பாடல் சொல்லும் பாடம்!
யார் பைத்தியம்?!
பைத்தியம்
என்று அடுத்தவரை கேலி செய்வதில் நமக்கெல்லாம் கொஞ்சம் சந்தோஷம்தான்.
ஆனால், நம்மை யாராவது பைத்தியம் என்று சொல்லிவிட்டால், உச்சந்தலை
முதல் உள்ளங்கால் வரை 'சுர்’ரென்று கோபம் பரவுகிறது.
ஒப்புக்கொள்கிறோமோ இல்லையோ... நாம் எல்லோருமே ஒவ்வொரு
விதத்தில் பைத்தியங்களே! சிலர் ரேஸ் பைத்தியம், சிலர் பணப் பைத்தியம்,
சிலர் புத்தகப் பைத்தியம், சிலர் சினிமா பைத்தியம், பலர் மெகா சீரியல்
பைத்தியம் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பைத்தியம்!
அதை உணராமல், அடுத்தவரை 'பைத்தியம்’ என்று கேலி
செய்கிறோம். அவர்கள் கோபப்படாமல் என்ன செய்வார்கள்? எல்லோரும்
சிவபெருமானைப் போன்று அந்த கேலியைப் பொருட்படுத்தாமல் இருப்பார்களா, என்ன?
சுந்தரர், 'நீர் என்ன, பித்தனா?’ என்று பலர்
முன்னிலையில் இகழ்ந்தும், சிவபெருமான் கோபம் கொள்ளவில்லை; மாறாக
அருள்புரிந்தார். சேக்கிழாரின் பெரிய புராணம், உபமன்யு பக்த விலாசம்,
அகஸ்தியரின் சிவபக்த விலாஸம் ஆகிய நூல்கள் இந்தத் தகவலை விரிவாகப்
பேசுகின்றன.
இங்கே பாருங்கள்... ஒருவர், 'உன்னைப் போலப்
பைத்தியக்காரன் இல்லை’ என்கிறார். யாரைச் சொல்கிறார் என்பதைக் கடைசியில்
பார்ப்போம். முதலில், பைத்தியம் என்று இகழ்வதற்கான காரணங்களாக அவர்
சொல்லும் பட்டியலைப் பார்க்கலாம்
'சற்றாகிலும் தன்னைத் தானறியாய...’
நம்மைப் பற்றி நமக்கே கொஞ்சமாவது தெரியவேண்டும்.
தெரியாதபட்சத்தில் பிரச்னைதான். நம்மைப் பற்றி நமக்கே தெரியவில்லை
எனும்போது, அடுத்தவரிடம் கோபித்துக் கொள்வதில் என்ன பயன்?
கல்யாணம் ஆகி 30 வருடங்கள் கடந்த பின்பு, ஒருவர் ஏதோ
கோபத்தில் தன் மனைவியிடம், ''ஏய்... நான் யார் தெரியுமா? நான் யார்
தெரியுமா?'' என்று தாம்தூமெனக் குதித்தார். அவர் மனைவியோ கொஞ்சமும்
அலட்டிக் கொள்ளாமல், ''அட, சும்மா இருங்க. நீங்க யாருன்னு தெரிஞ்சிருந்தா,
உங்களுக்கு நான் ஏன் கழுத்தை நீட்டியிருக்கப்போறேன்?'' என்றாளாம்.
நாம் யார் என்பதை அடுத்தவரிடம் கேட்டுத்
தெரிந்துகொள்ள வேண்டியிருக் கிறது. பதவியில், பணத்தில், நடிப்பில்,
உற்றார்- உறவினர் பெருமையில்... இப்படி, நம்மை நாம் வெளியில்
தேடிக்கொண்டும், வெளிப்படுத்திக்கொண்டும் இருக்கிறோமே தவிர, நம்மைப் பற்றிய
உண்மை நமக்குத் தெரியவில்லை. ரமண மஹரிஷியின் உபதேசமே, 'நான் யார்?’ என்பதை
அறிவதுதானே?
'இதெல்லாம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால்,
நடக்கக்கூடிய காரியமா?’ என்று நீங்கள் கேட்கலாம். அடுத்த வரியில்
இருக்கிறது பதில்.
'தனை ஆய்ந்தவரை உற்றாகிலும்
உரைக்கப் பொருந்தாய்...’
