கலக்கும் கறியாடு வளர்ப்பு..! வேலை வாய்ப்புகள்!!

கலக்கும் கறியாடு வளர்ப்பு..! 'அ ள்ளித் தரும் ஆடு வளர்ப்பு’ என்கிற தலைப்பில்... கடலூர் ...

கலக்கும் கறியாடு வளர்ப்பு..!
'அள்ளித் தரும் ஆடு வளர்ப்பு’ என்கிற தலைப்பில்... கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் மே 4-ம் தேதி 'பசுமை விகடன்’ சார்பாக கருத்தரங்கு நடைபெற்றது.

வீராணம் பாசன விவசாயிகள் சங்கம், அம்மன் ஆட்டுப்பண்ணை ஆகியவை இணைந்து நடத்திய அக்கருத்தரங்கு பற்றிய செய்தி, கடந்த இதழில் இடம்பிடித்தது. அங்கே பகிரப்பட்ட தொழில்நுட்பங்கள் இந்த இதழில் இடம்பிடிக்கின்றன.

'ஆடு வளர்ப்பில் நவீனத் தொழில்நுட்பம்’ என்கிற தலைப்பில் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியரும், தேனி மாவட்ட உழவர் பயிற்சி மையத்தின் தலைவருமான பீர்முகமது பேசினார்.

''ஆடு, மாடுகளை ஒரு காலத்தில் மேய்ச்சலுக்கு விட்டு வளர்த்தார்கள். தற்போது, மேய்ச்சல் நிலங்கள் அழிந்து கொண்டே வருவதால், கொட்டில் முறையில் வளர்க்கிறார்கள்.

கிட்டத்தட்ட கொட்டில் முறையைத்தான், 'நவீன முறை’ என்கிறார்கள். ஆனால், அதையும் தாண்டி தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. உதாரணமாக, கொட்டில் முறையில்
100 ஆடுகள் வளர்ப்பதாக இருந்தால், குறைந்தது மூன்றரை ஏக்கர் நிலம் வேண்டும். அப்போதுதான் போதுமான தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், ஒரு ஏக்கர் நிலத்தில்
500 ஆடுகள் வரை வளர்க்கும் அதிநவீன 'ஹைட்ரோபோனிக் ஃபாடர் புரொடக்ஷன்’ என்கிற தொழில்நுட்பம் சில நாடுகளில் அறிமுகமாகியிருக்கிறது. தமிழ்நாட்டில்கூட ஒன்றிரண்டு பண்ணையாளர்கள் அந்த முறைக்கு மாறியுள்ளார்கள்.

குறைந்த இடத்தில் அதிக தீவனம்!
அது என்ன 'ஹைட்ரோபோனிக்’ முறை..? வேறொன்றும் இல்லை. கிராமங்களில் திருவிழா சமயங்களில் நவதானியங்களைப் போட்டு முளைப்பாரி செய்வார்களே அதே தொழில்நுட்பம்தான்.
சின்னப்பானைகளில் முளைப்பாரி போடுவது போல, பெரிய பெரிய 'பிளாஸ்டிக் டிரே’க்களில் பயிரை முளைக்க வைக்கும் தொழில்நுட்பத்தைத்தான் 'ஹைட்ரோபோனிக் ஃபாடர் புரொடக்ஷன்’ என்கிறார்கள். கப்பல்களில் சரக்குகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தும் கண்டெய்னர் போல உள்ள ஒரு அமைப்பில், டிரேக்களை அடுக்கி வைக்க வசதியாக இரும்புக் கம்பிகளை அமைத்து இருப்பார்கள்.

ஒவ்வொரு டிரேக்கும் இடையே ஒன்றரை அடி இடைவெளி இருக்கும். உள்ளே குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். டிரேக்களில் தண்ணீர் ஊற்றி, ஊறவைக்கப்பட்ட மக்காசோள விதையைத் தூவி, வரிசையாக டிரேக்களை அடுக்கி வைத்து, குறிப்பிட்ட வெப்பநிலையில் பராமரித்தால், 7 நாட்களில் இருந்து 10 நாட்களுக்குள் மக்காசோளம் பயிராக வளர்ந்து விடுகிறது. அதை அப்படியே எடுத்து ஆடுகளுக்குக் கொடுக்கிறார்கள். ஒற்றை நாற்று நடவுக்கு நெல் நாற்றை பாய் நாற்றாங்காலில் சுருட்டி எடுத்து வருவது போல, இந்தப் பயிரை எடுத்து வெட்டாமல், அப்படியே ஆடுகளுக்குக் கொடுக்கிறார்கள்.

