ஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும்
அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று
'தலை’யாயப் பிரச்னை. காலம்காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளை
விடுத்து, தற்போது தலைமுடிப் பராமரிப்புக்காகப் பயன்படுத்தும் பெரும்பாலான
அழகுப் பொருட்கள் ரசாயனம் கலந்தவை. இவற்றைப் பயன்படுத்துவதால், அந்த
நேரத்தில், கூந்தல் அழகாக மின்னுமே தவிர, தொடர்ந்து பயன்படுத்தும்போது, அது
ஆபத்தாகவே முடியும். உதாரணத்துக்கு, 'தலையில் எண்ணெயே தடவ வேண்டாம்...
இந்த நான்ஸ்டிக்கி ஸ்ப்ரே போதும்... பளபளப்பு, மென்மை, கருமை என அலை
அலையாய்க் கூந்தலில் வலம் வரலாம்’ என்பனபோன்ற விளம்பரங்கள் பலரையும்
ஈர்க்கின்றன. சுருள்சுருளாக முடி இருப்பவர்கள், நேர்த்தியான நீள்
முடியையும், நீளமான முடி இருப்பவர்கள் அலைஅலையாய்ச் சுருள் முடியையும்,
அதிக முடி இருப்பவர்கள் குறைவாகவும், குறைந்த முடி இருப்பவர்கள்
அடர்த்தியாகவும் இருக்கவேண்டும் என்று ஏங்குகின்றனர். அனைவரின்
ஏக்கத்தையும் போக்குவது இன்று மிகவும் சுலபம். ஆங்காங்கே இருக்கும் அழகு
நிலையங்களில் இதற்கான அழகுச் சிகிச்சைகள் இருக்கின்றன. அழகு
நிலையத்துக்குச் செல்வதற்கு முன்பு, அழகுக்கலை நிபுணர், தோல் சிகிச்சை
நிபுணரைச் சந்திப்பது நல்லது.

இதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுவது நல்லது.
முடிவு இல்லாப் பிரச்னையாக நீடிக்கும் முடிப்
பிரச்னைக்கு நிச்சயம் தீர்வு காண முடியும். குழந்தையாக இருக்கும்போதே முடி
வளர்ச்சிக்கான ஊட்டத்தைத் தருவதற்கும், முடியைப் பராமரித்துப்
பாதுகாக்கவும் ஆர்.எம். ஹெர்பல்ஸ் உரிமையாளரும், இயற்கை அழகுக்கலை
நிபுணருமான ராஜம் முரளி, பேஜ்-3 அழகு நிலையத்தின் முடி பராமரிப்பு
நிபுணர்கள், மதன், அரவிந்த், கெவின் கேர் நிறுவனத்தின் தலை முடி மற்றும்
சரும முதன்மை ஆராய்ச்சியாளர் லட்சுமி தியாகராஜன் மற்றும் உணவியல் நிபுணர்
சோஃபியா போன்ற வல்லுநர்கள் இங்கே வழிகாட்டுகிறார்கள்.
தலையில் சராசரியாக 1,20,000 முடிகள்
இருக்கும். தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. அதற்கு மேல்
முடி உதிர்ந்தால்தான் பிரச்னை. கோடை நாட்களில் முடியின் வளர்ச்சி
வேகமாகவும், குளிர் காலத்தில் மெதுவாகவும் இருக்கும். உடல் ஆரோக்கியம்,
மனநிலையைப் பொறுத்து கூந்தல் அடர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும். ஒரு
முடி 25 தடவை உதிர்ந்து, பிறகு அதே இடத்தில் வளர்ந்தும்விடும். ஆனால்,
அதற்கு மேல் விழுந்தால் வளராது.
குழந்தையிலேயே தலைமுடியைப் பராமரிக்க வழி...
குழந்தை பிறந்தது முதல் தலைமுடியை ஆரோக்கியமாகப்
பராமரித்துவிட்டால் வயதானாலும், முடி ஸ்ட்ராங்காக அழகாக இருக்கும். அந்தக்
காலத்தில் குழந்தை ஆரோக்கியமாக வளர, பாரம்பரிய முறைப்படி எண்ணெய் குளியல்
முறைகள் இருந்தன. ஆனால், இன்றோ, தலையில் எண்ணெய்யே படக் கூடாது என்று
பிறந்த குழந்தைகளுக்கு டாக்டர்கள் அட்வைஸ் பண்ணும் அளவுக்கு
இருக்கிறது. எண்ணெய் தேய்ப்பதால் பலன் உண்டா இல்லையா என்றால்,
சருமத்திற்கு மென்மையையும், பளபளப்பையும் கூட்டி, உடலைப்
புத்துணர்ச்சியாக்குவதில் பெரும் பங்கு எண்ணெய்க்கு உண்டு. சருமத்தையும்
முடியையும் வறண்டுபோகாமல் வைத்திருக்க எண்ணெய் நிச்சயம் உதவும். தலைமுடி
வளர ஐந்து வயதில் வழி செய்யவில்லை எனில், ஐம்பதில் ஐந்து முடிகூட
இருக்காது.
பிறந்த 45 நாட்கள் ஆன குழந்தைக்கு, தினமும் காலை
உச்சந்தலையில் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் வைப்பதை வழக்கமாகக்
கொள்ளவேண்டும். இதனால் தலையில் முடி வளர்ச்சியைத் தடை செய்யக்கூடிய
செதில்கள் வராமல் பாதுகாப்பதுடன் அடர்த்தியாக வளரத் தொடங்கும்.
