“மாடித்தோட்டமும் ஒரு பாடசாலை தான்!”
என் இல்லம் பசுமை இல்லம் “வாழ்க்கையில் பல மாணவர்களுக்கு நான் எவ்வளவோ கற்றுத் தந்திருக்கேன். ஆனா, கொரோனா வைரஸால் அமல்படுத்தப்பட்ட இந்த...

ஐந்து வருடங்களாகவே, மாடித்தோட்டம் போட்டு, ‘நாமும் இயற்கைக்குத் திரும்பணும்’னு நினைச்சுக்கிட்டே இருப்பேன். ஆனா, வேலைப்பளுவால, அந்த முயற்சி சாத்தியப்படாமலே இருந்தது. ஐந்து மாதங்களுக்கு முன்னதான், மாடியில் இயற்கை காய்கறித் தோட்டம் அமைக்கும் முயற்சியில இறங்கினேன். கணவரும் மகன்களும்தான் உதவி. யூடியூப், புத்தகங்கள்னு பல வடிவங்களில் மாடித்தோட்டம் அமைக்கிற தெளிவைத் தேடி அடைஞ்சேன். நாட்டுக் காய்கறி விதைகளை, நம்மாழ்வாரின் சீடர்களில் ஒருவரா இருக்கிற முசிறி, யோகநாதன்கிட்ட வாங்கினேன்'' என்ற பிருந்தா, தோட்டம் அமைக்கும் விதம் குறித்து பாடமெடுத்தார்.
``மாடியில் முதல் கட்டமா, 200 சதுர அடியில் தோட்டம் அமைச்சோம். செம்மண் ஒரு பங்கு, மண்புழு உரம் ரெண்டு பங்கு, தென்னைநார்க் கழிவு ரெண்டு பங்குன்னு கலந்து க்ரோபேக்குகள்ல போட்டோம். முதல்ல நவதானியச் செடிகளை வளர்த்து, அதை க்ரோபேக்குகள்ல உள்ள மண்ணுலேயே வெட்டிப் போட்டுக் கிளறி, மண்ணின் தரத்தை உறுதிப்படுத்தினோம். பிறகுதான், கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய், அரைக்கீரை, பசலை, பொன்னாங்கண்ணி, வல்லாரைன்னு விதைத்சோம். முருங்கை, வாழை, ஆரஞ்சு, சப்போட்டா உள்ளிட்ட பழமரக் கன்றுகளையும் நட்டோம். காய்கறிச் செடிகளில் மகரந்தச் சேர்க்கை நல்லவிதமாக நடக்கணும்கிறதுக்காக குண்டுமல்லி, செம்பருத்தி, மருதாணி, ரோஜான்னு 15 வகையான பூச்செடிகளையும் நட்டோம்.
வாட்டர் டேங்கிலிருந்து சொட்டுநீர் பாசனம் மூலம் தினமும் காலை, மாலை தண்ணீர் பாய்ச்சுவோம். 15 நாளைக்கு ஒருதடவை மண்புழு உரம் இடுவோம். செடிகள்ல பூ நன்றாக வைக்க, மீன் அமிலத்தைப் பயன்படுத்துறோம். தக்காளி, வெண்டை, கத்திரி செடிகளில், இந்த மீன் அமிலம் நல்ல பலன் தருது. இயற்கை முறையிலான பூச்சிவிரட்டிகளையே பயன்படுத்துறோம். குறிப்பா தேமோர்க் கரைசலைப் பயன்படுத்துறோம். மாடித்தோட்டத்தில் இருந்த கத்திரி செடிகள் பூக்காமல் இருக்கவே அதோட இலைகளை உதிர்த்துட்டு தேமோர்க் கரைசலை ரெண்டு நாளைக்கு ஒருமுறைன்னு மொத்தம் நாலு முறை தெளிச்சேன். இப்போ கத்திரி காய்ச்சி தள்ளுது'' சொல்லும்போதே பெருமை பொங்குகிறது பிருந்தாவுக்கு.
``காய்கறிச் செடிகளில் மாவுப்பூச்சிகள் அட்டகாசம் பண்ணும். அதைத் தடுக்க, பழைய சோற்றுக்கரைசலைத் தெளிப்பேன். பழைய சாதத்தை ஐந்து நாள்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதுல ஊறவைக்கணும். அதன்பிறகு, அந்தத் தண்ணீரை மூன்று நாள்கள் தொடர்ந்து ஸ்பிரே செய்தால், வெள்ளைப் பூச்சிகள் காய்கறிச் செடிகள் பக்கம் தலைவெச்சும் படுக்காதுங்க.
