54 ஏக்கரில், அசத்தும் இயற்கை... நெல் சாகுபடியில் கலக்கும் கட்டுமானப் பொறியாளர்! விவசாயக்குறிப்புக்கள்!!

54 ஏக்கரில், அசத்தும் இயற்கை... நெல் சாகுபடியில் கலக்கும் கட்டுமானப் பொறியாளர்! 'இ யற்கை விவசாயம் எல்...

54 ஏக்கரில், அசத்தும் இயற்கை...
நெல் சாகுபடியில் கலக்கும் கட்டுமானப் பொறியாளர்!

'இயற்கை விவசாயம் எல்லாம் சரிதான். ஆனா, அது நெல் சாகுபடியை சும்மா கால் ஏக்கர், அரை ஏக்கர்னு போட்டுப் பார்த்து திருப்திப்பட்டுக்கலாம். ஏக்கர் கணக்குலயெல்லாம் சாத்தியமில்லை’
- இப்படியும் பரப்பப்பட்டிருக்கும் ஒரு கருத்தை, அடித்து நொறுக்கும் வகையில்... சுமார் 50 ஏக்கர் அளவில் இயற்கை முறையில், ஒன்பது வகையான நெல் ரகங்களை சாகுபடி செய்து அசத்தி வருகிறார், திருவாரூர் மாவட்டம், ஆதிவிடங்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன்.
அதிகாலை நேரத்தில், தேடிச் சென்ற நம்மை அன்புடன் வரவேற்ற பாஸ்கரன், ''பாரம்பரிய விவசாயக் குடும்பம் நாங்க. பக்கத்துல இருக்குற வடவேற்குடிதான் சொந்த ஊர். எங்க தாத்தா, அப்பா காலத்துல 70 கறவை மாடுகள், 24 ஜோடி வண்டி மாடுகள்னு வெச்சு, 140 ஏக்கர்ல விவசாயம் செஞ்சாங்க. பல காரணங்களால் எல்லாம் கையை விட்டுப் போயிடுச்சு.
நான், சிவில் இன்ஜினீயரிங் டிப்ளோமா படிச்சுட்டு, அது சம்பந்தமான தொழில் செஞ்சுட்டுருக்கேன். 'பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்ச பிறகு... இயற்கை விவசாயத்து மேல மிகப்பெரிய ஈர்ப்பு வந்துச்சு. அதனாலதான் இங்க நிலம் வாங்கி, விவசாயத்தை ஆரம்பிச்சேன். 'நெல் சாகுபடியில லாபமே இல்லை’னு பொதுவா எல்லாரும் சொல்வாங்க. 'அதையே ஒரு சவாலா எடுத்துக்கிட்டு சாதிச்சிக் காட்டணும்’னுதான் இதைக் கையில எடுத்தேன். நம்மாழ்வார் அய்யாவோட அறிவுரைகளும், பசுமை விகடனும்தான் எனக்கு வழிகாட்டிகள். இந்தப் புத்தகத்துல வர்ற தொழில்நுட்பங்களை மட்டும்தான் கடைபிடிச்சுட்டு இருக்கேன்'' என அழகாக முன்னுரை கொடுத்த பாஸ்கரன், தன் சாகுபடி அனுபவங்களைச் சொல்லத் தொடங்கினார்.