குழந்தைக்கெனப் பிரத்யேகமாக விற்கும் சீப்பை
வாங்குங்கள். பிறந்து 60 நாட்களான குழந்தையின் தலையில் தேங்காய் எண்ணெய்
தடவி, வாரும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால், தலைக்கு
ரத்த ஓட்டம் கிடைத்து முடி, அடர்த்தியாக வளரும்.
ஆறு மாதம் முதல் நேர் மற்றும் பக்கவாட்டில் வகிடு
எடுத்து வார ஆரம்பிக்கலாம். வாரும்போது மேலிருந்து கீழாக வார
வேண்டும். இதனால் முடி அடர்த்தியாக வளரும்.

பெண்
குழந்தைகளுக்கு முடி நீளமாக வளரும்போது, வகிடை இரண்டாகப் பிரித்து இரட்டை
பின்னல் போடுவதால் நீளமும், அடர்த்தியும் அதிகரிக்கும்.
ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை வாரத்தில் இரண்டு
நாட்கள் எண்ணெய்க் குளியல் அவசியம். ஒரு நாள் தேங்காய் எண்ணெய் தடவினால்
பயத்தமாவு தேய்த்துக் குளிப்பட்டலாம். அடுத்த முறை நல்லெண்ணெய்
தேய்க்கும்போது, கடலை மாவு கொண்டு குளிப்பாட்டலாம். பயத்த மாவு எண்ணெய்ப்
பசையை எடுக்காமல், பார்த்துக்கொள்ளும். கடலை மாவு சுத்தமாக்கும். தலையில்
இருக்கும் அடைப்புகளை நீக்கி முடி வளர்ச்சியைத் தூண்டும்.
குழந்தைக்கு ஒரு வயதில் இருந்து உச்சந்தலையில் ரப்பர்
பேண்ட் போட்டு இறுக்கிக் கட்டுவது, மேல் நோக்கித் தூக்கி வாருவது
கூடாது. இதனால் முன் நெற்றி மேடு பெரிதாகி, முடி வளர்ச்சியைப்
பாதிக்கும்.
மொட்டை அடித்தால் முடி நன்றாக வளரும் என்று
நினைக்கிறார்கள். ஆனால், மொட்டை அடித்ததும் சரியாகப்
பராமரிக்காமல்விட்டால், முடி வளர்வது குறைந்துவிடும். மொட்டை அடித்ததும்,
நன்றாகக் குளிப்பாட்ட வேண்டும். இல்லை எனில், குளிர்ச்சிக்காக சந்தனத்தைப்
பூசுவதும் தவறு. இதனால், தலையில் செதில்கள் வந்து முடி வளர்வது
தடைபடும்.
இரண்டு வயதில் ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்குத்
தலையில் வியர்வை சுரப்பதால், வியர்க்கூறு ஏற்பட்டு முடி வளர்ச்சி
பாதிக்கும். இதற்கு, கடலை மாவு, பயத்த மாவுடன் பூலாங்கிழங்கை அரைத்துக்
குளிப்பாட்டலாம். பன்னீர் ரோஸ், மல்லிகை, முல்லை, ஜாதி போன்ற பூக்களைத்
தண்ணீரில் போட்டு அந்தத் தண்ணீரைக் கடைசியாக விடலாம். இதனால் வியர்வை
ஏற்படாமல், தலையும் வாசனையாக இருக்கும்.
தலைமுடி உதிர்வதைத் தடுக்க...
மன அழுத்தம், டென்ஷன், தூசி, பரம்பரைவாகு, ரத்த சோகை,
புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை அல்லது வேறு எதாவது
நோய்க்கான அறிகுறி போன்ற பல காரணங்களால் கொத்துக் கொத்தாகத் தலை முடி
உதிரும். சுத்தமின்மை, ஈரப்பதம், எண்ணெய்ப் பசை இல்லாமல் போனால், முடி
வறண்டு உதிரும்.
தலைக்கு ஒழுங்காக எண்ணெய் வைப்பது, தலை குளிப்பதற்கு
ஒரு மணி நேரம் முன் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்வதைத்
தடுக்கலாம்.
ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து
இளஞ்சூடாக்கி, தலையில் மயிர்க்கால்களில் தடவி விரல்களால் மசாஜ்
செய்யவேண்டும். ஒரு துண்டை வெந்நீரில் நனைத்துப் பிழிந்து தலையில் நன்றாக
இறுக்கிக் கட்டி, அரை மணி நேரத்திற்குப் பிறகு தலைக்குக் குளிக்கவும்.
தினமும் தொடர்ந்து ஒரு வாரம் செய்துவர, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தலாம்.
தலைக்குப் புத்துணர்வு கிடைப்பதுடன் முடி வளர்ச்சியையும் தூண்டும்.

மாங்கொட்டையில் உள்ள ஒட்டை எடுத்துவிட்டு, அப்படியே
அரைத்துக்கொள்ளுங்கள். இதற்கு 'மேங்கோ பட்டர்’ என்று பெயர். இந்த பட்டர்
ஒரு டேபிள்ஸ்பூனுடன், வேப்பம்பூ சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இதனுடன்
விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து தலைக்கு நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு,
கடலைமாவு, பயத்தமாவு, சீயக்காய் மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து
அலசுங்கள். இது, முடி உதிர்வதைத் தடுத்து வளர்ச்சியைக் கூட்டும்.
