வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்! --- உபயோகமான தகவல்கள்,
''தொ வையல், கொளம்பு, கூட்டுன்னு நம்ம சாப்பாட்டுச் சமாச்சாரத்துக்குப் பெரண்டை ரொம்பப் பெரயோச...
https://pettagum.blogspot.com/2013/01/blog-post_9002.html
- 'வைத்திய’ அம்மணி நீட்டி முழக்க 'பழமொழி’ வாசம்பாவுக்கு முகம் கோணிப் போனது. சேலைத்தலைப்பை எடுத்து முகம் ஒற்றிக்கொண்டபடியே பேசத் தொடங்கினாள்.
''தாளம்பூவா இருந்தாலும் வாசம் வீசினாத்தாண்டி தெரியும். மரஞ்செடி கொடிதான் வாழ்க்கைன்னு வாழ்ந்தவ நீ. நான் ஊரு வம்பு இழுக்கவே நேரம் போதாதுன்னு திரிஞ்சவ. சாதாரண ஒரு கொடியில இவ்வளவு சத்து இருக்குன்னு எனக்கெப்புடித் தெரியும்?''
''வயித்துப் பிரச்னைக்குப் பெரண்டையத் தொவையலா அரைச்சுச் சாப்பிட்டாலே சரியாகிடும். குழந்தைங்களுக்கு உண்டாகுற வாந்தி பேதி பிரச்னைக்கும் பெரண்டை அற்புதமான மருந்து. பெரண்டைய நல்லா உலர்த்தி சாம்பல் மாதிரி வெச்சுக்கணும். ஒரு கிலோ சாம்பலை மூணு லிட்டர் தண்ணியில கரைச்சு நல்லா வடிகட்டி அரை நாளைக்குத் தெளிய வைக்கணும். அதைப் பீங்கான் பாத்திரத்தில் ஊத்தி பத்து நாளைக்கு வெயில்ல காயவைக்கணும். நீர் நல்லா சுண்டிப்போய் உப்பு மாதிரி படிஞ்சிடும். குழந்தைங்களுக்கு வாந்தி பேதி வர்றப்ப எல்லாம் இந்த உப்புல ஒரு கிராம் அளவுக்கு எடுத்து அதைப் பால்ல கலந்து கொடுத்தா உடனே சரியாப் போயிடும். வாந்தி பேதி நிக்கிறது மட்டுமில்ல... குழந்தைங்களுக்கு நல்லா பசி எடுக்கவும் இந்தப் பெரண்டை உப்பு பிரமாதமான மருந்து. நீ வீட்டுக்குப் போன உடனே முதல் வேலையா இந்தப் பெரண்டை உப்பைத் தயார் பண்ணி வெச்சுக்க. அதை விட்டுட்டுக் குழந்தை அழுவுதுங்கிற சின்னச் சின்ன விசயத்துக்கெல்லாம் பதறி ஊரைக் கூட்டாதே... ஆமா...''
''நீ ஏண்டியாத்தா இப்புடிச் சலிச்சுக்குறே... 'காடு முழுக்கக் கூவுனாலும் கூடுக்கு வழியில்லையாம் குயிலுக்கு’ன்னு சொல்ற மாதிரி, ஊரையே சுத்தி வந்தாலும் சீக்குப் பிணியின்னா உங்கிட்டதானே சேதி கேக்க வேண்டியிருக்கு.'' - நைச்சியம் பேசியபடியே பெரண்டையின் கொழுந்துப் பகுதியாகப் பார்த்து பறிக்கத் தொடங்கினாள் வாசம்பா.
'' 'ஊரையே ஆண்டாலும் உள்ளங் காலுதான் தாங்குமாம்’னு ஒரு சொலவடை சொல்லுவியே... அது யாருக்குப் பொருந்துதோ இல்லையோ... உனக்குப் பொருந்தும்டி. சடங்கு, சம்பிரதாயம்னா சாப்பாட்டைப் போட்டுட்டு முதல் ஆளா முன்னுக்கு நிக்கிறவ நீ. அப்படிப்பட்ட உனக்குப் பெரண்டையப் பத்தி எப்புடித் தெரியாமப் போச்சு? பொண்ணாப் பொறந்த அத்தனை பேருக்குமே பெரண்டை பெரிய வரம்டி.''
''பொம்பளைக்கும் பெரண்டைக்கும் என்னடி சம்பந்தம்?''