இந்த முறையில் பத்து கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்ய, ஒன்றேகால் கிலோ விதை போதுமானது. சாதாரண புல்லைவிட, இந்த முறையில் உற்பத்தி செய்யப்படும் தீவனத்தில் 6% புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. காலை, மாலை இருவேளையும் இந்தத் தீவனத்தைக் கொடுத்து, மதியம் உலர் தீவனத்தை கொடுக்கிறார்கள். ஒவ்வொரு ஆட்டுக்கும் தினமும் 10 கிராம் தாது உப்புக்கலவையைக் கொடுக்கிறார்கள். இதனால், ஆடுகளின் வளர்ச்சி அபாரமாக இருக்கிறது. இந்த நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் தீவனம் வளர்க்க ஒரு யூனிட்டுக்கு (ஒரு கண்டெயினர்) 18 முதல் 20 லட்ச ரூபாய் வரை செலவாகும். ஆனால், இதே தொழில்நுட்பத்தை கன்டெய்னருக்கு பதிலாக பாலி ஹவுஸ் மற்றும் காற்றுப் புகாத அறைகளில்கூட முயற்சி செய்யலாம்.
இப்படிச் செய்வதன் மூலமாக குறைந்த செலவில் அதிக தீவனத்தை உற்பத்திச் செய்யலாம்'' என்ற பீர்முகமது, அடுத்ததாக, 'பிராய்லர் கோட்’ எனப்படும், கறியாடு வளர்ப்பு முறை பற்றி சொன்னார்.

கறியாடு வளர்ப்பு!
பிராய்லர் கோட் வளர்ப்பு தமிழகத்தில் இன்னும் பிரபலமாகவில்லை. ஆனால், கேரளாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் இந்த முறையில் ஆடுகளை வளர்த்து வருகிறார்கள். இதற்கு அதிக செலவு செய்ய வேண்டியதில்லை.

ஆடுகள் வெளியே போகாத அளவுக்கு படல், வலை, வேலி ஆகியவற்றில் ஏதாவதொன்றை அமைத்தாலே போதும். அருகில் உள்ள கிராமங்களில் கூடும் சந்தைகளில் கிடைக்கும் பால் குடி மறந்த நிலையிலுள்ள 80 நாள் வயதுள்ள வெள்ளாட்டுக் கிடாய் குட்டிகளை வாங்க வேண்டும்.

குட்டிகளைப் பண்ணைக்குக் கொண்டு வந்தவுடன் விரை நீக்கம் செய்ய வேண்டும். குட்டிகள் என்பதால், குறைவான தீவனங்களைத்தான் உட்கொள்ளும். அதனால், குறைவான இடத்தில் பசுந்தீவனங்களை வளர்த்தாலே போதுமானது.

மூன்று மாதம் வயதுள்ள குட்டிக்கு  ஒரு நாளைக்கு முக்கால் கிலோ முதல் ஒரு கிலோ வரையும்; 3 முதல் 6 மாதம் வயதுடைய குட்டிக்கு ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வரையும்; 6 மாதம் முதல் 9 மாதம் வரை வயதுடைய குட்டிக்கு இரண்டு கிலோ முதல் மூன்று கிலோ வரையும் பசுந்தீவனம் தேவைப்படும்.
குட்டிகளை ஆறு மாதம் வரை வளர்த்து, அதாவது குட்டிகளுக்கு 9 மாத வயதில், விற்பனை செய்து விட வேண்டும். கறிக்காக வளர்க்கும்போது அதிக பராமரிப்பு தேவைப்படாது. கறிக்காக 9 மாத வயதுள்ள ஆடுகளைத்தான் பயன்படுத்த வேண்டும். அந்த வயதுள்ள ஆடுகளின் கறிதான் சுவையானதாகவும், சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். 

ஆனால், பெரும்பாலான இடங்களில் ஐந்து மாத குட்டிகளைக்கூட அறுக்கிறார்கள். அது தவறு. அந்த வயதுள்ள குட்டிகளின் கறியில் சுவையோ சத்தோ இருக்காது'' என்றவர் கறியாடு வளர்ப்பின் மூலமாக கிடைக்கும் வருமானத்தைப் பற்றிச் சொன்னதும், வியப்பில் விழிகளை விரித்தனர், விவசாயிகள்.

