கூழாங்கல்
நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது என்றால், நம்ப முடிகிறதா? காலையும்
மாலையும், பார்க்கிலும் பீச்சிலும் நடையாய் நடக்கிறோம்.
தற்போது அரசாங்கமேகூட மக்களின் நடைப்பயிற்சிக்காக, பல
பூங்காக்களில் நடைபாதையை அமைத்துவருகிறது. குறிப்பாகச் சில பூங்காக்களில்
நடப்பவர்களுக்காக கூழாங்கல் பாதையை அமைக்கிறது. சாதாரண நடைபயிற்சியைக்
காட்டிலும், அதிக நன்மைகளை அள்ளித் தருகிறது இந்த (Pebble path) கூழாங்கல்
நடைபாதை.
கூழாங்கற்களின் மேல் நடப்பதால், என்னென்ன நன்மைகள் என்பது பற்றி சித்த மருத்துவரும், இயற்கை மருத்துவருமான மகேஷ்வரியிடம் கேட்டோம்.
“நம் உடலில் நரம்புகள் முடிவடைவது உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும்தான்.
அதன் காரணமாகவே கை தட்டுவதைக்கூட அழுத்தமாகத் தட்ட வேண்டும் என்று
சொல்வோம். செருப்பு இல்லாமல் வெறும் காலில் நடக்கும்போது, கால்களில்
இருக்கும் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலுக்கும் மனதுக்கும் நன்மை கிடக்கிறது.
கூழாங்கல் உருண்டையாக, வழவழப்பாக இருப்பதால்
உள்ளங்கையிலும், உள்ளங்காலிலும் பட்டதும், ஒரு இடத்தில்கூட நிற்காமல்,
அனைத்துப் பகுதிகளையும் தொட்டுக்கொண்டு உருண்டோடிவிடும். இதனால்
கைகளுக்கும் கால்களுக்கும் அழுத்தம் சமமாகக் கிடைக்கிறது. வழுவழுப்பாக
இருப்பதால் பாதத்தைப் பாதிக்காது.
கூழாங்கல்லில் நடப்பது உடலுக்குப் பயிற்சி மட்டும்
அல்ல, ஆரோக்கியத்தையும் தருகிறது. காலில் உள்ள நரம்புப் புள்ளிகள் மூலம்
சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், முதுகெலும்பு, கண், காது உள்ளிட்ட
அனைத்து உறுப்புகளும் தூண்டப்படுகின்றன. இதனால் அந்த உறுப்பின் செயல்பாடும்
சீராகி உடல் ஆரோக்கியம் பெறும்.
கூழாங்கல் மூலம் பெறப்படும் அழுத்தத்தைப்
போன்றதுதான், கைகளால் உள்ளங்காலுக்கு அழுத்தம் தரப்படும், ஃ புட்
ரெப்லக்சாலஜி. (Foot Reflexology) கூழாங்கல் பாதையில் நடக்கும்போது,
செருப்பு இல்லாமல் வெறும் காலோடு நடக்க வேண்டும். முதன்முதலில்
நடக்கும்போது சற்று கடினமானதாக இருந்தாலும், பின்னர் பழகிவிடும். முதலில்
மெதுவாக நடக்க வேண்டும். ஒரு வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்க
வேண்டும். கூழாங்கல் பாதையில் ஒரு நாளைக்கு 15 முதல் 20 நிமிடங்கள் வரை
நடந்தால் போதும்.
கைகளுக்கும் கூழாங்கல் பயிற்சி
உள்ளங்கால்கள் போலவே உள்ளங்கைகளுக்கும் கூழாங்கல் மூலம்
பலன் பெறலாம். கூழாங்கல்லை, இரண்டு உள்ளங்கைகளுக்கு நடுவே வைத்து,
முன்னும் பின்னுமாக (clockwise and anti-clockwise) உருட்டலாம். தரையில்
கல்லை வைத்து உள்ளங்கை முழுவதும் படுவதுபோல் உருட்டவும் செய்யலாம்.
உள்ளங்கையிலுள்ள உள்ள நரம்பு நுனிகளைத் தூண்டச் செய்யும் பிரஷராக இந்தப்
பயிற்சி அமையும். தினமும் இதுபோல் ஐந்து நிமிடங்கள் வரை செய்யலாம்.
கூழாங்கல் ஒத்தடம்
சின்ன சின்னக் கூழாங்கல்லை எடுத்துக்கொண்டு அதனுடன்
தவிடு (husk) சேர்த்துக் கலந்து, வாணலியில் சூடுசெய்து, வெள்ளைத் துணியில்
கட்டி உடலில் எங்கு வலி ஏற்பட்டாலும், அங்கு ஒத்தடம் போல கொடுத்தால், அந்த
வலி நீங்கும். இனி, கூழாங்கற்களை வாங்கி வீட்டின் வழி நெடுகக் கொட்டுவோம்.
அதன் மேல் நடக்கத் தொடங்குவோம். வீட்டினரின் ஆரோக்கியத்துக்குப் பாதை
இடுவோம்.
பாத அழுத்தத்தினால் ஏற்படும் ஆரோக்கியம்!

உடலுக்கு ஒய்வு கிடைக்கும்.

ஆழ்ந்த தூக்கம் வரும்.

உள்ளங்காலில் உள்ள அக்குபிரஷர் புள்ளிகள் தூண்டப்படுவதால், உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்படும்.

டென்ஷன், தசைவலி, தசைகளில் பிடிப்பு போன்றவை குணமாகும்.

மனம் அமைதி பெறும்.

ரத்த ஒட்டம் சீராகும்.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

பக்கவாதம், ஆற்றல் இழந்த நிலைமையில் உள்ளோர் கூழாங்கற்களின் மேல் நடந்தால், இழந்த ஆற்றலை மீண்டும் பெறலாம்.

உடல்பருமன் உள்ளவர்கள், கூழாங்கற்களின் மேல் நடந்தால், பலன் இரட்டிப்பாகும். கொழுப்பு உடலில் சேராது.

சர்க்கரை நோயாளிகள் கூழாங்கல்லின் மேல் நடந்து வந்தால், குணமாகும் வாய்ப்புகள் அதிகமாகும்.

உயர்
ரத்த அழுத்தம் உள்ளளவர்களுக்கு டென்ஷனும் பதற்றமும் உடன் பிறந்தவை.
இவர்கள் ஒய்வு எடுப்பது எவ்வளவு அவசியமோ, அதுபோல கூழாங்கற்களின் மேல்
நடப்பதும் மன அழுத்தத்தை விரட்டி நல்ல மனநிலைக்கு மாற்றும்.
Post a Comment