தொடர் வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை! 4.5 ஏக்கர்... ஆண்டுக்கு ` 6 லட்சம் லாபம்!

தொடர் வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை! 4.5 ஏக்கர்... ஆண்டுக்கு ` 6 லட்சம் லாபம்! ஒருங்கிணைந்த பண்ணை! 'ஒ ருங்கிணைந்த பண...

தொடர் வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை!
4.5 ஏக்கர்... ஆண்டுக்கு ` 6 லட்சம் லாபம்!
ஒருங்கிணைந்த பண்ணை!
'ஒருங்கிணைந்த பண்ணையம்’ அமைத்தால், ஆண்டு முழுவதும் நல்ல வருமானம் கிடைக்கும் என்று தெரிந்திருந்தும், பலரும் இதில் இறங்கத் தயங்குவதற்குக் காரணம், 'ஆடு, கோழி, மாடு என அனைத்தையும் மொத்தமாக வாங்க அதிக செலவு பிடிக்கும்’ என எண்ணுவதுதான். ஆனால், ''குறைந்த முதலீட்டிலேயே ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து, நல்ல வருமானம் எடுக்க முடியும்'' என்று அடித்துச் சொல்கிறார், திருவண்ணாமலை மாவட்டம், நாலாள்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், தன்னுடைய அனுபவத்திலிருந்து!
காலை வேளையொன்றில் தோட்டம் தேடிச்சென்றபோது, கால்நடைகளுக்குத் தீவனம் போட்டுக் கொண்டிருந்த ராமச்சந்திரன், நம்மை அன்புடன் வரவேற்று, தன்னுடைய பண்ணை பற்றி விரிவாகவே பேசினார்.

செங்கலுக்குப் பதில் கால்நடை வளர்ப்பு!
'நாங்க, அண்ணன், தம்பிங்க நாலு பேரு. பத்தாம் வகுப்புக்கு மேல எங்கப்பாவால என்னைப் படிக்க வைக்க முடியல. அதனால, செங்கல் சூளை தொழில்ல இறங்கினேன். கிடைச்ச வருமானத்துல 3 ஏக்கர் நிலம் வாங்கினேன். மானாவாரியா கடலை, கொள்ளுனு சாகுபடி பண்ணிட்டு இருந்தேன். வருமானம் குறைச்சலா இருந்தாலும், நிலத்தை சும்மா போட்டு வெக்காம விவசாயம் செஞ்சுட்டே இருந்தேன்.

ஒரு கட்டத்துல செங்கல் தொழில்ல வேலையாட்கள், எரிபொருள், மண் எல்லாத்துலயும் நிறைய பிரச்னை. அதனால அந்தத் தொழிலை விட்டுட்டு, பால்மாடு வளர்க்கலாம்னு முடிவெடுத்தேன். ஏற்கெனவே வீட்டுத் தேவைக்காக ரெண்டு கறவை மாடுகள் வெச்சிருந்தேன். அதோட ஆறு கலப்பின மாடுகளை ஈரோட்டுல இருந்து வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். ஒவ்வொரு மாடும் தினமும் 15 லிட்டர்ல இருந்து 20 லிட்டர் வரைக்கும் பால் கறந்துச்சு.
இந்த நிலையில, என்னோட நண்பர் ஒருத்தர், ஆட்டுப் பண்ணை வைக்கறதுக்காக... தலைச்சேரி ஆடு வாங்கப் போனார் கூடவே என்னையும் அழைச்சுட்டுப் போனார். அப்போ, நானும் ரெண்டு சினை ஆடுகளை வாங்கிட்டு வந்தேன். அதுங்க, ஒவ்வொன்னும் ரெண்டு குட்டி, போட, ஆடு வளர்ப்புல ஆர்வம் வந்துடுச்சு. உடனே பரண் அமைச்சுட்டேன்.