'நான் யார்?’ என்பதை, நம்மால் அறிய முடியாவிட்டாலும்
பரவாயில்லை; தன்னை உணர்ந்த தத்துவ ஞானிகளான ரமண மஹரிஷியைப் போன்றவர்களிடம்
போய், அவர்களின் அனுபவ பூர்வமான உபதேச மொழிகளைக் கேட்டு, அதன்படி
நடக்கலாம்; நடக்க வேண்டும். ஆனால், நாம் அதையும் செய்ய மாட்டோம்.
கேட்டால்... ''அவங்க எல்லாம் ஆளுக்கொருவிதமா சொல்லியிருக்காங்க. அதுல, நா
எதை எடுத்துக்கறது?'' என்று கேள்வி கேட்போம் - ஏதோ சகலமானதையும் நாம்
கசடறக் கற்றறிந்ததுபோல்!
அதற்கும் பதில், அடுத்த வரியில் வருகிறது.
'உனக்கான நிலை பற்றாய்...’
அனுபவசாலிகளான மகான்கள் எவ்வளவு சொல்லியிருந்தால் என்ன? அவற்றில் நமக்கு எது பொருந்துமோ அதை ஏற்கலாமே!
கடைகளில் எவ்வளவு சோப்புகள் விற்றாலும், நமக்கு எது
சரிப்பட்டு வருமோ, நம் கையில் உள்ள காசுக்குத் தகுந்தது எதுவோ, அதற்கேற்ப
பார்த்து வாங்குகிறோம் இல்லையா... அதுபோல, மகான்கள் நம் நிலையறிந்து, தகுதி
அறிந்து உபதேசம் செய்வார்கள்; தீட்சையும் அளிப்பார்கள்; நம்மை நமக்கு
உணர்த்துவார்கள்; நமக்கானதை நாம்தானே தேடிப் பற்றிக்கொள்ள வேண்டும்.
அப்படிச் செய்கிறோமா? இல்லையே!
'உனக்கான நிலை பற்றாய்’ எனும் இவ்வரி களுக்கு வேறொரு
பொருளும் உண்டு. அதாவது, ஆத்ம சந்தோஷம் என்பதுதான் நமக்கான நிலை. அதை
உணராமல், தெரிந்துகொள்ளாமல், மிகவும் கீழான நிலைக்கு இறங்கி வந்துவிட்டோம்.
துயரக் குவியலில் சிக்கி, மூச்சுவிட முடியாமல் முக்கி முனகிக்கொண்டு
இருக்கிறோம்.
உதாரணமாக... சமையற்கட்டில், கைப்பிடித் துணி
ஆரம்பத்தில் தூய்மையாக இருக்கும். நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சமாக அழுக்கு
சேர்ந்து, கடைசியில் அதைத் துவைத்துச் சுத்தமே செய்யமுடியாத அளவுக்கு மகா
அழுக்காகிவிடுமல்லவா? அது போல, நமது உண்மையான, நிலையான, சந்தோஷமான தன்மையை
இழந்து, கண்ட குப்பைகளையும் அள்ளி அள்ளி மேலே போட்டுக்கொண்டிருக் கிறோம்.
நமது உண்மையான தன்மை பற்றிய நினைப்பே நமக்கு இருப்பதில்லை.

''ஆமாம்! அப்படித்தான். என்ன செய்வது?'' என்னும் இயலாமைக் கேள்வி எழுகிறதா?
'குருவைப் பணியாய்’ என்று தொடர்கிறது பாடல். இதுவரை
பார்த்தவற்றில், நாம் தோற்றுப் போனாலும் சரி, அல்லது செயல்படுத்த
முடியாவிட்டாலும் சரி... இதை மட்டுமாவது செயல்படுத்த வேண்டும். இதில் நாம்
தோற்றுப் போக மாட்டோம். 'குருவருள் இன்றேல் திருவருள் இல்லை’, 'குருவில்லா
வித்தை பாழ்’ என்றெல்லாம் தமிழ் வாக்குகள் அறிவுறுத்துகின்றன. அதையே,
'குருவைப் பணியாய்’- குருவைப் பணிய மாட்டேன் என்கிறாய் என்று குட்டுகிறது
இந்தப் பாடல்.
குருவுக்கு அப்படியென்ன முக்கியத்துவம்? பல காலம் முயன்று அடைய வேண்டிய ஞான உண்மையை குரு அளித்துவிடுவாரா?