வெட்டிவேர் - 10 கிராம், சுருள் பட்டை - 100 கிராம்,
வெந்தயம் - 2 டீஸ்பூன், விளாம் மர இலை - 50 கிராம் இவற்றைக் கால் லிட்டர்
தேங்காய் எண்ணெயில் போட்டு, ஒரு வாரம் தொடர்ந்து வெயிலில் வைத்து
வடிகட்டிக்கொள்ளுங்கள். இந்தத் தைலத்தை சிறிது தேங்காய் எண்ணெயில் கலந்து
தினமும் தலைமுடி வேர்க்கால் முதல் நுனி வரை தடவுங்கள். முடி கொட்டுவது
நிற்பதுடன் கருகருவென வளரும்.
ஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்தி, தேங்காய்ப் பால் தலா
ஒரு கப் எடுத்து, வாரம் ஒரு முறை அரைத்து தலைக்குக் குளிக்கலாம். உடல்
குளிர்ச்சியாவதுடன் முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தல் வளரத்
தொடங்கும்.
டீத்தூள், மருதாணி பவுடர், வெந்தய பவுடர்,
கடுக்காய்த்தூள், தேங்காய் எண்ணெய், தயிர் இவற்றைத் தலா ஒரு டீஸ்பூன்
எடுத்து, ஓர் எலுமிச்சம் பழத்தின் சாறைப் பிழிந்து ஊற்றி, இரவில்
தயாரித்துக் கொள்ளுங்கள். மறுநாள் தலையில் தேய்த்து அரை மணி நேரம்
ஊறவையுங்கள். குளியல் பவுடரைத் தேய்த்துக் குளித்தால், முடி உதிர்வது
உடனடியாக நிற்பதுடன், கருகரு எனச் செழித்து வளரும்.
பேன் / பொடுகைப் போக்க...
தலையில் ஏற்படும் வறட்சி, தலை குளித்துவிட்டு
துவட்டாமல்போவது, தலையில் சோப்பு தண்ணீர், ஷாம்பூ தங்கிவிடுவது, அழுக்குத்
தலை, அதிக எண்ணெய்ப் பசையுடன் இருத்தல், வியர்வை, நுண்ணுயிர்க் கிருமிகள்,
தோல் நோய்கள் போன்ற பல காரணங்களால் பொடுகு வருகிறது. மேலும், மனஅழுத்தம்,
கவலையாலும் இது வரலாம்.
பொடுகு பாக்டீரியாவால் ஏற்படுகிறது. முடியைச் சுற்றி
பாக்டீரியா அரித்துவிடும். இதனால், தலையின் மேற்பரப்பு தோலில் இறந்துபோன
உயிரணுக்கள் செதில் செதிலாகத் தோன்றி அரிப்பை ஏற்படுத்தும். இதுதான்
பொடுகு. பொடுகு இருந்தால், பேன், ஈறு வந்து தலையில் வாசம் செய்யும்.
இதுதான் வழுக்கைக்கு முந்தைய நிலை. இதை ஆரம்பத்திலயே
கண்டுபிடித்துவிட்டால், பொடுகுக்கான சிகிச்சையைத் தொடங்குவதன் மூலம்
வழுக்கையில் இருந்து தப்பிக்கலாம்.
எண்ணெய் தேய்த்து வாரும் வழக்கம் இல்லாமல் போனதன்
விளைவு பேன்/பொடுகு தங்குவதற்கு இடம் கிடைத்துவிடுகிறது. தினமும் எண்ணெய்
தடவி வாரி வந்தாலே, பேன் தலையில் நிற்காமல் வந்துவிடும்.
ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை
அரைத்து தலைக்கு பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து அலசுங்கள். சொறி,
சிரங்கு, கட்டி, பேன், பொடுகு அனைத்தும் நீங்கி தலை சூப்பர்
சுத்தமாகிவிடும்.
இந்த ஆலிவ் எண்ணெயுடன் பாதாம் எண்ணெய் கலந்து தேய்த்துவந்தால், பொடுகுத் தொல்லை ஒழியும்.
நான்கு வேப்பங்கொட்டைகளின் தோலை அரைத்து விழுதாக்கி,
தலையில் தேய்க்கவும். நல்லெண்ணெய் தேய்த்து தலையை வாரி, தலை முழுவதும்
வேப்ப விழுதைத் தடவி பேக் போடவும். ஒரு மணி நேரம் கழித்து சீப்பால்
வாரினால், பேன், ஈறு வெளியில் வந்துவிடும். பொடுகுத் தொல்லையும் மறையும்.
ஒரு கப் நல்லெண்ணெயுடன் ஒரு ஸ்பூன் மிளகை உடைத்து
காய்ச்சி, வடிகட்டவும். இந்த எண்ணெய்யைத் தலை முழுவதும் விடவும். ஒரு
காட்டன் துணியால் ஒற்றி எடுக்கும்போது பேன், பொடுகு வந்துவிடும். பிறகு
சின்ன சீப்பினால் வாரவும். வெந்தயப்பொடி, வேப்பம்பூ பொடி இவற்றைத் தலையில்
தேய்த்துக் குளித்தால் பேன்/பொடுகு/ஈறு தொல்லை இருக்காது.