சொந்த நிலம் போக, குத்தகைக்கு ஒண்ணரை ஏக்கர் எடுத்திருக்கேன். மொத்தம் நாலரை ஏக்கர்ல விவசாயம் நடக்குது. ஒண்ணரை ஏக்கர்ல நாலாவது கட்டை கரும்பும், ஒண்ணரை ஏக்கர்ல மரவள்ளியும் இருக்கு. ஒரு ஏக்கர் 40 சென்ட்ல பசுந்தீவனம் இருக்கு. அதுக்கு மாட்டுச் சாணமும், ஆட்டு எருவும்தான் உரம். மாட்டுச் சிறுநீரை, சொட்டுநீர்ல கலந்து கரும்புக்கு விட்டுட்டு இருக்கேன். வேற எந்த உரமும் வைக்குறதில்லை. இந்த ஊட்டத்திலேயே நல்லா வளர்ந்துடுது'' என்று பெருமைப் பார்வை வீசிய ராமச்சந்திரன், தன்னுடைய ஒருங்கிணைந்த பண்ணையில் இருக்கும் மாடு, ஆடு, கோழி, மரவள்ளி, கரும்பு என்று ஒவ்வொன்றாக விவரித்தார்.

5 மாடு ஆண்டுக்கு 2 லட்சம்!
''மொத்தம் இருக்குற 10 மாடுகள்ல, 3 கன்னுக்குட்டிகள் போக 7 மாடுகள் இருக்கு. இதுல 5 மாடு வருஷம் முழுக்க கறவையில இருக்கு. இந்த மாடுகள்ல இருந்து தினமும் சராசரியா 50 லிட்டர் வீதம், ஒரு மாசத்துக்கு 1,500 லிட்டர் பால் கிடைக்குது. தனியார் பால் கம்பெனிக்குத்தான் ஊத்திட்டு இருக்கேன். ஒரு லிட்டர் பாலுக்கு சராசரியா 22 ரூபாய் விலை கிடைக்குது (இந்த விலை கடந்த மாத நிலவரத்தின் விலை. புதிய விலையை தனியார் பண்ணைகள் இன்னமும் கொடுக்கவில்லை). 1,500 லிட்டர் பாலுக்கு 33 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதுல தீவனம், மருத்துவச் செலவு, ஆள் கூலி எல்லாம் சேர்த்து 15 ஆயிரம் ரூபாய் போக, 18 ஆயிரம் ரூபாய் லாபம். வருஷத்துக்கு 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்.
30 ஆடு... ஆண்டுக்கு 3 லட்சம்!
ஆரம்பத்துல வாங்குன ரெண்டு பெட்டை ஆடுகள் மூலமா கிடைச்ச குட்டிகளைப் பெருக்குனதுல... இப்போ 30 பெட்டை, 10 கிடா, 18 குட்டிங்க கொட்டகையில நிக்குது. ஆடுகள், ரெண்டு வருஷத்துக்கு மூணு தடவை குட்டி ஈனும். தலைச்சேரி ஆடுகள் 2 குட்டிகள்ல இருந்து 4 குட்டிகள் வரை ஈனும். ஒரு ஈத்துக்கு சராசரியாக 2 குட்டிகள்னு வெச்சுக்கிட்டா... 30 ஆடுகள் மூலமா ரெண்டு வருஷத்துல 180 குட்டிகள் கிடைக்கும். இதை, வருஷத்துக்கு 90 குட்டிகள்னு ஒரு கணக்குக்காகப் பிரிச்சுக்கலாம். 6 மாசம் வளர்த்து, ஒரு ஆடு சராசரியா 5 ஆயிரம் ரூபாய்னு விற்பனை செய்தா (சராசரியா ஒரு ஆடு 24 கிலோ எடைக்கு வரும். உயிர்எடையாக கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்)... 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதுல தீவனம், பராமரிப்புச் செலவு, ஆட்கள் கூலியாக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவு போக, வருஷத்துக்கு 3 லட்சம் ரூபாய் லாபம்.

