பயிற்சி திருவினையாக்கும்!
சென்னை, கிழக்குக்
கடற்கரைச் சாலை, முட்டுக்காட்டில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில், பரந்து
விரிந்திருக்கிறது அந்த மத்திய அரசு நிறுவனம். 'நிப்மெட்’ என்று சொன்னால்,
மாநகரப் பேருந்துகளும் வெளியூர் பேருந்துகளும் அந்த நிறுத்தத்தில்
நிற்கின்றன.
அதென்ன, 'நிப்மெட்’? 'ஒன்றுக்கும் மேற்பட்ட
ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம்’ (National Institute for
Empowerment of Persons with Multiple Disabilities) என்பதன் சுருக்கமே
'நிப்மெட்’.

'சிறப்புக்குழந்தைகள்’ என்று அழைக்கப்படும்
மாற்றுத்திறன் உடைய குழந்தைகளைப் பெற்றவர்களின் மனவலியை எளிதில்
வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது. ஆனால் கண்களில் நம்பிக்கையைத் தேக்கி,
இதயத்தில் உறுதியைத் தாங்கி, இங்கே வரும் பெற்றோர்களின் நம்பிக்கை
வீண்போவதே இல்லை. அவர்களின் பாரத்தைக் குறைத்து, குழந்தைகளுக்குப் பயிற்சி
தந்து, மறுவாழ்வு அளிக்கிறது 'நிப்மெட்’.
''சென்னை மட்டுமில்லை... அரக்கோணம், வேலூர், திருத்தணி,
நெல்லூர்னு பக்கத்து ஊர்கள், மாநிலங்களில் இருந்து, பிறந்த
குழந்தையிலிருந்து '30 வயசுக் குழந்தை’ வரை, மாற்றுத்திறன்கொண்ட தங்கள்
பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு, காலையிலேயே இங்கே வர ஆரம்பிச்சிடுவாங்க''
என்றபடியே, வளாகத்தை நமக்குச் சுற்றிக் காண்பித்தார் பயிற்சியாளர் டாக்டர்
விஜயலெட்சுமி. ஒவ்வோர் அறையிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகளைக் கொண்ட
(Multiple disability) குழந்தைகளும் மாணவர்களும் பல அற்புதங்களை
அனாயாசமாகச் செய்வதைப் பார்த்து பிரமித்தோம். பயிற்சியாளர்களுடன் கூடவே
பெற்றோர்களும் பயிற்சி தருகின்றனர்.
பார்வைத்திறன், செவித்திறன், பேசும்திறன் - மூன்று
குறைபாடுகளும் உடைய குழந்தைகள் நடப்பதும், படிப்பதும், விளையாடுவதும்,
தங்களுக்குள் சண்டையிடுவதும் நெகிழவைக்கின்றன. இவர்களுக்கு அளிக்கப்படும்
உலகத்தரமான பயிற்சிகள், அதற்கான உபகரணங்கள், அனுபவம் வாய்ந்த
பயிற்சியாளர்கள் என எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறது 'நிப்மெட்’.
ஆனால், இந்த நிறுவனத்தைப் பற்றி இன்னும் சரியான விழிப்பு உணர்வு இல்லை.
சிறப்புக் குழந்தைகளை உண்மையில் சிறப்பான குழந்தைகளாக
மாற்றிவிடும் பணியைத் திறம்படச் செய்துவரும் 'நிப்மெட்’ நிறுவனத்தின்
இயக்குநர் டாக்டர் நீரதா சந்திரமோகனிடம் பேசினோம்.
'ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள் மற்றும் உடல்
உறுப்புகள் செயல் இழந்தவர்களின் நலனுக்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்த
நிறுவனம். இதுபோல, ஒருங்கிணைந்த கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,
இந்தியாவிலேயே இது ஒண்ணுதான். 2005-ம் வருஷம் ஆரம்பிச்சோம். இங்கே நாங்க
தந்த பயிற்சிகள் மூலமா மறுவாழ்வு பெற்ற மாற்றுத் திறனாளிகளோட எண்ணிக்கை,
இரண்டரை லட்சத்துக்கும் மேல்.
குழந்தைகளிடம் இருக்கும் குறைபாட்டைக் கண்டறிதல்,
பயிற்சி, கல்வி, வேலைவாய்ப்பு... இப்படி எல்லா விஷயங்களும் ஒரே இடத்தில்
கிடைக்கிறதுதான் எங்க நிறுவனத்தின் ஸ்பெஷாலிட்டி. பொதுவாக, பார்வை,
செவித்திறன், பேசும் திறன் - மூன்றையும் இழந்து வரும் குழந்தைகள்தான்
அதிகம். 'செரிப்ரல் பால்ஸி’யோடு, ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு
இருக்கிறவங்க, மஸ்குலர் டிஸ்ட்ரபி பிரச்னை மற்றும் மன வளர்ச்சி குன்றிய