அளிப்பார்; கண்டிப்பாக அளிப்பார். கோடீஸ்வரர் ஒருவர்
தனது சொத்துக் களை எல்லாம் அடுத்தவருக்கு எழுதி வைப்பதன் மூலம் அவரைச்
செல்வந்தராக ஆக்குகிறார் அல்லவா? அதுபோல, குருநாதர் தன்னிடம் உள்ள ஞானச்
செல்வத்தை நமக்குத் தந்துவிடுவார். ஆனால், அப்படிப்பட்ட குருநாதரைக்கூட
நாம் வணங்கவும் மாட்டேன் என்கிறோம்.
இவ்வளவு விரிவாகச் சொல்லிக் கொண்டு வந்த பாடல், நாம்
செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருப்பதைப் பட்டியல் போட்ட பாடல், மாறாக நாம்
என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதையும் விளக்குகிறது.
'பரத்தையர் பாலிற்சென்று
என் பெற்றாய்?’
எவ்வளவோ ஜீவராசிகள் இருக்கும் போது, மனிதனாகப்
பிறந்திருக்கிறோமே... இது சாதாரணமானதா? மனிதன் தனது மேன்மையை உணராமல்,
விலைமாதர் மோகத்தில் அலைவதில் என்ன பயன் என்று கேட்கிறது இந்த வரி.
மேலும், இதில் இடம்பெற்றிருக்கும் 'பரத்தையர்’ என்ற
சொல்லுக்கு, 'விலைமாது’ என்பது மட்டும் பொருளல்ல; 'வெளி சுகங்கள்’ என்றும்
பொருள் உண்டு. வெளியே சுகங்களைத் தேடும் மனிதன், உள்ளே பார்க்க மாட்டேன்
என்கிறானே, ஆத்ம சந்தோஷத்தை அனுபவிக்க மாட்டேன் என்கிறானே என்று
மனிதர்கள்மீது பச்சாதாபப்படுகிறார் பாடலாசிரியர்.
இவ்வளவு தூரம் நீள நெடுகச் சொல்லிக் கொண்டு வந்த
பாடலாசிரியர், இதை வேறு யாருக்கோ சொல்லவில்லை. சொன்னாலும், காது கொடுத்துக்
கேட்பார்களா என்ன?
'வந்துட்டாருய்யா உபதேசம் பண்ண! தலை வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும்.
போவியா...’ என்பார்கள் அலட்சியமாக. எனவேதான் மகாகவி பாரதி 'ஜாதிகள் இல்லையடி பாப்பா!’ என்று குழந்தைக்குச் சொன்னார்.
பெரியவர்கள் அடுத்தவர்களுக்குச் சொல்ல மாட்டார்கள்.
தங்கள் மனத்துக்கே சொல்லிக் கொள்வார்கள். அதன்படி, தலைசிறந்த மகா ஞானியான
இப்பாடலாசிரியரும் தன் மனத்தை நோக்கியே சொல்லிக்கொள்கிறார்...
மடநெஞ்சே! உன்னைப் போல்
இல்லை பித்தனுமே
''அறியாமை நிறைந்த நெஞ்சே! உன்னைப் போலப் பைத்தியக் காரன் இல்லவே இல்லை'' என்கிறார் பட்டினத்தார்.
ஆமாம்! இப்பாடலின் ஆசிரியர் பட்டினத்தார்தான். செல்வ
வசதி ஏராளம் இருந்தும், அத்தனையையும் அரை நொடியில் வீசி எறிந்துவிட்டுப்
போன பட்டினத்தார்தான், தனது அனுபவத்தைச் சொல்லிப் பாடம் நடத்துகிறார்.
சற்றாகிலும் தன்னைத் தான் அறியாய்
தனை ஆய்ந்தவரை
உற்றாகிலும் உரைக்கப் பொருந்தாய்
உனக்கான நிலை
பற்றாய் குருவைப் பணியாய்
பரத்தையர் பாலிற்சென்று என்
பெற்றாய் மடநெஞ்சமே! உன்னைப்
போலில்லை பித்தனுமே
இப்படிப்பட்ட பாடல்களை ஆத்மார்த்தமாகச் சொல்லிக் கொண்டி ருந்தால், நம்மை அறியாமலே நல்வழியில் பயணிப்போம்; நற்கதி அடைவோம்.
Post a Comment