அஞ்சறைப் பெட்டி: இயற்கை தந்த சீதனம்... பாசிப்பயறு / பருப்பு
`பா ர்த்தால் மரகதம்; உடைத்தால் தங்கம்... அது என்ன? இந்தப் புதிருக்கான விடை பாசிப்பயறு/பருப்பு. ஆம்... பயறாக இருக்கும்போது அது பச்சைநி...

`சீனர்கள் மற்றும் அமெரிக்கர்களைவிட, நான்கு மடங்கு கூடுதல் ஊட்டத்தைப் பருப்புகள்மூலம் இந்தியர்கள் பெறுகிறார்கள்’ என்பது செய்தி. பாசிப்பயற்றின் தாயகம் தென்னிந்தியா என அறுதியிடுகின்றன ஆய்வுகள். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதன் விளைச்சலைப் பற்றி மக்கள் அறிந்திருந்தார்கள். தென்கிழக்கு ஆசிய உணவுகளில், மருத்துவ குணத்தைக் கொண்டு சேர்க்கும் கருவியாக பாசிப்பயறு திகழ்கிறது. யஜுர் வேதத்தில் பாசிப்பயறு பற்றிய ஆதாரங்கள் இருக்கின்றன.
சிறுபயறு, முற்கம், பச்சைப்பயறு போன்றவை பாசிப்பயறுக்கான வேறு பெயர்கள். உடலுக்கு குளிர்ச்சித் தன்மை கொடுத்து, இனிப்புச் சுவையை நாவில் ஊறச்செய்து, உடலுக்கு மிகுந்த உரம் கொடுப்பது, பாசிப்பயறு மற்றும் பருப்பு. புரதச்சத்து நிறைந்த பாசிப்பருப்பில் செய்த தின்பண்டங்கள், உடல் திசுக்களுக்கு போஷாக்கு அளிக்கக்கூடியவை.
மாங்கனீஸ், மக்னீசியம், துத்தநாகம், புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் எனப் பல்வேறு நுண்பொருள்களை தன்னகத்தே கொண்டுள்ளது பாசிப்பருப்பு. லியூசைன், வாலைன், ஆர்ஜினைன் போன்ற அமினோ அமிலங்களும் பாசிப்பருப்பை சொந்தம் கொண்டாடுகின்றன. பாசிப்பயற்றை முளைகட்டிப் பயன்படுத்தும்போது, ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை பல மடங்கு அதிகரிக்கும். புற்றுநோய் செல்களைத் தூண்டும் காரணிகளை இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பொருள்கள் கட்டுப்படுத்துகின்றன.
ரத்தத்தில் கொழுப்புச் சத்தைக் கட்டுப்படுத்த பாசிப்பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம். இதிலுள்ள கரையும் நார்ச்சத்து, குடல் இயக்கங்களைத் துரிதப்படுத்தி, உணவின் சாரங்களை முழுமையாக உட்கிரகிக்க உதவும். குடல் பகுதியில் சஞ்சரித்து உடலுக்கு நலம் பயக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தன்மையும் பாசிப்பருப்புக்கு உண்டு.
17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரான்ஸ் நாட்டு பயண எழுத்தாளர், பாசிப்பயறு, அரிசி, வெண்ணெய் மற்றும் உப்பின் துணையுடன் தயாரிக்கப்பட்ட சுவைமிக்க கிச்சடி பற்றி பதிவுசெய்திருக்கிறார். உழைப்பாளர்களின் மாலை உணவில் பாசிப்பயறு தவறாமல் இடம்பிடித்திருந்த செய்தியை, இந்திய வாழ்க்கை முறை பற்றி எழுதிய பல்வேறு நாட்டு பயண எழுத்தாளர்களின் குறிப்புகள் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
அரிசி மாவு, பொடித்த பாசிப்பருப்பு மற்றும் சில பருப்பு வகைகள், கோதுமை மாவு போன்றவற்றை துணையாகக்கொண்டு பூரி போன்ற உணவு ரகத்தை உருவாக்கி, இறுதியில் சர்க்கரை முலாம் பூசி வழங்குவது பழங்கால இந்தியாவின் ஸ்பெஷல் ரெசிப்பி. நவராத்திரிக்காகத் தயாரிக்கப்படும் சிறப்பு உணவில் பாசிப்பயறு தவறாமல் இடம்பிடிப்பது அனைவரும் அறிந்ததே. பாசிப்பருப்போடு மீன் மற்றும் நெய் சேர்த்து சமைத்த சாதம், ‘கெட்கிரீ’ (Kedgeree) என்ற பெயரில் பிரிட்டிஷாரின் காலை உணவுப் பட்டியலில் இடம்பிடித்திருந்தது.
