ஒரு நாள் நீங்களும் மூப்படைவீர்கள்!! --- பெட்டகம் சிந்தனை,
ஒரு பதிவு எனக்கு ஈமெயிலில் வந்தது. ஆங்கிலத்தில் வந்ததை தமிழில் ஓரளவு அழகாக சொல்ல முயன்றிருக்கிறேன். இது ஒரு மருத்துவர் தன் பார்வையில்...
மூப்பு என்பது சாதாரண விஷயமல்ல! அது வரை மின்வேகத்துடன் நம் கட்டளைக்குப் பணிந்து ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் நம் உடல் உறுப்புகள் மெல்ல மெல்லத் தளர்வடைய ஆரம்பிக்கும். அது வரை அனுபவித்திராத வியாதிகள் ஒன்றன் பின் ஒன்றாய் தொடர்ந்து வந்து தாக்கும். அந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் உடலோடு சேர்ந்து மனமும் தளர ஆரம்பிக்கும். உற்சாகம் இழக்கும். அந்த இரண்டு தாக்குதல்களும் ஒன்றுமேயில்லை என்று நினைக்கும்படி செய்ய ஒரே ஒரு விஷயத்திற்கு மட்டுமே சக்தி உண்டு.
பாரதி ‘ துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடி!’ என்று அன்றே எழுதியிருப்பது போல அன்பை விட சிறந்த மருத்துவம் வேறெதுவுமில்லை.
பெண் குழந்தையானாலும் ஆண் குழந்தையானாலும் அவரவர் உலகத்தில் வாழ வேண்டியவர்கள். அவர்கள் சிறகுகள் முளைத்து உயரே உயரே பறக்கப் பறக்க, அவர்களின் அன்பு கிளைகள் விட்டு பரந்து விரிகிறது. கடைசி வரை இந்த அன்பை நெஞ்சில் சுமந்து கருணையும் அக்கறையுமாய் கணவனும் மனைவியும் ஒருத்தருக்கொருத்தர் அமைந்து விட்டால் அதை விட வேறு சொர்க்கம் தேவையில்லை.
அப்படி அமைந்த ஒரு கணவனின் உணர்வுகள் இவை!!!
இனி மருத்துவர் பேசுகிறார்.. ..
“ அன்று காலை எனக்கு சிறிதும் ஓய்வில்லை. சுமார் எட்டரை மணி அளவில் அந்த வயோதிகர் வந்தார். 80 வயதான அந்தப் பெரியவர் தன் கட்டை விரலில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு ட்ரெஸ்ஸிங் செய்ய வந்திருந்தார். அவர் முகத்தில் பரபரப்பும் அவசரமும் தெரிந்தன. 9 மணி அளவில் தனக்கு ஒரு முக்கியமான காரியம் உள்ளதாகவும் சீக்கிரம் தன்னை கவனித்து அனுப்பி விட முடியுமா என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.
நானே அவரை கவனித்து, காயத்திற்கு மருந்து போட்டு முடிக்கையில் ‘ எதனால் இந்த பரபரப்பு, வேறு யாராவது மருத்துவரிடம் செல்ல வேண்டுமா ’ என்று கேட்டேன். அவர் அதை மறுத்து விட்டு, தான் ஒரு மருத்துவமனைக்குச் சென்று தன் மனைவியுடன் அங்கே சாப்பிட வேண்டும் என்றும் தான் இன்னும் காலையுணவு அருந்தவில்லையென்றும் தெரிவித்தார்.
அவர் மனைவிக்கு என்ன ஆனது என்று கேட்டதும் தன் மனைவிக்கு ‘அல்ஜீமர் [ALZHEIMER’S] நோய் பாதித்திருப்பதாகச் சொன்னார். கடந்த கால நினைவுகள், உறவுகள் எல்லாம் மெல்ல மெல்ல மறந்து போகும் கொடிய நோய் அது! மேலும் பேசிய போது ‘ சிறிது நேரம் தாமதமானால் அவர்கள் மனது பாதிப்படையுமா ’ என்று நான் கேட்டதற்கு, அவர் ‘ தன் மனைவிக்கு இப்போது தன்னை யாரென்றே தெரியாது என்றும் கடந்த 5 வருடங்களாக தன்னை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை’ என்றும் சொன்னார். நான் அப்படியே அதிர்ந்து போனேன். ‘ உங்களை இப்படி அவர்கள் மறந்திருந்தும் நீங்கள் தினமும் காலை எப்படி இது போலச் செல்கிறீர்கள்?’ என்றேன். அவர் சிரித்தவாறே என் தோளைத் தட்டிக் கொடுத்தார். ‘அவளுக்குத்தான் என்னை யாரென்று தெரியாதே தவிர, எனக்கு அவளை யாரென்று தெரியுமல்லவா?’ என்று கேட்டு மறுபடியும் புன்னகை செய்தார்!!
திரண்டு வந்த கண்ணீர்த்துளிகளை நான் மிகுந்த சிரமப்பட்டுத்தான் அடக்கினேன்.
அன்பு என்பது உடல் சார்ந்ததோ, காதல் சார்ந்ததோ இல்லை. எது எப்படி இருக்கிறதோ, அல்லது எது இனிமேல் எப்படி இருக்குமோ, அல்லது எது எப்படி இருந்ததோ அத்தனையையும் அன்பிற்குரியவர்களுடன் அப்படியே ஏற்றுக்கொள்வது தான் உண்மையான அன்பின் அடையாளம்!
மிக மிக மகிழ்வாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு, எல்லாமே சிறந்ததாக அமைந்திருக்கும் என்று அர்த்தமில்லை. அவர்களுக்கு எது கிடைக்கிறதோ, அதை மிக சிறப்பானதாக செய்து கொள்கிறார்கள் என்பது தான் உண்மையான அர்த்தம்! வாழ்க்கை என்பது எப்படி புயலை சமாளிக்க வேண்டும் என்பதல்ல. எப்படி அடர்ந்த மழையிலும் மகிழ்வுடன் நடனமிட முயல வேண்டும் என்பது தான்!
2 comments
அன்பின் வழியது உயிர்நிலை. அக்திலாற்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு
என்று சும்மாவா சொன்னார் வள்ளுவர் ?
சுப்பு தாத்தா.
Thanks sury Siva, by Pettagum A.S. Mohamed Ali
Post a Comment