'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!
பூக்களைத் தொடுத்து முடித்தும் கிளம்பாத வாசம்பாவைப் பார்த்த அம்மணி, ''வா... காலாற நடக்கலாம்'' என்றாள்.
''அதெப்படி அம்மணி, உங்கிட்ட இருந்து கடுக்காயோட
மருத்துவ குணம் தெரிஞ்சுக்காம நான் இந்த இடத்தைவிட்டு நகர மாட்டேன்.
'சோம்பல் இல்லாத் தொழில்... சோதனை இல்லாத் துணை’ இதுதானே உன் குணம். சரி,
வா... உட்கார்ந்தே இருந்தாலும் கால்தான் கடுக்கும். கடுக்காயைப் பத்தி
அடுக்கடுக்காப் பேசிக்கிட்டே நடக்கலாம்...'' என்றபடியே இருவரும் ஆற்றங்கரை
ஓரமாக நடந்தனர்.
''கடுக்காயைச் சாப்பிட்டிருக்கியா வாசம்பா? துவர்ப்பா
இருக்கும். நம்ம உடம்புக்கு அறுசுவையும் சேர்றதில்லை. அதுலேயும்,
துவர்ப்புச் சுவையை நாம சுத்தமாச் சேர்த்துக்கிறதே இல்லை. ரத்த
விருத்திக்கு அது ரொம்பவே நல்லது. தரமான கடுக்காயை வாங்கிவந்து உடைச்சு,
உள்ளே இருக்கிற கொட்டையை எடுத்துட்டு அரைச்சுக்கணும். தினமும் இதிலிருந்து
ஒரு ஸ்பூன் எடுத்து, ராத்திரி உணவு முடிச்ச பிறகு சாப்பிட்டுவந்தால், நோய்
நம்ம பக்கமே நெருங்காது.
ஒரு ஸ்பூன் கடுக்காய் பொடியைத் தண்ணீர்ல சேர்த்துக் கொதிக்கவெச்சு ஆறினதும் குடிச்சுவந்தா, மூல எரிச்சல், புண் எல்லாமே ஆறிடும்.''
''சின்னக் கடுக்காய்க்கு இத்தனை பலனா!''
''ஆமாண்டி, பார்வைக் கோளாறு, காது கேட்காமப்போறது,
வாய்க் கசப்பு, பித்த நோய், வாய்ப் புண், தொண்டைப் புண், குடல் புண், உடல்
உஷ்ணம், தோல் பிரச்னை, நீர் அடைப்பு, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு
வலினு எல்லா நோய்க்குமே கடுக்காய்தான் அருமருந்து.
100 கிராம் கடுக்காயை வாங்கி அதுகூட சிலாசத்து பற்பம்
50 கிராம் சேர்த்துக் கலந்துவெச்சிக்கணும். இதைத் தினமும் அரை டீஸ்பூன்
காலையும் இரவும் சாப்பிட்டுவந்தா, இளைச்ச உடம்பு தேறும். நரம்பு எல்லாம்
உறுதி யாகிடும்.''
''அப்ப, 'கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்’னு சொல்லு.''
''சரியாப் புரிஞ்சிகிட்ட... கடுக்காய் இயற்கை நமக்கு
தந்த வரம். ஆனா, கடுக்காயைப் பயன்படுத்தறப்ப, அதுக்குள்ள இருக்கிற கொட்டையை
மறக்காமத் தூக்கி எறிஞ்சுடணும்.
''ஓஹோ! அதான்... 'இஞ்சி... மேல் நஞ்சு, கடுக்காய்... உள் நஞ்சு’னு சொல்றாங்களா?''
''ஆமா வாசம்பா, இஞ்சி மேல் தோல் எப்படி நஞ்சோ... அதேபோலத்தான் கடுக்காயோட கொட்டையும்.
'காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே’னு,
என் முப்பாட்டன் காலத்துலேந்து வரிசையா கடுக்காய்க்கான பாட்டைப்
பாடிக்கிட்டே... மருத்துவம் பார்ப்பாங்க. தினமும் காலையில் வெறும்
வயிற்றில் இஞ்சி, மதியம் சுக்கு, ராத்திரிக்கு கடுக்காய்னு தொடர்ந்து ஒரு
மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவந்தா, கிழவன்கூட குமரன் ஆயிடலாம்.''
''அடிப் போடி அம்மணி! வயசுப் பிள்ளைக்கு அம்மாவா
இருக்கிறவளும்கூட, என்னை 'பாட்டி பாட்டி’னு கூப்பிடுதுங்க. அம்மணி, நான்
என்ன பாட்டி மாதிரியா இருக்கேன்? தலைமுடிதான் கொஞ்சம் நரைச்சிடுச்சு.''
''நரைச்ச தலைமுடியைக்கூட கறுப்பா மாத்திடும் குணம்
கடுக்காய்க்கு உண்டு வாசம்பா. கல் சட்டில பிஞ்சு கடுக்காய் பவுடர், மருதாணி
பவுடர், நெல்லிக்காய் பவுடர் இதுகூட டீ டிக்காக்ஷன் சேர்த்து ஒரு
எலுமிச்சம்பழத்தைப் பிழிஞ்சு, முந்தின நாளே வெச்சிடணும். அடுத்த நாள்,
தலையில நல்லா பரவலாத் தேய்ச்சுக் காய்ஞ்சதும், அலசணும். வாரம் ஒரு தடவை
இப்படி செஞ்சிட்டுவந்தா, நரை முடியெல்லாம் பழுப்பு நிறமா மாறி, பழுப்பு
அப்பிடியே கறுப்பா மாறிடும்.
எண்ணெயாவும் செஞ்சு வெச்சுக்கலாம். பிஞ்சு கடுக்காய்,
நெல்லிக்காய், கறிவேப்பிலை இந்த மூணையும் நல்லா இடிச்சு, இது மூழ்குற
அளவுக்கு நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சணும். தலைக்குக் குளிக்கிறப்ப, இந்த
எண்ணெயை நல்லாத் தேய்ச்சு, சீயக்காய் போட்டுக் குளிச்சா, நரைமுடி எல்லாம்
சீக்கிரமே கறுப்பாயிடும்.
அப்புறம் என்ன, 'பாட்டி’னு கூப்பிட்டவங்க...
'ஆன்ட்டி’னு கூப்பிடுங்க’ என்று சிரித்த அம்மணி, மரத்திலிருந்து உதிர்ந்து
விழுந்திருந்த முருங்கைக் கீரையைப் பார்த்து, கண்ணீர் வடிக்காத குறையாக,
''வீணாப்போகுது முருங்கைக் கீரை. அதோட மகத்துவம் தெரிஞ்சா... இப்படி
கெடக்கவிடுவாங்களா?'' என்றபடியே இருவரும் கீரையை அள்ளினார்கள்.
அடுத்து முருங்கைக் கீரை வேதாளம்.... சாரி... பூபாளம்தான்!
Post a Comment