''இது களிமண் பூமி. மொத்தம் 57 ஏக்கர் இருக்கு. 54 ஏக்கர் மொத்தமாவும்.... கொஞ்சம் தள்ளி மூணு ஏக்கரும் இருக்கு. 54 ஏக்கர் பகுதியில 51 ஏக்கர்ல நெல் இருக்கு. மீதி நிலத்துல களம், ஆடு, மாடுகளுக்குக் கொட்டகை, மேய்ச்சலுக்கான இடம் எல்லாம் இருக்கு. தனியா இருக்கிற நிலத்துலயும் நெல்தான் போட்டிருக்கேன். இந்த நிலத்தை வாங்கி அஞ்சு வருஷம் ஆச்சு. ஏற்கெனவே ரசாயன விவசாயம் பண்ணியிருந்ததால, ஏக்கருக்கு பத்து கிலோனு கொழுஞ்சி விதையைத் தெளிச்சி... 45 நாள் வளர்த்து மடக்கி உழுதுட்டு, அப்படியே அந்த வருஷம் முழுக்க சும்மா போட்டு வச்சு, அடுத்த வருஷம் தான் சாகுபடியை ஆரம்பிச்சோம். அடியுரம் எதுவும் போடாமலே... காட்டுயானம், மாப்பிள்ளைச் சம்பா, ஏ.டி.டீ.-45, ஏ.டி.டீ.-38... இப்படி பாரம்பரிய ரகங்கள், நவீன ரகங்கள்னு கலந்து இயந்திரம் மூலமா நடவு செஞ்சோம். பஞ்சகவ்யா, பழரசக் கரைசல் எல்லாம் கொடுத்தும்... அந்த வருஷம் சொல்லிக்கிற மாதிரி மகசூல் கிடைக்கல.  
நோயைத் தடுத்த பனம்பழக் கரைசல்!
நிலம் சமமா இல்லாம இருந்ததும், அடியுரம் எதுவும் கொடுக்காததுதான் காரணம்னு தெரிஞ்சுக்கிட்டு, அடுத்த வருஷம் நிலத்தை நல்லா சமப்படுத்தி, சேத்துழவு செஞ்சோம். ஏக்கருக்கு 5 டன் மாட்டு எரு, 100 கிலோ ஆட்டு எரு போட்டு வழக்கமான முறையில நடவு செஞ்சோம். 25 நாள்ல களை எடுத்தோம். ஒரு மாசத்துல ஏக்கருக்கு ஆறு லிட்டர் பஞ்சகவ்யாவை, 72 லிட்டர் தண்ணியில கலந்து தெளிச்சோம். அதேமாதிரி அம்பதாம் நாளும் தெளிச்சோம். அறுபதாம் நாள், தொண்ணுறாம் நாள்ல ஏக்கருக்கு 12 லிட்டர் தண்ணிக்கு, ஒரு லிட்டர் பனம்பழக்கரைசல்னு கலந்து தெளிச்சோம். அதனால பூ உதிராம இருந்துச்சு. கருக்கா இல்லாம... நெல்மணிகளும் திரட்சியா இருந்துச்சு. இந்தப் பகுதிகள்ல சூரை நோய் வரும். ஆனா, பனம்பழக்கரைசல் தெளிச்சதால எங்க வயல்ல மட்டும் வரவே இல்ல. தனியா இருக்கற மூணு ஏக்கர் நிலத்துல மட்டும் இலைச்சுருட்டுப் புழு வந்துடுச்சு. ஐந்திலைக் கரைசல் தெளிச்சு கட்டுப்படுத்தினோம். அந்த வருஷம் பாரம்பரிய ரகங்கள்ல ஏக்கருக்கு 12 மூட்டை (60 கிலோ மூட்டை) அளவுக்கு மகசூல் கிடைச்சுது. நவீன ரகங்கள்ல ஏக்கருக்கு 20 மூட்டை மகசூல் ஆச்சு. எல்லாத்தையுமே அரிசியாக்கி விற்பனை செஞ்சோம். அந்த ஆண்டு லாபமும் இல்லை. நஷ்டமும் இல்லை'' என்று இடைவெளி கொடுத்த பாஸ்கரன், தொடர்ந்தார்.
அடியுரமாக தென்னை நார்!