உலகலாவிய சுகாதார அமைப்புகளும் உணவு ஆய்வாளர்களும் ‘இன்னும் பத்து வருடங்கள்ல எல்லோரும் 70 சதவிகிதம் காய்கறிகளையும், 30 சதவிகிதம் அரிசி அல்லது கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்களை உணவில் பயன்படுத்துபவர்களாக மாற வேண்டும்’ என்று அறிவுறுத்தத் தொடங்கியிருக்காங்க. `அப்படி நாம மாறலைனா, 2050-ம் வருஷம் மோசமான நோய்களோட தாக்குதலும் பாதிப்பும் மிகமிக அதிகமா இருக்கும்'னு எச்சரிக்கிறாங்க. அதனால், எல்லோருமே வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம்னு இயற்கை முறைக்கு மாறணும். இந்த கொரோனா ஊரடங்கு நேரத்துல இந்த மாடித்தோட்டம் எங்களுக்கு நல்லாவே பயன் தருது. எங்களோட இயற்கை வேட்கை தொடரும்” என்று நம்பிக்கையுடன் முடித்தார் பிருந்தா.
200 சதுரஅடி மாடித்தோட்டத்துக்கு நிழல்வலை டென்ட் 20,000 ரூபாய். க்ரோபேக்குகள் 2,000 ரூபாய். க்ரோபேக்குகளுக்கு ஸ்டாண்டுகள் 5,000 ரூபாய். விதைகள் 200 ரூபாய். சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க 1,000 ரூபாய். உரங்களைச் சொந்தமாகவே தயாரிப்பதால் பெரிதாக செலவில்லை.
ஊமத்தை, வேப்பிலை, துளசி, எருக்கஞ்செடி, நொச்சிலை, தும்பை இலைகளை ஆறு கிலோ எடுத்து ஒரு லிட்டர் மாட்டு சிறுநீர் சேர்த்து ஒரு வாரம் ஊறவைத்து வடிகட்டிப் பயன்படுத்தலாம். மூலிகை பூச்சி விரட்டியை பத்து லிட்டர் நீருடன் ஒரு லிட்டர் என்ற வீதத்தில் கலந்து தெளிக்கலாம்.
தேமோர்க் கரைசல்
புளித்த மோர் ஐந்து லிட்டர், தேங்காய்ப்பால் ஒரு லிட்டர், 10 தேங்காயிலிருந்து எடுத்த தேங்காய்த்துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ ஆகிய பொருள்களை எடுத்துக்கொள்ள வேண்டும். புளித்த மோர் மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒன்றாகக்கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைக்க வேண்டும். இவற்றுடன் 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை பொட்டலம் போல் கட்டி அதில் போட வேண்டும். தினமும் கரைசலைக் கலக்கிவர வேண்டும். ஏழு நாள்களில் தேமோர்க் கரைசல் தயாராகி விடும். எட்டாம் நாள், ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி தேமோர்க் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் செடிகளுக்குத் தெளிக்கலாம்.
மீன் அமிலம்
உணவுக்குப் பயன்படாத மீன் கழிவுகளுடன் சம அளவு பனைவெல்லம் சேர்த்துக் கலக்க வேண்டும். இதை ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்றுபுகாமல் மூடிவைக்க வேண்டும். 40 நாள்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும். இந்த திரவத்திலிருந்து கெட்ட வாடை வீசாது. பழ வாடை வீசும். இப்படி பழ வாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம். ஒருமுறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை ஆறு மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
இந்தியாவில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்புழுக்கள் இருக்கின்றன. அவற்றை மேல்மட்ட புழுக்கள், நடுமட்ட புழுக்கள், அடிமட்ட புழுக்கள் என மூன்று விதமாகப் பிரிக்கலாம். மேல்மட்ட புழுக்கள் உரம் தயாரிக்கும். நடுமட்ட புழுக்கள் சுரங்கங்கள் தயாரித்து மேலிருப்பதை அடியில் கொண்டுசேர்க்கும். அடிமட்ட புழுக்கள் மண்ணைச் சீர்செய்யும். சாக்கடை கழிவுகள், மாட்டுச்சாணம் இருந்தாலே அங்கே அதிக அளவில் மண்புழுக்கள் வந்துவிடும். மட்கிய இலைதழைகளின் மீது வறட்டியை வைத்தால் போதும், மண்ணுக்கு அடியிலிருந்து மண்புழுக்கள் வந்து அவற்றை மட்க வைத்துவிடும். இந்த மண்புழுக்கள் உயிருள்ள கழிவுகளை மட்கவைத்து, நமக்கு அற்புதமான உரத்தைக் கொடுக்கின்றன. இந்த உரத்தை மாடித்தோட்டத்திலோ, விவசாய நிலத்திலோ தாராளமாகப் பயன்படுத்தலாம். இது ஒன்றைக் கொடுத்தாலே போதும், மகசூல் தானாகப் பெருகுவதை உணர்வீர்கள்.
Post a Comment