மாதம் 56 ஆயிரம்!

''80 நாள் வயதுடைய குட்டியை 2 ஆயிரம் ரூபாய் விலையில் வாங்கலாம். அதை அடுத்த ஆறு மாதங்கள் வளர்ப்பதற்கு அதிகபட்சம் 2 ஆயிரம் ரூபாய் செலவாகும். மொத்தம் 4 ஆயிரம் ரூபாய் செலவு.

9 மாத வயது ஆடு, குறைந்தபட்சம் 25 கிலோ எடை இருக்கும். உயிரோடு இருக்கும் ஓர் ஆட்டின், இன்றைய குறைந்தபட்ச பண்ணை விலை கிலோவுக்கு 250 ரூபாய் என வைத்துக் கொண்டாலும், 6 ஆயிரத்து 250 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். இதில் செலவுத் தொகையை கழித்து விட்டால், ஒரு ஆடு மூலமாக 2 ஆயிரத்து 250 ரூபாய் லாபம்.

இந்த முறையில் 25 குட்டிகளை வாங்கி வளர்த்தால், 56 ஆயிரத்து 250 ரூபாய் லாபமாகக் கிடைக்கும். சுழற்சி முறையில் மாதம் 25 குட்டிகள் என வாங்கி வளர்த்தால், தொடர்ச்சியாக மாதாமாதம் வருமானம் கிடைக்கும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் இந்த முறை வளர்ப்பில் ஈடுபடலாம்.

தமிழக அரசு வழங்கி வரும் விலையில்லா ஆடுகளில் பெட்டைக்குட்டிகளை வைத்துக் கொண்டு, கிடாய் குட்டிகளை விற்று விடுகிறார்கள். அவர்களிடம் கூட கிடாய் குட்டிகளை சுலபமாக வாங்க முடியும். ஆடுகளைப் பொருத்தவரை விற்பனைக்குப் பிரச்னையே இல்லை. வியாபாரிகள் தேடி வந்து பிடித்துக் கொள்வார்கள்'' என்று சொன்னார்.

தொடர்ந்து ஆடு வளர்ப்பில் உள்ள பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் பற்றிப் பேசிய அம்மன் ஆட்டுப்பண்ணை உரிமையாளர் சதாசிவம், ''வெள்ளாடுகள், பனி, மழை, வறட்சினு எல்லா காலத்துக்கும் ஒத்துப்போகும். ஒரு இடத்துல இருந்து அடுத்த இடத்துக்கு மாத்துனாலும், பத்து நாள் ஒழுங்கா பராமரிச்சாலே, அந்த இடத்துக்கு தக்க மாதிரி மாறிக்கும். விவசாயத்தை மட்டும் பாத்தா... பல நேரத்துல நட்டம்தான் வரும். விவசாயத்தோட சேர்த்து ஆடு, மாடுகள வளர்த்தா நிச்சயம் நட்டம் வராது.

ஒரு ஏக்கர் நிலத்துல வாழை போட்டா... ஒரு லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். அதே ஒரு ஏக்கர்ல தீவனத்தை உற்பத்தி செஞ்சி அம்பது ஆடுகளை வளத்தோம்னா வருஷத்துக்கு மூணு லட்ச ரூபாய் வரைக்கும் வருமானம் பாக்கலாம்.

பண்ணைக்கு டாக்டர் வரக்கூடாது!

பெரும்பாலான ஆட்டுப்பண்ணைகள் ஜெயிக்காமப் போறதுக்கு காரணம் பண்ணையாளர்களோட நேரடிப்பார்வை இல்லாததுதான். 'பணத்தைப் போட்டு பண்ணையை ஆரம்பிச்சா போதும், வருமானம் வந்துடும்’னு நினைக்கறாங்க. அது ரொம்ப தப்பு.

என்னதான் வேலைக்கு ஆளுங்கள வெச்சிருந்தாலும் நாமளும், தினமும் பண்ணையைப் பார்வையிடணும். 'நாம பண்ணைக்குப் போக முடியாது’னு நினைச்சா... நிச்சயம் ஆடு வளப்புல இறங்காதீங்க. கண்டிப்பா நஷ்டமாகிடும். பண்ணையை சுத்தமா வெச்சுக்கிட்டாலே, பாதி பிரச்னை தீர்ந்துடும். ஒரு வெற்றிகரமான பண்ணைக்கு டாக்டர் வரக்கூடாது. அந்தளவுக்கு பராமரிப்பு இருக்கணும்.