பிரச்னை இருக்கும் பசங்க எனப் பல குறைபாடுகளோடு குழந்தைகளை அழைச்சுக்கிட்டு
வருவாங்க. இன்னும் சிலர் கை, கால்கள் இயங்காமல், எழுந்து நடக்க முடியாம
நாற்காலியோடு முடங்கிப்போய் வருவாங்க. எல்லாவிதமான குறைபாடுகள்
உடையவங்களுக்கும் இங்கே பயிற்சிகள் கொடுக்கிறோம்.
எல்லா வயதினருக்கும் இங்கே தனிப்பட்ட பயிற்சிகள்
இருக்கு. ஒவ்வொருவரின் குறைபாட்டையும் கண்டுபிடித்து, அதற்குரிய சிகிச்சை
மற்றும் பயிற்சிகளைத் தொடங்கிடுவோம். இந்த மாதிரிக் குழந்தைகளை மூணு
வயசுக்குள்ளே இங்கே கொண்டுவரணும்கிறது ரொம்ப முக்கியம். அந்த வயசில்
குறைபாட்டைக் கண்டுபிடிச்சிட்டா, குழந்தையின் கற்கும் திறனும் வேகமாக
இருக்கும்.
பொதுவாக இங்கே வரும் குழந்தைகளுக்கு இயங்கும் திறன்,
செவித் திறன், பார்வைத் திறன், நுண்ணறிவுத் திறன் (ஐ.க்யூ) ஆகியவை
பரிசோதிக்கப்பட்டு, அதன் அடிப்படையில், என்ன குறைபாடுனு பார்க்கிறோம்.
பிறகு, அவங்க பிரச்னைக்கு ஏற்ப பிசியோதெரப்பி, ஸ்பீச், ஆக்கு«பஷனல்,
காக்னிட்டிவ், பிஹேவியர் போன்ற தெரப்பிக்களும், பெற்றோருக்கு
கவுன்சலிங்கும் வழங்குறோம். அப்புறம், அவங்களுக்கு இருக்கும் இயங்கு
திறனைப் பொறுத்து, சாதாரணப் பள்ளிகள் அல்லது சிறப்புப் பள்ளிகளுக்கு
அனுப்புறோம். எங்க வளாகத்துக்கு உள்ளேயே இருக்கும் மாதிரிப் பள்ளிக்கு,
'அகடமிக் ஸ்கில்’ உள்ள பிள்ளைங்களை அனுப்புறோம்.
இவங்களுக்காகவே ஸ்பெஷலாக, 'சென்ஸரி இன்டெகரேஷன்
தெரப்பி’-ங்கிற கைவிரல்கள் மற்றும் கால்களின் இயக்கத்தைத் தூண்டும்
பயிற்சியும் உண்டு. மணல், களிமண், உப்பு, ரவை, மைதா, தண்ணீர்னு
வித்தியாசமான 'டெக்ஸ்சர்’ கொண்ட பல பொருட்களை வச்சு இந்தப் பயிற்சியைக்
கொடுக்கிறோம். ஒவ்வொரு பொருளை அள்ளும்போதும், அதோட ஸ்பரிசத்தில் உள்ள
வித்தியாசத்தைக் குழந்தைங்க உணரணும்கிறதுக்காகவே தான் இந்தப் பயிற்சி.
மேலும், கைகளால் மணலை அள்ளுறப்போ, அதில் இருக்கிற சிலிக்கான் என்னும் தாது,
அவங்களோட விரல்களை வலுவாக்கும். இதுமாதிரியான பயிற்சிகளைத் தொடர்ந்து
கொடுக்கிறப்போ, அவங்களுடைய உடல், மனநிலை மற்றும் இயக்கத்தில்
குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உண்டாகுது. இதுவரை இங்கே பயிற்சிபெற்ற 27
சிறப்புக் குழந்தைங்க, சாதாரணப் பள்ளிகள்ல சேர்ந்திருக்காங்க'' என்றவரின்
குரலில் பெருமிதம்.
''பதின்மவயதுப் பிள்ளைங்களுக்கு என்ன மாதிரியான பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்புகளைக் கொடுக்கிறீங்க?''
''குறைபாடு கண்டறிதல், விரைவிலேயே கண்டுபிடித்து
சிகிச்சை தொடங்குதல், பள்ளிக்குத் தயார் செய்தல், ஆரம்பக் கல்வி, ஆரம்பத்
தொழிற்கல்வினு எங்களுடைய பயிற்சிகளை 18 வயசுக்குள் முடிச்சிடுறோம்.
அப்புறம், அவங்களுக்கு இருக்கும் திறனுக்கு ஏத்த மாதிரி பேக்கரி, அச்சகம்,
கைத்தொழில்னு ஏதாவது ஒரு தொழிற்பயிற்சி தர்றோம். சிலருக்கு, வீட்டிலேயே
பெற்றோர்கள் தொழில் அமைச்சுக் கொடுக்கிறதும் உண்டு. பிள்ளைங்களோட
முன்னேற்றத்துக்காக, பெத்தவங்களும் ஆர்வம் காட்டி, சில தியாகங்கள் செய்ய
முன்வரணும். அப்போதுதான், எங்களுடைய பணி முழுமையாகும்!''
'பயிற்சிக்குக் கட்டணம் ஏதும் வசூலிக்கிறீங்களா?''
'குறைஞ்ச கட்டணம் மட்டுமே வசூலிக்கிறோம்.
வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கிற குடும்பத்துக் குழந்தைக்கு செரிப்ரல்
பால்ஸி நாற்காலி, எம்.சி.ஆர். செருப்புகள், ஹியரிங் எய்டு மாதிரியான
உபகரணங்களும், பள்ளிக் குழந்தைகளை ஊக்குவிக்கிறதுக்காக, ஒரு ஜோடி பள்ளிச்
சீருடை, ஒரு ஜோடி வெள்ளை உடை, பை மற்றும் புத்தகங்களை இலவசமாத் தர்றோம்.

