. ...
நீரிழிவுக்கு தீர்வு... காய்கறியில் ! |

நீரிழிவு
எனப்படும் சர்க்கரை குறைபாடு எதனால் வருகிறது; யாருக்கெல்லாம் வரும்; அதன்
அறிகுறிகள் என்னென்ன; கட்டுப்படுத்த என்ன வழிகள் என்று சகலவிதமான
கேள்விகளுக்கும் கடந்த இரண்டு இதழ்களில் பதில்களைப் பார்த்தோம்.
அதற்கு ஏற்றாற்போல, உணவு முறையை
எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும்... என்னென்ன உணவுகளைச் சேர்த்துக் கொள்ள
வேண்டும் என்பதை பார்த்து வருகிறோம்.
"அதுமட்டும்தான்னு
நினைச்சுடாதீங்க... சுகரைக் குறைக்கிற சூப்பர் ரெசிபி, கைவசம் இன்னும்
நிறைய இருக்கு. நான் சொல்லிக்கிட்டே இருக்கேன்... நீங்க டேஸ்ட்
பண்ணிக்கிட்டே இருங்க'' என்றபடியே தொடர்ந்தார் 'செஃப்' ஜேக்கப்...
கோதுமை ரவை வெஜிடபிள் உப்புமா
தேவையானவை:
உடைத்த கோதுமை - 75 கிராம், மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக
நறுக்கிய கோஸ், பீன்ஸ், கேரட், தக்காளி, பச்சைப் பட்டாணி - தலா 10 கிராம்,
சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை -
சிறிதளவு, எண்ணெய் - அரை டீஸ்பூன், பிரியாணி இலை - 1, சின்ன வெங்காயம் - 25
கிராம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
உடைத்த கோதுமையை நன்றாக ஊற வைத்து களைந்து கொள்ள வும். கனமான அடிப்பாகம்
கொண்ட கடாயில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், சீரகத்தைப் போட்டு வதக்கி,
காய்கறிகளை சேர்க்கவும். இதில் 3 கப் தண்ணீர் விட்டு மிளகுத்தூள்,
மஞ்சள்தூள், கறிவேப்பிலை, பிரியாணி இலையைப் போட்டு, கொதித்ததும் உடைத்த
கோதுமை ரவையைக் கொட்டி, மிருதுவாக வெந்ததும் இறக்கவும்.
ஸ்டஃப்டு பன்
தேவையானவை:
முழு கோதுமை பன் - 1 (50 கிராம் எடை), கோஸ், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்,
முள்ளங்கித் துருவல் - 25 கிராம், வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய்,
குடமிளகாய் - தலா 10 கிராம், வேகவைத்த கொள்ளு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் -
சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: கோஸை
பொடியாக நறுக்கி உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும். கோதுமை
பன்னை இரண்டாக வெட்டி, மேலாக எண்ணெய் தடவி, வெந்த கொள்ளு, வெங்காயம்,
தக்காளி, குடமிள காய், வெள்ளரிக்காய், முள்ளங்கித் துருவலை அதன் நடு வில்
வைத்து மூடவும். தோசைக் கல்லை காயவைத்து பன்னை அதில் போட்டு இருபுறமும்
திருப்பி எடுக்கவும்.

"ஜேக்கப்
தந்திருக்கிற இரண்டு ரெசிபியுமே அற்புதம்'' என்று சபாஷ் போட்ட
'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி, "கோதுமை ரவை வெஜிடபிள் உப்புமா காலை
நேரத்துக்கேற்ற நிறைவான உணவு. ஸ்டஃப்டு பன் மாலை நேரத்துக்கு ஏற்ற மகத்தான
டிபன். பொதுவாக, சர்க்கரை நோயாளிகள் பழங்களை மிகக் குறைவாகவும், முழு
தானியங்களை அளவோடும், காய்கறிகளை மிக அதிகமாகவும் சேர்த்துக் கொண்டாலே
போதும். சந்தோஷ மனநிலையுடன் நீண்ட நாட்கள் நிம்மதியாக வாழ முடியும்'' என்று
சொல்லிவிட்டு, கோதுமை உப்புமா மற்றும் ஸ்டஃப்டு பன் ஆகியவற்றின் மூலம்
உடலில் சேரும் சத்துக்கள் பற்றியும் சொன்னார். அது...
கோதுமை ரவை வெஜிடபிள் உப்புமா:
60 கிராம் மாவுச்சத்து, 10 கிராம் புரதம், கொழுப்பு நாலரை கிராம், எனர்ஜி
325 கிலோ கலோரி கிடைக்கிறது.
ஸ்டஃப்டு பன்: இதில் மாவுச்சத்து
- 27 கிராம், புரதம் - 5 கிராம், கொழுப்பு - 1 கிராம், எனர்ஜி - 135 கிலோ
கலோரி உடம்பில் சேர்ந்து நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.
Post a Comment