பரணுக்குக் கீழே கோழி!
ஆட்டுப் பரணுக்கு கீழ்ப்பகுதி இடம் சும்மா இருந்துச்சு. அதுல, ஒரு ஜோடி சண்டைக் கோழிக்குஞ்சுகளை வாங்கி விட்டேன். அது மூலமா கிடைச்ச முட்டைகளை அடைவெச்சு கோழிகளைப் பெருக்கினேன். போன ஒரு வருஷத்துல மட்டும் 50 ஆயிரம் ரூபாய்க்கு கோழி விற்பனை செஞ்சுட்டேன். இப்ப 9 பெட்டை, 5 சேவல், ஒரு மாச வயசுல 15 குஞ்சுகளும் நிக்குது. ஆட்டுப் புழுக்கையில உற்பத்தியாகுற புழுக்களை கோழிகள் சாப்பிட்டுக்குது. தினம் கொஞ்சம் அரிசி போடுறோம். மேய்ச்சல் முறையில வளர்க்குறதால, 6 மாசத்துல 2 கிலோவுல இருந்து, 3 கிலோ வரை ஒவ்வொரு கோழியும் எடை வந்துடும்.

30 சண்டைக்கோழியில் 50 ஆயிரம்!
9 பெட்டைக்கோழியில இருந்து வருஷத்துக்கு சராசரியா 324 முட்டை கிடைக்கும். இதுல 150 முட்டைகளை அடைவெச்சா, 100 குஞ்சுகள் கிடைக்கும். 6 மாதம் வளர்த்து விற்பனை செய்றேன். சராசரியா ஒரு கோழி 2 கிலோனு வெச்சுக்கிட்டா... மொத்தம் 200 கிலோ. உயிர் எடைக்கு ஒரு கிலோ 300 ரூபாய்னு விற்பனை செய்தா... 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஒரு முட்டை 10 ரூபாய்னு 150 மூட்டை மூலம் 1,500 ரூபாய் கிடைக்கும். கோழி, முட்டை மூலமா கிடைக்குற 61 ஆயிரத்து 500 ரூபாயில் தீவனச் செலவு போக, 50 ஆயிரம் ரூபாய் லாபம்.

ஆண்டுக்கு 50 ஆயிரம் கொடுக்கும் மரவள்ளி!
ஒண்ணரை ஏக்கர்ல இருக்குற மரவள்ளியில் இருந்து 15 டன் கிழங்கு கிடைக்கும். இப்போதைய நிலவரப்படி, கிலோ 6 ரூபாய்னு போகுது. அந்த வகையில 90 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதுல 40 ஆயிரம் ரூபாய் செலவு போனலும், 50 ஆயிரம் ரூபாய் லாபம்.

ஒண்ணரை ஏக்கர் கரும்பு... 50 ஆயிரம்!
ஒண்ணரை ஏக்கர்ல குறைந்தபட்சம் 45 டன் கரும்பு கிடைக்கும். ஆலைக்கு அனுப்பினா ஒரு டன்னுக்கு 2 ஆயிரத்து 550 ரூபாய் வீதம், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 750 ரூபாய் கிடைக்கும். செலவு போக 50 ஆயிரம் ரூபாய் லாபம்.
ஆக, மாடு, ஆடு, கோழி, மரவள்ளி, கரும்புனு எல்லாத்தையும் சேர்த்தா... வருஷத்துக்கு 11 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் வருமானம். 6 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் லாபம். இந்த லாபத்தை, நாலரை ஏக்கர் நிலத்துல இருந்து வருஷம் முழுக்க கொஞ்ச கொஞ்சமா எடுக்கிறேன். ஏ.டி.எம் கணக்கா'' என்று சந்தோஷமாகச் சொல்லி விடைகொடுத்தார்!

புறா, கூஸ் வாத்து!
அழகுக்காக, கூஸ் வாத்து மற்றும் புறா வளர்க்கும் ராமச்சந்திரனின் மனைவி ஜீவா, 'என்னோட பையன் 4 கூஸ் வாத்தையும், 6 புறாவையும் வாங்கிட்டு வந்துட்டான். இப்ப நாலு வாத்தோட, 15 புறா நிக்குது. இதுக்கு தினமும் கொஞ்சம் அரிசி, கம்பு போடுறோம். கூஸ் வாத்து முட்டை விடுது. அதை 10 ரூபாய்னு விற்பனை செஞ்சுடறோம். இதுவரைக்கும் புறாவை விற்பனை செய்யல. ஆனா, விற்பனை செய்தா ஒரு ஜோடி 300 ரூபாய்க்குக் குறையாம விற்பனை செய்யலாம்' என்றார் உற்சாகமாக.

