ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 5
மாதவிடாய் வலிக்கு வீட்டிலேயே பெயின் கில்லர்!
சித்தமருத்துவர் கு.சிவராமன்
'ஷைலு... ஷைலூ... மணி ஏழாகுது... இன்னும் என்ன தூக்கம்? காலேஜுக்குப் போகவேண்டாமா?'
'ம்... ரொம்ப வயித்த வலி... பாட்டி... பீரியட்ஸ் டைம்...'
'அடக் கழுதை... இந்த மாதவிடாய் வலிக்குப் போய் லீவு
போடுவியா? எழுந்திரு... நிமிஷத்துல உனக்கு மருந்து எடுத்திட்டு வர்றேன்'
என்ற லட்சுமிப் பாட்டியின் கையைப் பிடித்து இழுத்த ஷைலு,
'கிச்சன்ல போய் 'பெயின் கில்லர்’ தயாரிக்கப் போறியா?'
'இது வலியைக் கொல்லும் மாத்திரை இல்லடி பொண்ணே..
வலிக்குக் காரணமான சூதக வாயுவைச் சரிப்படுத்தும் மருந்து. வலி நிவாரணிகள்
மாதிரி நெஞ்செரிச்சல், அசிடிட்டி எல்லாம் வராது. அது இருந்தாலும்கூட
ஓடிப்போயிடும்' என்று சொல்லிக் கொண்டு தன் அஞ்சறைப்பெட்டியை எடுக்கச்
சென்றாள் பாட்டி லட்சுமி.
'அப்படி என்ன நல்ல மருந்து அது? சொல்லேன்'
'ம்ம்... ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம், ஒரு ஸ்பூன் வெந்தயம்,
ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் மூணையும் வறுத்துப் பொடிச்சுக்கணும். இதுகூட ஒரு
ஸ்பூன் பனை வெல்லப் பொடியைப் போட்டுக் கலந்துக்கணும். இந்தப் பொடியை அரை
ஸ்பூன் எடுத்து ரெண்டு வேளை ரெண்டு நாள் சாப்பிட்டு வந்தா அந்த நாளின் வலி
எந்த நாளும் வராது.' என்றபடியே, பொடியை நீட்ட, வாயில் போட்ட ஷைலு,
'ஆஹா... நிஜமாவே மணமா, ருசியாதான் இருக்கு. சூப்பர்!'
'இதே பெருஞ்சீரகத்தை, தனியாவையும் சேர்த்து
ஒன்றிரண்டாய் இடிச்சு, கஷாயம் போட்டுக் குடிச்சாலும் இந்த வலி போகும்.
கர்ப்பிணிகளுக்கு எட்டாம் மாசம், ஒன்பதாம் மாசத்துல வர்ற வாயு, அடிவயித்து
வலிக்கும் இந்த கஷாயத்தை மருந்தாக் கொடுக்கலாம்.'
'சரி நான் ரெடியாயிடறேன். இன்னிக்கு என்ன மெனு?'
'மாதவிடாய் கால ஸ்பெஷல்தான். உன்னோட டேட் எனக்கு
மனப்பாடமா தெரியும். அதனால் ஏற்கனவே செஞ்சு வெச்சாச்சு. உளுந்தஞ்சோறு,
எள்ளுத் துவையல். ஸ்நாக்ஸ்க்கு பப்பாளித் துண்டுகள்'
'உளுந்தஞ்சோறு எள்ளுத் துவையல் காம்போ அட்டகாசம்... இப்படி ஒரு காம்பினேஷனை யாரு பாட்டி கண்டுபிடிச்சது?'
'இன்னைக்கு நேத்திக்கு இல்ல.. 2000 வருஷமா இதுதான் நம்ம
ஊரு காம்போ கிளாசிக் உணவு. கருப்பு நிற தொலியோட இருக்கிற உளுந்து
கருப்பையைப் பலப்படுத்தும். இதுல 'பாலிபீனால்’னு ஒண்ணு இருக்கு. அது நல்ல
ஆன்ட்டிஆக்சிடன்ட். அப்புறம் உளுந்து, பெண்களுக்குத் தேவையான ஃபைட்டோ
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைத் தர்ற புரதமும் இருக்காம்.'
''சத்துக்களைப் பத்தி சரளமா சொல்றீயே... எங்க படிச்ச...?''
''கூகுள்லதான் சர்ச் பண்ணேன்...''
'அசத்திட்ட... இனிமேல் நீ குடுகுடு பாட்டி இல்ல...
கூகுள் பாட்டி. ஒரு சந்தேகம்... அண்ணா இதைச் சாப்பிட்டா அவனுக்கு பீரியட்
பிரச்னை வந்துடாதா பாட்டி?'
'உன் குசும்புக்கு அளவே இல்லை. இது ஹார்மோன் மாத்திரை
போட்டுச் செய்யுற குழம்பு இல்லை. நம் சித்த மருந்தோட சிறப்பு. உன் அண்ணன்
ஜிம்முக்குப் போய் டப்பால புரதப்பொடி வாங்கிட்டு வர்றானே... அதைக்
காட்டிலும் இந்த உளுந்தங் கஞ்சி பலமடங்கு சத்து. தசையை வலுவாக்கும்.'
'இளைச்சவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளுன்னு
சொல்லுவாங்களே. அப்போ எனக்கு எள்ளுத் துவையலும், அண்ணனுக்கு கொள்ளுத்
துவையலுமா பாட்டி...'
'உனக்கு ரொம்பவே லொள்ளு... அவன் காதுல மட்டும்
விழுந்ததா 'வள்’ளுன்னு விழுவான். இளைப்புக்கு மட்டுமல்ல, ரத்த சோகைக்கும்
எள்ளு பிரமாதமான உணவு. எள்ளுல இரும்புச் சத்தும், கால்சியம்
நார்ச்சத்தும்னு சத்துக்கள் நிறைய இருக்கு. மூட்டு வலி, வயிற்று வலியையும்
போக்கும். இதுல இருக்கிற தாமிர (காப்பர்) சத்து, ரத்த நாளங்களுக்கும்
நுரையீரலுக்கும் நல்லது செய்யும். மெக்னீசிய சத்து, எலும்பை வலுப்படுத்தி,
எதிர்ப்பாற்றலை வளர்க்கும். மாதவிடாய் சமயத்துல உடல் சோர்வு, காலில்
கிராம்ப்ஸ், வயித்து வலி... எல்லாத்துக்குமே எள்ளுத்துவையல் சூப்பர்
மருந்துடீ!'
'யாரு பாட்டி உனக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுத்தா?' என்றபடியே ஷைலஜா கைகளைக் கழுவ,'ம்ம்.. எங்க பாட்டியோட பாட்டிக்கும்... பாட்டிகிட்ட
இருந்து இப்போ பாட்டனி வாத்தியாருக்கும் சித்த வைத்தியருக்கும் போன விஷயம்
பேத்திகளுக்குப் போக மாட்டேங்குதே...'
'உன்கிட்ட பேசிப் பேசியே, எல்லாத்தையும்
கத்துக்கிட்டுக் கலக்கப் போறேன்... தாங்க்ஸ் லக்ஸ்... பாட்ஸ்.. வயித்து வலி
போயே போச். சாப்பாடும் அமிர்தம்... காலேஜுக்குப் போயிட்டு வர்றேன் பை...'
Post a Comment