''போன வருஷம் புழுதி உழவு ஓட்டி, ஏக்கருக்கு 2 டன் தென்னை நார் (இது கயிறு ஆலைகளில் இலவசமாகவே கிடைக்கிறது. போக்குவரத்து, ஏற்றுக் கூலி எல்லாம் சேர்த்து, ஒரு டன்னுக்கு 250 ரூபாய் செலவளித்து, கொண்டு வந்திருக்கிறார்), ரெண்டரை டன் மாட்டு எரு, அம்பது கிலோ ஆட்டு எருனு போட்டு உழுது வெச்சோம். ஒரு மாசத்துல லேசா மழை கிடைச்சது. உடனே உழுது, பஞ்சகவ்யாவுல விதைநேர்த்தி செஞ்சு, ஏக்கருக்கு பத்து கிலோ விதைநெல்னு தெளிச்சோம். காட்டுயானம், மாப்பிள்ளைச் சம்பா, பாசுமதி, அறுபதாம் குறுவை, பூங்கார், சீரகச் சம்பா, மைசூர் மல்லி, ஏ.டி.டீ.-45, ஏ.டி.டீ.-35னு தனித்தனியா விதைச்சோம். முந்துன வருஷம் மாதிரியே ஊட்டம் கொடுத்து கூடுதலா... 45-ம் நாள்லயும், 75-ம் நாள்லயும் ஏக்கருக்கு 72 லிட்டர் தண்ணியில, மூணு லிட்டர் மீன் அமினோ அமிலத்தைக் கலந்து தெளிச்சோம். எங்க பகுதியில அந்த வருஷத்துல நெற்பழ நோய் தாக்குதல் கடுமையா இருந்தும், எங்க வயல்ல அந்த நோய் வரல. அதுக்குக் காரணம் மீன் அமினோ அமிலமாத்தான் இருக்கணும்.
மதிப்புக் கூட்டினால் கூடுதல் லாபம்!
போன வருஷம் டெல்டா மாவட்டம் முழுக்கவே கடுமையான வறட்சி இருந்தப்பவும் எங்களுக்கு பாரம்பரிய ரகத்துல, ஏக்கருக்கு சராசரியா 21 மூட்டையும், நவீன ரகங்கள்ல 27 மூட்டையும் மகசூல் ஆச்சு. எங்க பகுதி விவசாயிகள் எல்லாம் ரொம்பவே ஆச்சரியப்பட்டு திருவிழா கணக்கா கூட்டம் கூட்டமா வந்து பார்த்துட்டுப் போனாங்க. நான் நெல்லை அரைச்சு அரிசியாத்தான் விற்பனை செய்றேன். இயற்கை அரிசிங்கிறதால, பாரம்பரிய ரகங்களுக்கு சராசரியா கிலோவுக்கு 55 ரூபாய் விலை கிடைக்குது. நவீன ரகங்களுக்கு சராசரியா கிலோவுக்கு 45 ரூபாய் விலை கிடைக்குது.
ரகம் ரகமா இருக்குது நெல்லு!
இந்த வருஷமும் காவிரித் தண்ணி ஒழுங்கா வந்து சேரல. 20-25 நாள்ல ஒரு மழை மட்டும் கிடைச்சுது. ஆனாலும், பயிர்கள் செழிப்பா வளர்ந்துக்கிட்டு இருக்கு. பயிரோட தண்டு நல்லா உறுதியா இருக்கு. அதிக எண்ணிக்கையில தூர் வெடிச்சுருக்கு. இந்த வருஷம் ரெண்டரை ஏக்கர்ல காட்டுயானம், ஆறரை ஏக்கர்ல சீரகச் சம்பா, பதினாலு ஏக்கர்ல மைசூர் மல்லி, ஒரு ஏக்கர்ல மாப்பிள்ளைச் சம்பா, ஒரு ஏக்கர்ல சி.பி.-05022 (கோவை வேளாண் பல்கலைக்கழகத்தால், இயற்கை விவசாயத்துக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய நெல் ரகம்), அரை ஏக்கர்ல அறுபதாம் குறுவை, அரை ஏக்கர்ல பூங்கார், பத்து ஏக்கர்ல சி.ஆர்.-1009, பதினெட்டு ஏக்கர்ல பாப்பட்லானு வயல்ல நிக்குது. அதாவது, பாரம்பரிய ரகங்கள் 25 ஏக்கர்... உயர்விளைச்சல் ரகங்கள் 26 ஏக்கர்னு நிக்குது. போன வருஷத்தைவிட இந்த வருஷம் உறுதியா கூடுதல் மகசூல் கிடைக்கும்னு எதிர் பாக்குறேன்'' என்ற பாஸ்கரன் நிறைவாக,
ஆண்டு லாபம் 8 லட்சம்!