''மாசத்துல மூணு நாளு பொண்ணுங்க படாதபாடு படுறாங்க இல்ல... முதுகு வலி, இடுப்பு வலி, ரத்தப்போக்குன்னு அந்த மூணு நாட்களோட அவஸ்தையைச் சொல்லி மாளாதுல்ல? அந்த நாட்கள்ல பிரண்டையைச் சாப்பாட்டுல சேத்துக்கிட்டா வலி குறைஞ்சு நல்லாத் தூக்கம் வரும். மாதவிலக்கு சரியா இல்லாமலும் ரத்தப்போக்கு அதிகமாவும் இருக்கிறதால அல்லாடுற பொண்ணுங்க பெரண்டையைத் தீயில வதக்கி, சாறு பிழிஞ்சு அதைச் சாப்பிட்டா நல்ல நிவாரணம் கிடைக்கும்.'' - அம்மணி சொல்லச் சொல்ல ஆச்சர்யக் கண் கொண்டு கவனித்த வாசம்பாள் அத்தனை பெரண்டையையும் பறித்துவிடும் ஆவலில் பனை மரத்தின் மட்டையைப் பிடித்து இழுத்தாள். பச்சை மட்டை அப்படியே வளைய, ''ஆ... அம்மாடி...'' என்றபடியே சறுக்கி விழுந்தாள் வாசம்பாள். அம்மணிக்கு சிரிப்புத் தாளவில்லை.
''ஏண்டி, மனசுக்குள்ள வயசுப் புள்ளைன்னு நெனப்போ... தவ்விக் குதிச்சு விளையாடுற வயசாடி இது?'' என்றபடியே விழுந்து கிடந்த வாசம்பாவை கைதூக்கிவிட்டாள் அம்மணி.
'' 'தோடு மாட்டத் தெரியாதவ மாடு கட்டத் திரிஞ்சாளாம்’கிற மாதிரி முன்னப் பின்னத் தெரியாத வேலையில இறங்கினா இப்படித்தாண்டி ஆகும். பெரண்டையப் பத்தி நீ பெரமாதமாப் பேசுன உடனே நானும் ஆசையில நாலு கொழுந்தக் கிள்ளிடலாம்னு நெனச்சேன். இடுப்பே பெசகிக்கிற அளவுக்கு இப்புடி விழுந்துட்டேனே...'' - வலியோடு இடுப்பைப் பிடித்தபடி எழுந்தாள் வாசம்பா பாட்டி.
''ரொம்ப நோவாதடி... கை, காலு அடிபட்டு ஏற்படுற வலிக்கும் பெரண்டை நல்ல மருந்து. பெரண்டையோட வேரைக் கழுவி எடுத்து நல்லா உலர வெச்சு அதைப் பொடியாக்கி சாப்பிட்டா உடைஞ்சுபோன எலும்புகூட நல்லா ஒட்டிக்கும். இப்போ நீ விழுந்த விழுக்காட்டுக்கு எலும்பெல்லாம் உடைஞ்சிருக்காது. இந்த லேசான வலிக்கு பெரண்டையோட வேரைப் பொடியாக்கி வெந்நீர்ல குழைச்சு வலி எடுக்குற இடத்துல பத்துப் போட்டாலே சரியாகிடும். அதனால, முக்கி முனகாம தெம்பா எந்திரி!''
''இதுதான் முள்ளை முள்ளாலேயே எடுக்குற வேலையா... பெரண்டையப் பறிக்கப்போயி விழுந்ததுக்கு பெரண்டையே மருந்தா? நல்லா இருக்குடி உன்னோட வைத்தியம். நீ பயப்படுற அளவுக்கு இந்த உடம்புக்கு நோவு ஆகிடலை. இது வரவரிசி சாப்புட்டு வளர்ந்த உடம்புடி.'' என வாசம்பா சொல்லும்போதே அம்மணிக்கு நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிட்டது.
''ஏய்... வரவரிசி சாப்புட்டு எத்தனை வருசமாயிடிச்சு? ஒன்னோட வூட்ல இருந்தா ஒரு படி கொடுத்து அனுப்புறியாடி?''
''கொடுத்தெல்லாம் அனுப்ப முடியாது. நல்ல நாளாப் பாத்து வூடு வந்து சேரு. வயிறு குளிர வரவரிசி சமைச்சுப் போடுறேன். எங்கையால சாப்புட்டுப் பாரு...'' -முகத்தைச் சுளித்தபடி வாசம்மா சொல்ல, ''கோயிலுக்குக் கும்பாபிசேகம் பண்றப்ப வரகை கும்பத்துக்குள்ள ஏன் வைக்கிறாங்கன்னு ஒனக்குத் தெரியுமா?'' என இடைமறித்தாள் அம்மணி. ''தெரியலையே...'' என வாசம்பா உதடு பிதுக்க, அம்மணி தொடர்ந்தாள்.
''வரகு ஆயிரம் வருஷங்களுக்கு உயிரோட இருக்குற தானியம். கும்பத்துல வைக்கிற வரகை ஆயிரம் வருஷத்துக்கு அப்புறம் அள்ளி விதைச்சாலும், அது வளர்ந்து பயிராகிடும். நமக்கு அப்புறம் வர்ற சந்ததி பசி, பட்டினின்னு சாப்பாடு கிடைக்காம அல்லாடிரக் கூடாதுங்கிறதுக்காக நம்ம மூதாதையர்கள் ஏற்படுத்தி வெச்ச பழக்கம்டி அது!''
-வாசம்பா ஆச்சர்யமாகப் பார்க்க வரகு புராணம் தொடர்ந்தது.
Post a Comment