வாரம் ஒரு முறை மேலே கொடுத்துள்ள டிப்ஸ்களை மாற்றி மாற்றிச் செய்யும்போது, தலை சூப்பர் சுத்தமாக்கும்.
வாரம் ஒரு முறை தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல், நல்லெண்ணெய் தேய்த்து சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லது.
குழந்தைகளுக்குப் பேன் தொல்லை இருந்தால், வசம்பை
அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, இந்த எண்ணெயைத் தடவிக்
குளிப்பாட்டலாம்.
நரையைப் போக்க...
இன்று எட்டு வயதிலேயே இளநரை எட்டிப் பார்க்க
ஆரம்பித்துவிடுகிறது. சுற்றுச்சூழலில் மாசு, அதிகப்படியான டென்ஷன் போன்ற
தவிர்க்க முடியாத பிரச்னைகளால் நரை முடி வந்து பலரையும் பாதிக்கிறது. நரை
முடியை முற்றிலும் போக்க கறிவேப்பிலைதான் மிகச் சிறந்த மருந்து. தினமும்
உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும்.
20 வயது இளைஞர்கள், நரையை மறைக்க, கலரிங்
செய்துகொள்கின்றனர். தொடர்ந்து தலைமுடிக்கு கலரிங் செய்யும்போது, தலைமுடி
ஆரோக்கியம் இழந்து, உடைந்து போகிறது. அதன் தரம் குறைகிறது. இதனால், தலைமுடி
உதிர்வதுடன், இளமையிலேயே நரை விழத் தொடங்கிவிடுகிறது. அதிலும் ரசாயனம்
கலந்த கலரிங் செய்யும்போது, பெரும் பாதிப்புக்குள்ளாகிறது. இயற்கையான
பழங்கள், காய்கறிகளில் தலைக்கு கலரிங் செய்துகொள்ளலாம்.
இரும்புச் சத்து அதிகம் உள்ள பேரீச்சைப் பழம், ஆம்லா எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
நெல்லிக்காய் 5, மருதாணி இலை, கறிவேப்பிலை தலா ஒரு
கைப்பிடி, 2 லவங்கம் இவற்றைத் தனித்தனியே அரைத்துச் சாறெடுத்து ஒன்றாகக்
கலக்குங்கள். இதனுடன் 3 டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்த்து தலையில் பூசி அரை
மணி நேரம் கழித்து தண்ணீர் விட்டு அலசுங்கள். வாரம் ஒரு முறை இதுபோல்
செய்துவந்தால், இளநரை நெருங்காது.

நெல்லிக்காய், கறிவேப்பிலை, பிஞ்சு கடுக்காய் இந்த மூன்றையும் சம அளவு
எடுத்து இடித்துக்கொள்ளுங்கள். இவை மூழ்கும் அளவுக்கு நல்லெண்ணெய் எடுத்து
காய்ச்சி அதில் மூன்றையும் ஊறவிடுங்கள். தலைக்குக் குளிக்கும்போதெல்லாம்
இந்த எண்ணெயை லேசாகச் சூடு பண்ணி, தலையில் தேய்த்து சீயக்காய் போட்டு
அலசலாம். இளநரையும் இருந்த இடம் தெரியாது. முடியும் கறுப்பாகும்.
100 கிராம் பிஞ்சுக் கடுக்காய்த்தூளை காஃபி பில்டரில்
போட்டு, 300 எம்.எல், கொதிக்கும் நீரை ஊற்றவும். டிகாஷன் சொட்டுச் சொட்டாக
இறங்க வேண்டும். தலையில் ஆலிவ் ஆயிலைத் தடவி வாரிக்கொள்ளவும். பிறகு,
தலையின் சுற்றளவுக்கு ஏற்ப தடிமனான துணியை டிகாஷனில் முக்கி தலையில்
வைத்துக் கட்டவும். 2 அல்லது 3 மணி நேரம் வரை வைத்திருந்து பிறகு
அலசவும். அதிக நரை இருந்தால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து
செய்தால், நரை முடி கறுப்பாகும்.
நெல்லி முள்ளி, கறிவேப்பிலை, வேப்பங்கொட்டை, பிஞ்சு
கடுக்காய், அவுரி விதை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து நைஸாகப்
பொடிக்கவும். இதில் ஆலிவ் ஆயிலை விட்டு வெயிலில்வைத்து எடுக்கவும். இந்த
எண்ணெயைத் தினமும் தடவிவந்தால், நரை முடி சீக்கிரத்திலேயே மாறிவிடும்.
கருமையான கூந்தலுக்கு...
சிலருக்குக் கருகரு முடிகூட, தூசு படிந்தாலோ, சரியான
பராமரிப்பு இல்லாமல் போனாலோ, முடியின் நிறம் செம்பட்டை, மஞ்சள் நிறமாக
மாறிவிடும். இதனால் முகமும் பளிச்சென்று இருக்காது.
பலா இலை, செம்பருத்தி, நெல்லி முள்ளி, கறிவேப்பிலை
இந்த நான்கையும் சம அளவு எடுத்து ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். இதை
நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சிவைத்துக்கொண்டு, தினமும் தேய்த்துவர,
செம்பட்டை முடி கறுப்பாக மாறும்.