''25 ஏக்கர்ல பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டதில, ஒரு ஏக்கருக்கான வருமானம் 21 ஆயிரத்து 200 ரூபாய் வீதம் 25 ஏக்கர்ல வருமானம் 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய். 29 ஏக்கர்ல நவீன ரகங்களைப் பயிரிட்டதில ஒரு ஏக்கருக்கான வருமானம் 22 ஆயிரம் ரூபாய் வீதம் 29 ஏக்கர்ல வருமானம் 6 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய். இது போக,
உளுந்துல, ஒரு ஏக்கருக்கு 3 ஆயிரத்து 800 ரூபாய் வீதம் 5 ஏக்கருக்கான வருமானம் 19 ஆயிரம் ரூபாய். பச்சைப்பயறு மூலம் ஒரு ஏக்கருக்கு 1,700 ரூபாய் வீதம் 10 ஏக்கர்ல 17 ஆயிரம் ரூபாய் வருமானம். ஆக மொத்தம் 54 ஏக்கர்ல இருந்து 12 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் வருமானம், கால்நடைகளைப் பராமரிக்கறதுக்கு, இடுபொருட்கள் தயார் செய்யறதுக்கு, கணக்கு வழக்குப் பாத்து பண்ணையை நிர்வாகம் பண்றதுக்கு...னு நாலு பேர் நிரந்தரமா வேலை செய்றாங்க. அவங்களோட சம்பளம், போக்குவரத்துச் செலவுகள்னு 3 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் போக, 54 ஏக்கர்ல இருந்து வருஷத்துக்கு 8 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் நிகர லாபமா கிடைக்குது. ஏக்கருக்குனு கணக்கு பார்த்தா...  சாரசரியா 15 ஆயிரம் ரூபாய் லாபம் வரும்.
இப்போதைக்கு இது குறைவான தொகை தான். ஆனா, மண் கொஞ்சம் கொஞ்சமா வளமாகிக்கிட்டே இருக்கறதுனால, அடுத் தடுத்த வருஷங்கள்ல கண்டிப்பாக, இதைப் போல பல மடங்குல லாபம் எடுத்துடுவேன்'' என்று மகிழ்ச்சியாகச் சொல்லி விடை கொடுத்தார்.
பயிரைப் பாதுகாக்கும் பஞ்சகவ்யா!
''ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புறப்போ... நெல் வயல்ல வரப்புல உள்ள களைகளையும் மேய விடுவோம். பயிர்களுக்கு பஞ்சகவ்யா அடிக்கறதால, அதோட வாடை, ஆடு, மாடுகளுக்குப் பிடிக்காது. அதனால பயிர்களைக் கடிக்கறதில்லை. கதிர் வரத் தொடங்கின பிறகு, பஞ்சகவ்யாவை நிறுத்திடுவோம். அதனால, அதுக்கப்பறம் வயல் பக்கத்துல மாடுகளை விட மாட்டோம்.
எருவுக்கு ஆடு..! பாலுக்கு பசு!
வேலி ஓரத்துல மூணு ஆல், ஒரு அரச மரம், பதினாறு வேம்பு, ரெண்டு வாகை, ஒரு சவுண்டல், இருபத்தஞ்சு கிளரிசீடியானு மரங்கள் இருக்கு. இந்த இலை-தழைகளை கால்நடைகளுக்குத் தீவனமா கொடுக்குறோம். சாகுபடி செய்யாத காலங்கள்ல மொத்த நிலத்துலயும் ஆடு, மாடுகளை மேய்ப்போம். அதனால சாணம் விழுந்து உரமாயிடும்.
