நீங்கள் ஆப்பிளா? பேரிக்காயா? பருமனைக் குறைக்க 'வெயிட்'டான ஐடியா!
'பி ரச்னைகள் எப்போதும் தனித்து வருவது இல்லை’ என்பார்கள். உடல் பருமன் பிரச்னை வந்தாலே, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், முதுகு வல...

https://pettagum.blogspot.com/2013/06/blog-post_5237.html
'பிரச்னைகள் எப்போதும் தனித்து வருவது இல்லை’ என்பார்கள். உடல் பருமன் பிரச்னை வந்தாலே,
நீரிழிவு,
உயர் ரத்த அழுத்தம், முதுகு வலி, குழந்தைப்பேறு இன்மை, மூட்டு வலி,
உளவியல் சிக்கல் மற்றும் மன அழுத்தம், மாரடைப்பு என அடுத்தடுத்து இதரப்
பிரச்னைகளும் போனஸாக வரிசை கட்டும். சென்னை அப்போலோ மருத்துவமனையின் மூத்த
உடல்பருமன் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்குமார் பழனியப்பனிடம்
பேசினோம்.
'உடல் எடை ஒரே நாளில் கூடிவிடுவது கிடையாது. ஆனால்,
உடல் எடைக் குறைப்பு மட்டும் ஒருசில நாட்களில் நிகழ்ந்துவிட வேண்டும் என்று
நாம் பேராசைப்படுகிறோம். ஒரே வாரத்தில் உடலை இளைக்கவைக்கும் பயிற்சி
ஏதாவது இருக்கிறதா? என விளம்பரங்களைத் தேடி அலைகிறோம். உடல்பருமனில்
இருந்து அபரிமிதமான உடற்பருமனுக்கு செல்லும்போது உடல் ஆரோக்கியத்தில்
பாதிப்பு ஏற்படும். இந்தியர்களின் சராசரி பாஸல் மெட்டபாலிக் ரேட்
(பி.எம்.ஆர்.) என்பது 1800 கலோரி. ஆனால், சராசரியாக இந்தியர்கள்
எடுத்துக்கொள்ளும் உணவில் 3000 கலோரி உள்ளது. நம் உடல்வாகையும், உணவுப்
பழக்கத்தையும் முறையாக ஆராய்ந்து, படிப்படியான மாற்றங்களை நமக்குள்
நிகழ்த்தினால், நிச்சயம் உடல் பருமன் பிரச்னையை சரி செய்துவிட முடியும்.
இதோ, உங்களை நீங்களே அலசுவதற்கான அற்புத வழிகள்...
உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவைப் பொறுத்து மட்டுமே
நோய் அபாயம் அதிகரிப்பது கிடையாது. எங்கே, எவ்வளவு இருக்கிறது என்பதைப்
பொறுத்து அது மாறும். ஈஸியாகப் புரிந்து கொள்வதற்காக, கொழுப்பு சேரும்
இடத்தை ஆப்பிள் மாடல், பேரிக்காய் மாடல் என்று இரண்டு விதமாக
வகைப்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பை
ஆப்பிள் மாடல் என்றும், இடுப்பு மற்றும் பின்புறத்தில் சேரும் கொழுப்பை
பேரிக்காய் மாடல் என்றும் கூறுவார்கள். இரண்டுமே மோசம்தான். பேரிக்காய்
வடிவத்தினரைவிட ஆப்பிள் வடிவத்தினர்தான் அதிக ஜாக்கிரதையாக இருக்க
வேண்டும். குறிப்பாக, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அவர்களைவிட
இவர்களுக்கு அதிகம்!