கருநீலத் திராட்சையின் தோலை நீக்கி உலர வைத்து,
பொடித்துக் கொள்ளவும். இதனுடன் வெந்தயத்தூள், கடலை மாவைக் கலந்து
தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள். தூசுகள் நீங்கி, கூந்தல் கருமையாக
மாறும்.
100 கிராம் ஆவாரம் பூ, வெந்தயம் - 100 கிராம்,
பயத்தம் பருப்பு - அரைக் கிலோ மூன்றையும் மெஷினில்
அரைத்துக்கொள்ளுங்கள். இந்த பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை
தலைக்கு அலசிவர, கருகருவெனக் கூந்தல் கண் சிமிட்டும்.
பேரீச்சம்பழம் 100 கிராம் எடுத்து கொட்டையுடன் தட்டி,
அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்குங்கள். மறுநாள், ஊறிய
பேரீச்சம்பழத்தை அரைத்து, சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து
காய்ச்சுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் எண்ணெயை சில சொட்டுகள் தலையில்
தேய்த்து மசாஜ் செய்தால், கருமையாகக் கூந்தல் வளரும்.
ஒரு கொத்து கறிவேப்பிலையை, அரை டீஸ்பூன் உளுத்தம்
பருப்பு சேர்த்து புளித்த மோரில் ஊறவைத்து அரைத்துக்கொள்ளுங்கள். வாரம்
ஒரு முறை இந்த பேஸ்ட்டை தலையில் பேக் போட்டு பத்து நிமிடங்கள் கழித்து அலச,
கூந்தல் கருகருவென மாறும்.
சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் சம அளவு கறிவேப்பிலை
சேர்த்து அரைத்து இந்த விழுதை பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து
அலசுங்கள். வாரம் ஒருமுறை இதுபோல செய்தால், வளர்ச்சி தூண்டப்பட்டு கருமையாக
முடி வளரும்.
வறட்சி போக்கி, பளபளப்பாக்க...
எண்ணெய் தேய்த்து, சரிவரப் பராமரிக்காதவர்களின் தலை
முடியானது, வறண்ட பாலைவனமாக மாறி, நுனி முடியில் பிளவு ஏற்படும். இதனால்,
ஒட்டுமொத்த முடி வளர்ச்சியும் பாதிக்கப்படும்.
10 கிராம் கடுக்காய், மிளகு 10 கிராம் இரண்டையும்
ஒன்றிரண்டாகப் பொடித்து, கால் கிலோ நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் போட்டுக்
கலக்குங்கள். இந்த எண்ணெயைத் தினமும் தடவி சூடான தண்ணீரில் டவலை நனைத்து
ஒத்தடம் கொடுங்கள். மிதமான சூட்டில் மசாஜ்

செய்யலாம். பிறகு
சீப்பால் வாரி பின்னல் போட்டுக் கொள்ளலாம். நுனிப் பிளவு நீங்கி, முடி
நன்றாகப் பளபளக்கும். நீளமாக வளரத் தொடங்கும்.
100 கிராம் கிர்ணி விதையுடன் பயத்தம் மாவு, சீயக்காய்
கால் கிலோ சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை வாரம் ஒரு முறை
தேய்த்துக் குளித்தால், தலையில் அழுக்கு நீங்கி சுத்தமாகப் பளபளவென
இருக்கும்.
தலா 4 துளி ஆலிவ் ஆயில், 4 துளி விளக்கெண்ணெய் கலந்து
தலையில் தேய்த்து, சீப்பால் தினமும் தலை முடியை வாரவும். வறட்சியான
முடியும் பளபளக்கும்.
ஒரு கப் தேங்காய் பாலில், 4 டீஸ்பூன் கடலை மாவு கலந்து தேய்த்து தலைக்குக் குளித்துவந்தால், முடி பளபளப்பாக இருக்கும்.
100 மிலி தேங்காய் எண்ணெயை அடுப்பில்வைத்துக்
காய்ச்சி, அதில் 50 கிராம் ஃப்ரெஷ் செம்பருத்தி பூவைப் போட்டு
வைத்துவிடுங்கள். இந்த எண்ணெயைத் தினமும் தலைக்குத் தேய்த்துக்
கொள்ளலாம்.
மரிக்கொழுந்து, வெட்டிவேர் தலா 50 கிராம் எடுத்து 100
கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி
வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு ஃப்ளோரல் ஆயில் என்று பெயர். தலைமுடி
பளபளப்பதுடன் பூக்களால் கூந்தல் வாசனையாகவும் இருக்கும்.
வழுக்கை விழுவதைத் தடுக்க...
வழுக்கை பெரும்பாலும் பரம்பரைரீதியாக வருவதுதான்.
வழுக்கை வந்துவிட்டால், அதன் மேல் முடி முளைக்கச் சாத்தியம்
இல்லை. கூடுமானவரையில், வராமல் தவிர்க்க முயற்சி செய்யலாம். இந்தப்
பிரச்னையால் வாழ்க்கையே இழந்தவர்கள் பலர். ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே
இதனால் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், தற்போது பெண்களுக்கும் இது
ஏற்படுகிறது. ஆண் பெண் இருவருக்கும் முடிப் பராமரிப்பில் அக்கறையின்மை,
ஸ்ட்ரெஸ் என வழுக்கைக்கு நிறைய காரணங்கள் உண்டு.