கொட்டில் முறையில, தரையிலிருந்து கொட்டிலோட உயரம் கம்மியா இருந்தா... கீழ புழுக்கையில இருந்து வர்ற மீத்தேன் வாயுவால பிரச்னை வரும். அதனால, கொட்டில் உயரமாத்தான் இருக்கணும். நாலஞ்சு நாட்டுக்கோழிகளை வாங்கி விட்டா, கீழ விழுற புழுக்கையைக் கிளறி, காத்தோட்டமாக்கிடும்.
ஆடுகள், காதை சுவத்துலயோ, வாயிலயோ சொறிஞ்சா, காதுகள்ல முடியில்லாத இடத்துல உண்ணிப் பூச்சி இருக்குனு அர்த்தம். அதைப் பாத்து, துடைச்சி எடுத்துடணும். இதுமாதிரி சின்னா விஷயங்கள்தான். ஆனா, சரியா செய்யணும்.

ஆடு வளக்கணும்னு நினைக்கிறவங்க, கொட்டகை போடுறதுக்கு முன்னயே, கோ-4, கோ-5, வேலிமசால், அகத்தி, குதிரைமசால், ஆப்ரிக்கன் டால் மக்காசோளம், கோ.எஃப்.எஸ்.-29...னு தீவன உற்பத்தியை ஆரம்பிச்சுடணும். தீவனம் இல்லாம ஆடுகளை வாங்கிட்டு வந்தா... நிச்சயம் அந்தப் பண்ணையை நடத்த முடியாது.  

அனுபவம் அவசியம்!
ஆடுகளுக்கு எந்த மாசம் என்ன தடுப்பூசி போடணும்? எப்போ என்ன மருந்து கொடுக்கணும்னு அட்டவணை போட்டு பண்ணையில தொங்க விடணும். அதைப் பாத்து அந்தந்த மாசம் செய்ய வேண்டியதைத் தவறாம செஞ்சாலே நோய்ங்க தாக்காது. அதேபோல நல்ல தரமான ஆடுகளைப் பார்த்து வாங்கணும்.

உங்களுக்கு நல்லா தெரிஞ்ச தரமான பண்ணைகள்ல இருந்து குட்டிகளை வாங்குங்க. வியாபாரிங்க சில நேரம் வயிறு முழுக்க தண்ணிய நிரப்பி ஆடுகளை போஷாக்கா காட்டி ஏமாத்தி வித்துடுவாங்க. அதனால, சந்தைகள்ல வாங்கும்போது, ரொம்ப கவனமா இருக்கணும்.

எந்த ஒரு தொழில்லயும் முன் அனுபவம் இல்லாம இறங்கக்கூடாதுனு சொல்வாங்க. ஆடு வளர்ப்புக்கும் அது பொருந்தும். அதனால புதுசா பண்ணை அமைக்கறவங்க, எடுத்தவுடனே அதிக எண்ணிக்கையில ஆடுகளை வாங்காதீங்க. 20 ஆடுக, ஒரு கிடாய் மட்டும் வாங்கி பண்ணையை ஆரம்பிங்க. அந்த இருபது ஆடுகள்லயும் சினை ஆடுக, பால் கொடுக்குற ஆடுக, பருவத்துக்கு வந்த ஆடுக, குட்டிகனு கலந்து வாங்கணும். அப்பத்தான் எல்லா வயசு ஆடுகள பத்தின அனுபவமும் கிடைக்கும். அனுபவம் வந்த பிறகு அதிக எண்ணிக்கையில ஆடுகள வளர்க்கலாம்'' என்ற சதாசிவம் நிறைவாக,

ஆண்டுக்கு 3 லட்சம் லாபம்!
''ஒரு பண்ணையில 50 ஆடுக இருக்கு. அதுல கிடாய் போக, 47 ஆடுக குட்டி போடுதுனு வெச்சுக்குவோம்.

ஒரு வயசு முடிந்த ஆடு, ரெண்டு வருஷத்துல மூணு தடவை குட்டிப் போடும். ஒவ்வொரு ஆடும் குறைந்தபட்சம் ஈத்துக்கு ரெண்டு குட்டி போடும். இந்தக் கணக்குப்படி 47 ஆடுக மூலமா 282 குட்டிக கிடைக்கும். சராசரியா 250 குட்டினு வெச்சுக்குவோம். அதை மூணு மாசம் வளர்த்து விக்கும்போது ஒரு குட்டி 3,500 ரூபாய்க்கு விக்கும்.