நீங்கள் (ஆப்பிள்) ஆணாக இருந்தால் இடுப்பின் அளவு 94
செ.மீ-க்கு (37 இன்ச்) அதிகமாகவும், பெண்ணாக இருந்தால் 80 செ.மீ-க்கு (32
இன்ச்) அதிகமாகவும் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று
அர்த்தம். (பேரிக்காய்) ஆண்கள் 102 செ.மீ-க்கு (40 இன்ச்) அதிகமாகவும்,
பெண்கள் 88 செ.மீ-க்கு (35 இன்ச்) அதிகமாகவும் இருந்தால் கூடுதல்
எச்சரிக்கை தேவை. இடுப்பு அளவைக் குறைக்கும் முயற்சியில் உடனடியாக ஈடுபட
வேண்டியது அவசியம்!
ஆரோக்கியமான உணவு உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்
சத்தைக் கொடுப்பதுடன், உடல் எடையைக் குறைக்கவும் வழிவகுக்கும். இதனால் இதய
நோய் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். ஆரோக்கியமான
உணவுத் திட்டமிடல் என்பதில், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து உள்ள
உணவின் அளவைக் குறைத்து, அதிகக் காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ளுதல்,
கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது குறைந்த அளவு கொழுப்பு உள்ள பால்
எடுத்துக்கொள்ளுதல், இறைச்சி, மீன், முட்டை, பாதாம், முந்திரி ஆகியவற்றைக்
குறைவாக எடுத்துக்கொள்ளுதல் போன்றவை அடங்கும். உணவில் சர்க்கரை மற்றும்
உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளவேண்டும். இப்படி சமச்சீரான உணவுப்
பழக்கத்தைக் கடைப்பிடித்தாலே, உடல் எடை கட்டுப்படத் தொடங்கிவிடும்.
உடல் எடையைக் குறைக்க அதிக கலோரிகள் உள்ள உணவு மற்றும்
பானங்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சாப்பிடும் உணவில் இருந்து எந்த
அளவு சக்தி கிடைக்கிறதோ, அதை உடம்பில் சேர்த்துவைக்காமல்
அவ்வப்போது எரித்துவிட வேண்டும். அதாவது, உடல் உழைப்பின் மூலம் அவற்றைப்
பயன்படுத்த வேண்டும். விளக்கமாகச் சொன்னால்... உண்ணுகிற உணவுக்கு ஏற்ப
நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி என்று எது முடிகிறதோ, அதைச்
செய்ய வேண்டும்.
உடல்பருமனால் அவதிப்படும் அதே நேரம், நீரிழிவு போன்ற
பிரச்னை இல்லை என்றால் அவர்களுக்கு புதிய ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி (Sleeve
gastrectomy) அறுவைச் சிகிச்சை உள்ளது. இந்த அறுவைச் சிகிச்சையில், பசியைத்
தூண்டும் க்ரெலின் (Ghrelin)) என்ற ஹார்மோன் அகற்றப்படும்.
மேலும், இரைப்பையின் அளவும் குறைக்கப்படும். இதனால் சாப்பிடும் அளவு
மட்டுமே குறையும், ஊட்டச்சத்து கிரகிப்பது குறைக்கப்படாது. இந்த அறுவைச்
சிகிச்சை முடித்த ஒரே ஆண்டில், உடல் எடை 70 சதவிகிதம் வரை குறைந்துவிடும்.
அபரிமிதமான உடல்பருமன் உள்ளவர்களுக்கு பை பாஸ் அறுவைச் சிகிச்சை தான்
சிறந்தது. இதில் இரைப்பையின் அளவு குறைக்கப்படுவதுடன், ஊட்டச்சத்து
கிரகிக்கப்படும் அளவும் குறைக்கப்படுகிறது. இதுதவிர, ரோபோட்டிக் அல்லது
எண்டோஸ்கோப்பி மூலமாகவும் உடல்பருமன் அறுவைச் சிகிச்சை செய்யும் முறை
இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் அறிமுகமாகியுள்ளது' என்றார்.
2 comments
பயனுள்ள கருத்துகளை அள்ளிவழங்கும் உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் நாங்கள் அள்ளி வழங்குகிறோம்
Very Very Thanks By Pettagum A.S. Mohamed Ali
Post a Comment