மிளகு அளவில் தலையில் புழுவெட்டு வர ஆரம்பித்து, திடீர்
என்று மண்டை முழுக்கப் பரவி, வழுக்கையை ஏற்படுத்தும். இதை ஆரம்பத்திலேயே
கவனித்துவிட வேண்டும்.
தலைமுடியில் வேர்க்கால்கள் எப்படி இருக்கின்றன?
அதற்கு உயிர் இருக்கிறதா? மறுபடியும் வளரச் செய்ய முடியுமா? என்று ஸ்கேன்
மூலம் தெரிந்து அதற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் வழுக்கை
விழாமல் தடுக்கலாம்.
தினசரி அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக் குளியல் அவசியம்.
தலைமுடியை இழுத்து, இறுக்கமாகப் பின்னுவதோ, கட்டுவதோ கூடாது. தளர்வான பின்னலும், ஹேர் ஸ்டைலும்தான் நல்லது.
எலுமிச்சை விதைகள் 50, மிளகு 50, கைப்பிடி சின்ன
வெங்காயம் மூன்றையும் கரகரப்பாக அரைத்து, வழுக்கை விழுந்த இடத்தில்
தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்து அலசினால், உயிர்ப்புள்ள வேர்க்கால்கள்
திறந்து, மறுபடி வளரத் தொடங்கும்.
கிராமங்களில் கிடைக்கும் குமுட்டிக்காயை வாங்கி, அதை
வெட்டினால் உள்ளுக்குள் ஈரப்பதம் இருக்கும். வழுக்கை விழும் பகுதியின் மேல்
அதைத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து ஊறியதும் கழுவினால், உதிர்ந்த
இடத்தில் முடி வளரும்.
தற்போது ஹேர் டிரான்ஸ்ப்ளான்டேஷன் சிகிச்சை மூலம் வழுக்கைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வாசம் வீசும் ஹென்னா
வீட்டிலேயே ஹென்னா தயாரித்துத் தடவிக் கொள்வதன் மூலம்,
முடிக்கு நல்ல கண்டிஷனைத் தருவதுடன், வளர்ச்சியையும் குளிர்ச்சியையும்
தரும்.
மருதாணி பவுடர் - ஒரு கப், ஒரு முட்டையின்
வெள்ளைக்கரு, டீ டிகாக்ஷன் - ஒரு கப், ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறு
இவற்றுடன் மொட்டான முல்லை, ஜாதி, இருவாச்சி மல்லி மூன்றையும் அரைத்த விழுது
ஒரு கப் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். ஹென்னாவைத் தலைக்குப் போடுவதால்
முட்டை வாசனை மறைந்து பூக்களால் தலை வாசம் வீசும்.
மகிழம்பூ 50 கிராமுடன், கால் கிலோ நல்லெண்ணெய் கலந்து
காய்ச்சி, இதனுடன் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் தலா 25 கிராம்
கலந்துகொள்ளுங்கள். இந்தத் தைலத்தை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து
ஊறவைத்துக் குளிக்கலாம்.
ஒரு பிடி மகிழம்பூவை தண்ணீரில் போட்டுக்
கொதிக்கவைத்து ஆறவிடுங்கள். மகிழம்பூ தைலம் தேய்த்துக் குளித்து
முடித்ததும், ஆறவைத்துள்ள மகிழம்பூ தண்ணீரில் அலசுங்கள். கூந்தல் வாசம்
வீசும்.
ஒரு கப் மருதாணி இலை, கடுக்காய் தோல் - 4, டீ
டிகாக்ஷன் ஒரு கப், நல்லெண்ணெய் - ஒரு கப், துளசி இலை - ஒரு கப், கொட்டை
நீக்கிய நெல்லிக்காய் இவற்றை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். வாரம் ஒரு
முறை தலையில், சிறிது நல்லெண்ணெய் தடவிவிட்டு, இந்த பேஸ்ட்டை தலை முழுவதும்
போட்டு, ஒரு மணி நேரம் கழித்து அப்படியே அலசலாம். தலைமுடிக்கு
நல்ல கண்டிஷனரையும், கலரையும், வாசனையையும் கொடுப்பதுடன் பளபளப்பாக
வைத்திருக்கும்.
ஃப்ரெஷ் பன்னீர் ரோஜா 100 கிராமுடன் மரிக்கொழுந்து,
வெட்டிவேர், செண்பகப்பூ, துளசி தலா 50 கிராம் சேர்க்கவும். அடுப்பை
'சிம்’மில் வைத்து தேங்காய் எண்ணெய்விட்டுக் காய்ச்சி, பூக்களை அதில்
போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெயைத் தினமும் தடவினால், தலை முடி
பளபளக்கும். கூந்தல் வாசனை மனதை மயக்கும். ஃப்ரெஷ்னெஸை உணர முடியும்.
உணவுப் பழக்கம் கூந்தலைக் காக்கும்
தலைமுடியைப் பாதுகாக்கும் உணவுப் பொருட்களை, தினமும்
உணவில் ஏதாவது ஒரு வகையில் எடுத்துக்கொள்ளும்போது முடி மட்டும் அல்ல,
சருமமும் ஆரோக்கிய அழகு பெறும்.