தீவனம்!
ஆடு, மாடுகளுக்கான தீவனப் பராமரிப்பு பற்றிப் பேசும்போது, ''ஒரு ஏக்கர்ல கோ4, 10 சென்ட்ல வேலிமசால், 10 சென்ட்ல அகத்திக்கீரை, 20 சென்ட்ல சூபாபுல் போட்டிருக்கேன். இது எல்லாத்தையும்தான் பசுந்தீவனமா ஆடு, மாடுகளுக்குக் கொடுக்கிறேன். ஒவ்வொரு மாட்டுக்கும் தினமும் காலை, மாலைனு ரெண்டுவேளை... 20 கிலோ கோ-4, 2 கிலோ குச்சித் தீவனம், 40 கிராம் மினரல் மிக்சர்னு கலந்து கொடுக்கிறேன். ஒவ்வொரு ஆட்டுக்கும் காலையில 500 கிராம் வேலிமசால், 500 கிராம் சூபாபுல், 50 கிராம் அகத்தி, 2 கிலோ கோ-4 னு கலந்து ஒரு அங்குல நீளத்துக்கு வெட்டிக் கொடுக்கிறேன். சாயங்காலம் ஒவ்வொரு ஆட்டுக்கும் 200 கிராம் அடர்தீவனம்,
10 கிராம் மினரல் மிக்சர் கலந்து கொடுக்கிறேன். குட்டி ஈன்ற ஆட்டுக்கு தினமும் 250 கிராம் அடர்தீவனம் கொடுக்கிறேன்' என்று சொன்னார் ராமச்சந்திரன்.

மரபணு மாற்று ஆராய்ச்சி...
 'தூக்குதண்டனையே கிடைத்தாலும் எதிர்ப்போம்..!’
கோயம்புத்தூரை அடுத்துள்ள ஆலாந் துறை கிராமத்தில், கடந்த 2006ம் ஆண்டு விவசாயி ஒருவருடைய தோட்டத்தில் மான்சான்டோ நிறுவனம், மரபணு மாற்று நெல் விதைக்கான ஆராய்ச்சியில் இறங்கியது. இந்த சோதனை முயற்சியை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொண்டது. இதை எதிர்த்து உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவரான கு.செல்லமுத்து தலைமையில் சென்ற விவசாயிகள் அந்த மரபணு மாற்று நெற்பயிர்களைப் பிடுங்கி எறிந்தனர்.

மான்சோன்டோ நிறுவனத்தின் கூட்டாளியான மஹிக்கோ நிறுவன அதிகாரிகள், செல்லமுத்து உள்ளிட்ட 5 விவசாயிகள் மீது புகார் கொடுத்தனர். நீதிமன்றத்தில் வழக்கும் 7 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்நிலையில், திடீரென்று கு.செல்லமுத்து மற்றும் விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பட்டது. இதைத் தொடர்ந்து கோயம்புத்தூர் கோர்ட்டில் கடந்த 17ம் தேதி செல்லமுத்துவுடன், மற்ற விவசாயிகளும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இந்த வழக்கு டிசம்பர் 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய செல்லமுத்து, ''எத்தனை வழக்குகள் வந்தாலும், மரபணு மாற்று விதைகளை இந்த மண்ணில் நுழைய விடமாட்டோம். அதை எதிர்த்து கடுமையாகப் போராடுவோம். ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். மரபணு மாற்று ஆராய்ச்சியைத் தடை செய்ய, தூக்குதண்டனையே கிடைத்தாலும் ஏற்றுக் கொள்வோம்' என்றார் ஆவேசமாக.

Related

வேலை வாய்ப்புகள் 769052826074658325

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item