரம்பு தொடர்பான நோய்கள் நீங்குவதுடன், தசைநார்களும்
வலுப்பெறும்.
இதை முதன்முதலாக உண்ணும்போது, சிலருக்கு முதல் இரண்டு
நாட்களுக்கு பேதியாகும். அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை''
என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
முடக்கத்தானை போற்றுவோம்... மூட்டு வலியை விரட்டுவோம்!
லச்சக்கட்டைக் கீரை!
குளிர்காலம்
தொடங்கி விட்ட நிலையில்... குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை சளித்
தொந்தரவில் சிக்கித் தவிக்கிறார்கள். இதைப் போக்க... தேன், துளசி போன்றவை
பயன் பாட்டில் இருக்கிறது. ஆனால், பெரும்பாலும் மூலிகை என அறியப்படாத செடி
ஒன்றும் இதற்கு உதவத் தயாராக இருக்கிறது. சளி, சுவாசக் கோளாறு, நெஞ்சு வலி
ஆகியற்றைப் போக்கும் அந்த அற்புத மூலிகையை பல இடங்களில் அழகுச் செடியாக
வளர்க்கிறோம். லச்சக்கட்டைக் கீரை, சண்டிக்கீரை என பல பெயர்களில் இது
அழைக்கப்படுகிறது. சிறிய மரவகையைச் சேர்ந்த, வெளுத்த இளம் பச்சை நிறத்தில்
உள்ளங்கை அகல இலைகளோடு இது காணப்படும். சளி தொந்தரவுக்கு மட்டுமல்ல...
மூட்டுவலி, வாயுவினால் ஏற்படும் வயிற்றுப் பிரச்னைகளுக்குமான தீர்வுகளும்
இதில் இருக்கிறது.
இதைப்பற்றி பேசும் திண்டுக்கல், வனவிரி வாக்க மைய
வனச்சரகர் ராஜமாரியப்பன், ''கெட்டுப்போன எலும்பு மஞ்ஜையை சரியாக்குவதால்,
'மஞ்ஜைக் கெட்ட கீரை’ என அழைக்கப்பட்டு, அது மருவி 'லச்சக்கட்டை கீரை’ என
மாறிவிட்டது. கை, கால் மூட்டு சண்டித்தனம் செய்யும்போது செயல்பாடு
குறையும். அதை இந்த இலை சரி செய்வதால் 'சண்டிக்கீரை’ எனவும்
அழைக்கிறார்கள். போத்துகள் மூலமாக இதை இனப்பெருக்கம் செய்யலாம்'' என்றவர்,
''மற்ற கீரைகளைப் போல இதையும் சமைத்து சாப்பிடலாம்.
அசைவப் பிரியர்கள், இந்த இலையைச் சின்னதாக அரிந்து, ரத்தப் பொரியலில்
போட்டு உண்ணலாம். சைவம் உண்பவர்கள், பாசிப்பருப்பில் போட்டுக் கடைந்தோ,
பொரியல் செய்தோ சாப்பிடலாம். இதை உண்டால் கடுமையான நெஞ்சுவலி, சளி
அனைத்தும் சரியாகும். இதைத் தினமும் சாப்பிடக் கூடாது. வாரம் ஒருமுறை
உணவில் சேர்த்துக் கொள்ளலாம்'' என ஆலோசனைகளும் தந்தார் ராஜமாரியப்பன்.
Post a Comment