கேரட்: இதில் உள்ள வைட்டமின் ஏ தலையில் உள்ள சீபம்
எண்ணெய் உருவாக்கத்துக்கு அவசியம். இந்த சீபம் எண்ணெய்தான் தலைப் பரப்பை
காய்ந்துவிடாமல் ஈரப்பதமாக வைக்கிறது. ஈரப்பதமான உச்சந்தலை என்றால், அது
ஆரோக்கியமான தலைமுடிக்கு அஸ்திவாரம்.
முட்டை: ஆரோக்கியமான முடியின் வேர்களுக்குப் புரதச்
சத்து அவசியம். முட்டையில் உள்ள புரதம் மற்றும் பயோடின், வைட்டமின் பி 12
முடியின் வேர்க்காலுக்கு ஊட்டத்தை அளிக்கும். முட்டையில் உள்ள பயோடின்,
வைட்டமின் பி, முடியைப் பளபளப்பாக்கவும், ஆரோக்கியத்துக்கும்,
பராமரிப்புக்கும் மிகவும் அவசியம். இதைப் பல ஷாம்புகளில்
கலந்திருப்பார்கள். முட்டையில் இது இயற்கையாகவே உள்ளதால், தலையில் தேய்த்து
ஊறவைத்துக் குளிக்கலாம். தினமும் உணவிலும் முட்டை
சேர்த்துக்கொள்ளவேண்டும்.
அடர் பச்சை நிறக் காய்கறி கீரைகள்: அன்றாட உணவில் இவை
அவசியம் தேவை. இந்த உணவுகள்தான் வைட்டமின் ஏ மற்றும் சி-க்கு ஆதாரங்கள்.
இரும்பு மற்றும் கால்சியம் போன்ற முடியின் ஆரோக்கியத்துக்குத் தேவையான
தாதுப்பொருட்கள் இதில் உள்ளன. பச்சைக் காய்கறிகளில் உள்ள வைட்டமின்கள்
சீபம் உருவாக்கத்துக்கு உதவி புரிகின்றன.
சிவப்பு அரிசி: புரதம், வைட்டமின்கள், செலினியம்
உள்ளிட்ட தாதுக்கள் மற்றும் நார்ச் சத்து இதில் நிறைவாக உள்ளன. இதில் உள்ள
காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் மிகவும் வலுவான முடி உருவாகத் துணை செய்கிறது.
அதிக அளவில் உள்ள வைட்டமின் பி முடி உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க
உதவி புரிகிறது.
தானியங்கள்: தலைமுடிக்குத் தேவையான இரும்பு, துத்தநாகம்
போன்ற தாது உப்புக்களுடன், அதிக அளவிலான புரதச் சத்தையும் அளிக்கிறது.
மேலும் இதில் பயோடின், வைட்டமின் பி போன்ற உயிர் ஊட்டச் சத்துக்களும்
நிறைந்துஉள்ளன. இது முடி உடையும் பிரச்னையைத் தவிர்த்து உறுதியாக்கும்.
வாழைப்பழம்: வாழைப் பழத்தில் பி6 வைட்டமின் நிறைவாக உள்ளது. இது முடி உதிர்வைக் குறைக்கும்.
வால்நட்: முடிக்குத் தேவையான ஊட்டச் சத்து மற்றும்
பராமரிப்பை அளிக்கும் மிக முக்கிய உணவுகளில் ஒன்று. இதில் நிறைவாக உள்ள
ஒமேகா 3 பேட்டி ஆசிட், பயோடின், வைட்டமின் ஈ, தாமிரம் போன்றவை சூரியக்
கதிர்வீச்சில் இருந்து கேசத்தைப் பாதுகாக்கும். மேலும், முடி உதிர்வைத்
தடுத்து முடியின் நிறத்தைப் பாதுகாத்துப் பளபளப்பாக்கும்.
க்ரீன் டீ: இதில் உள்ள பாலிஃபீனல் உடல் எடையைக்
குறைப்பதுடன், தலை சருமத்தின் ஆரோக்கியத்துக்கும் உறுதுணை புரிகிறது.
க்ரீன் டீயை அருந்துவதுடன், அதைக்கொண்டு தலை முடியை அலசும்போது அல்லது தலை
சருமப் பரப்பில் க்ரீன் டீயைத் தடவும்போது பொடுகையும் விரட்டிவிடும்.
மீன்: நெய் மீன் எனப்படும் எண்ணெய்ச் சத்து நிறைந்த
மீன் வகைகளில் ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் நிறைவாக உள்ளது. இந்தக்
கொழுப்பு அமிலங்கள் முடி உதிர்வைத் தடுக்கின்றன. இந்த வகை மீன்களில்
இரும்புச் சத்து, வைட்டமின் பி12 போன்ற ஊட்டச் சத்துக்கள் நிறைவாக உள்ளன.
இவை சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்துக்குத் துணைபுரிகின்றன.
பூசணி விதை: முடி மற்றும் சருமத்தைப் புத்துணர்வுடன்
வைத்திருக்க உதவுகிறது. இதில் ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்,
புரதம், இரும்பு, துத்தநாகம் போன்றவை அதிக அளவில் உள்ளதால் முடியின்
ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் துணைபுரிகின்றன.
ஸ்கேன்
தலை முடிப் பராமரிப்புக்கு பியூட்டி பார்லர் போன்ற
இடங்களில் பிரத்யேக ஸ்கேன் கருவி வைத்துள்ளனர். இது தலை முடி சருமப் பரப்பை
200 மடங்கும், ஒரே ஒரு முடியை மட்டும் 1000 மடங்கு பெரிதாக்கிக்காட்டும்.