பள்ளிக் குழந்தைங்களை அழைச்சிட்டு வர, சென்னைக்குள்ள
அடையாறு வரை ரெண்டு வேன்கள் போய்ட்டு வருது. புறநகர் மற்றும்
வெளியூரிலிருந்து வர்ற குழந்தைங்களுக்கு, பஸ் பாஸ் மற்றும் கட்டணச் சலுகை
வாங்கிக் கொடுக்கிறோம். பிள்ளைகளைக் கூட்டிட்டுவந்து பயிற்சிக்கு
விட்டுட்டுக் காத்திருக்கிற பெற்றோர்களுக்கு, பினாயில் மேக்கிங், ஜுவல்லரி
மேக்கிங்னு சில தொழிற்பயிற்சி வகுப்புகளும் நடக்குது. விடுதி வசதி
இல்லைன்னாலும், ரொம்ப தூரத்தில் இருந்து சிகிச்சைக்காக வர்றவங்களுக்கு
மட்டும் குறைஞ்ச கட்டணத்தில் மூணு வாரம் வரை தங்கும் அறைகள் இங்கே இருக்கு.
கேன்டீன் வசதியும் உண்டு'' என்று விரிவாக விளக்கினார் டாக்டர் நீரதா.
இங்கே, தினமும் தரப்படும் புத்துணர்வுப் பயிற்சிகள்
மூலம், நூற்றுக்கணக்கான குழந்தைகள் புது வாழ்வு பெறுகிறார்கள். நாம்
கிளம்பும் சமயம், பள்ளி விடும் நேரம் என்பதால் ஒரே உற்சாகக் கூக்குரல்.
மொழிகளுடனும் மொழிகளற்றும் கேட்ட அந்தக் குரல்களும் ரேம்ப் மூலம் சக்கர
நாற்காலிகளில் வந்த குழந்தைகள் கையசைத்து விடை தந்த காட்சியும், நீண்ட
நேரம் நினைவிலேயே உறைந்துபோயின.
மனிதவள மேம்பாடு - கல்வித் திட்டங்கள்
''இந்தத் திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் அனைத்து
மாணவர்களுக்கும், சென்னை மற்றும் பிற இடங்களில் உள்ள சிறப்புப் பள்ளிகளில்
உடனடியாக வேலை கிடைத்துவிடுகிறது. அந்த அளவுக்கு இங்கு அளிக்கப்படும் கல்வி
தரமானதாக இருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும்
இங்கு வந்து படிக்கின்றனர். அந்த மாணவர்களுக்கு விடுதி வசதியும் உள்ளது''
என்கிறார் பயிற்சியாளர் மற்றும் விரிவுரையாளர் டாக்டர் விஜயலெட்சுமி.
இங்குள்ள கல்வித் திட்டங்கள் :