பருப்பு வகைகளிலேயே குறைந்த அளவு வாய்வுத்தன்மை உள்ளது பாசிப்பருப்பு. குற்றமற்ற உணவுகள் மற்றும் புனிதமான உணவுப் பொருள்கள் பட்டியலில் பாசிப்பருப்பு பற்றி குறிப்பிடுகிறது, புத்த மதம். பண்டைய காலத்தில் பருப்பு ரகங்களிலிருந்து நுணுக்கமாகப் பிரித்தெடுக்கப்பட்ட `பருப்புச் சத்தில்’ பாசிப்பருப்பின் பங்கு அதிக அளவில் இருந்தது. வேகவைத்து அரைத்த பாசிப்பருப்பை கோதுமை மாவின் உள்ளே திணித்து (இப்போதைய போளி போல) தயாரித்த தின்பண்டத்தை ‘சமிட்டா’ (Samitah) என்கிறது உணவு நூல் ஒன்று.
பாசிப்பருப்பும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய கத்திரிக்காயும் சேர்ந்த கொத்சு ரகம், இட்லிக்கு சிறப்பான தொடு உணவு. பல காய்கறிகளில் கொஞ்சமாக பாசிப்பருப்பைச் சேர்த்து கூட்டுபோல செய்யும் உணவு வகையறா, பாசிப்பருப்பின் மணத்துக்காகவே அள்ளி அள்ளி சாப்பிடத் தூண்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும் இதமான பாசிப்பருப்பு சாம்பாரை அடிக்கடி புசிப்பதும் நல்லது.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பாசிப்பயறு நொறுவைகள் வேண்டவே வேண்டாம். அதில் அளவுக்கதிகமான உப்பு, செயற்கை சுவையூட்டிகள் எனப் பாதகங்களே அதிகம். பாசிப்பயற்றை நொறுவையாகச் சாப்பிட விரும்பினால், வீட்டில் நாமாகவே தயாரித்துக்கொள்வது சிறப்பு.
பாசிப்பயறு/பருப்பு… விலைமதிப்பில்லா இயற்கையின் சீதனம்!
பயத்தங் கஞ்சி: அரை டம்ளர் பாசிப்பருப்பை இளம் வறுப்பாக வறுத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். அரை கப் பால் மற்றும் கரைத்த நாட்டு வெல்லத்தை பருப்புக் கலவையில் சேர்க்கவும். இறுதியில் ஏலக்காய்ப் பொடி, முந்திரி சேர்த்தால் மருத்துவ குணமிக்க கஞ்சி தயார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேறிவருபவர்களுக்குச் சிறப்பான உணவாக இது அமையும். எளிதில் செரிமானமாகி உடலுக்கு வலு கொடுக்கும்.
பாசிப்பயறு ஊண் சாதம்: பாசிப்பயறு, அரிசி, வெண்ணெய், ஆட்டிறைச்சி, திராட்சை கொண்டு வடித்தெடுக்கப்பட்ட ஊண் சாதம், உடல் திசுக்களுக்கு ஆற்றலை அளிப்பதுடன் பலத்தைக் கொடுப்பதாகக் கருதப்பட்டது. புரதம், மாவுச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து என சமச்சீர் ஊட்ட உணவு இது.
பாசிப்பருப்பு பிரதமன்: தேங்காய்ப்பாலில் பாசிப்பருப்பை வேகவைத்து, பனைவெல்லம், ஏலம், இஞ்சித்தூள் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். பிறகு வறுத்த முந்திரிப்பருப்பு, முருங்கைப்பிசின், தேங்காய்த் துருவல் சேர்த்துத் தயாரிக்கப் படும் இனிப்புச் சுவைமிக்க சிற்றுண்டி ரகத்தைக் கணக்கில்லாமல் சுவைக்கலாம்.
கவா சண்டி (Kava chandi): ஆட்டிறைச்சியை உருண்டைகளாகச் செய்து, முளைகட்டிய பாசிப்பயறு, மசாலா பொடி, பூண்டு, வெங்காயம், கத்திரிக்காய் மற்றும் முள்ளங்கி சேர்த்து சமைக்கப்படும் அசைவ உணவு ரகம் இது.
Post a Comment