இதன் மூலம் தலை சருமப் பரப்பு மற்றும் முடியில் என்ன பிரச்னை உள்ளது என
எளிதாகக் கண்டறிய முடியும். இந்த சோதனை அடிப்படையில் என்ன மாதிரியான
சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை அங்குள்ள அழகுக் கலை நிபுணர்
முடிவுசெய்வார்.
முடிமாற்று அறுவைசிகிச்சை
முடிகொட்டுவதைத் தடுக்க, முடி அடர்த்தி அதிகரிக்க சில
சிகிச்சைகள் உள்ளன. வழுக்கைத் தலை உள்ளவர்களுக்கு முடி மாற்று
அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை காவேரி
மருத்துவமனையின் மூத்த காஸ்மெடிக் ஆலோசகரும், அறுவைசிகிச்சை நிபுணருமான
ஜெயந்தி ரவிந்திரன் கூறுகையில், ''முடி எதனால் கொட்டுகிறது எனக் கண்டறிந்து
முதலில் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். முடி கொட்டுவதற்கு மரபியல்,
ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் குறைபாடு, மன அழுத்தம் என பல்வேறு
காரணங்கள் உள்ளன. இதைக் கண்டறிந்து சரிப்படுத்துவதன் மூலம் முடிக்
கொட்டுதலைத் தடுக்க முடியும்.

ஏற்கெனவே
வழுக்கை விழுந்தவர்களுக்கு மீண்டும் முடி முளைக்கவைக்க முடியாது. முடி
கொட்ட ஆரம்பித்தவர்களுக்கு சில ஹார்மோன் மாத்திரைகளைப் பரிந்துரைப்போம்.
அந்த மாத்திரைகள் போடும் வரை முடி கொட்டாது. மாத்திரை போடுவதை
நிறுத்தியவுடன் முடி கொட்ட ஆரம்பித்துவிடும். ஏனெனில், முடி கொட்டும்
நிகழ்வை மாத்திரை தள்ளிப்போடுமே தவிர, தடுத்து நிறுத்தாது.
வழுக்கைத் தலை உள்ளவர்களுக்கு பின்புறம் மற்றும்
பக்கவாட்டில் உள்ள நிரந்தர முடி வேர்களை எடுத்து தலையின் முன் பக்கத்தில்
நடுவோம். இப்படி சில அமர்வுகளின் மூலம் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் முடி
வேர்கள் நடப்படும். நடப்பட்ட மூன்று வாரங்களில் முடி முளைக்க
ஆரம்பித்துவிடும். இந்த மூன்று வார காலத்துக்குள் நோய்த் தொற்று, அரிப்பு
போன்ற பிரச்னை ஏற்பட்டால் நடப்பட்ட முடி உதிர்ந்துவிட வாய்ப்பு உள்ளது.
இந்த சிகிச்சை முறையில் சில சாதகம் மற்றும் பாதகங்கள் உள்ளன. இவற்றை
முழுமையாக சிகிச்சை தேவைப்படுபவருக்கு தெளிவுபடுத்திவிட்டு, அவரது முழு
சம்மதத்துடன் மட்டுமே இந்த அறுவைசிகிச்சை செய்யப்படும். இதுதவிர ஸ்டெம்
செல் சிகிச்சை உள்ளது. ஆனால் ஸ்டெம்செல் சிகிச்சைக்கு இதுவரை அங்கீகாரம்
இல்லை'' என்றார் விளக்கமாக.
எச்சரிக்கை
பெர்மிங், ஸ்ட்ரெய்ட்டனிங், அயர்னிங், ரீபாண்டிங்
செய்துகொள்பவர்கள் கூந்தலை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டியது
அவசியம். இதற்கென இருக்கும் பிரத்யேக ஷாம்பூ, கண்டிஷனர், இதரப் பொருட்களை
மட்டுமே முறையாக உபயோகிக்க வேண்டும். இல்லையெனில் பெரும் பாதிப்புகளை
உருவாக்கிவிடும்.
மாறிவரும் ஃபேஷன் டிரெண்டுக்கு ஏற்ப, பெர்மிங்,
அயர்னிங், ஸ்ட்ரெய்ட்டனிங் என அடிக்கடி மாற்றிக்கொண்டேயிருந்தால் முடியின்
ஆரோக்கியம் முழுவதுமாகக் கெட்டுவிடும். பக்கவிளைவுகளையும் ஏற்படுத்திவிட
அதிக வாய்ப்பு இருக்கிறது.
அழகுக்காக செய்துகொள்ளும் எந்த சிகிச்சையாக
இருந்தாலும், கூந்தலின் தன்மை, எதையும் தாங்கும் சக்தி, சென்சிட்டிவ்
கூந்தலா? சாதாரணக் கூந்தலா? ஹென்னா, கலரிங், கெமிக்கல் சிகிச்சைகள்
மேற்கொள்ளப்பட்டதா என்று ஆராய்ந்து பிறகே மேற்கொள்ளவேண்டும்.
2 comments
வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_3.html) சென்று பார்க்கவும்... நன்றி...
Very Very Thanks By Pettagum A.S. Mohamed Ali
Post a Comment