250 குட்டிக்கு, 8 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய். வேலையாள் கூலி, பசுந்தீவனம், அடர்தீவனம், கரன்ட் பில், பராமரிப்பு எல்லா செலவும் சேர்த்து ரெண்டு லட்ச ரூபாய்னு வெச்சுகிட்டாலும் 6 லட்சத்து 75 ஆயிரம் லாபமா நிக்கும். இந்தக் கணக்குப்படி பார்த்தா வருஷத்துக்கு 3 லட்சத்து சொச்சம் லாபமா கிடைக்கும். ஒரு ஏக்கர் நிலத்துல இருந்து அதிகம் அலட்டிக்காம இந்த வருமானம் வேற எந்தத் தொழில்ல கிடைக்கும்?'' என்று கேட்க... ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்ற விவசாயிகள்... கணக்குப் போட்டபடியே கலைந்தனர்!

தொடர்புக்கு,
பீர்முகமது, செல்போன்: 94433-21882
சதாசிவம், செல்போன்: 94420-94446
ராஜமாணிக்கம், செல்போன்: 99432-65061

கழிசலுக்கு கத்திரி... சளிக்கு கண்டங்கத்திரி!
ஆடுகளுக்கான மூலிகை வைத்தியம் பற்றி கருத்தரங்கில் பேசிய சித்த மருத்துவர். ராஜமாணிக்கம், ''ஆடுகளுக்குச் சரியான நேரத்துல குடல்புழு நீக்கலனா, மெலிஞ்சு போயிடும். கால்படி அளவு சூபாபுல் (சவண்டல்) விதையை, 24 மணி நேரம் தண்ணியில ஊற வெச்சு, அதுல இருந்து 50 மில்லி தண்ணிய எடுத்து ஆட்டுக்குக் கொடுத்தா போதும். குடல்புழு வெளிய வந்துடும்.

வேப்பிலை, மஞ்சள், துளசி இது மூணையும் சம அளவு எடுத்து அரைச்சி, நெல்லிக்காய் அளவு கொடுத்தா... வாய்ப்புண் ஆறிடும். 

காய்ச்சல் வந்த ஆடுகளுக்கு, 3 சின்ன வெங்காயம், 5 மிளகு, ஒரு வெற்றிலையை ஒண்ணா வெச்சு கொடுத்தா... சரியாகிடும். 

50 மில்லி நெய்யை மூணு நாளைக்குக் கொடுத்துட்டு வந்தா... தொண்டை அடைப்பான் சரியாகிடும்.

 கொழிஞ்சியை அரைச்சி ஒரு கொய்யாப்பழ அளவுக்குக் கொடுத்தா... விஷக்கடி சரியாகிடும்.

ஆடுகளுக்கு வர்ற பெரிய பிரச்னை கழிச்சல். இதுக்கு ரொம்ப கஷ்டப்பட வேணாம். 5 கத்திரிக்காயைச் சுட்டு தின்னக் கொடுத்தா போதும். கழிசல் காணாம போயிடும். 

கண்டங்கத்திரிப் பழத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, வெள்ளாட்டுக் கோமியத்துல 24 மணி நேரம் ஊறவெச்சு, சாறு எடுத்து, மூணு சொட்டு மூக்குல விட்டா மூக்கடைப்பு, சளி எல்லாம் சரியாகிடும். 

சீதாப்பழ மர இலையை ஆடுக மேல தேய்ச்சி விட்டா பேன் எல்லாம் ஓடிடும். 

ஜீரண கோளாறு வந்தா, 300 மில்லி தேங்காய் எண்ணெய் கொடுத்தா சரியாகிடும். 

நல்லெண்ணெயும், மஞ்சளும் கலந்து தடவுனா கழலை போயிடும்'' என்று வரிசையாக பட்டியலிட்டுவிட்டு, ''ஆடுகளுக்குத் தேவையான கை வைத்தியத்தைத் தெரிஞ்சு வெச்சுகிட்டா... அவசரத்துக்கு டாக்டரைத் தேடி அலையாம, நீங்களே ஆடுகள காப்பாத்திடலாம்'' என்று நம்பிக்கையூட்டினார்.

Related

வேலை வாய்ப்புகள் 6841130633135564956

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Dec 4, 2024 8:33:35 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,088,810

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item