கையில 23 ஆடுகள் இருக்கு. கிடாக்குட்டி பொறந்தா மட்டும் விற்பனை செய்வோம். பெட்டைகளை நாங்களே வெச்சுக்குவோம். எருவுக்காகதான் ஆடுகளைப் பெருக்குறோம். பதினோரு நாட்டு மாடுகள் இருக்கு. எப்பவும் நாலு மாடுங்க கறவையில இருக்கும். ஒரு மாடு தினமும் ரெண்டரை லிட்டர் பால் தருது. இந்தப் பாலை பஞ்சகவ்யா தயாரிக்கவும், பண்ணையில வேலை பாக்குறவங்களுக்கு டீ போடவும் வெச்சுக்குவோம். நெல் சாகுபடியில கிடைக்கக்கூடிய வைக்கோல், தவிடு எல்லாத்தையும் தீவனமா பயன்படுத்திக்குவோம்.
பனம்பழக் கரைசல்!
ஒரு பிளாஸ்டிக் கேனில், 200 பனம் பழங்களைப் போட்டு, அதில் 100 லிட்டர் மாட்டுச் சிறுநீரை ஊற்றி, 21 நாட்கள் மூடி வைக்க வேண்டும். பிறகு, எடுத்து வடிகட்டினால், பனம்பழக் கரைசல் தயார். பஞ்சகவ்யா தயாரிக்கும்போது, வெல்லத்துக் குப் பதிலாவும் இந்தக் கரைசலைப் பயன்படுத்தலாம்.
ஊடுபயிராக உளுந்து!
நெல் அறுவடை முடிந்ததும் உளுந்து சாகுபடி செய்யும் பாஸ்கரன், ''நெல் அறுவடைக்கு ஒரு வாரத்துக்கு முன்ன, பனி ஈரத்துல ஏக்கருக்கு எட்டு கிலோனு உளுந்து... இல்லாட்டி பச்சைப்பயறை விதைப்போம். நெல் அறுவடை செய்யுறப்போ, தரையிலிருந்து ஒரு அடி உயரத்துக்கு விட்டு அறுக்கறதால, உளுந்து, பச்சைப்பயறுக்கு பாதிப்பு வராது. இதுக்கு தண்ணியும் தேவைப்படாது. பனியிலயே வளர்ந்துடும். பஞ்சகவ்யா, புளிச்ச மோர் மட்டும் தெளிப்போம். வேற எந்தப் பராமரிப்பும் கிடையாது. உளுந்து 60-65 நாள்ல அறுவடைக்கு வரும். போன வருஷம் அஞ்சு ஏக்கர்ல உளுந்து போட்டோம். ஏக்கருக்கு 126 கிலோ வீதம் மகசூல் கிடைச்சுது. உடைச்சு ஒரு கிலோ அளவுல பாக்கெட் போட்டு, கிலோ 50 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல, எல்லா செலவும் போக, ஏக்கருக்கு 3 ஆயிரத்து
800 ரூபாய் லாபமா கிடைச்சுது.
பச்சைப்பயறு விதைப்பிலிருந்து 90-ம் நாள் அறுவடைக்கு வரும். போன வருஷம் பத்து ஏக்கர்ல பச்சைப்பயறு போட்டிருந்தேன். ஏக்கருக்கு 90 கிலோ வீதம் மகசூல் கிடைச்சுது. இதை அப்படியே கிலோ 35 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல... ஏக்கருக்கு 1,700 ரூபாய் லாபம் கிடைச்சுது. இந்த வருஷம் 20 ஏக்கர்ல உளுந்தையும், 20 ஏக்கர்ல பச்சைப் பயறையும் சாகுபடி செய்யலாம்னு இருக்கோம்'' என்று சொன்னார்.

Related

விவசாயக்குறிப்புக்கள் 6447797763874768236

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item