டிப்ளமோ இன் ஸ்பெஷல் எஜுகேஷன் (டெஃப் பிளைண்டு, சி.பி, ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்)

பி.ஜி டிப்ளமா இன் டெவலப்மென்டல் தெரப்பி

பி.ஜி டிப்ளமா இன் இயர்லி இன்டர்வென்ஷன்

எம்.பில் புரோகிராம் இன் கிளினிகல் சைக்காலஜி

பி.எட் இன் ஸ்பெஷல் எஜுகேஷன்
சிறப்பு வகை டைல்கள்:
இங்கே பதிக்கப்பட்டிருக்கும் 'டாக்டைல்’ எனப்படும் தரை
(Tactile flooring) சிறப்பான ஒன்று. அந்த டைல்ஸில் சிறு வட்டங்களாகவும்
கோடுகளாகவும் 'ப்ரொஜெக்ஷன்ஸ்’ உள்ளன. நேரே செல்ல வேண்டிய பாதைக்கு
நேர்கோடுகளும், திரும்ப வேண்டிய இடங்களுக்கு வளைந்த கோடுகளும் கால்களால்
உணரப்படுகின்றன. அந்தத் தொடு உணர்ச்சியை வைத்தே, பார்வைத் திறன் அற்ற
குழந்தைகள், யார் உதவியும் இன்றி எல்லா இடங்களுக்கும் போய் வர முடியும்
என்பது ஆச்சர்யம்.
சென்ஸரி பார்க்
குழந்தைகள் ஓய்வு நேரத்தில் விளையாட
அமைக்கப்பட்டிருக்கும் 'சென்ஸரி பார்க்’-கில், கல், புல், பிளாஸ்டிக்,
மணல், தார், கரடுமுரடான தரை என வித்தியாசமான தளங்கள் உள்ளன. குழந்தைகளின்
பாதங்கள் அந்தப் பரப்புகளை ஸ்பரிசிக்கும்போது, அவர்களின் நரம்புகள்
தூண்டிவிடப்படுவதற்கு இந்தப் பூங்கா உதவும்.
Post a Comment