டெங்குவை ஜெயித்தவர்கள்! -- ஹெல்த் ஸ்பெஷல்,
டெங்குவை ஜெயித்தவர்கள்! ''ம ருந்து கால், மதி முக்கால்'' என்பார்கள். ஆனால், டெங்கு ந...
https://pettagum.blogspot.com/2012/12/blog-post_6666.html
டெங்குவை ஜெயித்தவர்கள்!
பொன்னையன், திருநெல்வேலி
''எனக்கு ஆரம்பத்துல காலையும் மாலையும்தான் காய்ச்சல் இருந்தது. சாதாரண காய்ச்சல்னு நினைச்சு டாக்டர்கிட்டப் போனேன், அப்புறம்தான் டெங்குன்னு சொன்னாங்க. வாந்தி, தலைவலி, உடல்வலி, கை, கால், மூட்டுகள்ல வலி ரொம்ப அதிகமா இருந்தது.
நான் சித்த மருத்துவ முறையத்தான் பின்பற்றினேன். நிலவேம்புக் கஷாயம், சர்வ சுரகுடிநீர் மாதிரியான சித்த மருத்துவ மருந்துகளைத்தான் எடுத்துகிட்டேன். பப்பாளி ஜுஸ், மாதுளை ஜுஸ், கருப்பு திராட்சை ஜுஸ் அதிகமா சாப்பிட ஆரம்பிச்சேன். இப்ப எனக்குச் சுத்தமா சரியாகிடுச்சு. எந்த வலியும் இல்லை. மீண்டும் டெங்குக் காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகளும் இல்லை. உடலும் ஆரோக்கியமாக இருக்கிற மாதிரி உணர்றேன்.''
சித்ரா திருவண்ணாமலை
''சாதாரண காய்ச்சல்னு ஆஸ்பத்திரிக்கு வந்தேன். அப்புறம்தான் டெங்குன்னு சொன்னாங்க. அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுத்துக்கிட்டேன். ரத்தம் ரெண்டு பாட்டில் ஏத்துனாங்க. மருந்து மாத்திரை எல்லாம் கொடுத்தாங்க. 7 நாள் ஆஸ்பத்திரியிலதான் இருந்தேன். இப்ப முழுமையா குணமாயிடுச்சு. டெங்குன்னு சொன்னப் பிறகும் அதை நினைச்சு நான் பயப்படலை. நிச்சயம் சரியாகிடும்னு நம்பினேன். அந்த நம்பிக்கைப் பலிச்சிடுச்சு!''
இராணி, சென்னை
''எனக்கு வயசு 56 ஆகுதுப்பா. ஜுரம் வந்துச்சுன்னு ஆஸ்பத்திரிக்குப் போனேன். டெங்கு காய்ச்சல்னு சொன்னாங்க. ஒரு வாரம் ஆஸ்பத்திரியில்தான் இருந்தேன். நிறையப் பழச்சாறு சாப்பிடக் கொடுத்தாங்க. மருந்து மாத்திரை எல்லாம் சரியான நேரத்துக்கு சாப்பிடணும்னு கொடுத்தாங்க. காய்ச்சல் இப்ப முழுசா சரியாகிடுச்சு. கொசு வராம இருக்கறதுக்கு வீட்டுக்குப் பக்கத்துல தேங்கிக் கிடக்குற தண்ணியை அப்புறப்படுத்தச் சொன்னாங்க. சுற்றுபுறத்தைத் தூய்மையா வச்சிகிட்டாலே போதும் டெங்கு எல்லாம் வராது.''
குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கும் - சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவர் சீனிவாசன்.
''நிறைய சத்துணவுகள் தர வேண்டும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதனால் அவர்களுக்கு நிறையப் பழ வகைகள் தரவேண்டும். சரியான நேரத்தில் உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் குழந்தைகளை டெங்குவில் இருந்துக் காக்கலாம்''
''டெங்கு அச்சப்படும் அளவிற்குக் கொடிய நோய் இல்லை! '' எனச் சொல்லும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் பொது மருத்துவர் ப.அருள் வழங்கும் டிப்ஸ்.
டெங்கு வைரஸ் உள்ள கொசு கடித்தால் எல்லோருக்கும் காய்ச்சல் வருவது இல்லை. 80 சதவிகிதம் எந்த அறிகுறிகளும் இல்லாமலோ அல்லது சாதாரணக் காய்ச்சலுடனோ போய்விடும்.
கடித்த கொசு டெங்கு வைரஸ் சுமந்து இருந்தால் 3 முதல் 7 நாட்களுக்குள் டெங்குவின் அறிகுறிகள் தென்படும்.
3-5 சதவிகிதம் பேருக்கு மட்டுமே டெங்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கும். சரியான மருத்துவ சிகிச்சையும் சுற்றுபுறச் சூழலைச் சுத்தமாக வைத்துக் கொள்வதும் டெங்கு பாதிப்புகளைக் குறைக்கும்.
குழந்தைகள் மற்றும் வயதானவர்களும் சர்க்கரை நோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்களும் அதிகக் கவனமாக இருக்க வேண்டும்.
ரத்த தட்டணுக்கள் (Platelets) குறைந்தாலே ஆபத்து என்று பயப்படத் தேவை இல்லை.
டெங்குவைப் பரப்பும் 'ஏடிஸ் எஜிப்டி’ எனும் கொசுக்கள் பகலில் மட்டுமே கடிக்கும்.
டெங்குவிற்குத் தடுப்பு ஊசி இல்லை!
டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. ரத்தக் கசிவை (Bleeding Diathesis) இவை அதிகப்படுத்தும்.
பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்த கொசு மற்றவரைக் கடிக்கும்போது டெங்கு பரவுகிறது.
சித்த மருத்துவமுறை: சித்த மருத்துவ முறையில் டெங்கு நோய்க்கு சில மருந்துகள் உள்ளன. நிலவேம்புக் கஷாயம், விஷசுரக் கஷாயம், சர்வ சுரகுடிநீர், பிரம்மாநந்த பைரவ மாத்திரை, விஷ்ணு சக்கர மாத்திரை, போன்றவைதான் அவை. பழங்களில் மாதுளை, கருப்பு திராட்சை, பப்பாளிப்பழம் போன்றவை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறந்தவை.
Post a Comment